Photo, Selvaraja Rajasegar

அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ நவயுக மன்னராகவும் கூட அவர் வர்ணிக்கப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன. இன்று அவர் வெகுஜனக்  கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் கடந்தவாரம் பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அலரிமாளிகையில் இருந்து வெளியேறி பாதுகாப்புக்காக குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். நாட்டின் கொந்தளிப்பான  நிலைவரங்கள் தணிந்த பின்னர் அவர் விரும்புகின்ற இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று பாதுகாப்புச் செயலாளர் அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்த கோட்டபா ராஜபக்‌ஷவும் 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் 68 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியதையடுத்து பிரதமராக பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒரு 30 மாத காலத்திற்குள் மக்களினால் வெறுக்கப்பட்டு பதவிகளில் இருந்து இறங்குமாறு கேட்கப்படுவார்கள் என்று எவராவது கனவிலும் நினைத்துப் பார்த்திருப்பார்களா? ராஜபக்‌ஷ குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் பொறுப்பான பதவிகளில் இருக்கக்கூடாது; ஒட்டு மொத்தமாக அவர்கள் வீடு செல்லவேண்டும் என்று நாட்டு மக்கள் கேட்கின்ற அளவுக்கு அவர்கள் மீதான வெறுப்பு உச்சநிலையை அடைந்திருந்தது.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக பேசுவதற்தே மக்கள் அஞ்சிய காலம் போய் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று  அவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தேடித்தேடி தீவைக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அம்பாந்தோட்டையில் ராஜபக்‌ஷர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரின் இல்லம் சாம்பலாக்கப்பட்டிருக்கிறது. தந்தையார் டி.ஏ. ராஜபக்‌ஷவின் பிரமாண்டமான உருவச்சிலை தகர்த்துவீழ்த்தப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டபாயவைத் தவிர மற்றைய ராஜபக்‌ஷர்கள் எல்லோரும் பதவிகளில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். மே 9ஆம் திகதி நண்பகல் அலரிமாளிகையில் இருந்து கிளம்பிய ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் (அரசாங்க அனுசரணையுடன் கொழும்புக்கு வெளியில் இருந்து பஸ்களில் கூட்டிவரப்பட்ட காடையர்கள்) கொழும்பு காலிமுகத்திடலில் ‘ கோட்டா கோகம’ அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும்  நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவும் மூத்த புதல்வன் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவும் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தங்கள் தேவைக்கு நீதித்துறையை வளைத்துப்போட்டவர்களுக்கு இன்று இந்த அவலநிலை.

தென்னிலங்கை அம்பாந்தோட்டையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து அரசியலில் ஈடுபட்டுவந்திருந்தாலும் அண்மைய பல தசாப்தங்களில் அந்த குடும்பத்தின் பிரபலமான  ‘அரசியல் முகமாக’ விளங்கியவர் மஹிந்த ராஜபக்‌ஷவே.

1970 பொதுத்தேர்தலில் ஸ்ரீமாவோவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றபோது பெலியத்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தனது 24 வயதில் தெரிவானவர் மஹிந்த ராஜபக்‌ஷ

1977 ஜூலை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியிடம் படுதோல்வியடைந்தபோது மஹிந்தவும் பெலியத்தவில் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்தும் அரசியலில் துடிப்பாக இயங்கிய அவர் பிறகு 1989 பெப்ரவரியில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் முதற்தடவையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். அவரின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்‌ஷவும் முதற்தடவையாக அப்போது நாடாளுமன்றம் வந்தார்.

பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி கொடூரமான முறையில் படைபலம் கொண்டு அடக்கப்பட்டபோது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்‌ஷ ஜெனீவாவுக்கும் சென்று முறையிடவும் செய்தார். பின்னர் அவரின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உரிமைகள் மீறல்கள் முறைப்பாடுகள் தொடர்பிலான ஜெனீவா தீர்மானங்களை எவ்வாறு கையாண்டுவந்தார் என்பது அண்மைக்கால வரலாறு.

1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது அரசாங்கத்தில் அமைச்சராக மஹிந்த பதவி வகித்தார். அவருக்கு மிகவும் முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை வழங்காதிருப்பதில் திருமதி குமாரதுங்க மிகவும் எச்சரிக்கையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலத்தின் பிறபகுதியில் மஹிந்த பிரதமராகவும் சில வருடங்கள் பதவிவகித்தார். 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தபோது மஹிந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலை அவர் பிரதமர் பதவியை வகித்துவந்த நிலையிலேயே எதிர்கொண்டார். சுதந்திர கட்சி தலைமையிலான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தார்.

அந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவோ அல்லது விக்கிரமசிங்கவோ நாட்டு மக்களின் குறிப்பாக தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவைக்கொண்ட வேட்பாளர்களாக இருக்கவில்லை. விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலை புலிகளுடன் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அடிப்படையிலான பிரசாரங்களை முன்னெடுத்த காரணத்தால் மஹிந்த ராஜபக்‌ஷ விக்கிரமசிங்கவையும் விட சற்று கூடுதலான செல்வாக்கைக் கொண்டவராக விளங்கியிருக்கக்கூடும்.

வடக்கு தமிழ் மக்கள் அந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக மஹிந்த ராஜபகடஷ வெற்றிபெற்றிருக்கவே முடியாது. அவர் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தால் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு தேவையான 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் என்ற எல்லையை கடந்திருக்கமாட்டார் என்பதே உண்மை.

மஹிந்தவின் முதலாவது பதவிக்காலத்தில் 2009 ஆண்டில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. போர்வெற்றியை உச்ச அளவுக்கு தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தியே ராஜபக்‌ஷர்கள் தங்களது அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்தார்கள். போரின் முடிவுக்குப் பிறகு சிறுபான்மை இனங்களை அரவணைக்கின்ற கொள்கைகளையும் நடைமுறைகளையும கடைப்பிடித்து, உள்நாட்டுப் போருக்கான காரணிகளை சிங்கள மக்களுக்கு புரியவைத்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் அதன் மூலமாக நாட்டின் வளமான எதிர்காலத்தை மனதிற்கொண்ட சிறந்த அரசியல் தலைவர் என்ற பெருமையை தனதாக்கிக்கொள்வதற்கும் வரலாறு மஹிந்தவுக்கு அருமையான வாய்ப்பொன்றை வழங்கியிருந்தது. ஆனால்,அவர் அதை வேண்டுமென்றே தவறவிட்டார்.

போர்வெற்றி எக்காளத்தில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு, இராணுவவாதத்துடன் கூடிய சிங்கள பௌத்த பெரும்பான்மையின வாதக் கொள்கைகளை வீறுடன் முன்னெடுப்பதிலேயே ராஜபக்‌ஷர்கள் தீவிர கவனம் செலுத்தினார்கள். ஆட்சிமுறையினதும்  கட்சி அமைப்புக்களினதும் சகல பிரிவுகளுக்கும் தங்கள் கொடுக்குகளைப் பரவி வைத்தார்கள். அதன் விளைவுகளை இன்று முழு நாடும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இலங்கை அதன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் படுமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கும் மருந்துவகைகளுக்கும் எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. வாழ்க்கைச் செலவு கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ அன்றாடம் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு விலை கொடுத்தே மக்கள் பொருட்களை வாங்கவேண்டியிருக்கிறது. பணவீக்கம் கடுமையாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாட்டுக்கடனை திருப்பிச் செலுத்த முடியாதநிலையில் நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலை அடைந்திருக்கிறது. வெளிநாட்டு உதவித் தயவிலேயே இலங்கையின் அன்றாட வாழ்க்கையை இலங்கை  ஓட்டவேண்டிய பரிதாபமான நிலை.

இத்தகைய இடர்நிலைக்கு ராஜபக்‌ஷர்களின் குடும்ப ஆட்சியின் ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் தவறான பொருளாதார முகாமைத்துவமுமே அடிப்படைக் காரணம் என்பதை விளங்கிக்கொண்ட மக்கள் கடந்த பல வாரங்களாக வீதிப் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றார்கள். ராஜபக்‌ஷர்கள் அரசியலுக்கு இனிமேல் வரக்கூடாது என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். நாட்டைச் சூறையாடிய அவர்களின் சொதத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்ற முழக்கங்கள் போராட்டங்களில் ஒலிக்கின்றன.

சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளில் சாதாரண மக்களை மூழ்கவைத்துவிட்டு ராஜபக்‌ஷர்கள் தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கிக்குவித்துவைத்திருக்கிறார்கள் என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை அரசியல் ராஜபக்‌ஷர்களின் காலத்தில்தான் குடும்ப ஆட்சியுடன் அடையாளப்படுத்தப்படுகிறது என்றில்லை. முன்னரும் கூட அரசியல் முக்கியமான நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ குடும்பங்களின் செல்வாக்கின் கீழ் இருந்து வந்திருக்கிறது. சேனநாயக்க, பண்டாரநாயக்க குடும்பங்களை உதாரணமாகக் கூறலாம். ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலத்தில் மாமன் – மருமகன் கட்சி என்றே அழைக்கப்பட்டது. சுதந்திர கட்சிக்குள் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிவரை பண்டாரநாயக்க குடும்பத்தவரைத் தவிர்ந்த வேறு எவரும் தலைமைத்துவத்துக்கு வருவது குறித்து நினைத்துப்பார்க்கவே முடியாது. ஆனால், அந்தக் குடும்பங்கள் ராஜபக்‌ஷர்கள் அளவுக்கு மக்களால் வெறுக்கப்படவில்லை. இவர்கள் அளவுக்கு ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், பொதுச்சொத்துக்கள் சூறையாடல் ஆகியவற்றுடன் அந்தக் குடும்பங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை. அத்துடன், ராஜபக்‌ஷ குடும்பத்தின் உறுப்பினர்களும் உறவினர்களும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களும் பெரும் எண்ணிக்கையில் ஆட்சி நிர்வாகத்தில் ஆக்கிரமிப்பு செய்தது போன்று அந்த குடும்பங்கள் நடந்துகொள்ளவில்லை.

இலங்கையின் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் இன்றைய மக்கள் போராட்டங்கள் குறித்து எழுதிய கட்டுரையொன்றில் ராஜபக்‌ஷர்கள் பற்றி செய்த விமர்சனத்தின் ஒரு பந்தியை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

“ராஜபக்‌ஷர்கள் இலங்கையின் காயப்பட்ட ஜனநாயகம், குடும்ப ஆதிக்கத்துடன் கூடிய எதேச்சாதிகாரம், சிறிய குழுவினரின் ஆட்சி மற்றும் அரசியல் ஊழல் ஆகியவற்றின் படுமோசமான மரபுகளில் ஒன்றின் சின்னமாக விளங்குகிறார்கள். இலங்கை ஜனநாயகம், கட்சி அரசியல், நாடாளுமன்ற செயன்முறைகள் மற்றும் சமூக அமைதி ஆகியவை மீதான ராஜபக்‌ஷர்களின் பாதகமான செல்வாக்கு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராஜபக்‌ஷர்கள் ஜனவசிய அரசியலை (Populist politics) முன்னெடுப்பவர்கள் போன்று வெளித்தோற்றத்துக்கு ஒரு மாயையைக் காட்டிக்கொண்டு அடிப்படையில் அதிகார வெறி பிடித்தவர்களாகவே செயற்பட்டுவந்திருக்கிறார்கள். அதிகார மமதை அவர்கள் சகலரிடமும் குடிகொண்டிருந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதி ஒருவருக்கு இருந்த இரு பதவிக்கால வரையறைகளை ஒழித்தார். எத்தனை பதவிக்காலத்துக்கும் தேர்தலில் தான் போட்டியிட்டு தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு விரும்பினார். இரண்டாவது பதவிக்காலத்தில் இரு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில் 2010 ஜனவரியில் உரிய காலத்துக்கு  முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை அவர் நடத்தினார். ஆனால், தனது அமைச்சர்களில் ஒருவரிடம் தான் அந்தத் தேர்தலில் தோல்வியடையவேண்டிவரும் என்று  அவர் ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

அந்தத் தேர்தல் தோல்வியுடன் மஹிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் கௌரவமாவது மிஞ்சியிருக்கும். அரசியல் அதிகாரப்பசி அவரை விடவில்லை. இலங்கையின் நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியாக இருந்தவர்களில் பதவியில் இருந்து இறங்கிய பின்னர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக வரும் தவறான  முன்னுதாரணத்தை ஏற்படுத்திக்காட்டியவர் மஹிந்தவே. அவரைத் தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவும் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்களுக்கு நிவாரணம் கோரி மக்கள் ஆரம்பித்த வீதிப்போராட்டங்கள் இன்று அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்து ‘ஆட்சிமுறைமை’ மாற்றத்தை வேண்டிநிற்கின்றன. மக்கள் மத்தியிலும் இளைய தலைமுறையினர் மத்தியிலும் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களை புரிந்துகொள்ள இயலாத நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் அதற்கும் தானே பிரதமர் என்று மமதையுடன் பேசினார். மே 9 அலரிமாளிகைக்கு அழைத்துவரப்பட்ட தனது ஆதரவாளர்களை காலிமுகத்திடலுக்கு கட்டவிழ்த்துவிடுவதற்கு முன்னதாக உரையாற்றிய மஹிந்த “சவால்களைக் கண்டு அஞ்சுபவனல்ல இந்த மஹிந்த ராஜபக்‌ஷ” என்று மார்தட்டினார்.

ஆனால், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரசாங்க அனுசரணையுடன் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் பரவிய நிலையில் சில மணித்தியாலங்களில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கவேண்டியேற்பட்டது. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியாக மக்கள் வாழ வழவகுத்தவராக தன்னைப் பற்றி பெருமை கூறுகின்ற மஹிந்த ராஜபக்‌ஷ இறுதியில் இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கு மத்தியிலேயே பதவியில் இருந்து இறங்கிய விசித்திரத்தைக் கண்டோம்.

செ்னையில் இருந்து வெளியாகும் இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து ‘ மே 11 மஹிந்த ராஜபக்‌ஷவின் வீழ்ச்சி குறித்து எழுதிய ஆசிரிய தலையங்கத்தின் இரு பந்திகள்  ராஜபக்‌ஷ ஆட்சியை கச்சிதமாக வர்ணித்திருந்தன. அவை வருமாறு:

“இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப ஆட்சிக்கு எதிரான பரந்தளவிலான மக்கள் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக மூண்டிருக்கும் அசாதாரணமான வன்முறைகளுக்கு மத்தியில் அவரது பதவி விலகல் கடந்த ஒன்றரை தசாப்த காலத்தின் பெரும்பகுதி பூராவும் நாட்டில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுவந்த அரசியல் குறியீடு (Political brand) ஒன்றின் சடுதியான வீழ்ச்சியைக் குறித்துநிற்கிறது.

“வீறுமிக்க தேசியவாதமும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலும் என்றென்றைக்குமே முடிவற்றதாக இருக்கக்கூடிய ஆதரவுத் தளம் அல்ல என்பதும் மக்கள் பொருளாதார இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கும்போது அந்த ஆதரவு தளத்தினால் பயனில்லை என்பதுமே ராஜபக்‌ஷ குறியீட்டின் முடிவில் இருந்து வெளிப்படும் பெரிய செய்தியாகும்.”

வீரகத்தி தனபாலசிங்கம்