Photo, Eranga Jayawardena/Associated Press, NYTIMES
மக்கள் கிளர்ச்சியையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியைத் துறந்த கோட்டபாய ராஜபக்ஷ 50 நாட்களுக்கு பிறகு (செப்.2) நாடு திரும்பி கொழும்பில் பொலிஸாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய அரசாங்க பங்களாவில் வசித்துவருகிறார். அவரது குடும்பத்தவர்களும் அரசியல்வாதிகளும் நெருக்கமான ஆதரவாளர்களும் அவரை சந்தித்துவருகிறார்கள்.
முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் சென்ற கோட்டபாயவுக்கு அந்த நாடுகள் அசௌகரியத்துடனான விருந்தோம்பலை செய்ததால் சொந்த நாட்டுக்குத் திரும்புவதே சிறந்தது என்று அவர் தீர்மானித்தார் போலும். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டு மக்களை பயமின்ற வாழவைத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமைகோரும் அவர் இறுதியில் தனக்கு பாதுகாப்பில்லை என்று அஞ்சி நாட்டில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது ஒரு விசித்திரம். கிளர்ச்சி செய்த மக்கள் அவரை பதவியில் இருந்து விலகி வீட்டுக்கு போ என்று கேட்டார்களே தவிர, நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கவில்லை.
கோட்டபாயவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வுகாலத்தில் வழங்கப்படுகின்ற சிறப்பு வசதிகளை அரசாங்கம் செய்துகொடுப்பது குறித்து அவர் நாடு திரும்பப்போகிறார் என்ற செய்தி வெளியானவுடன் சர்ச்சைகள் கிளப்பப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
முதலில் சர்ச்சையைக் கிளப்பியவர் ஒரு காலத்தில் ராஜபக்ஷர்களுக்கு நெருக்கமானவராக இருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வுபெறவேண்டிய வயதுக்கு முன்னதாக சேவையில் இருந்து விலகினால் பல வசதிகளை இழப்பது போன்றே கோட்டபாயவின் விவகாரத்தையும் நோக்கவேண்டும்; ஏனென்றால் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து இடைநடுவில் விலகினார் என்பது சில்வாவின் வாதம்.
கோட்டபாயவைப் போன்று எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவியைத் துறந்ததில்லை. அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளில் எவரையும் பதவியில் இருந்து விலகக் கோரி நாட்டுமக்கள் கிளர்ச்சி செய்ததுமில்லை. அவரே இடைக்காலத்தில் பதவியைத் துறக்க நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. அந்தக் காரணங்கள் எல்லாம் அவருக்கு அரசாங்க செலவில் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதற்குத் தடையாக இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படுகின்ற சகல வசதிகளையும் அவருக்கும் செய்துகொடுக்க அரசாங்கம் சட்டரீதியாக கட்டுப்பட்டிருக்கிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்தார்.
சிறப்பு வசதிகளை கோட்டபாயவுக்கு அரசாங்கம் செய்துகொடுத்திருப்பது சட்டரீதியானது, ஆனால் தார்மீக ரீதியில் கேள்விக்குரியது என்று பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகிறார்.
“ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய உகந்த முறையில் ஓய்வுபெறவில்லை. இரு வருடங்களும் 7 மாதங்களும் பதவியில் இருந்த பிறகு மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜூலை 13 அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்திசெய்யாமல் அரசாங்கத்திடமிருந்து சகல சிறப்பு வசதிகளையும் பெறுவது சரியானதுதானா என்பதை அவர் மனச்சாட்சிப்படி தன்னைத்தானே கேட்கவேண்டும். பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்திசெய்யத் தவறும் ஜனாதிபதிகள் ஓய்வூதியத்துக்கும் அரசாங்கத்தின் சிறப்பு வசதிகளுக்கும் உரித்துடையவர்களா இல்லையா என்பதை ஜனாதிபதிகள் உரித்துக்கள் சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை” என்று கடந்தவாரம் செய்தியாளர்கள் மகாநாட்டில் கிரியெல்ல கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளில் தற்போது ஓய்வூதியத்தையும் அரசாங்க வாசஸ்தலம் மற்றும் பாதுகாப்பு உட்பட சிறப்பு வசதிகளை அனுபவிப்பவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவருமே. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமாவும் அத்தகைய வசதிகளை அனுபவித்துவருகிறார். தனக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கிடைக்கவேண்டிய வசதிகள் பலவற்றை ராஜபக்ஷர்கள் குறைத்தார்கள் என்று திருமதி குமாரதுங்க சில தினங்களுக்கு முன்னரும் கூட குற்றஞ்சாட்டியிருந்தார். அது வேறு விடயம்.
மஹிந்தவும் சிறிசேனவும் ஜனாதிபதி பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய அரசாங்க வசதிகளை அவர்கள் அனுபவிப்பதுடன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சிறப்புரிமைகளையும் வசதிகளையும் அனுபவித்துவருகிறார்கள். உண்மையில் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பவர்களுக்கே அரசாங்க வசதிகளை வழங்குவது பொருத்தமானது. மீண்டும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டு சிறப்புரிமைகளுடன் கூடிய பதவிகளை வகிப்பார்களானால் அந்த வசதிகளை வழங்காதிருப்பதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும்.
அண்மையில் அநுராதபுரத்துக்குச் சென்ற ஜனாதிபதி விக்கிரமசிங்க மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் அரசாங்க அலுவலர்களைப் பார்த்து பொறுப்புடன் கடமையைச் செய்யுங்கள், அல்லது வீட்டுக்கு சென்றுவிடுங்கள், சும்மா சம்பளம் தரமுடியாது என்று கண்டிப்பான தொனியில் கூறினார். அவரால் முன்னாள் ஜனாதிபதிகளில் இன்னமும் அரசியலில் தொடருகின்றவர்களைப் பார்த்து, “மீண்டும் அரசியலுக்கு வராமல் இருந்தால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வசதிகளை அரசாங்கத்தினால் வழங்க முடியும்” என்று கூறமுடியுமா? அவ்வாறு கேட்பதற்கு சட்டம் இடந்தரவில்லை என்றால் ஜனாதிபதி உரித்துக்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றாவது அவர் பேசுவாரா?
இங்கு தான் சிங்கள சினிமா நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க “அவர்கள் எல்லோரும் கூட்டாளிகள் தம்பி ” என்ற பிரபலமான வார்த்தையை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, கோட்டபாய மீண்டும் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது பேசுபொருளாக இருக்கிறது.
அவர் கடந்த மாதம் தாய்லாந்தில் தங்கியிருந்த வேளையில் கூட, நாடு திரும்பும் பட்சத்தில் அவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு வசதியாக தனது பதவியை துறக்கத்தயாராயிருப்பதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல கூறினார். கோட்டபாய நாடுதிரும்பிய பின்னரும் இந்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வரவிரும்பினால் அவருக்காக தனது பதவியைத் துறப்பதற்கு முன்வருவதாக கடந்தவாரமும் கூறியிருந்தார்.
ஆனால், கோட்டபாய வெளிநாட்டில் இருந்த வேளையிலும் சரி, நாடுதிரும்பிய பின்னராயினும் சரி இதுவரையில் அரசியலில் மீண்டும் ஈடுபடுவதில் நாட்டம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி ஏதும் கூறவில்லை. அவர் ஒரு மர்மமான மௌனத்தை கடைப்பிடித்து வருகிறார். அதேவேளை, அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான விண்ணப்பத்தை செய்யும் பொறுப்புக்களை அங்குள்ள சட்டநிறுவனம் ஒன்றிடம் அவர் ஒப்படைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவரை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்து பிரதமராக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவில் செல்வாக்குமிக்க ஒரு பிரிவினர் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக செய்திகள் வருகின்றன.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும தலைமையில் வெளியேறி தற்போது சபையில் எதிரணி பக்கத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சன்ன ஜெயசுமன கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தற்போதைய பிரதமரை அகற்றிவிட்டு புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு தங்கள் தரப்பின் ஒத்துழைப்பு கோரப்பட்ட போது தாங்கள் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அதேவேளை, நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியின்போது பதவிகளில் இருந்து விலகி ஒதுங்கியிருந்த ராஜபக்ஷர்கள் தங்களை மீள அணிதிரட்டிக்கொண்டு மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார்கள். அவர்களின் குடும்ப அரசியலுக்கென்றே உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பது மற்றும் கட்சியின் மகாநாட்டை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர்கள் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ராஜபக்ஷர்கள் முக்கிய பதவிகளில் இல்லாவிட்டாலும் தங்களது கட்சியின் நாடாளுமன்றப் பெரும்பான்மையை பயன்படுத்தி ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் போக்கை தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்பது எதிரணியின் பரவலான குற்றச்சாட்டாகும். மஹிந்த ராஜபக்ஷ தனது 77ஆவது பிறந்த தினத்துக்கு (நவம்பர் 18) மீண்டும் தீவிரமாக அரசியலில் இறங்கப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. கடந்தமாதம் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலில் தொடரப்போவதாகவும் பொருத்தமான தருணம் வரும்போதே ஓய்வுபெறப்போவதாகவும் கூறியிருந்தார்.
ராஜபக்ஷர்கள் தோற்கடிக்கப்படவும் இல்லை, விரட்டியடிக்கப்படவும் இல்லை. சுயமாகவே அவர்கள் பதவிகளில் இருந்து விலகினார்கள். அவர்களைப்பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கவேண்டாம். உள்நாட்டு, வெளிநாட்டு சதிமுயற்சிகளின் மூலம் ராஜபக்ஷர்களின் அரசியலுக்கு முடிவுகட்ட முடியாது. அவர்கள் மீண்டெழுவார்கள். அவர்களின் திறமையும் அருமையும் வாக்களித்த மக்களுக்கு நன்றாக தெரியும். பொதுஜன பெரமுனவின் கைகள் மீண்டும் ஓங்கும். தேர்தல் நடந்தால் அதில் அவர்கள் வெற்றிபெறுவார்கள். எதிரணியினர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று மஹிந்த கடந்தவாரம் கூறியிருந்தார்.
அதேவேளை, கோட்டபாய நாட்டை விட்டு தப்பியோடவும் இல்லை, விரட்டியடிக்கப்படவும் இல்லை. சில தரப்புகளின் சதி முயற்சியின் விளைவாக நாட்டில் தோன்றிய கொந்தளிப்பை தணிப்பதற்காகவே அவர் நாட்டில் இருந்து வெளியேறினார். அமைதி திரும்பியதை அடுத்து அவர் நாடு திரும்பியிருக்கிறார். அரசியலில் ஈடுபடவிரும்பினால் பொதுஜன பெரமுன ஊடாக அதைச் செய்யலாம். அது குறித்து தீர்மானிப்பது அவரைப் பொறுத்தது என்று முன்னாள் நிதியமைச்சரும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
ராஜபக்ஷர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் உள்நாட்டு, வெளிநாட்டு சதி என்று கூறுவது அவர்களது சுபாவம். தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தோன்றியது என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு விசித்திரமான எண்ணத்தை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் அவர்களிடம் வேரூன்றியிருந்தது. அதனால், அதே சிங்கள மக்கள் தவறான தங்களது ஆட்சிமுறைக்கு எதிராக கொந்தளித்ததை ஜீரணிக்க முடியாதவர்களாக ராஜபக்ஷர்கள் இருக்கிறார்கள். அதனால் இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்த கிளர்ச்சியை தற்செயலானது என்ற நினைப்பில் தங்களது மீழெழுச்சி குறித்து அவர்கள் பேசுகிறார்கள்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நான்கு வருடங்களில் மீண்டும் முன்னரைவிடவும் கூடுதல் மக்கள் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்துக்கு ராஜபக்ஷர்கள் வரக்கூடியதாக இருந்த நிலைவரத்துக்கும் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்த ராஜபக்ஷர்கள் சகலரும் கூண்டோடு அரசியலில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிய மக்கள் கிளர்ச்சிக்குப் பின்னரான தற்போதைய நிலைவரமும் வேறுபட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். முன்னென்றும் இல்லாத மக்கள் கிளர்ச்சிக்குப் பின்ரான இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று எதுவும் இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது.
இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தை செலுத்தியதைப் போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை. ராஜபக்ஷர்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தது போன்று அந்தக் குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும் செய்ததில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்துவந்திருக்கிறது. ஆனால், ராஜபக்ஷர்கள் ஜனாதிபதியாக வந்த பிறகுதான் எதேச்சாதிகாரம் உச்ச அளவுக்குப் போனது. மட்டுமீறிய அதிகாரங்களை தங்களிடம் குவித்துவைத்திருப்பது ஏதோ தங்கள் பிறப்புரிமை என்ற நினைப்பில் அவர்கள் நடந்துகொண்டார்கள். ஆட்சிமுறை தொடர்பான தீர்மானங்களை சகோதரர்கள் மாத்திரமே கூடி மேற்கொண்டார்கள்.
ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் – உயர்மட்டத்தில் ஊழல் மோசடி, பொதுச்சொத்துக்கள் சூறையாடல், அதிகார துஷ்பிரயோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பொறுப்புக்கூறலை அலட்சியம் செய்தல், பேரினவாத அரசியலை தீவிரமாக முன்னெடுத்து சிறுபான்மை இனங்களின் இருப்பை ஆபத்துக்குள்ளாக்குவது – உருவகிப்பவர்களாக ராஜபக்ஷர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கையின் தற்போதைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மனித உரிமை மீறல்களினதும் பொருளாதாரக் குற்றங்களினதும் நீண்ட வரலாறு முக்கிய காரணம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்லீ கடந்தவாரம் வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடியையும் உரிமை மீறல்களையும் தொடர்புபடுத்தி ஐ.நா. மட்டத்தில் அறிக்கை வந்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இது விடயத்தில் முன்னைய ஆட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற போதிலும், இந்த நூற்றாண்டின் இதுவரையான இரு தசாப்தங்களில் கூடுதல் காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஷர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.
2005 தொடக்கம் இதுவரையான 17 வருடங்களில் இடையில் ஒரு நான்கு வருடங்களை தவிர எஞ்சிய காலப்பகுதி முழுவதும் ராஜபக்ஷர்களே அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள். 2005 – 2015, 2019 – 21 கட்டங்களில் அதாவது 11வருடங்கள் மஹிந்த ராஜபக்ஷவே நிதியமைச்சராக பதவி வகித்தார். பசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தது மாத்திரமல்ல, கோட்டபாய ஆட்சியில் இறுதியாக நிதியமைச்சராகவும் இருந்தார். அதனால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்குக் காரணமான தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்கு ராஜபக்ஷர்களே பெரும் பொறுப்பு.
இவ்வாறாக சகல முனைகளிலும் நாட்டை படுமோசமான நிலைக்குப் கொண்டுவந்துவிட்டு தங்களுக்கு இருக்கின்ற பொறுப்புக்கூறல் கடப்பாட்டை அலட்சியம் செய்துகொண்டு மீண்டும் அரசியலில் தீவிரமாக இறங்கி அவர்கள் எதைச் சாதிக்கப்போகிறார்கள்? இந்த இலட்சணத்தில் இடைநடுவில் பதவியை விட்டு ஓடிய கோட்டபாயவையும் மீண்டும் அரசியலுக்குக் கொண்டுவருவது குறித்து பேசுகிறார்கள்.
தனது மூத்த புதல்வன் நாமலின் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை தனது காலத்தில் உறுதிசெய்வதில் மஹிந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினை அதுவல்லவே.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கு இந்தியாவின் முக்கிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘த இந்து’வுக்கு வழங்கிய மிக நீண்டதொரு நேர்காணலின்போது அதன் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன், “ராஜபக்ஷர்களின் ஆட்டம் முடிந்துவிட்டதா அல்லது எதிரணிக் கட்சிகள் பலவீனமாக இருப்பதால் அவர்கள் மீண்டெழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றனவா? என்று அவரிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அவர் சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் பொதுஜன பெரமுனவும் சேர்ந்த ஒரு அரசாங்கம் அல்ல, மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து ஜனாதிபதி அரசாங்கம் ஒன்றை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டால் வரலாறு ராஜபக்ஷர்களுக்கு உரிய இடத்தைக் காட்டும் என்று குறிப்பிட்டார்.
உண்மையில் இன்று அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்படவேண்டியவர்கள் நாட்டை அதல பாதாளத்திற்குள் தள்ளிவிட்ட ராஜபக்ஷர்களே. அதைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவேனும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை. சகல எதிரணி கட்சிகளுமே தனித்தனியாக கூட்டணிகளை அமைப்பதில் நாட்டம் காட்டுகின்றன. அடுத்த தேர்தல்களுக்கு அவை தயாராகின்றனவே தவிர உடனடியாக கையாளவேண்டிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.
இதை ராஜபக்ஷகள் தங்களுக்கு அனுகூலமாக பயன்படுத்துகிறார்கள். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் பயனளிக்காமல் போயிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்திலான அரசாங்கம் மீண்டும் வலுப்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்தவாரம் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்களே. ஒரு ராஜபக்ஷவும் அதில் அடங்குகிறார். இவர்கள் எல்லோரும் கோட்டபாபய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்தவர்களே. பொதுஜன பெரமுனவினால் தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியின் கீழ் பழைய ராஜபக்ஷ ஆட்சியே தொடருகிறது.
அமைச்சரவையும் விரைவில் விரிவாக்கப்படவிருப்பதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த விரிவாக்கத்தின்போது ராஜபக்ஷர்கள் மீண்டும் அமைச்சர்களாகக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தங்களது மீட்சிக்கான பாதையை இதன் மூலமாக உறுதிசெய்வது அவர்களுக்கு சுலபம்.
ஆனால், நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியமானது. ராஜபக்ஷர்கள் நினைப்பது போன்று புதிய தேர்தல் ஒன்றில் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து மீண்டும் செல்வாக்கான ஒரு நிலைக்கு அவர்களைக் கொண்டுவரப்போவதில்லை. ராஜபக்ஷர்களின் எதிர்பார்ப்புகள் இலங்கை மக்களின் விவேகத்தை நிந்தனை செய்வதாக அமைந்திருக்கின்றன. மக்கள் கிளர்ச்சி அடங்கிப்போயிருந்தாலும், அதன் மூலமாக நாட்டு மக்கள் மத்தியில் தவறான ஆட்சிமுறைக்கும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கும் எதிராக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் பிரக்ஞை குறித்து ராஜபக்ஷர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள்.
இறுதியாக, ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு செய்த நாசத்தை மணிச்சுருக்கமாக சொல்வதற்கு கடந்தவாரம் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான கிஷாலி பின்ரோ ஜெயவர்தன தனது பத்தியில் பயன்படுத்திய முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சிலின் கூற்றொன்றை தவிர பொருத்தமானது வேறு எதுவும் இருக்கமுடியாது.
இரண்டாவது உலகப்போரின்போது ஒரு கட்டத்தில் ஜேர்மன் விமானப்படைக்கு பிரிட்டிஷ் விமானப்படைவீரர்கள் ஏற்படுத்திய இழப்பை பாராட்டியபோது சேர்ச்சில் பின்வருமாறு கூறினாராம்.
“பிரிட்டனின் வரலாற்றில் முன்னர் ஒருபோதுமே சொற்ப எண்ணிக்கையான வீரர்கள் குறுகிய ஒரு காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு மாபெரும் அழிவை இது போன்று ஏற்படுத்தியதில்லை.”
வீரகத்தி தனபாலசிங்கம்