பட மூலம், LAKRUWAN WANNIARACHCHI, AFP

அவரது மகனின் உடலம் தகன அறையில் இடப்படுவதை பார்த்துக் கொண்டே, மொஹமட் பாஹிம் மயானத்திற்கு வெளியே நின்று, அழுது கொண்டிருந்தார்.

இறப்பின் பின்னர் ஜனாஸா எரிக்கப்படுதல் மற்றும் எந்தவித சிதைத்தல்களைத் தடைசெய்யும் நம்பிக்கை கொண்ட அந்த முஸ்லிம் மனிதர், “எனது குழந்தை தகனம் செய்யப்படுவதை எவ்வாறு நான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்” என வினவினார்.

பிறந்து சில நாட்களேயான அவர்களது மகன் மொஹமட் ஷயாக் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின் அவர்களது குடும்பம் அடி மேல் அடியைச் சந்தித்தது. பிறந்து 20 நாட்களேயான அப்பச்சிளம் சிசுவில் நடத்தப்பட்ட அன்டிஜென் சோதனை, குழந்தை  கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை உறுதிப்படுத்தியது. குழந்தை ஷயாக்கிற்குப் பாலூட்டிய தாய் உட்பட, பெற்றோர்கள் மீது நடத்திய சோதனை, அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்தது.

கூடுதல் நம்பகத்தன்மை கொண்ட பி.சி.ஆர் சோதனையை குழந்தையிடம் நடத்துவதற்கு வைத்தியசாலை மறுத்ததுடன், குழந்தையின் தாயார் தனது குழந்தையுடன் இரவு தங்குவதற்கு அனுமதிக்கும்படி மன்றாடிய போதும், குழந்தையின் பெற்றோர்களை வைத்தியசாலையை விட்டுப் போவதற்கு நிர்ப்பந்தித்தது.

அதன் பின், அந்தப் பச்சிளம் குழந்தை ஷயாக் பல மணிநேர இடைவெளியில் இறந்தபோது, அவன் தனித்தேயிருந்தான்.

குழந்தையின் ஜனாஸாவைத் தகனம் செய்வதற்கு பெற்றோர்களின் சம்மதத்திற்கு வைத்தியசாலை அழுத்தத்தைப் பிரயோகித்தது, தான் அதற்கு மறுத்ததாகக் கூறும் பாஹிம், பதிலுக்கு ஷயாக்கின் ஜனாஸாவைப் புதைப்பதற்காக குடும்பத்திடம் கொடுக்கும்படி கேட்டு மன்றாடினார். நிலைமை ஒரு இழுபறிநிலையை அடைந்ததையடுத்து கலக்கமடைந்த பாஹிம், இறுதியில் இறந்துபோன அவரது மகனின் ஜனாஸாவின்றி லேடி றிஜ்வே வைத்தியசாலையை விட்டுச் சென்றார்.

கொரோனா வைரஸ் சோதனையில் தொற்று உறுதியாக்கப்பட்டதன் அடிப்படையில் குழந்தை ஷயாக்கின் ஜனாஸாவின் கட்டாயப்படுத்தப்பட்ட தகனத்தை அரசு நியாயப்படுத்தியது.

பல மாதங்களாக விசாரணைகளை பிற்போட்டு வந்த, இலங்கை உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் கட்டாய தகனக் கொள்கையைக் கேள்விக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்களை, டிசம்பர் 1ஆம் திகதி,  விசாரணைகளின்றி தள்ளுபடி செய்ததுடன், தள்ளுபடி செய்ததிற்கான காரணங்களைத் தெரிவிப்பதற்கும் மறுத்தது. பரிகாரங்களுக்கு எந்தவித வழிவகைகளுமின்றி, இலங்கை முஸ்லிம் சமூகம் சிவில் ஒத்துழையாமைப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. ஜனாஸாக்களைப் புதைப்பதற்கான உரிமையை அரசாங்கம் மறுக்குமாக இருந்தால், ஜனாஸாக்களைப் பாரமெடுப்பதற்கு  கோராதிருப்பதற்கும் அல்லது சவப்பெட்டி மற்றும் தகனங்களுடன் சம்பந்தப்பட்ட செலவுகளைக் கொடுக்காதிருப்பதற்கும் முஸ்லிம் குடும்பங்கள் தீர்மானித்தன. இந்தப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 20 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் கட்டளையின் பிரகாரம் அரச செலவில் தகனம் செய்யப்பட்டன. டிசம்பர் 8 ஆம் திகதி, குழந்தை ஷயாக்கும் அவர்களின் தராதரத்துடன் இணைந்து கொண்டான். ஆறு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்து பெற்ற மகனின் இழப்புக்காக அவர்கள் வேதனை கொண்டிருந்த போதிலும், குழந்தையின் ஜனாஸாவைக் கோராதிருப்பதற்கான கடினமான ஒரு தீர்மானத்தை பாஹிமும் அவரது மனைவியும் எடுத்தனர்.

வரலாறு முழுவதிலும் மதங்களின் முக்கியமான செயற்பாடுகளுள் ஒன்று இறப்பின் ‘பெரும் மர்மத்தை’ விளக்குவதாக இருந்து வந்துள்ளது. எந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும், இறுதிச் சடங்குகள் என்பது மிகவும் தனிப்பட்ட ரீதியிலானது என்பதுடன் அவை, இறப்பின் பின்னான வாழ்க்கைக்கான ஒரு பாலமாகவும் மற்றும் பூவுலகில் வாழ்க்கை முற்றுப் பெற்றமைக்கான ஒரு முறையாகவும் மிகவும் முக்கியமானதாக இருந்தன. இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ள மக்களின் ஜனாஸாக்கள் அவர்களின் புனித நகரான மெக்காவின் திசை நோக்கியதாகவே எப்பொழுதும் புதைக்கப்படுகின்றன. இஸ்லாமிய புதைக்கும் பாரம்பரியங்களில், இறந்த ஒருவரின் ஜனாஸா ஒரு போதும் பதப்படுத்தப்படுவதில்லை, ஆனால், அவை வெறுமனே கழுவப்பட்டு வாசனைத் தைலங்கள் தெளிக்கப்பட்டு நறுமணமூட்டப்படுகின்றன.

இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர், ஹில்மி அஹமட் விளக்குகையில்,

“பாவிகளையே நரகத்தின் நெருப்பு தீண்டும் என பிறப்பிலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கு தகனம் செய்வது எனும் நிலைப்பாடு மிகவும் பாரதூரமானது. தாங்கள் கடவுளைச் சந்திக்கும் போது அவர்களுக்கு மறுவாழ்வளிக்கப்படுமென மார்க்கப் பற்றுக் கொண்ட முஸ்லிம்கள் நம்புகின்றனர். மார்க்கப் பற்றுக் கொண்ட முஸ்லிகளுக்கு, தகனம் செய்யும் நடவடிக்கை, குடும்ப உறுப்பினரொருவர் நரகத் தீயிலிட்டுப் பொசுங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்றதாகும்” என அஹமட் வலியுறுத்திக் கூறினார்.

“முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பித்தல்” என்பதை சிங்களப் பெரும்பான்மையினருக்கு காண்பிக்கும் அரசாங்கத்தின் ஒரு வழிமுறையே இந்தக் கொள்கை என அஹமட் நம்புகிறார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களினால் உருவாகிய முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலையினால் மேலுந்தப்பட்டு, 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அரசாங்கம் அதனை மேற்கொள்வதாகவே வாக்குறுதியளித்தது, என அவர் மேலும் விளக்கினார்.

தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கையைக் கண்டித்துக் குரல் கொடுக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி, இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு முஸ்லிம்களை நிர்ப்பந்திப்பது முஸ்லிம் இளைஞர்களுள் சில பிரிவினரை ஆயுதத் தீவிரவாதத்திற்கு தள்ளும் என அண்மையில் எச்சரித்தார். அவரது அச்சம் நியாயமானது.

2014 இல் அளுத்கமவிலும் மற்றும் 2018 இல் திகனவிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களைப் பார்க்கும்போது, குழப்பங்கள் மற்றும் வன்முறைக் கலவரங்கள் என்பவற்றின் சுழற்சி வட்டங்கள் ஆரம்பிக்கலாம் என்பதை எதிர்வு கூறுவது ஒன்றும் கடினமானதல்ல. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்பவற்றை இலக்காகக் கொண்ட வன்முறைகளின் பின்னர், முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தங்களது மக்களை அமைதி காக்கும்படி இரந்து வேண்டிக் கொண்டனர். இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட, மெனளமாக இரவுகளில் ஒன்றுகூடும் கறுப்புச் சக்திகளுக்கு இத்தாக்குதல்கள் எண்ணெய் வார்த்தன. அரசியல் – மதப் பிளவுகளின் ஒவ்வொரு தரப்பிலுமுள்ள தீவிரவாத சக்திகளைத் தவிர வேறெவரும் இதனை நன்கு புரிந்து கொள்ளவில்லை.

ஏப்ரல் 2019 இல், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்த நாட்கள் மற்றும் வாரங்களில், பல வருடங்களிற்கும் மேலாக, குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்ட தீவிரவாத மதப் போதகரான சஹ்ரான் ஹாஷிமின் பின்புலம் மற்றும் கடந்து வந்த பாதை என்பவற்றை ஊடகவியலாளர்கள் கண்டறிந்தனர். அவரது செய்தி என்ன? யாருக்கு அவர்  போதித்தார்? தற்கொலைக் குண்டுதாரிகளாக வருவதற்கு ஆறு இளைஞர்களை அவர் எவ்வாறு ஊக்குவித்தார்?

காத்தான்குடி, கண்டி மற்றும் தெற்கிலுள்ள சிறு கிராமங்களின் பள்ளிவாசல்களிலிருந்து ஹாஷிமினது கதையின் இழைகளை எடுத்துக் கொண்டோம். எப்பொழுதும் நகர்ந்து கொண்டு இருக்கும், ஹாஷிம் பொது பல சேன போன்ற தீவிரவாதக் குழுக்களால் தலைமை தாங்கப்படும் கும்பல்களின் இலக்காக அமைந்துள்ள முஸ்லிம் நகரங்களை முனைப்பாக தேர்ந்தெடுத்து பதின்ம வயதினர்கள் மற்றும் வயது வந்த இளம் ஆட்களை மூளைச்சலவை செய்வதற்கு தனது மதப் போதனைகளை உபயோகித்தார். இலங்கை முஸ்லிம் பாரம்பரியத்தில் வஹாபிசத்தின் செல்வாக்கு குறிப்பாக தீவிரமானதாகவும் மற்றும் புலனாகும் வகையிலுமாக இருந்த காத்தான்குடி போன்று கிழக்குப் பிரதேசங்களின் உள்ளேயுள்ள சிறிய நகரங்களில் அவர் அடைக்கலம் தேடிக் கொண்டார். அந்தப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் சமூகத்தினுள் சிலர் பிரகாசமான சிவப்புக் கொடிகளை அவதானித்தமை, ஹாஷிமை நாட்டின் வேறு பகுதிகளுக்கு விரைவாக நகர்வதற்கும், சில சமயங்களில் ஒரு குறுகிய காலத்திற்கு கடல் கடந்து செல்வதற்கும் உந்தியது. ஆனால் அநேகமான சமயங்களில், அந்தத் தொலைவில் அமைந்துள்ள கிராமங்களிலுள்ள பெற்றோர்கள், அவர் தங்களது பிள்ளைகளுக்கு குரானைப் போதிக்கிறார் என்றே எண்ணினர்.

உணரப்பட்ட அல்லது உண்மையான, வலிகள் அல்லது துன்பங்கள் என்பவற்றிலிருந்தே தீவிரமயமாதல் வளர்ந்தோங்குகிறது. கடந்த தசாப்தத்தில், உண்மையான, மற்றும் அநேகம் அரச அனுசரனையுடனானது என உணரப்பட்ட தொல்லைப்படுத்தல்களிலிருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி அடைந்தது என்பதை எவரும் அரிதாகவே மறுத்துரைப்பர். முஸ்லிம் வீடுகள் மற்றும் வியாபாரத் தலங்களை எரியூட்டிய கும்பல்கள் அரிதாகவே நீதியை எதிர்கொண்டனர். புராதன இஸ்லாமிய வணக்கத் தலங்கள் கைப்பற்றப்பட்டு பௌத்த தொல்பொருள் இடங்களாக மீள் பெயரிடப்பட்டன. இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் கொவிட்-19 முதல் பரவுதலுடன் இலங்கை போராடிக் கொண்டிருக்கையில், அரசாங்கமும் அதன் முகவர்களும் வைரஸின் பரவுதலுக்காக உடனடியாகவே முஸ்லிம்களை குற்றம்சாட்டினர்.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட, இலங்கை அரசாங்கத்தின் கட்டாயத் தகனக் கொள்கை அதன் இன-மத பக்கச்சார்பின் அப்பட்டமான சுட்டிக்காட்டுதலாகும். கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் உடலங்களை அகற்றுவதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் படியான வழிகாட்டல்களில் ‘புதைத்தல் அல்லது தகனம் செய்தல்’ என்பதிலிருந்து ‘தகனம் செய்தல் மட்டும்’ என வைரஸினால் முதலாவது முஸ்லிம் இறந்தவுடனேயே மாற்றப்பட்டன.

கொவிட்-19 இனால் இறந்தவர்களைப் புதைப்பது நிலத்தடி நீர் வளங்களை மாசுபடுத்தும் என்கின்ற ஆதாரபூர்வமில்லாத வாதங்களின் அடிப்படையில், இக்கொள்கை பல மாதங்களாக அமுலில் உள்ளது. எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படையின்றி, கட்டாயத் தகனம் செய்யும் இக்கொள்கையானது, நாட்டிலுள்ள ஓர் இன-மத ரீதியான சிறுபான்மையினர் மீது கலாச்சார தன்மயமாக்கலைக் கட்டாயமாக்குவதற்கு கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தை உபயோகிக்கும் ஒரு முயற்சியாகவே நோக்கப்படுகிறது. கொவிட்-19 உலகம் முழுவதிலும் 200 இற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து 1.6 மில்லியன் மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. ஆனாலும், வைரஸினால் 150 எண்ணிக்கை வரையிலான உயிரிழப்புகளையே கொண்ட இலங்கையில், இறந்தவர்களின் உடலங்களை எப்படி அகற்றுவது என்பது பற்றிய இந்தப் பெரும் வாதம், கட்டாய தகனக் கொள்கை பொதுச் சுகாதாரத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலை தீவிலுள்ள தீவுக்கூட்டங்களில் புதைப்பதற்காக ஏற்றி அனுப்புவதற்கு ஜனாதிபதி ராஜபக்‌ஷ மாலைதீவு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது பற்றி இந்த வாரம் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. கேவலமான இந்த வேண்டுகோள், பிரஜாவுரிமை கொண்டிருக்கும் தன்மைக்கே ஓர் அவமானம் என்பதுடன் மற்றொரு நாட்டிற்கு இறையாண்மையை விட்டுக் கொடுத்தல் என்பது மனிதத்தன்மையற்றது மட்டுமன்றி பல தலைமுறைகளாக இலங்கையை தாயகமாக அழைத்துவரும் 2.5 மில்லியன் முஸ்லிம்களை அவமதிப்பதாகவும் உள்ளது. அத்தோடு, அது உலகெங்கிலுமே முன்னொரு போதும் இல்லாத ஒரு நடைமுறையாகிறது.

அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியவாறு, முஸ்லிம் சமூகத்தின் உடலங்களைப் புதைப்பதற்கான அடிப்படை உரிமையை மறுப்பதன் மூலமாக முஸ்லிம்களின் மனங்களை வேண்டுமென்றே காயப்படுத்துவதற்கு அரசினாலான தீர்மானங்கள், இனி வரும் வருடங்களில் இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமைக்கு நீண்ட பின்விளைவுகளைக் கொண்டிக்கலாம்.

எனினும், இந்தப் போரை அரசாங்கம் முனைப்புடன், பெரிதும் நாடுவதாகத் தெரிகிறது.

கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதித்துவம், ஒரு வருடத்திலேயே, அதன் பளபளப்பை இழந்துள்ளதுடன் பயனுறுதியான நிர்வாக நிபுணத்துவர் என்ற அவரின் முகத்திரையும் அகன்று விட்டது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு அரசாங்கத்தின் பதிலிறுப்பு வேடிக்கையானதாகவும் மற்றும் மோசமான கவனக்குறைவு உடையதாகவும் உள்ளது. விஞ்ஞானபூர்வ ஆட்சி முறைமையை வாக்குறுதியளித்த ஓர் அரசு பெருந்தொற்றை விரட்டுவதற்கு மட்குடங்களை ஆற்றில் வீசுவதற்கும் பாம்புக்கடி எண்ணெய் பூசுபவரால் நோயாளிகளின் கொவிட்-19 குணமாவதை உறுதிப்படுத்தவும் நாடியது. பல மாதங்களாக அரசு, குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், தலைநகரின் சனநெருக்கடியான பகுதிகள் என அநேகம் நாளாந்த ஊதியம் ஈட்டுபவர்களின் பகுதிகளை முடக்கி வைத்தது. சுற்றுலாக் கைத்தொழில்துறை முடங்கிப் போயுள்ளது, இலங்கையின் நிதித் தராதரத்தை நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்துள்ளன, திறைசேரி பணப் பற்றாக்குறையால் முடங்கியுள்ளது மற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமானவையாக உள்ளன.

இவ்வாறான மோசமான நெருக்கடியிலுள்ள ஒரு அரசாங்கம் ஒரு எதிரியைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். இவ்வாறான ஒரு கவனச் சிதறல், வரவிருக்கும் கடினமான மாதங்களில் சிங்களச் சமூகம் தங்களது வயிற்றிலுள்ள வெறுமையை மறப்பதற்கு உதவும். அது வறுமை, பற்றாக்குறை, மற்றும் பசி என்பவற்றை விட அச்சப்பட வேண்டிய எதிரியாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான உணர்வுகளின் பலத்தில் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திற்கு, இது ஒரு அறிமுகமான களமாகும். எதிர்வரும் மாதங்களிலான அதன் அரசியல் ரீதியான பிழைத்தலுக்கு இந்த மூலோபாயம் முக்கியமானது என்பதை அது நிரூபிப்பது மட்டுமின்றி, இறுதி ஆட்டத்தில், அரசிற்கு இருக்கும் ஒரேயொரு துருப்புச் சீட்டும், அதுவாகவே இருக்கும்.

குழந்தை ஷயாக்கின் கட்டாயத் தகனம் ஓர் உணர்வு ரீதியாக வெடித்தெழும்பும் நிலையாகும் என்பதுடன் அது அரசாங்கத்தின் நோக்கங்கள் பற்றி பலரையும் கேள்வி எழுப்ப வைத்தது. ஆளும் இலங்கை பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆதரவாளர்கள் கூட ஒரு 20 நாள் குழந்தையை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கி அவர்களது விருப்பத்திற்கு எதிராக ஒரு தகன அறைக்குள் தள்ளிவிடும் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

அவரது மகன் தகனம் செய்யப்பட்ட நாளன்று பாஹிம் பொரள்ளை மயானத்திற்கு வந்த பொழுது, “கொரோனா வைரஸினால் உயிரிழந்த இலங்கையின் மிகவும் வயது குறைந்தவர்” இன் இறப்பைப் பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அவ்விடத்தில் குழுமியிருந்தனர். பாஹிம் ஒரு தொலைவில் நின்று கொண்டு, தன் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வதற்கு முன், தனது மகனை இறுதியாக உடைந்த நெஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

புதிதாகப் பிறந்த குழந்தை கொண்டு வரும் சொல்ல முடியாத சந்தோசத்தையும் ஒரு பிள்ளையின் அகால மரணம் ஏற்படுத்தும் துயரங்களையும் அநேகமான இலங்கையர்கள் விளங்கிக் கொள்வார்கள். எனவே, துன்பம் சூழ்ந்துள்ள தனது இறப்பில், குழந்தை ஷயாக் ஒரு சிறிய, மௌனமான புரட்சிப் பொறியை எழுப்பியுள்ளான்.

அவனது தகனத்தன்று, குழந்தையின் ஞாபகத்திற்கும், அவனது வலிந்த தகனத்திற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குமாக நாட்டிலுள்ள மயானங்களின் கதவுகளில், மின்விளக்குத் கம்பங்களில் வெள்ளைக் கைக்குட்டைகள் கட்டப்பட்டன. இவை பொரள்ளை மயான தகன அறைக் கதவுகளிலிருந்து அன்றிரவே அகற்றப்பட்டிருந்தன, ஆனால் அடுத்த நாள் மேலும் பல வெண் கைக்குட்டைகள் கட்டப்பட்டன. அரசியல்வாதிகள் மற்றும் கத்தோலிக்க குருமார்கள் இந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பகிரங்கமாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதில் அச்சம் கொண்டுள்ள மக்களை, அதற்குப் பதிலாக தங்கள் ஆதரவைப் பிரதிபலிக்கும் முகமாக மணிக்கட்டுகளில் வெள்ளைத் துணிகளை அணியுமாறு செயற்பாட்டாளர்கள் ஊக்குவித்தனர்.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மயானங்களின் கதவுகளில் வெள்ளைத் துணித் துண்டுகள் தோன்றுவது அரசுக்கு, அச்சம் கொள்வதற்கான நல்லதொரு காரணத்தைக் கொண்டுள்ளது. சுத்தமான நீர் வேண்டிய மக்கள் கூட்டத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது அல்லது எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு மீனவர்கள் வேண்டிய போது மீனவரைச் சுட்டுக் கொன்றது, தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வீதியில் கொல்லப்பட்டமை மற்றும் அப்பாவிகளை நெருப்பில் எறிந்தமை என, எதிர்ப்பு நகர்வுகள் அநேகம் தனிப்பட்ட சம்பவங்களினாலேயே மேலும் பற்றியெரிய வைக்கப்படுகின்றன. இந்த விடயங்கள் நெருப்பைப் பிடிக்கும் ஒரு வழியாக மட்டுமே காணப்படுவதை வரலாறு ஏற்கனவே நிரூபித்துள்ளது.

தரிஷா பஸ்டியன்ஸ்

“Playing With Fire” என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.