Photo, VOANEWS

தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வளர்த்தலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தலும் அரசியல் சக்கரங்களாக ஜனநாயக அரசியலில் சுழன்று கொண்டேயிருக்கின்றது. தேர்தல் காலங்களில் அள்ளிவீசப்படும் வாக்குறுதிகளின் தன்மை எதிர்வு கூறப்படமுடியாதவை, நிச்சயமற்றவை, தவிர்க்கப்பட முடியாதவையாக கட்டமைக்கப்பட்டுவிட்டன. ஜனநாயக அரசியல் சொல்லாடல்களில் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையாக இந்தச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இலங்கையில் இச்சுழலும் சக்கரத்திற்கு அப்பால் நின்று ஜனநாயகத்தை தமிழர்கள் பட்டறிவின் மூலம் அவதானிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால்தான் தெற்கில் எழுகின்ற தற்கால ஏமாற்றம், அதிருப்தி பெரிதாக தமிழர் நிலங்களைப் பாதிக்கவில்லை.

தவிர்க்கப்படமுடியாமையும், எதிர்வுகூறப்படமுடியாமையும், எதிர்பார்ப்பிற்கான மாற்றமுடியாத உண்மைகளாகும் (A.Kolers 2016). மேற்கூறப்பட்டவை நிச்சயமற்ற சூழலை, சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் உருவாக்கும் போது அவை ஆட்சி முறைமையை கேள்விக்கு ஏற்படுத்துகின்றது. எதிர்ப்பு (resistance) என்பதை அரசியல் மொழியில் எதிர்வினையாற்றல் என்று மட்டும் மொழிபெயர்த்துவிட முடியாது. மாறாக, மாற்றத்திற்கான செயல்திறன் மிக்க அணுகுமுறையாக கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான செயற்திறன்மிக்க எதிர்ப்பிற்கு சமூக – அரசியல் காரணங்களுண்டு, நோக்கங்களுண்டு. உதாரணமாக எழுபது வருடங்களுக்கு மேலான சியோனிஸ் (இஸ்ரேல்) அடக்கு முறைக்கெதிரான எதிர்ப்பில் பாலஸ்தீனியர்கள் பல்வேறு விதமான செயற்திறன்மிக்க எதிர்ப்பு அணுகுமுறைகளை வடிவமைத்துள்ளார்கள். சமத்துவமற்ற அதிகாரப்பலத் தளத்தில், குறிப்பாக செயற்திறன் மிக்க மாற்றத்திற்கான எதிர்ப்பியக்கம் கருக்கொள்கின்றது. எதிர்ப்பியக்கத்தின் மூலமான சமத்துவமற்ற பலம் காரணியாக உள்ள போதும், எதிர்ப்பை கருக்கொள்கின்ற சாராரிடம் பலம் இல்லையெனக் கொள்ள முடியாது. பிரெஞ்சு மெய்யியலாளர் பூக்கோவைப் (Foucault 1980) பொறுத்தவரையில் அதிகாரம்/ பலம் (Power) என்பது ஆதிக்க வகுப்பில் தங்கியிருக்கவில்லை. அதிகாரம்/ பலம் என்பது ‘வலிமை’, அது எப்போதும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதுமாகும். கட்டமைக்கப்படுதலும், கடத்தப்படுதலும் நிறுவனங்களுக்கூடாக, சமூக கட்டமைப்புக்களுக்கூடாக, தொடர்பாடலுக்கூடாக நடைபெறுகின்ற செயன்முறை. இவை எல்லாமே சேர்ந்து தான் ‘வாழ்வை’ கட்டமைக்கின்றன. பூக்கோ எதிரெதிர் இருமைகளுக்கூடாக அதிகாரத்தை அல்லது பலத்தை கட்டமைக்க முயலவில்லை. உதாரணத்திற்கு, அதிகாரமுள்ளவர்கள் எதிர் அதிகாரமில்லாதவர்கள், பலமுள்ளவர்கள் எதிர் பலமில்லாதவர்கள். பிரிக்கமுடியாத தன்மையிலிருந்துதான் நவீன அதிகாரத்தை கையாளுவதையும் எதிர்ப்பை உருவாக்குதலையும் அவதானிக்கின்றார். அதாவது எதிர்ப்பை விடுத்து அதிகாரத்தை/ பலத்தை பற்றி உரையாட முடியாது (Nurhan Abujidi 2014). பாலஸ்தீன ஆக்கிரமிப்பினூடாக இஸ்ரேலிய படைக்கட்டுமானமும், படைக்கட்டுமான வியூகங்களை வகுப்பவர்களும், கண்காணிப்பு வலையமைப்பை வலுவாக உருவாக்கியுள்ளார்கள். வாசகர்கள் வடக்கு – கிழக்கு களநிலையையும் ஒப்பிட்டு அவதானிக்கலாம். எல்லா இடமும் பரவிக் கிடப்பது போல் காட்சியளிக்கும் அதிகார பலம் நாளடையில் கூட்டு ஆக்கிரமிப்பை உருவாக்கியுள்ளது. இவ்வாறான கூட்டு ஆக்கிரமிப்பின் விளைவுகள் வடக்கு – கிழக்கெங்கும் மிக வலுவாக உணரப்படுகின்றது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் விளைவுகள் பாலஸ்தீனியர்களின் வாழ்வியலின் அடிவேர் வரை ஊடுருவியுள்ளன. சுருங்கக் கூறின், பாலஸ்தீனியர்களின் நாளாந்த வாழ்வியலில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் தாக்கம் அதிகமான தாக்கத்தை எதிர்மறையாக உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது. இவ்வாறான தாக்கம் பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரையில், இஸ்ரேலிய வலைப்பின்னல் கட்டுப்பாட்டை புரிந்து கொள்வதற்குரிய தளத்தை உருவாக்கிக் கொடுத்தது. மேற்குறிப்பிட்ட புரிதல் மாற்று அறிவுப்புலத்தை கட்டமைத்தது. இவ்வாறான அணுகுமுறை பூக்கோ குறிப்பிடுகின்ற அறிவு தவிர்த்து எந்த சக்தியும் இயங்கமுடியாது என்பதை உணர்த்துகின்றது. எல்லாவகையான அதிகாரமும்/ பலமும் அறியப்படமுடியுமானவை. பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய கட்டுப்பாட்டு வலைப்பின்னல் கட்டமைப்பை ஆராய்ந்து அது விளைவிக்க முற்படும் விளைவை அவதானித்து அதற்கு மாற்றீடான அணுமுறைகளை, உத்திகளை வழிவகுத்தார்கள். இதனால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கிற்கு/ விளைவிற்கு எதிரான விளைவை பாலஸ்தீன எதிர்ப்பியக்கங்கள் உருவாக்கின. இவ்வாறான முயற்சிகள் கூட்டாக எதிர்ப்பியங்கும் இனத்திற்கு அறவலுவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சக்தியூட்டுவதாகவும் அமைந்திருக்கும். காசாவில் கட்டமைக்கப்பட்ட நிறவெறிச் சுவர் தொடர்பான அறிவு, இஸ்ரேல் எவ்வாறு இனவெறிக்கொள்கையை கையாளுகின்றது என்பதை மட்டுமல்லாமல், அவ்வாறான கொள்கைக்கெதிரான மாற்றை கட்டமைப்பதற்கு ஏதுவாக அமைகின்றது. மாற்றுக்கான ஊக்கியாக ஆக்கப் படைப்புத்திறன் இன்றியமையாததாகின்றது. இதைத்தான் சிவராம் மாற்றுக்கான மாற்றாக குறிப்பிடுகின்றார். Avi Mograbi தன்னுடைய ஆவணப்படத்தில் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார்.

Inshah Malik (2019) இந்தியாவின் காஷ்மீர் நிலைமையைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தியப் படையினருக்கும் விடுதலை போராளிகளுக்குமிடையிலான போராட்டம் சமூகக்கட்டமைப் மாற்றிவிட்டது என்கின்றார். இந்திய அரசின் இராணுவமயமாக்கல் அரசியல் செயற்திட்டம் மக்களின் நாளாந்த வாழ்வியலில் பாரிய விளைவை உண்டு பண்ணியதாகக் குறிப்பிடுகின்றனர். ‘இராணுவவாதம், வளங்களையும் மக்களையும் ஒன்று திரட்டி ஊகிக்கப்பட்ட கூட்டு எதிரிக்கு எதிராக, போரைத் தொடுக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேச – அரசுகள் குறிக்கப்பட்ட இலக்கை நோக்கிய போரைத் தொடுப்பதற்குப் பதிலாக, அடையாளத்தின் மீதான போரைத் தொடுக்கின்றது. பின் காலனித்துவ தேச – அரச கட்டமைப்பில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேச – அரசுகளுக்கான எதிரி அந்த தேச – அரச கட்டுமானத்திற்குள்ளிருந்தே எழுவதான சமூக – அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் மிகச் செறிவாக்கப்பட்ட இராணுவமயமாதத்தால், போரால் காஷ்மீர் மக்கள் தங்களுடைய மத அடையாளம் சிக்கலுக்குட்படுத்தப்படுவதாக உணர்ந்த, அங்கிருக்கும் அடுத்த தலைமுறையினரின் புரிந்து கொள்ளல் தான், அவர்களை அடைக்குமுறைக்கெதிரான எதிர்ப்பிற்கு  இட்டுச் சென்றது. இராணுவ ஆக்கிரமிப்பு செறிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்ப்பின் உத்திகளை மாற்ற வேண்டிய தேவை அல்லது ஆக்கத்திறனோடு புதிய உத்திகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்து கொண்டேயிருக்கின்றது. காஷ்மீர் இளைய தலைமுறையினர் காலத்திற்கேற்ற வகையில், உலக ஒழுங்குக்கேற்ற செல்நெறியில் தமது எதிர்ப்பின் உத்திகளை மாற்றிக் கொண்டே வந்திருக்கின்றார்கள். காஷ்மீரில் இராணுவமயமாக்கலின் செறிவை அதிகரித்த இந்திய அரசு ஊடகத்தை பயன்படுத்தி காஷ்மீர் மக்களை தீயவர்களாக கட்டமைத்து அவர்கள் மீதான பாரிய கருத்தியல் போரை மட்டுமல்ல ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் முன்னெடுத்தது. கருத்தியல் யுத்தத்தில் காஷ்மீரிய மக்களின் இந்திய அரசிற்கெதிரான சொல்லாடல்களை இந்திய அரசு மட்டுப்படுத்தியது.

காஷ்மீர் பிரச்சினையில் பெண்களின் எதிர்ப்பியக்க பங்களிப்பு பற்றி உற்று நோக்குதல் எமக்கும் உதவி செய்யலாம். காஷ்மீரில் உள்ள பெண்களின் பங்களிப்பு இந்திய அரசிற்கெதிரான எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்புவதில் மிகக் காத்திரமானது. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின், கணவர்மார்களின், தாய்மார், மனைவிகள் சேர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இயக்கத்தை  உருவாக்கினார்கள். இவ்வியக்கம் இடைவிடாது தொடர்ந்தும் இந்திய அரசின் மனித உரிமை மீறல்களுக்கெதிராக ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து கொண்டே வந்தது. அவர்களுடைய குறியீடாக ‘வருந்துகின்ற தாய்’ இருந்து கொண்டே வருகின்றது. இதை பொதுவெளிக்குறியீடாக மாற்றினார்கள். இவ்வாறான பொது வெளிக்குரிய குறியீடாக ‘வருந்துகின்ற தாய்’ மாறிய போது தாய்மை, பெண்மை என்பது ஆணாதிக்க சமுதாய கட்டுக்களை அவிழ்த்துப்போட்டது. அதேபோல் இந்திய அரசு எவ்வாறு ஓர் இந்தியப் பெண் இருக்க வேண்டும் என்று உருவாக்கிய சமூக – அரசியல் கட்டமைப்பையும் சிக்கலுக்குட்படுத்தியது. குறியீடுகள் என்பது எதிர்ப்பியக்கத்தில் மிகவும் முக்கியமானது. தங்களை உளவியல் ஆற்றுப்படுத்தி இன்னும் வலுவான கட்டமைப்பை உருவாக்கினார்கள். வேறு வெளியீட்டு தலையீடுகளுக்கும், அரசியலுக்கும் இடம் கொடுக்காது அவர்களே அவர்களுடைய அரசியலை கட்டமைத்துக் கொண்டார்கள். சர்வதேச வெளியிலும் தமக்கான அடையாளத்தை பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய நிறுவுனருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது. பொருளாதாரத்தினை உடைப்பதற்காகவும் அதற்கான மாற்று வழியாகவும் காஷ்மீர் மக்கள் இலவச உணவு விநியோகத்தை ஆரம்பித்திருந்தனர். அதை விட ‘இந்திய அரசே திரும்பிப்போ’ என்ற வாசகத்தை கொண்டு காலனித்துவத்திற்கெதிரான போராட்டப்பாணியில் தமக்கான எதிப்பியக்கத்தை உருவாக்கினர். இதையும் இந்திய அரசு தனது இரும்புக் கரம் கொண்டு நசுக்க முற்பட்ட போது குறிப்பாக இந்திய படைச்சிப்பாய்கள் வன்புணர்வை ஆயுதமாக்கிய போது அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான திட்டத்தை பெண்கள் உருவாக்கினர். பெண்களின் கதைகள் ஆவணமாக்கப்பட்டது. ஆங்கில மொழியில் சர்வதேச சமூகத்தை நோக்கி பல்வேறு ஊடகங்களுக்கூடாக இக்கதைகள் வெளிவந்தன. எழுத்தை எதிர்ப்பின் ஆயுதமாக பெண்கள் மாற்றத் தொடங்கினர். இவ் அணுகுமுறை ஓரளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.

நினைவுகூருதலையும், அடக்குமுறை எதிர்ப்பின் உத்தியாக பல்வேறு இனக்குகுழுக்கள் மாற்றியமைந்துள்ளன. ஏனெனில், இவ்வாறான கூட்டுநினைவு கூரல்கள் கூட்டு அடையாளக் கட்டமைப்பில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. நினைவுகூரலில் நினைவுத்தூபிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் அதற்காக ஜனநாயக வெளி இல்லை. இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் வெறுமையே பலமான எதிர்ப்பியக்கத்தின் ஆயுதமாக மாற்றப்படலாம்.

மீள்கட்டுமானம் கூட எதிர்ப்பியக்கத்தின் ஆயுதமாக மாற்றப்படலாம். மீள்கட்டுமானம் என இங்கு குறிப்பிடப்படுவது, வெறுமனே கல், மண் சார்ந்தது மட்டுமல்ல. ஏனெனில் நகரங்கள், கிராமங்கள் வெறும் கொங்கிறீட் காடுகளல்ல. வாழ்விடங்கள் – மீள் இணைப்புக்கள், பண்பாட்டு மீள் எழுச்சி, உறவுகளின் மீள் கூட்டிணைவு, சமுதாயக் கட்டமைப்பின் மீளுருவாக்கம் கூட்டு அடையாள இருப்பின் மீளுறுதி, இன்னும் பிற. மீள் கட்டுமானத்தில் உருவாக்கப்படும் கட்டடங்கள் கூட பண்பாட்டு அடையாளத்தை உறுதி செய்வதாக அமைந்தால் அது எதிர்ப்பின் அடையாளமாக உருவாக்கப்படலாம். கட்டடக்கலையில் பண்பாட்டு அடையாளங்களும், கலைநயமும் உள்வாங்கப்படும் போது அதுவே எதிர்ப்பின் அடையாளமாக மாறுகின்றது. அவையே எதிர்ப்பியக்கத்தின் குறியீடுகளாகவும் மாற்றப்படலாம். மீள்கட்டுமான கருத்தியல் நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கையை மறுத்து மீள்கட்டுமானம் நடைபெறமுடியாது. குடும்பங்களின் வாழ்விடங்களுக்கு பரம்பரைத் தொடர்ச்சி இருக்கின்றது. பரம்பரை, பரம்பரையாக வழங்கப்பட்ட வீடு, காணி என்பவற்றிற்குமே இருப்பின், பண்பாட்டின் அடையாள இயல்பு பண்புகள் உண்டு. மீள் கட்டுமானம் கூட்டாக உருவாக்கப்படுகின்ற போது உளவியல் ஆற்றுப்படுத்தலாக மாறுகின்றது. மேற்குறிப்பிட்ட எதிர்ப்புக் கட்டமைப்பில் வெளி (Space) என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக பிரதிபலிக்கப்படுகின்றது.

பாலஸ்தீனியர்கள் மேற்கூறப்பட்ட உத்திகளைக் கடந்து அடுத்த நிலைக்கு இஸ்ரேல் அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பை கொண்டு செல்லுவதற்கு Fanon குறிப்பிடுகின்ற ‘புதிய மானுடம்’ என்ற கருத்தியலை கருவியாகப் பயன்படுத்துகின்றார்கள். Fanon ஐப் பொறுத்தவரையில் காலனித்துவ நீக்கம் என்பது ‘புதிய மானுடத்தை’ கட்டமைத்தலாகும். Fanon எனும் Said ம் விடுதலை என்பது சுதந்திரம் பெறுவதிலும் பார்க்க மேம்பட்டது என்பதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர். தோற்ற மாறுபாட்டைத் தாண்டி உருநிலை மாற்றத்தை (transformational resistance) நோக்கி நகருகின்ற, எதிர்ப்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். சாதாரணமாகவே ‘எதிர்ப்பு’ என்று சிந்திக்கும் போது ‘எதிர்வினை’ தான் நினைவிற்கு வருகின்றது. அது எதிர்ப்பின் முதலாவது படிநிலை எனக் கொண்டால் அதற்கு அடுத்த படிநிலைகள் உண்டு என்பது சொல்லாமலே விளங்குகின்றது. ‘புதிய மானுடம்’ எதிர்ப்பு உத்தியில் புதிய அறிவுத்தேடல், புதிய வகையில் இருப்பைத் தக்க வைப்பதோடல்லாமல் உறுதி செய்தல், புதிதாய் செய்தல் ஒட்டுமொத்தத்தில் ‘புதிதாய் நாளாந்தம் வாழ்தலில்’ எதிர்ப்பு கட்டமைக்கப்படுதல் வேண்டும்.

எழில் ராஜன்