Photo, Tamilguardian
ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒன்றின் மூலம் ஏற்பட முடியும் எனக் கருதப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு தற்காலிக சட்டமாக அது கருதப்பட்டது. ஆனால், அச்சட்டம் இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்து வந்துள்ளது. எதிரி தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அது தொடர்ந்து நிலைத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் பல வருட காலம், பல தசாப்தகாலம் கூட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்; பயங்கரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பலர் வழக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அல்லது சித்திரவதைக்கு ஊடாக பலவந்தமாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றத்தீர்ப்புக்கள் வழங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 202ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 109 கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பததை பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
இன்று மாற்றுக் கருத்துக்களை அடக்குவதற்கும், அமைதியாக எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை துன்புறுத்துவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது; மூன்று இளைஞர்கள் குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாமல் அல்லது நீதித் துறையின் பரிசீலனை மேற்கொள்ளப்படாத நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை அவ்விதம் 12 மாத காலம் சட்ட ரீதியாக தடுப்புக் காவலில் வைக்க முடியும். ஆனால், இந்த தன்னிச்சையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வேறு பலர் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவ்விதம் தாம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். மார்ச் மாதம் தொடக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாவனை தொடர்பாக இடைக்காலத் தடையை பிரயோகிப்பதாக ஜூன் மாதத்தில் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் இச்சட்டத்தின் கீழ் மூன்று மாணவர் தலைவர்களை தடுத்து வைத்ததன் மூலம் அது அதன் முன்னைய வாக்குறுதியை மீறி இருந்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் 1979ஆம் ஆண்டில் அமுல் செய்யப்பட்டது தொடக்கம் எத்தனை ஆட்கள் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்கள் எவ்வளவு காலம் சிறையில் இருந்து வருகிறார்கள் போன்ற விடயங்கள் தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்களை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் அல்லது சட்டத்தரணிகள் ஆகியோர் அறிந்திருக்கவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருப்பதுடன், அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் வைத்திருந்ததாகக் கருதப்படும் தொடர்புகளின் அடிப்படையில் அவ்விதம் கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இவ்விதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். ஏனையவர்கள் பல மாத காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாத நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், பலர் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2020ஆம் ஆண்டின் ஓர் அறிக்கை, 2018 செப்டெம்பர் மாதம் அளவில் பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகளில் ஆகக் குறைந்தது 29 பேர் 5 – 10 வருட காலமாக விளக்கமறியலில் (வழக்குக்கு முன்னரான தடுத்து வைப்பு) வைக்கப்பட்டிருப்பதாகவும், 11 பேர் 10 – 15 வருட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. வழக்குக்கு முன்னர் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆகக் கூடிய காலம் அந்த நிலையில் 15 வருட காலம் ஆகும். ஒரு வழக்கு இடம்பெற்று வரும் ஆகக் கூடிய காலம் 16 வருடங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் கைதிகளில் சுமார் 84% அவ்விதம் கைதுசெய்யப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தையும், 90% இற்கு மேற்பட்டவர்கள் தம்மால் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் உள்ள ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு பலவந்தப்படுத்தப்பட்டதாகவும் அந்த ஆய்வு கண்டறிந்திருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டக் கைதிகளுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொருத்தமான விதத்தில் சட்டத்தரணிகள் மூலமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜசீம் போன்றவர்களுடன் சம்பந்தப்பட்ட நன்கு பிரபல்யமான வழக்குகள் சர்வதேச ரீதியில் மற்றும் தேசிய ரீதியில் கவனத்தை ஈர்த்திருந்த அதேவேளையில், இவ்விதம் கைதுசெய்யப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இன்னமும் வலுவற்றவர்களாகவும், குரலற்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் ஒரு கையொப்ப இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் அதற்கு தலைமை தாங்கி வருவதுடன், இந்தச் சட்டத்தை திருத்துவது மட்டும் போதியதாக இருந்து வர மாட்டாது என அவர்கள் சொல்கிறார்கள். இந்த இயக்கம் செப்டெம்பர் 10ஆம் திகதி காங்கேசன்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய விதத்தில் முன்னெடுக்கப்பட்டு அக்டோபர் 05 ஆம் திகதி அம்பாந்தோட்டையில் முடிவடைந்தது. இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது வடக்கிலும், தெற்கிலும் வாழ்ந்து வரும் மக்களை ஒன்றாக இணைக்கும் ஒரு காரணியாக இருந்து வரும் எனக் கூறி, இந்த இயக்கத்தை வரவேற்றுள்ளார். முதல் தடவையாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் தாக்கங்களை அனுபவித்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உள்ளூர் மட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய விதத்தில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளார்கள்.
எத்தனை கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டாலும் கூட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உண்மையில் ரத்து செய்ய வைக்கும் ஓர் இயக்கம் என்பதிலும் பார்க்க இந்த இயக்கத்தை இதன் அமைப்பாளர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வை தூண்டும் ஒரு இயக்கமாகவே நோக்குகின்றனர். “இதுவரை காலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கேள்விப்பட்டிராத பலர் இப்பொழுது அதனை தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தமது மாவட்டங்கள் நெடுகிலும் இந்தச் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையில் நாங்கள் ஒரே குரலில், வலுவான விதத்தில் இந்த பிரச்சாரத்தை முன்வைப்போம்”.
“இந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது, இப்பொழுது பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அதனை நீக்க வேண்டிய தேவை குறித்தும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தோன்றியிருக்கிறது. எவ்வாறிருப்பினும், ஆளும் அரசாங்க கட்சியின் எதிர்வினை இன்னமும் மாற்றமடைவில்லை” என்கிறார் இந்த இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம்.
“அரசாங்கத்துக்கு இந்தச் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழி விழிப்புணர்வு ஊட்டுவதாகும். இந்தச் சட்டம் எந்த அளவுக்கு எதேச்சாதிகாரமானதாகவும், ஆபத்தானதாகவும் இருந்து வருகின்றது என்ற விடயத்தை அதிகளவிலான மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியாயமானவர்களாவும், கௌரவமானவர்களாகவும், பக்கச்சார்பற்றவர்களாவும் இருக்கிறார்கள் என்றும், சட்டமா அதிபர் சுயாதீனமானவராவும், நியாயமாக செயற்படுபவராகவும் கடமையாற்றுகிறார் என்றும் அவர்கள் கருதி வருகின்றார்கள். ஆனால், யதார்த்தத்தில் இது உண்மையல்ல. அவர்கள் இனவாதிகளாக, பாலினவாதிகளாக, பணத்தின் மீது குறி வைத்தவர்களாக, ஊழல் மிக்கவர்களாக, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றார்கள்” என்கிறார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தன்னிச்சையான இயல்பு குறித்த நேரடி அனுபவத்தை கொண்டிருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான இலங்கையின் பிரச்சார இயக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும், அதே போல சட்ட வல்லுனர்களின் சர்வதேச கமிட்டியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தன்னிச்சையான மற்றும் தெளிவற்ற இயல்பு காரணமாக அது ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மற்றும் ஏனைய பிரதான கொடை வழங்குனர்கள் போன்ற தரப்புக்களும் சர்வதேச மனித உரிமைகள் தர நியமங்களை நிறைவேற்றி வைக்காத, நியாயமற்ற சட்டமொன்றுக்கான முக்கிய உதாரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சுட்டிக்காட்டி, இலங்கை அதன் மனித உரிமை செயற்பாடுகளை விருத்தி செய்து கொள்ள வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கியொழுக வேண்டுமானால் ஐந்து அவசியமான முன்நிபந்தனைகளை அது நிறைவேற்றி வைக்க வேண்டியுள்ளது. அவையாவன: ‘பயங்கரவாதம்’ என்ற பதம் தொடர்பாக சர்வதேச விழுமியங்களுடன் பொருந்திச் செல்லக் கூடிய விதத்தில் வரைவிலக்கணங்களை பயன்படுத்துதல்; குறிப்பாக கருத்து வெளிப்பாடு, அபிப்பிராயம், அமைப்புக்களில் இணைந்து கொள்ளல், சமய மற்றும் நம்பிக்கை சுதந்திரங்கள் என்பன தொடர்பான உரிமைகளின் மீது தாக்கத்தை எடுத்து வரக் கூடிய நிலையில் அதன் சட்ட ரீதியான துல்லியத்தன்மையை உறுதிப்படுத்துதல், தன்னிச்சையாக மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கென ஏற்பாடுகளை உள்ளடக்குதல், சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பவற்றினை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குதல், நீதித் துறையின மேற்பார்வை மற்றும் வழக்கு அறிஞர்களை அணுகுவதற்கான வசதி என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் உரிய செயன்முறையையும், நியாயமான வழக்கு விசாரணைக்கான உத்தரவாதங்களையும் வழங்குதல்.
அரசாங்கம் மார்ச் மாதத்தில் இது தொடர்பாக ஒரு சில அடையாள திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால், அவை போதியதாக இருக்கவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்து, திருத்தியமைப்பதாகக் கூறியிருக்கும் அரசாங்கம், சிறந்த சர்வதேச நடைமுறைகளின் பிரகாரம் மிகவும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்டவாக்கம் ஒன்றின் மூலம் அதனை மாற்றியமைப்பதற்கான நோக்கத்தை அறிவித்திருக்கிறது. அதேவேளையில், மனித உரிமைகள் ஆணையாளர் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்தத் திருத்தங்கள் ஒரு சில பாதுகாப்புக்களை விருத்தி செய்திருந்த போதிலும், அவை பிரச்சினைக்குரிய பெரும்பாலான ஏற்பாடுகளை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளன எனக் கூறியிருந்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் இப்பொழுது தணிந்திருக்கும் நிலையில் அதனை தடுப்பதற்கென ஒரு விசேட சட்டத்திற்கான தேவை இருக்கவில்லை என பல சட்டத்தரணிகள் கூறி வருகின்றனர். “தண்டனைச் சட்டக் கோவை, சுடுகலன்கள் கட்டளைச் சட்டம், வெடி பொருட்கள் கட்டளைச் சட்டம் மற்றும் இன்னும் பல சட்டங்கள் அதற்குப் போதுமானவையாக இருந்து வருகின்றன. புறம்பான ஒரு பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான தேவை இருந்து வரவில்லை” என்கிறார் பல பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகளை கையாண்டு வரும் முன்னைய மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பாக செயற்பட்டு வரும் சட்டத்தரணிகள் அந்தத் தடுப்புக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாட்சிகள் இல்லாத விதத்தில் அற்ப காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்களை 12 மாத காலம் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியும் என்பதன் பொருள் சாட்சிகளை தயாரித்துக் கொள்வதற்கும், பொய்ச்சாட்சி கூற வேண்டும் என மற்றவர்களை அச்சுறுத்துவதற்கும் பொலிஸாருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது என்பதாகும்.
“உங்களையும், என்னையும் சேர்த்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரையும் கைது செய்ய முடியும். முக்கிய பிரமுகர்களின் வீடுகளை எரித்த குற்றச்சாட்டின் பேரில் மாணவர் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், கோட்டா கோகமவில் அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பாக என்ன நடந்துள்ளது? அவர்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லையா?” எனக் கேட்கிறார் ஹிஸ்புல்லா.
விரிவுரைகளில் பங்கேற்றமைக்காக அல்லது தனது தொலைபேசியில் ஒரு படத்தை வைத்திருந்தமைக்காக அல்லது சந்தேக நபர் ஒருவருக்கு உணவு வழங்கியமைக்காக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் அதே வேளையில், கருணா மற்றும் பிள்ளையான் போன்ற நன்கு அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு, மிக மோசமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர்களுக்கு எதிராக நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் இருந்து வரும் நிலையிலும் அரசாங்கப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர் மட்டுமன்றி, அவருடைய குடும்பத்தினரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். பெரும்பாலான சம்பவங்களில் குடும்பத்துக்கு ஆதரவளிக்கக் கூடிய ஒரே ஒரு நபராக சம்பந்தப்பட்ட ஆண் மட்டுமே இருந்து வரும் குடும்பங்களில் பெண்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, பாரபட்சத்தை எதிர்கொள்ளும் நிலையில் தம்மைத் தாமே பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
“பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்த காரணத்திற்காக 29 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தப் புகைப்படம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என அவர்கள் சொன்னார்கள். அவர் இரண்டு வருட காலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். ஓர் அரசாங்க உத்தியோகத்தர் என்ற காரணத்தினால் அவர் தனது தொழிலை இழந்ததுடன், அவருடைய கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் அவர் இருந்து வருகின்றார். கடந்த பல தசாப்தங்களின் போது பல மனிதர்கள் இவ்விதம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளார்கள்.” என்கிறார் இராசமாணிக்கம்.
‘ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளும் அதேபோல ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற இலங்கையின் நட்புத் தரப்புக்களும் இலங்கை அதன் கடப்பாடுகளை நிறைவேற்றி வைப்பதற்கு அதனை நிர்ப்பந்திக்க வேண்டும். துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதற்கும் திட்டவட்டமான கால அட்டவணையுடன் கூடிய படிமுறைகள் எடுக்கப்படும் வரையில் நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறைக்கு வழங்கி வரும் ஆதரவை அத்தரப்புக்கள் விலக்கிக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய சந்தைகளை தீர்வை அற்ற விதத்தில் அணுகுவது தொடர்பாக அது பெற்று வரும் சலுகைகளுக்கு பதிலாக இலங்கை அதன் மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் வலியுறுத்துதல் வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்காக உடனடியாக இதய சுத்தியுடன் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், எந்தவொரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தரநியமங்களை நிறைவேற்றி வைப்பதனை உறுதிப்படுத்துவதன் மூலமும் அதனை மேற்கொள்ள வேண்டும்” என இவ்வருடத்தின் தொடக்கத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஓர் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் 43 வருடங்கள் அமுலில் இருந்து வந்துள்ள போதிலும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும் விடயத்திலோ அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதிலோ எத்தகைய வெற்றியையும் ஈட்டியிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குவதற்கும், அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பதற்கும், தமது உரிமைகளுக்காகப் போராடி வரும் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்தி, மௌனிக்கச் செய்வதற்கும் அது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் எவற்றையும் செய்ய முடியாதிருப்பதனால் அது ரத்து செய்யப்படுதல் வேண்டும்.
மினொலி டி சொய்ஸா
29.09.2022 அன்று The Urgent Need to Repeal a Law that Cannot be Reformed எனும் தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.