படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews

இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம்.

இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு விடயங்களில் காணப்படும் போக்கினைக் குறிப்பிடுவதாயின், ஒரு வெறுமையான நிலையும் அதன் தாக்கங்களுமே காணப்படுகிறது எனச்சுருக்கமாகக் கூறி விடலாம். யுத்த சகாப்தம் முப்பது வருடங்கள் நீடித்திருந்தது. இன்னொருவகையில் சொல்வதானால் ஒரு தலைமுறை காலம் நீடித்திருந்தது. ஒரு தலைமுறையினர் யுத்தத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இன்னொரு தலைமுறையினர் யுத்தத்தில் தமது இளமைக்காலத்தைக் கழித்தவர்கள். இதற்கும் மேலாக யுத்தம் காரணமாக உயிர், உடைமை, அவயவங்கள் ஆகியவற்றை இழந்தவர்களும் அதீத மன உளைச்சலுக்கு ஆளானவர்களும், மீள முடியாத துயரில் உள்ளவர்களும் என துன்பங்கள் நீண்டவையாகவும் பரிகாரமற்றவையாகவுமுள்ளன.

இவை ஒரு புறமாக நீண்ட யுத்த நிலை முடிவிற்கு வந்த போதிலும், மக்களின் பிரச்சினைகள் எனப்பார்க்கும் போது இருந்தவற்றை இழந்தது மட்டுமன்றி புதிதாக உருவாகியுள்ள சூழலில் வேதனைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். துன்பங்களை அனுபவித்து இழப்புக்களுடன் ஏதோ மிகுதி வாழ்வை வாழ்ந்து பார்க்கலாம் என்ற நிலையில் உள்ள மக்களுக்கு எதிர்காலம் பற்றிய கேள்விக்குறிகளே எஞ்சியுள்ளன.

வலுவற்ற தமிழர் அரசியல்

இந்தப் பிரச்சினைகள் யாவற்றிலும் மூலப்பிரச்சினையாக அமைந்த அரசியல் பற்றிய விடயங்கள் வெற்றிடமாக உள்ளது. அந்த விடயம் பற்றி பல்வேறு தரப்பினராலும், பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் காத்திரமான தமிழர் அரசியல் திட்டங்களோ, கொள்கை வகுப்புகளோ காணப்படவில்லை. அரசியல்கட்சிகள் பலவாக உள்ளன. மேலும், புதிய அரசியல் கட்சிகள் உருவாகினிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கட்சிகளின் அங்கத்தவர்களிடமும் கருத்தொருமை முழுமையாகக் காணப்படவில்லை. இவ்வாறு பார்க்கும்போது யுத்தத்திற்கு முன்பிருந்த அரசியல் நிலையை விட வலுவற்ற வெறுமை மிக்கதாகத் தமிழ் மக்களின் அரசியல் நிலை உள்ளது. தமிழ் அரசியலாளர்கள் ஒருமித்த கருத்துடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கோரிக்கையொன்றினை அல்லது திட்ட வரைபொன்றினை முன் மொழியும் பட்சத்தில் அது சாதகமான அரசியல் சூழலொன்றினை உருவாக்கக்கூடியதாக அமையும். வழங்கப்பட்ட அதிகாரப்பரவலாக்க அடிப்படையிலான மாகாண சபை அமைப்பும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டதாக இருப்பினும், அதன் செயற்பாடுகள் எதுவும் மக்களுக்குப் பயனுள்ள வழியில் இடம்பெறாமல் இருப்பது, தமிழ் மக்கள் மத்தியில் வல்லமை மிக்க அரசியல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. அரசியலில் ஜனநாயகம் என்ற உன்னதமான தத்துவம் பற்றி உலகெங்கும் பேசப்படுகிறது. தமிழ் மக்களைப்பற்றிக் கூறும்போது கல்வி கற்ற சமூகத்தினர் எனக்கூறப்படுவது வழக்கம். ஆனால், தமிழ் மக்களால் ஜனநாயகம் என்ற விடயம் புரியப்படவில்லையா? அல்லது தவறாகப்புரியப்பட்டுள்ளதா? என்ற கேள்வியே மேலோங்கி உள்ளது. ஜனநாயக வழிமுறை என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும், மதிப்பளிப்பதும் ஆகும். அத்தகைய ஒரு கலாசாரத்தை பயிலும் போக்கு தமிழ் மக்களிடம் அருகிவிட்டதா? எனறே எண்ணத் தோன்றுகிறது.

அரசின் பொறுப்பும் தயக்கமும்

அது மட்டுமன்றி, அரசும் இனப்பிரச்சினை குறித்த திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டு நீண்ட அரசியல் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் காலம் தாழ்த்துவதாகவே உள்ளது. தமிழ் – சிங்கள மக்களிடையே இன ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம் என அரசு கருதினாலும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய செயற்றிட்டங்கள் எதுவும் வலுவான வகையில் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிசலடைவது போலவே தென்படுகிறது. அரசு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் காலம் தாழ்த்துவதானது பிரச்சினை பற்றிய விடயம் முடிவற்றதாகவும், பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதில் பாதகமான போக்கு வலுவடைவதற்கு இடமளிப்பதாகவும் அமைவதற்குச் சந்தர்ப்பம் வழங்குவதாகவே அமைகிறது. தொடர்ச்சியாக இடம்பெற்று முகிழ்த்து வந்த இனப்பிரச்சினையின் அடிப்படையாக அதிகாரப் பகிர்வு காணப்படுகிறது. தமிழ் மக்கள் அடிப்படையில் யுத்தத்தை விரும்புகின்ற பண்புள்ளவர்கள் அல்லர். அது மட்டுமன்றி செயற்றிறனும், விசுவாச உழைப்பும், முயற்சியும், மதிநுட்பமும் வாய்ந்தவர்கள். அழகிய, சிறிய, பொதுக்கலாசாரப் பாரம்பரியம் கொண்ட இரண்டு இனக்குழுக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கக்கூடிய வாய்ப்பு அரசிற்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமெனலாம். இலங்கையில் இருக்கின்ற இரண்டு மொழி பேசுவோருக்கிடையிலான உறவை பரஸ்பர புரிந்துணர்வுடையதாகக் கட்டியெழுப்புவது மிகவும் பெரிய சவாலெனக் கூற முடியாது. நீண்ட வலிமை மிக்க போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு, பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதிலும் வெற்றி கொள்வதன் மூலமே இலங்கையில் அமைதியான, நிலையான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு அத்திவாரமிட முடியும். அரசு மட்டுமன்றி, சிங்கள அறிவு ஜீவிகளும், பௌத்த மத நிறுவனங்களும், சாதாரண மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதிலும்,சமாதான சகவாழ்வு ஏற்படுத்துவதிலும் நல்லெண்ணம் உருவாக்குவதிலும் பங்களிக்க வேண்டியதவசியம்.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நோக்கில் அவதானிக்கும்போது, யுத்த காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை தமிழ் மக்கள் எதிர்கொள்கிறார்கள். இது மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலை உள்ளது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் பொருளாதாரமே. பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சமூகத்தின் பல்வேறு பாகங்களையும் சீரழிப்பதாக உள்ளது. பொருளாதார, சமூக குழப்பம் மலிந்த ஒரு காலகட்டமாக யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் நிலை காணப்படுகிறது. போர்க்காலத்திலும் இத்தகைய நெருக்கடிகள் இருந்தனவாயினும், தற்போதுள்ள நிலை மிகவும் மோசமான தாக்கங்கள் நிறைந்ததாக உள்ளது.

கல்வியின் வாயிலாக மக்களுக்கு தொழில் வாய்ப்பு பெறும் நிலையும் போட்டி நிறைந்ததாக உள்ளது. கல்வி வழிமுறைகளில் பட்டங்கள் பெறும் கல்வி வழங்கப்பட்டாலும் தொழில் வாய்ப்புகள் அருகியதாகவேயுள்ளது. பெருமளவு மக்களின் வாழ்க்கைத் தரம் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் நிலையில் இல்லை. போர் இடம்பெற்ற காலத்தில் இருந்த நிலையை விட அச்சம் நிறைந்த வாழ்க்கை நிலையில் மக்கள் வாழுகின்றனர் எனக்கூறின் மிகையாகாது. நிலத்தையும் கடலையும் பயன்படுத்திப் பெறக்கூடிய பொருளாதார நன்மைகளைப் பெறும் நிலையும் வலுவற்றதாகிக் கொண்டு வருகிறது. விவசாயிகள், கடற்றொழிலாளர், சிறு வியாபாரிகள் என்போர் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கூலித் தொழிலாளர் கூலி வேலை பெறுவதற்கே இடமில்லாமல் போய்விட்டது. கட்டிடம், கல்லுடைத்தல், விவசாய அறுவடை போன்ற தொழில்களுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படுதல் காரணமாக தொழில் செய்யும் நிலையில் உள்ளவர்களும், இதுவரை அவ்வாறு தொழில் செய்து ஊதியம் பெற்றவர்களும், தொழில் வாய்ப்பில்லாது விரக்தியுறும் நிலை உருவாகியுள்ளது.

யுத்த நெருக்கடியின்போது மக்கள் வாழ்வில் இருந்த தேவைகளும் சூழலின் வாழ்க்கைத் தரத்தில் காணப்பட்ட ஒருமையும், மாறுதலடைந்துதிறந்த, நுகர்வுக் கலாசாரத்தின் அம்சங்கள் பரவலடைந்துள்ள நிலையில், மக்களில் ஒரு பகுதியினர் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள, பெரும்பான்மையினர் தமது அடிப்படை வசதிகளைத் தானும் பெறமுடியாத நிலையில் இருப்பது சமூக முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் விரக்தி அடைவதற்கும், தவறான வழிமுறைகளை எட்ட முனைவதற்கும் இடமளிப்பதாயுள்ளது.

நுகர்வுப்பொருட்களை கடனடிப்படையில் வழங்கும் வகையில் வழங்கும் வர்த்தகர்களின் வருகை காரணமாக, அவர்களிடம் பொருள் கொள்வனவு செய்தவர்கள் கையில் உள்ளவற்றையும் இழந்து நிர்க்கதி அடைகின்றனர்.

அரசு யுத்தத்தின் பின்னர் மேற்கொண்ட, அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கின் பொதுவான வாழ்க்கை நிலையில் முன்னேற்றமான தன்மை கொண்டவையெனினும், யுத்தத்தில் இருந்து மீண்ட, பொருளாதார அடிப்டைகளை எதிர்பார்க்கும் சமூகத்தின் அடிநிலை மக்களுக்கு நிலைபேறான பொருளாதார எதிர்காலத்தை வழங்கக் கூடியனவாக இல்லை.

வட இலங்கையின் புவியியல் அமைவிடமும், சூழலும் பெருமளவு பொருளாதார வாய்ப்புக்களையும், தேவைகளையும் சீராக வழங்கும் வகையில் உள்ளன எனக்கூற முடியாதுள்ளது. அது ஒரு புறமாக மக்கள் கடின உழைப்புக்குத் தயாராக இருந்தாலும், தொழில் வாய்ப்பு இல்லாத நிலை பெருகியுள்ளதுடன் அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், பொருளாதார திட்டமிடலாளர்கள் நன்கு ஆராய்ந்து மக்களுக்கு வேண்டிய உடனடி பொருளாதார வாழ்க்கையினை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டிய கட்டாயமுள்ளது.

சமூக நெருக்கடி

அரசியல் பிரச்சினைகளும், அபிலாசைகளும் மக்களின் பிரச்சினைகள் என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வட இலங்கையில் இடம்பெற்று வருகிற சமூக, பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகள் பொருளாதார விடயங்களுக்கு அதிக இடமுள்ளது என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. மேற்படி பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தே சமூகத்தின் கலாசார, பண்பாட்டு அமைதியும், இருப்பும் சிதைவடைந்து, பல்வேறுதர வாழ்க்கை நிலையில் வாழும் சமூகத்தின் பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், தாய்மார்கள்மத்தியில் விரக்தியையும், வெறுமையையும், உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக இருப்பதுடன், தற்கொலை, கொலை, விபசாரம், சிசுக்கொலை, விவாகரத்து, முறையற்ற திருமண உறவுகள், பரஸ்பர அவநம்பிக்கை, பாலியல் துன்புறுத்தல்கள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சட்டம் ஒழுங்கை மதிக்காமை, விழுமியங்களையும், சிறந்த வழிகாட்டல்களையும் முன்வைக்க முடியாமைஎன எண்ணிலடங்கா சமூகப் பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாயுள்ளது.

வட இலங்கையை மையப்படுத்தி நோக்குமிடத்துகல்வி, சிறந்த அறநெறி வாழ்வு, சிக்கனம், தூய்மை, மரியாதை, பெரியோர்களையும், வயதானவர்களையும் கனம் பண்ணுதல், சுகாதாரம், எளிமை, விருந்தோம்பல், கடின உழைப்பு, தம் பெண் பிள்ளைகளின் வாழ்வுக்கான தேட்டம், கிராமிய வாழ்வு எனப் பலவகைகளிலும் நல்ல பல பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்ததுடன், வேற்று இன, மத, காலனித்துவ ஆட்சியாளர்களாலும் மெச்சப்படும் தகைமை பெற்றவர்களாக இருந்தனர். இத்தகைய நல்ல அம்சங்களைத் தொலைத்து முடித்து விடுவோமா என்ற அச்சம் இன்று பலரிடமும் ஏக்கமாக உள்ளது.

கலாசாரம்

சட்டம், ஒழுங்கு என்பவற்றைப் பேணும் ஒழுங்கமைப்பு இல்லாத சூழல் அச்சமும், ஆபத்தும் நிறைந்ததாக உள்ளது. அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான முயற்சிகள் காணப்படுகின்ற போதிலும், அவை திருப்திகரமானவையாக இல்லையென்றே கூறமுடியும். குறிப்பாக யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற வன்முறைக்கலாசாரம் அபாயகரமானதாயுள்ளது. சமூகத்தவர்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கிடைக்கின்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை மேலோங்கியுள்ளது. தினமும் வாள்வெட்டு, கொலை என்பன நடைபெற்ற வண்ணமுள்ளன. கல்விகற்ற வகுப்பினர் மத்தியிலும் அரச, அரச சார்பற்ற அலுவலகங்களிலும் வன்முறை, ஊழல், பாலியல் துஷ்பிரயோகம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, ஓரங்கட்டல் ஆகிய விடயங்கள் தாராளமாக இடம்பெறுகின்றன. பாரம்பரிய விழுமியங்கள், அழிவடைந்துள்ள நிலையில் புதிய நவீன மனித உரிமைகள் பற்றிய அடிப்படை அம்சங்கள் புரியப்படாதவையாகவும் திட்டமிட்டு அறிதலைப் புறந்தள்ளுபவையாகவும் உள்ளன.

சமூக விடயங்களில் அக்கறை கொள்ளக்கூடிய தரப்பினர் என்ற ஒரு குழாத்தினர் உருவாகி சமூக சீர்திருத்தங்களையும், ஒழுங்கையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லையென்றே கூற முடியும். சமூகத்தில் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய கண்ணியம் மிக்க தலைவர்கள் என எவரையும் கௌரவிக்கும் நிலை இல்லாதுள்ளது.

பத்திரிகைகள் தானும் இத்தகைய வழிகாட்டல்களைச் செய்வனவாக இல்லை. பத்திரிகைகளில் செய்திகள், அபிப்பிராயங்கள் வெளியிடப்படும்போது இன, மத, பால் அடிப்படையிலான குரோதங்களைத் தணிக்கக்கூடிய வகையில் அமைவது விரும்பத்தக்கதாகும். நாகரீகமான மனித சமூதாயத்தைக் கட்டமைக்கக்கூடிய பத்திரிகைகள் உருவாவது சிறந்த பயனளிக்கும். பொதுநல நோக்கு, கூட்டுறவு போன்ற அம்சங்கள் மறைந்துவிட்டன. யாரும் நம்பிக்கை, மரியாதை செலுக்கூடியவர்கள் என்ற நிலை அருகியுள்ளதுடன் ஒவ்வொருவரும் அடுத்தவரைச் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே அதிகரித்துள்ளது. இத்தகைய நிலை நீடித்தல் நல்லதல்ல.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது போர்க்காலத்தில் நிலவிய சூழலை விடவும் அபாயகரமான ஒரு ஆட்சியறவு நிலையிலும், அராஜக நிலையிலும் வாழும் சூழலே நிலவுகிறது.

இந்த நிலையை நீடிக்கவிடாது கவனம் செலுத்தி வாழ்வுக்கான நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும், பாதுகாப்பு சூழலையும், உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சிறந்த விழுமியங்களை நிலை நிறுத்துவதற்கான வழிவகைகளையும், வழிகாட்டல்களையும் அரசியலற்ற தலைவர்களும், கல்விகற்ற சமூகத்தினரும், சமய வழிகாட்டிகளும் பொது நன்மை விரும்பிகளும் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஈடுபாட்டுடன் சிந்தித்து தகுந்த திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இல்லையேல், ஒரு நலிவுற்ற சமூகத்தின் பிரதிநிதிகளாக எம்மை நாம் அடையாளப்படுத்த வேண்டியவர்களாவர். ஆத்மீக வாழ்வு மக்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மன ஆறுதலையும், சிறந்த பண்புகளையும், ஒழுக்கத்தினையும் ஏற்படுத்துவதில் பங்களிக்க வல்லனவாகும். இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும், இணக்கப்பாட்டை வளரச்செய்வதிலும் மத நிறுவனங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் கடமைப்பாடு உள்ளது. அத்தகைய நிலை இல்லாது மத நிறுவனங்களும், மதத் தலைவர்களும், மதகுருமார்களும் மதவாதிகளாகச் செயற்படுவதும், மதத்தின் பெயரால் வியாபாரமும், அரசியலும் செய்வதும் ஆரோக்கிமான சமூக நிலைப்பிற்கும்உறுதிப்பாட்டிற்கும் உதவமாட்டாது.

ஒட்டு மொத்தமாக இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மக்களை மீட்டெடுக்கக் கூடிய ஒரே வழியாக அமையக்கூடியது அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டு அம்சங்களை மீள்பார்வை செய்து சிறந்த கொள்கைகளை வகுத்துச் செயற்படுத்தக்கூடிய வலுவான கருத்து உருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும், செயற்பாடுகளுமெனலாம்.

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்

சிரேஷ்ட விரிவுரையாளர், வரலாறு

யாழ். பல்கலைக்கழகம்

 

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.