2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா. அக்காவயும் தம்பியயும் கவனமா பார்த்துக்கொள்ளுங்க. நான் வந்திடுவன். கவலைப்படாதீங்க அம்மா…” என்டு போனவன்தான் இன்னும் என்னைய பார்க்க வரல்ல. புள்ள சொன்ன இந்த வார்த்தைகள்தான் இன்னும் என்னை உயிரோட வச்சிருக்கு. அன்றைய தினம் பேசின அத்தனை வார்த்தைகளும் காதில ஒலிச்சிக்கொண்டே இருக்கு.

இறுதிப் போர் உக்கிரமாக இடம்பெற்றபோது இராணுவம் முன்னேற முன்னேற கிளிநொச்சியில் இருந்து இடம்பெயரும் யோகராசா கனகரஞ்சனி தனது மூத்த மகளுடனும் இளைய மகனுடனும் இறுதியாக முள்ளிவாய்க்கால் வழியாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்கிறார். உயிர் பிழைத்து வந்துசேர்ந்துவிட்டோம் என்று பெருமூச்சு விடமுடியவில்லை. மகன் எங்கு இருக்கிறான்? இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துசேர்ந்தானா? சரணடைந்தானா? என்ன நடந்தது என்ற விவரம் தெரியாமல் பதற்றத்துடன் அழைந்தவாறே கண்ணில்பட்ட – தெரிந்தவர்களிடமெல்லாம் கனகரஞ்சனி விவரம் கேட்டு அழுதுபுலம்புகிறார். அப்போது ஒருவர், அமலன் இராணுவத்திடம் சரணடைந்ததைக் கண்டதாகக் கூறுகிறார். விசாரணை முடிந்ததும் தான் வந்துசேர்ந்துவிடுவேன் என்று அம்மாவிடம் கூறுமாறு அமலன் கூறியதாக குறித்த நபர் கனகரஞ்சனியிடம் தெரிவிக்கிறார்.

“மகன் சரணடைஞ்சத நேரடியா கண்டிருக்கினம். சனல் 4 வீடியோவிலயும் மகன கண்டனான். அதுமட்டுமில்லாம, 2017 ஜூலை மாதம் வரை இராணுவப் புலனாய்வு பிரிவினர், பொலிஸார் வந்து மகன பற்றி விசாரிச்சவங்க. எப்படி காணாமல்போனார், அவர் பற்றிய ஆவணங்கள், அடையாள அட்டை கேட்டவங்க. அவர் எங்காவது ஓரிடத்தில இருக்கிறதாலதானே இப்படி வந்து விசாரிக்கினம்?” என்று கூறுகிறார் கனகரஞ்சனி.

ஆனந்தகுமாரசுவாமி இடைத்தங்கள் முகாமில் இருந்தபோது மகனைத் தேடி ஆரம்பமான கனகரஞ்சனியின் போராட்டம் 2022 மே மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டது வரை, 13 வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்த 13 வருடங்களில் பலதரப்பட்ட நபர்களைச் சந்தித்தும், பல அமைப்புக்களிடம் முறையிட்டும் சரணடைந்த தனது மகனுக்கு என்ன நேர்ந்தது? இப்போது எங்கிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்காக – நீதியை அடைவதற்காக கனகரஞ்சனி நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

13 வருடங்களாக அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறார் என்பதை கிலோமீற்றர்கள் அடிப்படையில் கணிப்பிட முடிவுசெய்தேன். இலங்கையினுள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்றுவந்த தூரத்தை அளவிட முறையே Google Maps மற்றும் Free Map Tools களைப் பயன்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஆர்ப்பாட்டங்கள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், சிஐடி, மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமை அமைப்புகள், செய்தியாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், மதத்தலங்கள், வெளிநாட்டு பயணங்கள் என யோகராசா கனகரஞ்சனி சென்றுவந்த இடங்களுக்கு இடையிலான தூரத்தை கணிப்பிட்டுள்ளேன். நீதியை அடைவதற்காக கனகரஞ்சனி மொத்தமாக 128,033 km பயணித்திருக்கிறார். சராசரியான எண்ணிக்கையே இது. நினைவுக்கு வந்​ததை – என்னுடன் அவர் பகிர்ந்துகொண்டதை வைத்துக்கொண்டு கணிப்பிடப்பட்டது.

கனகரஞ்சனி பயணம் செய்த 128,033 km ஐ இன்போகிரபிக்ஸ் கொண்டு ஒப்பீட்டு ரீதியாக விளக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இன்போகிரபிக்ஸ்களைக் கீழே பார்க்கலாம்.

 

 

 

தொடர்புபட்ட கட்டுரை: சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)