Photo, BBC

2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையின் நீதிமுறைமையில் முக்கியமானதொரு போக்கு மேலெழுந்து வருகின்றது – நிதி மோசடி, நிதிக்கையாடல், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கொலை போன்ற பல குற்றங்களை இழைத்தவர்கள் நீதிமன்றங்களால் குற்ற விடுவிப்பு வழங்கப்பட்டு சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்ற அல்லது ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படும் போக்கே இவ்வாறு மேலெழுந்து காணப்படுகின்றது.

இவர்கள் மீதான மேலதிக நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாமைக்கு போதிய சான்றுகள் இன்மை, தொழில்நுட்ப தவறுகள், வழிமுறைத் தவறுகள் மற்றும் நீதியுடன் தொடர்புடைய அமைப்புகளில் கோவையாக்கல் தொடர்செயன்முறைகளில் ஏற்படும் இடைவெளிகள் என்பன காரணமாக முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக குற்றம்சாட்டப்பட்டவர் தண்டனை விலக்குப் பெறல் மற்றும் விடுவிக்கப்படல் என்பவற்றில் இவை செல்வாக்கு செலுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் எந்தவிதத் தவறும் கிடையாது என ஒருவர் வாதிட முடியும். எவ்வாறாயினும், இந்த முறைமையான வகையில் அமைந்த போக்குகள் இந்த யதார்த்தத்துக்கு வெளியே செயற்படுவதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். மார்ச் 2020 தொடக்கம் ஒக்டோபர் 2021 வரையான காலப்பகுதிக்குள் அவ்வாறான 17 பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

  1. யானைக்குட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தமைக்காக குற்றம்சாட்டப்பட்ட அலி ரொஷான் மற்றும் நான்கு சந்தேகநபர்கள் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.
  2. திவிநெகும வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.
  3. சில் துணி வழக்கில் இருந்து முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை.
  4. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பிரதான சந்தேகநபரான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை செய்யப்பட்டமை.
  5. 3.9 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை.
  6. 5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சுங்கப் பணிப்பாளர் ரஞ்சன் கனகசபை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.
  7. நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் இரு சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமை.
  8. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட 40 மில்லியன் ரூபா இலஞ்ச வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டமை.
  9. மிஹின் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி விகித்தபோது 883 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன விடுதலை செய்யப்பட்டமை.
  10. 70 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.
  11. பிரகடனப்படுத்தப்படாத மற்றும் சட்டவிரோதமாக சம்பாதித்த 41.2 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுதலை செய்யப்பட்டமை.
  12. நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட எட்டு சந்தேகநபர்கள் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஊடாக அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டமைக்காக அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.
  13. ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமை.
  14. 2015இல் GI குழாய்களைப் பெறுவதற்காக 36.5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டமை.

இந்த வழக்கு விசாரணைகளின் ஆரம்பம், வழக்குகளின் தாக்கல், விசாரணை என்பவற்றின் தன்மை போன்றவற்றைக் கருத்திற் கொள்ளும்வேளை பல பொதுவான அம்சங்கள் அடையாளம் காணப்பட முடியும். இந்த அனைத்து வழக்குகளும் கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகளாகும். 2015ஆம் ஆண்டின் தேர்தல் மேடைகளில் உள்ளடக்கப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்றாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விடயம் அமைந்திருந்தது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிரதான எதிர் வாதங்களாக, இந்த வழக்குகள் அடிப்படையற்றன மற்றும் இவை அரசியல் பழிவாங்கல்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் என்பன அமைந்திருந்தன. நாட்டின் நீதி கட்டமைப்புக்கு ஏற்ப ஒரு நபருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படும் நிலையில் குறித்த நபரினால் அதற்கு எதிராக நீதியின் அடிப்படையில் அமைந்த பல செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றை சமர்ப்பிக்க முடியும். உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றையும் சமர்ப்பிக்க முடியும். அந்த மனுவில் அவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதை அல்லது மீறப்படவுள்ளதை குறித்துக் காண்பிக்க முடியும். மேலும், அரசியல் அமைப்பின் உறுப்புரை 140 இன் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் ரிட் மனு (தடையுத்தரவு) ஒன்றையும் கோர முடியும்.

எவ்வாறாயினும், 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் சந்தேநபர்கள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு மேற்குறித்த எந்தவொரு முன்னெடுப்பினையும் மேற்கொண்டிருக்கவில்லை. சந்தேகநபர்கள் பாரிய நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்குத் தண்டனை விலக்களிப்பது – அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்படுவது பொருளாதாரத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதுடன் சர்ச்சைக்குரிய கொலை வழக்கு ஒன்றின் முக்கிய சந்தேகநபர் இவ்வாறு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவது சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒழுங்கு என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

நீதிமன்றங்களால் கொலைக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் மிருசுவிலில் 5 வயதுக் குழந்தை ஒன்று உள்ளடங்கலாக 8 பேரின் கொலை தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயகவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 2015இல் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது, இவருக்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தார்.

கடந்த ஜூலை 2021இல் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் அரசியல் படுகொலையின் பிரதான சந்தேகநபரான அவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு உயர்நீதிமன்றம் குற்றத்தீர்ப்பு வழங்கியிருந்தது, இத்தீர்ப்புக்கு எதிராக அவரால் தொடுக்கப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பின் உறுப்புரை 34 இற்கு ஏற்ப ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் குறித்த வழக்கின் தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அறிக்கை பெறப்பட்டு அவ்வறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையைப் பெற்றபின்னர் இறுதியாக நீதியமைச்சரின் பரிந்துரையின் பின்னரே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படும். முந்தைய ஜனாதிபதிகளைப் போலல்லாது ஜனாதிபதி ராஜபக்‌ஷ மன்னிப்பு வழங்குவதில் இவ்வழிமுறையை பின்பற்றியதாகத் தெரியவில்லை.

ஒரு புதிய ஜனாதிபதியின் புதிய அணுகுமுறை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் சாத்தியமான அளவுக்கு நீதி மற்றும் அமைப்பு முறைமைகளை வலுப்படுத்தும் கொள்கை உள்ளடங்கியிருந்தது. மேலும் அவர் கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

ஜனவரி 2015 தொடக்கம் ஒக்டோபர் 2019 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் பற்றி விசாரணை செய்யவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 40 சம்பவங்களை அரசியல் பழிவாங்கல்களாக அடையாளம் கண்டு அவை தொடர்பில்  நீதிமன்ற விசாரணைகள் நிலுவையில் இருந்த இலஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்குவதற்கு பரிந்துரை செய்தது.

இந்த வழக்குகள் தொடர்பில் சந்தேகநபர்கள் இருந்தவர்கள் நிரபராதிகளென தீர்மானிக்கப்பட்டமைக்கு செல்வாக்குச் செலுத்திய தொழில்நுட்பப் பிரச்சினைகளில் போதிய சான்றுகள் இன்மை, சான்றுகளில் இசைவு மற்றும் தொடர்ச்சி என்பன இன்மை, காலம் கடந்துள்ளமை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாமை என்பன உள்ளடங்கியிருந்தன. இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு 17 வழக்குகளில் மூன்று வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானித்தது. வழக்குகளில் காணப்பட்ட தகவல்களின் தன்மை, போதிய சான்றுகள் இன்மை என்பன இந்நிலைக்கு காரணங்களாக அமைந்திருந்தன. இதன் விளைவாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டீ வாஸ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அலி ரொஷான் உள்ளடங்கலான நான்கு பேர் போதிய சான்றுகள் இன்மையினாலும், சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் வழங்கப்பட்ட சான்றுகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். பிள்ளையான், வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் நிர்மலராஜன் கொலை வழக்கின் குற்றச்சாட்டுகள் என்பன சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெறப்பட்டமை இவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விடுதலைக்கு வழிவகுத்தது.

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு ஐந்து வழக்குகளில் இருந்து 16 சந்தேக நபர்களுக்கு குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரினால் பல்வேறுபட்ட தொழில்நுட்ப அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டமையினால் தண்டனை விலக்களித்தது. மேலும் எட்டு வழக்குகளில் இருந்து 27 நபர்களுக்கு தண்டனை விலக்கு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இலஞ்சம், ஊழல் அல்லது குற்றவியல் தொடர்பு காரணமாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நாற்பத்தி மூன்று சந்தேகநபர்கள் நீதிமன்றங்களினால் தண்டனை விலக்களிக்கப்பட்டனர் அல்லது விடுதலை செய்யப்பட்டனர்.

தனுஷ்க சில்வா

‘දණ්ඩ මුක්ති සම්ප්‍රදායේ’ ගමන எனும் தலைப்பில் ‘விகல்ப’ தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.