Photo, The Wall Street Journal

ஐக்கிய நாடுகள் சபை எவற்றுக்காக குரல் எழுப்புகின்றதோ அவை அனைத்தினதும் இதயத்தில் பயங்கரவாதம் தாக்குதல் தொடுக்கின்றது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின்  ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு என்பன உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வலியுறுத்திக் கூறினார். அதற்கு உலகளாவிய ரீதியிலான ஒரு எதிர்வினை தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறினார். உலகளாவிய கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது, அதனை ஒவ்வொரு நாட்டிற்கும் திட்டவட்டமான நிலவரங்களுக்குள் சுருக்கிப் பார்க்க முடியும்.

அவர் தெரிவித்த கரிசனைகள் எமது கரிசனைகளாகவும் இருப்பதுடன், அதன் காரணத்தினால் நாங்கள் பயங்கரவாதவாத எதிர்ப்புச் செயற்பாடுகளை உள்நாட்டு ரீதியில் சட்டபூர்வமாக முகாமைத்துவம் செய்வது அவசியமாகும். எவ்வாறிருப்பினும், அத்தகைய சட்டங்கள், கொபி அனானின் கூற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு போன்ற அடிப்படை விழுமியங்களை அழித்தொழிக்கக் கூடாது. எமது நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம், ஏதேச்சாதிகாரமான ஒரு சட்டமாக, மனித உரிமைகளை மீறும் ஒரு சட்டமாக,  சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஜனநாயக விரோதமான ஒரு சட்டமாக இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

தீர்வு

இந்த விமர்சனம் தொடர்பாக பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மிகச் சிறந்த தீர்வு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது என்பதாகும். அதனை நீக்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக அது திருத்தப்படல் வேண்டும் என்றும் ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் சிந்தித்தன. இச்சட்டத்தை நீக்குவதற்கான காரணங்களில் ஒன்று பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதாகும். அது உண்மையும் கூட. பெருமளவுக்கு மனித உரிமைச்  செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு இருதரப்பு முகவரகங்கள் மற்றும் பல்தரப்பு நிறுவனங்கள் ஆகிய தரப்புக்களிடமிருந்தே இந்தக் கோரிக்கை வருகின்றது.  இச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் முன்னணியில் சிறுபான்மைச் சமூகக் குழுக்கள் இருந்து வருகின்றன. இது அதனை ஒரு சிறுபான்மையினரின் தேவையாக எடுத்துக் காட்டியுள்ளது. எனவே, அதற்கு எதிரான பெரும்பான்மையினரின் கருத்தை உருவாக்குவது மிக எளிதாக இருந்து வந்துள்ளது. இச்சட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக இருப்பதனால் அது நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கும் எந்தவொரு நபரும் பயங்கரவாதத்தின் ஆதரவாளராக முத்திரை குத்தப்படுகிறார்.

GSP+ வரி பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதன் அல்லது நீக்காதிருப்பதன் பொருளாதார சரிவின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற காரணத்தினாலேயே நான் இந்தப் பிரச்சினையை எச்சரிக்கையுடன் கையாளுகிறேன். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி காலப்பகுதியின் போது GSP+ வரியின் எதிர்மறையான பொருளாதாரத் தாக்கங்களை நாங்கள் அனுபவித்துள்ளோம். பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது. இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒரு நெருக்கடியின் நுழைவாயிலில் இருக்கின்றோம்.

அரசியல் யாப்பு ரீதியான கடப்பாடுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல் செய்யும் பொழுது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், சர்வதேச அழுத்தங்களை நாங்கள் உதாசீனம் செய்தாலும் கூட, எமது பிரஜைகளின் அடிப்படை உரிமைகளுக்கு நாங்கள் மதிப்பளித்தல் வேண்டும். எமது அரசியல் யாப்பு உறுப்புரை 10 சிந்தனை சுதந்திரம், உறுப்புரை 11 சித்திரவதையிலிருந்து விடுதலை பெறும் சுதந்திரம், உறுப்புரை 12 சமத்துவம், உறுப்புரை 13 தன்னிச்சையாக கைது செய்தல், தடுத்து வைப்பு,  தண்டனை என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை என்பவற்றை உள்ளடக்குகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் இந்த உரிமைகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலப்பான அரசியல் எதிர்வினைகள்

வழமை போலவே இந்தப் பிரச்சினை தொடர்பாக அரச தரப்பிலிருந்து நாங்கள் கலவையாக எதிர்வினைகளை செவிமடுத்து வருகின்றோம். தொடர்ச்சியாக நிலவிவரும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட மாட்டாது என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். உண்மை, பாதுகாப்பு முக்கியமானதாகும். இது தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  கேள்வி எழுப்பினார். திருத்த சட்டமூலம் நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதனை எதிர்க்கும் எவரும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் என்றும் அமைச்சர் பீரிஸ் இதற்குப் பதிலளித்தார். பெருமளவுக்கு நழுவலான ஒரு பதிலாகவே இது உள்ளது!.

நம்பிக்கை ஒளிக்கீற்று

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதனை அமைச்சர் பீரிஸ் நிராகரித்த அதேவேளையில், இது தொடர்பாக திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென பரப்புரை  செய்வதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்த பொழுது ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்பட்டது. மனித உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ஜனாதிபதி பேசியிருப்பதனால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குவின் எதிர்வினை அத்தகைய கவர்ச்சிகரமான ஓர் அரசியல் சொல்லாடலை மீள வலியுறுத்தலாகவே இருக்க முடியும்.

தேவையான திருத்தங்களுடனும், பயங்கரவாதம் குறித்த மீள் வரைவிலக்கணத்துடனும், பொதுச் சட்டங்களின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிரான புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட முடியும் என்ற விடயத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவளிக்கின்றது. பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக சாட்சி கட்டளைச் சட்டத்தை பிரயோகிப்பதனை விலக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அது கூறுகின்றது. தண்டனைச் சட்டக் கோவை குற்றவியல் நடைமுறைச் சட்டம், நீதி பரிபாலனச் சட்டம் மற்றும் பிணை வழங்கும் சட்டம் என்பன திருத்தப்பட வேண்டும் என அது யோசனை தெரிவிக்கின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சர் பீரிஸ் அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து உண்மையாகவும், சுயாதீனமாகவும் வேறுபட்டிருந்தால், அது ஓர் அதிர்வை ஏற்படுத்த வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னைய தலைவர் கலாநிதி தீபிகா உடுகம சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. அது ஜனாதிபதி செயலகத்தின் கடும் திகைப்பையும், விமர்சனங்களையும் உருவாக்கியது. ஜனாதிபதின் ஓர் ஆலோசகர் என்ற முறையில் நிலைமையை சாந்தப்படுத்துவதற்கென நான் தலையிட்டேன். தற்போதைய தலைவர் நீதிபதி ரோஹினி மாரசிங்க அவர்களின் சாதகமான நிலைப்பாடு காரணமாக அத்தகை கண்டனங்கள் தோன்றமாட்டாது என்றும்,  சமாதானப்படுத்துவதற்கு ஆட்களை நிர்ப்பந்திக்காது என்றும் நாங்கள் நம்புவோம்.

கலாநிதி உடுகம அவர்கள் முன்வைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மற்றொரு ஆவணம் அரசியல் யாப்பு சீர்திருத்த குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவாகும். அதில் உரிமைகள் சாசனத்தின் வரைவு இணைக்கப்பட்டிருந்தது. அது அரசியல் யாப்பு ரீதியான கடப்பாடுகளையும் கொண்டிருந்தது. தற்போதைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிந்தோ அல்லது  தெரியாமலோ இதன் உள்ளடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அமைச்சர் பீரிசின் கடுமையான அணுகுமுறை, இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதனை காட்டுகின்றது. அந்த வகையில் மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினை தொடர்பாக சர்ச்சைக்குரிய தீர்வுகளை முன்வைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஐ நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) – வழிகாட்டும் அமைப்பு?

நல்லாட்சி அரசாங்க நாட்கள் தொடக்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானங்கள் மூலம் கவனத்தில் எடுக்கப்பட்டிருப்பதுடன், அது தொடர்பான மிகப் பிந்திய தீர்மானம் 46/1 தீர்மானமாகும். கைது, சித்திரவதை, தடுத்து வைப்பு, விசாரணைக்கென இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லல் மற்றும் குற்றப்பத்திரிகை வழங்குதல் என்பன தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை தொடர்பாக ஏனையவர்களும் ஆய்வு செய்துள்ளார்கள். சிறைச்சாலைகள் தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்விலிருந்து இது தொடர்பாக மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பணிப்புரைகள், பாதுகாப்புகள் என்பவற்றுக்கு மத்தியிலும் கூட, கைது  செய்யும் அதிகாரிகள் தொடர்பாக ஒரு மேற்பார்வை அல்லது பொறுப்புக்கூறும் பொறிமுறை இல்லாத நிலையில் அல்லது வினைத்திறன் மிக்க நீதித் துறை மேற்பார்வையில்லாத நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் நலன்களைப் பாதுகாப்பது சாத்தியமில்லை.”

இது கவலைக்குரிய ஓர் அங்கீகாரமாக இருப்பதுடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விமர்சகர்கள் கூறும் கருத்துக்களுக்கு ஆதரவளிப்பதாகவுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் “அரச எதிர்ப்பு பயங்கரவாதிகளின்” நலனோம்பல் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும் என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். ஏனெனில், குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் ஒரு நபர் நிரபராதி என அனுமானிக்கப்படுகின்றது, [அரசியல் யாப்பு உறுப்புரை 13 (5)].

அந்த ஆய்வு இப்படிக் குறிப்பிடுகின்றது: “இந்த அத்தியாயம் எடுத்து விளக்குவதைப் போல நபரொருவரை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்துவதற்கும், அடிமைப்படுத்தி, குறிப்பிட்ட நபரை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சடங்கு என்ற முறையில் வன்முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது, அரச அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கும் ‘அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்பவற்றின் கட்டமைப்புக்களை’ உருவாக்குவதற்கு அது பயன்படுத்தப்படுகின்றது. தனிநபர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வலுவற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள்… இந்த விதத்தில் வன்முறை பயன்படுத்தப்படும் பொழுது அது ‘சகஜமானதாக, ஆனால் தொடர்ந்து இடம்பெறுவதாக’ மாற்றமடைகின்றது. அதாவது, அது பெருமளவுக்கு சகஜ நிலையை அடைவதுடன், வேரூன்றியும் விடுகின்றது. அதன் பாவனை கேள்விக்குட்படுவதில்லை; அமைப்புக்குள்ளிருந்தோ, அரசு தரப்பிலிருந்தோ, சில சந்தர்ப்பங்களில் பொது மக்களிடமிருந்தோ அது  தொடர்பாக எத்தகைய வியப்புக்களும் தெரிவிக்கப்படுவதில்லை.”

சாட்சிகளின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதில் பயன்படுத்தப்பட்டு வரும் வன்முறை மற்றும் சித்திரவதை என்பவற்றை இந்த அறிக்கை விரிவாக எடுத்துக் காட்டுகின்றது. சாதாரண சிறைக் கைதிகள் தொடர்பாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழிமுறையாக இது இருப்பதால், அரச எதிர் பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதனை கற்பனை செய்து பார்க்க முடியும்.

இந்த அறிக்கையின் நிறைவேற்று சாராம்சம், பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகளின் மீது திட்டவட்டமாக கவனம் செலுத்துவதுடன், அதிலிருந்து சிலவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்:

  • அரசியல் யாப்பின் மூலமும், சர்வதேச மனித உரிமைகள் விழுமியங்களின் மூலமும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் என்பவற்றை பயங்கரவாதத் தடைச்சட்டம் தடுக்கின்றது.
  • நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதன் தாக்கத்தின் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகள் உரிய செயன்முறைக்கூடான பாதுகாப்புக்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் விடயத்தில் அத்துமீறல்களை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
  • பயங்கரவாதத் தடைச் சட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பல வழிகளில் மிக மோசமான தாக்கங்கள் ஏற்பட வழிவகுக்கின்றது.
  • சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வருதல், மொழித் தடைகள், அரச எதிர்ப்பு அம்சம் என்பன கவனத்தில் எடுக்கப்படுவதன் காரணமாக பாரபட்சங்களை அனுபவித்தல்.
  • சக சிறைக் கைதிகள் அல்லது சிறை உத்தியோகத்தர்களாலும் கூட துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் என்பவற்றை எதிர்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான ஆபத்து.
  • இதன் பின்விளைவாக, பயங்கரவாதத் தடைச் சட்ட கைதிகள் அனைவரும், ஏனைய பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகளுடன் சிறை வைக்கப்படுவதனை விரும்புகிறார்கள்.
  • விசேட பாதுகாப்புத் தேவைகள் காரணமாக குறிப்பிட்ட சில உரித்துக்களை அணுகுவதில் எதிர்கொண்டு வரும் வரையறைகள் (உதாரணம்: மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையங்கள்) மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ஒரு சில சந்தர்ப்பங்களில் மொழித் தெரிவுகள் வரையறைகளை கொண்டிருத்தல்.
  • பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன், அவர்கள் தென்னிலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மிகவும் சிரமமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
  • வழக்கறிஞர் ஒருவரை அமர்த்திக் கொள்ளும் விடயத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகள் பலர் நிதி ரீதியிலான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் சார்பில் ஆஜராவதன் விளைவாக ஏற்படக்கூடிய களங்கம் காரணமாகவும் வழக்கறிஞர்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. மேலும், குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் வழக்கை ஆரம்பிப்பதில் ஏற்படும் தாமதங்கள் என்பனவும் அவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
  • பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் நீண்டகாலம் (15 – 20 வருடங்கள்) சிறைப்படுத்தப்பட்டிருப்பதன் எதிர்மறைத் தாக்கங்களை தரவு ரீதியான மற்றும் அளவு ரீதியான தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
  • பங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 7 (3) விசாரணை நடத்துவதற்கென இடத்தை மாற்றுவதற்கு அனுமதி வழங்குவதுடன், அது தமது உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது என சிறைக் கைதிகளின் கதைகள் எடுத்துக் காட்டுகின்றன (உதாரணமாக: சித்திரவதை, நீதித்துறை தடுத்து வைப்பின் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புக்களை புறக்கணித்தல் மற்றும் தடுத்து வைப்பு தொடர்பான நீதித்துறையின் மேற்பார்வை நோக்கத்தை உதாசீனம் செய்தல்).
  • பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களைப் பொறுத்தவரையில் உடல் ரீதியான அழுத்தத்தின் கீழ் பலவந்தமாக வாக்குமூலங்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்ற விடயத்தை நிரூபிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரியின் (JMO) வகிபங்கு மிக முக்கியமானதாகும் (எவ்வாறிருப்பினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் ஒருவித இரகசிய கூட்டு இருந்து வந்தமை தொடர்பாக அல்லது மொழித்தடை காரணமாக சட்ட மருத்துவ அதிகாரிகள் பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகளுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடியாதிருப்பது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது).
  • எனவே, நிர்வாக தடுத்து வைப்பு காலப்பிரிவின் போது நிலவி வரும் வினைத்திறனற்ற பாதுகாப்புக்கள் காரணமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் நியாயமான ஒரு வழக்குக்கான உரிமையை அனுபவிப்பதில்லை. இவ்விதம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை சித்திரவதையின் கீழ் பலவந்தமாக வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு இயலுமையை வழங்குகின்றது. இந்த வாக்குமூலங்கள் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன,
  • வழக்குச் செயன்முறையின் போதும் கூட நியாயமான வழக்குக்கான தமது உரிமையை முழுமையாக அனுபவிக்கும் விடயத்தில் பயங்கரவாதத் தடைச்சட்ட கைதிகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தாமதங்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியை புரிந்து கொள்ள முடியாதிருக்கும் நிலை என்பவற்றையும் இது உள்ளடக்குகின்றது.

இந்தப் பிரச்சினைகள்  அரசாங்கத்தின் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் எடுத்துக் காட்டப்பட்டிருப்பவையாகும். அவை மிகையாக கூறப்பட்டிருந்தாலும் கூட, இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அமைச்சரவையிலிருக்கும் சட்ட வல்லுனர்கள் அதன் சாராம்சத்தை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவே அந்த ஆய்வுக்கு நிதிப்படுத்தலை வழங்கியிருந்தன.

இராஜாங்க அமைச்சர் ஒருவர் துப்பாக்கிகளை காட்டி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அச்சுறுத்தும் நிகழ்வுகள் கண்டுகொள்ளாதுவிடப்படும் பொழுது, இது தொடர்பான விமர்சனங்கள் மற்றும் பாதுகாப்புக்களுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன. ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது, பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரிடம் பதவிநிலை குறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் வாக்குமூலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்வது பெரும் கேலிக்கூத்தாகும்.

எனவே, நீதித்துறையின் மேற்பார்வை மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. நியாயமான விடயங்களின் அடிப்படையில் நீதித் துறையின் தலையீட்டுடன் இணைந்த விதத்தில் கைது அல்லது தடுத்து வைப்பு என்பவற்றிலிருந்து சுதந்திரத்தைக் கோருவது ஓர் உரித்தாக இருக்கவேண்டும். அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் பல்வேறு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி தடுத்து வைப்பு, விளக்கமறியல் மற்றும் சிறை என்பவற்றை தவிர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்து வரும் நிலையில், மற்றவர்களை மனிதாபிமானமற்ற நிலையில் நடத்துவது பாரபட்சம் காட்டும் ஒரு  செயலாகும்.

விசேட ஐ.நா. தலையீடுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை, சர்வதேச சட்ட தர நியமங்களுக்கு இணங்கி ஒழுகக்கூடிய விதத்தில் உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் விதத்தில் ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும், பலவந்தமாக அல்லது சுயவிருப்பத்திற்கு மாறான விதத்தில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான செயல்குழுவும் 2021 டிசம்பர் மாதத்தில் அரசாங்கத்திடம் முன்னுரிமைகளின் ஒரு பட்டியலை வழங்கியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். அவ்விதம் பட்டியலிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்கள் கருத்து வெளிப்பாடு, அமைப்புக்களில் இணைதல், அபிப்பிராயம் தெரிவித்தல், சமயம் அல்லது நம்பிக்கை ஆகிய சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கென பயங்கரவாதத்தை குறுகிய விதத்தில் வரைவிலக்கணம் செய்ய வேண்டும் என்பதாகும். தன்னிச்சையான விதத்தில் சுதந்திரம் பறிக்கப்படுதல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் என்பவற்றை தடுப்பதற்கான பாதுகாப்புக்கள் தொடர்பாக அவர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்ததுடன், நீதித்துறையின் விருத்தியடைந்த மேற்பார்வை மற்றும் வழக்கறிஞரை அணுகக்கூடிய வசதி என்பவற்றுக்கூடாக உரிய செயன்முறை மற்றும் நியாயமான வழக்கு விசாரணை தொடர்பான உத்தரவாதங்கள் இருக்க வேண்டுமென யோசனை தெரிவித்திருந்தார்கள். பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடு தொடர்பான ஐ.நா. அமைப்பின் நான்கு ‘P’கள் தடுத்தல் (Prevent),  விசாரணைகளை முன்னெடுத்தல் (Pursue), பாதுகாத்தல் (Protect) மற்றும் தயாராக இருத்தல் (Prepare) என்பன குறித்து பேசுகின்றன. இலங்கையின் வரைவுச் சட்டத்தில் அத்தகைய அணுகுமுறைகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன என்ற விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது,

முதலாவது, செயற்பாடுகளில் குறைபாடுகள் நிலவி வருவதனை (உதாரணம்: பிரிவு 9) விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரண்டாவது, நீதித்துறைக்கு எதிரான அணுகுமுறைகள் மாற்றமடைந்திருக்கவில்லை [உதாரணம்: குற்ற வாக்குமூலங்கள் (பிரிவுகள் 16 மற்றும் 17)]. மரியதாஸ்  மற்றும் அரசு வழக்கு தொடர்பான பதிவுகள், அமைவிட மாற்றம் மற்றும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமை போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட  வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மூன்றாவதாக, பயங்கரவாதம் தொடர்பாக வரைவிலக்கணம் மாற்றமடையாதிருந்து வருகின்றது. நான்காவதாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 2 (h) நபரொருவரின் பேச்சு, எழுத்துக்கள், சைகைகள் அல்லது கட்புல சமர்ப்பணங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்வதற்கு அனுமதி வழங்குகின்றது. “வன்முறைச்  செயல்களை நிகழ்த்துவதற்கு அல்லது சமய, இன அல்லது இனத்துவ பிளவினை அல்லது வெறுப்புணர்வினை அல்லது பல்வேறு சமூகங்கள் அல்லது இனங்கள் அல்லது சமயக் குழுக்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதாக அல்லது ஏற்படுத்தச் செய்வதாக இருந்து வருமிடத்து அவ்விதம் கைது செய்ய முடியும்.” வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ஒரு சில சமயத் தலைவர்களை அதிகாரிகள் இதுவரையில் பின்தொடர்ந்து சென்று நடவடிக்கை எடுக்கப்படாதிருக்கும் நிலையில் மற்றும் சிலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிப்புரைகளின் கீழ் பராபட்சமான விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றார்கள் என விமர்சனங்கள் முன்வைப்படுகின்றது. அஹ்னாப் ஜஹீம் என்பவருக்கு எதிரான அண்மைய வழக்கு தற்போதை போக்குகளை எடுத்துக் காட்டுதவற்கான சுவாரசியமான ஒரு வழக்காகும்.

பொது விமர்சனங்கள்

சட்டமூலத்தில் உள்ள மிக முக்கியமான ஒரு மாற்றம் வழக்கு விசாரணையில்லாமல் நபரொருவரை தடுத்து வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய காலப் பிரிவு 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக குறைக்கப்படுவதும், செலவு கூடியதாக இருந்து வந்தாலும் கூட நீதித்துறை மீளாய்வை அணுகுவதற்கு அனுமதி வழங்குவதுமாகும்.

நபரொருவர் நியாயமற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால் அவரது குடும்பத்தின் மீது கடும் செலவுகளை ஏற்படுத்தும். மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டமோ அல்லது இந்த சட்டமூலம் தவறான விதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எத்தகைய நட்ட ஈடுகளையும் வழங்குவதில்லை. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்  தொடர்பான சமவாயத்தின் (ICCPR) உறுப்புரை 9.5 அவ்விதம் நட்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடுகின்றது. அத்தகைய ஒரு நிலைமை நிலவி வந்தால் அது புலன் விசாரணையாளர்கள்  மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பழிவாங்குதல் மற்றும் பொறுப்புக்கூறாதிருக்கும் நிலை என்பவற்றின் மீது ஒரு தடுப்புக் காரணியாக செயற்பட முடியும்.

அதற்குப் பதிலாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட ஒரு செயல் அல்லது நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு செயல் அல்லது இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு கட்டளையின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு செயல் தொடர்பாக எவரேனும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அல்லது நபரொருவருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக இந்த சட்டமூலம் முழுமையான தண்டனை விலக்குரிமைய வழங்குகின்றது. துரதிர்ஷவசமாக, இந்த நல்லெண்ணம் என்ற விடயம் அரசியல் காழ்ப்புணர்வின் மூலம் தூண்டப்பட்டுள்ளது என்பதே இங்கு முன்வைக்கப்படும் விமர்சனமாகும்.

மாஜிஸ்ட்ரேட் நீதவான்களை சம்பந்தப்படுத்திக் கொள்வது தொடர்பான யோசனை சாதகமானதாகும். ஆனால், மாஜிஸ்ட்ரேட் நீதவான்களின் பணிச் சுமையை கவனத்தில் எடுக்கும் பொழுது, அதனை வினைத்திறன் மிக்க ஒரு முறை எனக் கருத முடியாது. ஒட்டுமொத்த செயற்பாடும் நேர முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் சமர்ப்பணங்களை மேற்கொள்ளும் பொழுது இந்த அதிகாரம் இப்பொழுதும் சுதந்திரமாக கிடைக்கக்கூடியதாக இருந்து வருகின்றது. மாதம் ஒன்றுக்கு பொலிஸ் தடுப்புக் காவல் அறைகளுக்கு மாஜிஸ்ட்ரேட் நீதவான்கள் மேற்கொள்ளும் விஜயங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்வி இந்தச் சட்ட ஏற்பாட்டின் வினைத்திறனற்ற தன்மையை நிரூபித்துக் காட்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்ட (திருத்த) சட்டமூலம் பிரசுரங்கள் தொடர்பான தடையை நீக்குவதுடன், ‘செய்திப் பத்திரிகை’ மற்றும் ‘அச்சிடும்  அச்சகம்’என்பன தொடர்பான வரைவிலக்கணங்களை நீக்கியுள்ளது. அது ஒரு நல்ல நகர்வாகும்.

பயங்கரவாதத்தைத் தடுக்கும் விடயம் முழுமையாக கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதா?

சட்ட வரைவை தயாரித்தவர்கள் மற்றும் விமர்சர்கள் ஆகியோரினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாத மற்றொரு அம்சம் பயங்கரவாதம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் உத்தேச சட்டமூலம் ஆகிய இரண்டும் தடுப்புக் காவலிலிருக்கும் சந்தேக நபரான ஒரு பயங்கரவாதி  தொடர்பாகவும், நீதித்துறை மீளாய்வு இடம்பெறும் வரையில் அவரை கையாள்வது எவ்வாறு என்பது குறித்தும் முழுமையாக கவனம் செலுத்துகின்றன. அதன் காரணமாகவே பிடி விறாந்துகள் இல்லாமல் இடம்பெறும் கைதுகள், நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுதல் மற்றும் குற்ற வாக்குமூலங்கள் என்பன உயரளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், தடுப்பதற்கென எதிர்கொள்ளப்பட வேண்டிய பயங்கரவாத செயற்பாட்டுக் கோணங்களை சட்டம் அல்லது சட்டமூலம் பாரதூரமான விதத்தில் கவனத்தில் எடுத்துள்ளனவா? அதேபோல, பயங்கரவாதிகளைக் கையாள்வதற்கான சட்டங்களின் தேவை குறித்தும் விமர்சகர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

உதாரணமாக, பயங்கரவாதம் சர்வதேச ரீதியான பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஐ.நாவின் பயங்கரவாத எதிர் உள்ளீடுகளின் அடிப்படையில் நோக்கும் போது, இந்தச் சாத்தியப்பாடுகளிலிருந்து பயங்கரவாதத்தைத் தடுப்பது தொடர்பான விடயம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்தும் பொழுது அரசாங்கத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க  வேண்டும்.

கடற்படை வலுவைப் பயன்படுத்தி கடலில் நபர்களை கொலை செய்யும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சண்டையிட்டு பெற்றுக்கொண்டிருக்கும் படிப்பினைகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 24 இல் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரிவு கடற்படை மற்றும் விமானப் படை தலையீடுகள் குறித்து மூன்று வரிகளில்  பேசுகின்றது.

உதாரணமாக, அது நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றச் செயலை “இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு கப்பல் அல்லது விமானம் என்பன தொடர்பாக” என வரையறை செய்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான என்னுடைய அனுபவம் அவர்களுடைய கப்பல்கள் ஏனைய கொடிகளின் கீழ் அல்லது சில சந்தர்ப்பங்களில் எந்தவொரு கொடியும் இல்லாமல் பயணம் செய்து, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் என்பவற்றை கை மாற்றியுள்ளன என்பதாகும். எனவே, அவற்றை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத குற்றச் செயல்களை புரியாத கப்பல்களாக கருதப்பட வேண்டியுள்ளது.

இணைய பாதுகாப்பு (Cyber Security) மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதுடன், அது உள்ளடக்கப்படாமை மிக மோசமான ஒரு தவறு எனக் கருதப்பட முடியும். பரவலாக மக்களுக்கு விளக்கமளிப்பதற்கென நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்தை இந்த சட்டமூலத்தின் வரைவை தயாரித்தவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர்களிடமிருக்கும் பரவலான இராணுவ அனுபவத்தின் அடிப்படையிலான புத்தாக்க சிந்தனையை பெற்றுக் கொண்டிருக்க முடியுமென நான் எதிர்பார்த்திருப்பேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும், கடற்புலிகள் தொடர்பாகவும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் குமரன் பத்மநாதன் கறுப்புப் பணத்தை பயன்படுத்தியமை குறித்து அனைவரும் அவரை விமர்சித்து வருகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டமோ அல்லது திருத்தங்களோ பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட விதத்தில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடு குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கென கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது தொடர்பான சட்டங்களை சம்பந்தப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் மூலம் ஆதரவளிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறு செய்வது முன்னெடுத்தல், பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தயார்ப்படுத்தல் என்பவற்றின் மூலம் ஐ.நாவின் பயங்கரவாத எதிர்ப்பு தூண்களுக்கு ஆதரவளிக்க முடியும்.

முடிவு

பயங்கரவாதத்தைத் தடுக்கும் விடயத்தை நிர்வகிக்கும் சட்ட ரீதியான கூறுகள் இருக்கக்கூடாது என பயங்கரவாத் தடைச் சட்டத்தின் எந்தவொரு விமர்சகரும் கூறவில்லை. தேசிய பாதுகாப்பினை அரசியல் யாப்பு ரீதியான உரிமைகளுடன் சமநிலையில் வைத்திருக்க வேண்டிய விடயத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்ணோட்டம் ஒரு நல்ல அத்திவாரமாக இருப்பது போல் தெரிகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதனையும், தண்டனை சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை, நீதி பரிபாலனச் சட்டம் மற்றும் பிணை வழங்கும் சட்டம் என்பவற்றை திருத்துவதற்கும் அது ஆதரவளிக்கின்றது.

அதனுடன் உடன் நிகழ்வாக, பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒரு சில சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால்  முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மைக்கல் பச்லட் அவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாவனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த முழுமையான ஒரு மீளாய்வு அல்லது அதனை நீக்குதல் என்பவற்றுக்கான  தெளிவான ஒரு கால  அட்டவணை தயாரிக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யோசனைகளை விரிவாக்குவதன் மூலம் அவ்விதம் அதனை தற்காலிமாக நிறுத்தி வைக்க முடியுமா என்ற விடயத்தை நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விடயம் தீர்மானிக்கப்பட்டால், (A) புலன்விசாரணைகள் பூர்த்தியடையாதிருக்கும் நபர்கள், (B) குற்றப்பத்திரங்களை  தாக்கல்  செய்வதற்கென சட்டமா அதிபர்  தெரிவு செய்திருக்கும் நபர்கள் மற்றும் (C) ஏற்கனவே குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டிருக்கும் நபர்கள் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும். இதற்கான அளவுகோல் வழக்குகளின் முக்கியத்துவம் மற்றும் தடுப்புக்காவலில் இருந்த காலப் பிரிவு என்பனவாக இருந்து வர முடியும். அதே வேளையில், தேவையான சட்ட மீளாய்வுகள் இடம்பெறுதல் வேண்டும். எனவே, இதற்கென ஒரு செயற்திட்டம் அவசியமானதாகும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருந்து வரும் வரையில், நிகழ்த்தப்படுவதாக கூறப்படும் அனைத்து “பாவச் செயல்களும்” “சட்டபூர்வமாக” இடம்பெற முடியும். அது மிகவும் வேதனை மிக்கதாகும். பொலிஸாரை அல்லது சட்டமா அதிபரை அல்லது நீதித்துறையைக் குறை சொல்வது இந்தப் பின்னணியில் நியாயமற்றதாகும். தேசிய பாதுகாப்பு ஒரு முன்னுரிமையாக இருந்து வந்தாலும் கூட, அரசியல் யாப்பு ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் அதே வேளையில், அரசாங்கம் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மட்டும் வலியுறுத்தக்கூடாது. ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நலன்களை சமநிலையில் வைத்திருப்பதற்கான முதலாவது காலடியை நல்லெண்ணத்துடன் எடுத்து வைப்பதே இன்றைய தருணத்தின் தேவையாக இருந்து வருகின்றது.

ஒஸ்ரின் பெர்னாண்டோ

PTA: Repeal or Amend? என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.