சகல அரசியல்வாதிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது கணக்கில் வராத செல்வங்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என 96% இலங்கையர்கள் கருதுகின்றனர் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டர் அண்மையில் நடாத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் மற்றும் இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்ஷ குடும்பம் விலக வேண்டும் என்ற அபிப்பிராயத்தை பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கொண்டுள்ளனர் என்பதோடு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு 87% ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, மக்கள் மனதில் நெருக்கடிக்குத் தீர்வு காணும் விடயத்தில் ராஜபக்ஷர்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை என்பதுடன் அவர்கள் அகற்றப்படுவதை நெருக்கடிக்கான தீர்வாக கருதப்படுகின்றது என்பதையும் இந்த ஆய்வு தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்கள் உட்பட அனைத்து இனச் சமூகத்தவர்கள் மத்தியிலும் இந்தக் கருத்து இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டாய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் சமீபத்தில் நடாத்தப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி (2ஆவது அலை) ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்பவை தொடர்பில் பொதுமக்களின் கண்ணோட்டத்தை ஆராயும் நோக்கத்துடன், ஸ்திரமற்ற அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு, சோஷல் இன்டிகேட்டரின் நாடளாவிய கள வலையமைப்பினைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மிகக்குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த ஒரு மாத காலத்தில் தாம் அல்லது தமது குடும்பத்தில் எவரேனும் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் அல்லது இது போன்ற ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்க நேர்ந்ததாகவும் (88% மக்கள்) பொருளாதார நெருக்கடி காரணமாக தமது அல்லது தமது குடும்பத்தில் எவரேனும் ஒருவரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவிக்கின்றனர் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடியாகக் கொள்ளப்படும் தற்போதைய நிதி நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவமே காரணம் என நாடு முழுவதிலும் உள்ள மக்கள் (62%) ஏகமனதாக குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஊடக அறிக்கையினை முழுமையாகப் பார்க்க.