படம் | Channel4

இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து 2014ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இறுதி காலகட்டத்தில் அதாவது, 4ஆவது ஈழப்போர் நடத்தப்பட்ட விதம் குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் கிளம்பி கொண்டிருக்கின்ற போதிலும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் அரசின் வியாக்கியானத்தின் பிரகாரமான இலக்கு அதாவது, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர்தான் தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்ற அரசின் கூற்றில் உண்மை இருக்கிறதா என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால், அதில் பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்கின்றன என்பதை உண்மையை ஒப்பு கொள்பவர்களால் ஒருபோதும் மறுத்துவிட முடியாது.

யுத்தத்தின் பின்னரான கடந்த 5 வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பது இலங்கை நிலைவரத்தை தொடர்ந்தும் கண்காணிப்பவர்களுக்கு ஒன்றும் புதிதான விடயமல்ல. யுத்தத்தின் பின்னரான நிலைமைகளில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பான இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் அதாவது, பதிலளிக்கும் கடப்பாடு ஆகிய இரண்டுமே முன்னுரிமைப்படுத்தப்பட்ட விடயங்களாக இருக்கின்றன. தமிழ் மக்களின் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் வாழ்வாதார பிரச்சினைகளை விடவும் மேற்குறிப்பிட்ட இரண்டுமே கடந்து 5 வருடங்களில் முன்னிலை படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை.

ஏனெனில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும் அரசியல் தீர்வொன்று வழங்கப்படும் என்பதே யுத்த காலத்தின்போது தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசு உலக நாடுகளின் உதவிகளை பெறுவதற்கு வழங்கிவந்த உறுதிமொழியாக இருந்தது. அதுவும், இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மட்டுமல்லாது, அதற்கு அப்பால் சென்ற தீர்வொன்று வழங்கப்படும் என்று பல சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசு சார்பில், யுத்த காலத்தின்போது அதற்கு மிகவும் உதவியாக செயற்பட்டிருந்த இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 5 வருடங்களில் குறைந்தபட்சம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, அதிலுள்ள அதிகாரங்களை படிப்படியாக குறைப்பதிலேயே அக்கறை காட்டியதுடன், ஒரு கட்டத்தில் 13ஆவது திருத்தத்தை முற்றாக நீக்குவது தொடர்பான சர்ச்சைக்கும் வழிவகுத்திருந்தது.

எனினும், இந்திய தலையீட்டினால் இறுதியில் அந்த சர்ச்சை நின்று போனது. அதுவும் இதில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் அக்கறையாக இருந்திருக்கவில்லை. பதிலாக, 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அல்லது இல்லையோ ஆனால், அதன் எழுத்து வடிவத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டுவிடக்கூடாது என்ற கௌரவ பிரச்சினையும் தமிழ் நாட்டை சமாளிப்பதற்கான அரசியல் நோக்கமுமே அப்போது இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கமாக இருந்தது.

அடுத்ததாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பற்றிய பொறுப்புக்கூறல்கள் தொடர்பிலும் அரசு இதுவரை எந்த திருப்திகரமான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குறைந்தப்பட்சம், தம்மால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக்கூட அதிலுள்ளவாறே நடைமுறைப்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவில்லை. பதிலாக அந்த மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அரசு எடுக்கும் முன்னெடுப்புகள் அனைத்தும் மனித உரிமை மீறல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறுவதற்கு மட்டுபட்டதானதாகவே இருக்கிறது.

இவ்வாறான நிலைவரங்களின் கீழ்தான் கடந்த 5 வருடங்களும் கழிந்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் உற்று நோக்கினால் இவற்றில் அரசியல் பின்னணியொன்று இருப்பதை அவதானிக்க முடியாமல் இல்லை. அதாவது, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்ற அரசின் அக்கறை இதில் தெளிவானதொன்றாகவே இருக்கிறது.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும், மனித உரிமைகள் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஏற்புடைய பதிலொன்றை வழங்க வேண்டும் போன்ற எண்ணங்கள் கடந்த காலங்களில் அரசின் அடி மனதில் இருந்திருக்க வாய்ப்பிருந்திருந்தாலுமே கூட இனி அதற்கான வாய்ப்பு என்பது சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிட்டால் அது பொய்யாகாது. ஏனெனில், அண்மையில் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளில் அரசிற்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியை அதற்கான காரணமாக குறிப்பிட முடியும்.

இந்த தேர்தல்களில் அரசிற்கு ஏற்பட்டது சிறியதொரு வீழ்ச்சியே என்று கூறமுடிந்தாலுமே கூட அதுவே முழு வீழ்ச்சிக்கான ஆரம்பமாக அமைந்துவிடக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கை உணர்வு மேலோங்காமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில், கடந்த 5 வருடங்களில் ஒவ்வொரு தேர்தல்களின் போதான பிரசாரங்களிலும் அரசு பயன்படுத்தி வந்த யுத்த வெற்றி பற்றிய பெருமை கூறல்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகின்றன. யுத்த வெற்றி போன்று அரசின் அபிவிருத்தி பணிகள் மக்களை சென்றடையவில்லை என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்களே கடந்த காலங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலைமையின் கீழ் சிங்கள மக்களின் வாக்குகளை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றி சிந்திக்கும் தருவாயில் அரசு தற்போது இருக்கிறதே தவிர, இன நெருக்கடிக்கு தீர்வு காணும் அக்கறையுடனான நோக்கம் எதுவும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் அறுகியே காணப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகள் உள்நாட்டில் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த அரசு, தற்போது விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதான பிரசாரங்களிலும் முன்னெடுப்புகளிலும் ஈடுபடுவதாகவும் பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை விடவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சிந்திக்கும் நிலைமையிலேயே அரசு இருக்கிறது. ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்மானமொன்றை வழங்குவதில் சிங்கள மக்களில் பெரும்பாலானோருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாமல் இருக்கக்கூடிய போதிலும், அவ்வாறான தீர்வொன்றை வழங்குவதால் தங்களது இருப்புக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று அரசுக்கு இருக்கக்கூடிய அச்சம், தீர்வு எதனையும் வழங்குவதற்கான பாதைகளை மூடுவதாகவே அமைந்திருக்கும்.

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள இந்தக் காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒப்பீட்டளவில் அதிகமாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அபிவிருத்திப் பணிகள் மட்டுமே கடந்த காலங்களில் தாங்கள் பட்ட கஷ்டத்துக்கு பதிலாக அமையாது என்பதை தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களின் பெறுபேறுகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இனப்பிரச்சினை தொடர்பில் குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யுத்தத்தின் பின்னரான கடந்த 5 வருடங்களில் அரசின் பிரதானமான வியாக்கியானம் பூரணமாக நிறைவு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

வாலிபன்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.