பட மூலம், Selvaraja Rajasegar Photo

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம் அவரின் மறைவுக்குத் தனது இரங்கல்களை வெளியிடுகிறது. அமரர் ஆறுமுகம் தொண்டமானினுடைய அரசியல், சமூகப் பணிகள் பற்றி எதிர்காலத்திலே பலரும் உரையாடுவார்கள் என நாம் எண்ணுகிறோம். இந்தக் கட்டுரை கோவிட்-19க்குப் பிந்தைய நெருக்கடியானது எவ்வாறு மலையகத் தமிழர்களைப் பாதித்து வருகிறது என்பது பற்றியதாகும்.

இலங்கையிலே கொரொணாத் தொற்றினது சமூகப் பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழர் சமூகத்தினை மோசமாகப் பாதித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்தச் சமூகத்தினது தோட்டப் பகுதிகளிலே வாழும் தொழிலாளர் வர்க்கத்தினரையும், இந்தச் சமூகத்தில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலே, குறிப்பாக மேல்மாகாணத்தில் பணியாற்றும் தொழிலாளர்களையும் கொரொணா  நெருக்கடி கூடுதலாகப் பாதித்துள்ளது. மலையகத் தமிழர் சமூகத்தின் மீது கூடிய அளவிலே இந்த நெருக்கடி பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்குப் பல நீண்டகால வரலாற்று நிலைமைகள் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இன்றைய நெருக்கடியினைச் சரியான முறையில் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் இந்த வரலாற்று நிலைமைகள் குறித்தும் நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

மலையகத் தமிழர் சமூகம்: சில வரலாற்றுப் போக்குகள்

கிட்டத்தட்ட 200 ஆண்டு கால வரலாற்றினை இந்தத் தீவிலே கொண்டிருக்கும் மலையகத் தமிழர் சமூகம், தமது வரலாற்றின் பெரும் பகுதியிலே ஊழியத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். காலனித்துவக் காலத்திலும், இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரும் இந்தச் சமூகங்களில் இருந்து பெருந்தோட்டங்களிலே பணியாற்றியவர்கள் கடுமையான ஊழியச் சுரண்டலுக்கு உள்ளாகினர். காலனிய நிர்வாகம், தோட்டக் கம்பனிகள், இலங்கையினை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள், இந்தச் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் தலைமைகள், உலகளாவிய முதலாளித்துவக் கட்டமைப்புக்கள் எனப் பல தரப்பினரும், சக்திகளும் இந்தச் சமூகங்களின் மீதான ஊழிய ரீதியிலான ஒடுக்குமுறைக்கு காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர்.

அதேவேளையில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமது பொருளாதார மேம்பாட்டுக்காகக் கடுமையாகப் போராடியவர்களாகவும் இருக்கிறார்கள். அண்மைய வருடங்களிலே தோட்டங்களிலே பணிபுரியும் மலையகத் தமிழர் 1000 ரூபாவாகத் தமது நாளாந்த சம்பளத்தினை உயர்த்தித் தரும்படி கோரினர். அதற்கான போராட்டங்கள் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்ற போதும் அந்தக் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

மறுபுறத்திலே இனத்துவ, மொழி மற்றும் சமய ரீதியில் சிறுபான்மையாக இருக்கும் இந்த சமூகத்தினர் பின்காலனித்துவக் காலத்தில் இலங்கையில் எழுச்சி பெற்ற சிங்கள பௌத்த தேசியவாதத்தினது புறமொதுக்கல்களினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. பலர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். தென்னிலங்கையில் இடம்பெற்ற இனவன்முறைக் காலங்களிலே மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமாக மலையகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பிந்தைய இடதுசாரி அரசியலிலும் கூட அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்த மக்களின் நலனின் பொருட்டு செயற்பட முயற்சித்த தொழிற்சங்கங்களும் கூட ஒரு கட்டத்திலே கட்சி சார் அரசியலின் குறுகிய இலக்குகளுக்குள் போய் முடங்கின.

இவ்வாறாகப் பல வகையான ஒடுக்குமுறைகளையும், புறமொதுக்கல்களையும் சந்தித்த ஒரு சமூகத்திலே கால ஓட்டத்திலே பல மாற்றங்களும் ஏற்பட்டன. இலங்கையின் இலவசக் கல்வியின் வாயிலாக இந்தச் சமூகத்திலே ஒரு சிறிய மத்தியதர வர்க்கம் ஒன்று இப்போது உருவாகி வருகின்றது. ஆனாலும் ஊழியர் நலன், காணி உரிமைகள், வீட்டு வசதிகள், போக்குவரத்து, தொடர்பாடல், கல்வி, மருத்துவம் போன்ற பல விடயங்களிலே மலையக சமூகத்தினர் இன்னமும் தமது தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையினையே உணருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலிலே பாரம்பரியமாகத் தோட்டங்களிலே வேலை செய்யும் முறைக்குச் சமாந்தரமாக, இந்தச் சமூகத்தினைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் மலையகத்தினை விட்டு வெளியேறி நாட்டின் சுதந்திர வர்த்தக வலயங்களிலும், கொழும்பிலும் மேல் மாகாணத்தில் இருக்கும் வியாபார ஸ்தலங்களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் ஆட்டோ ஓட்டுதல் போன்ற சுயதொழில் முயற்சிகளிலும் மலையகத்துக்கு வெளியிலே ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறான சமூகப் பொருளாதார நிலைமைகளின் மத்தியிலேயே கொரொணாத் தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது மலையகத் தமிழ் சமூகத்தினரைப் பாதித்திருக்கிறது.

பொருளாதார ரீதியிலான சவால்கள்

கொரொணா நெருக்கடி உலகளாவிய ரீதியிலே உணரப்பட்ட நிலையிலே பல நாடுகளின் தேயிலை உற்பத்தியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலே இலங்கையின் தேயிலைக்கான கேள்வி சற்று அதிகரித்தமையினால் நெருக்கடிக்கு மத்தியிலும் தேயிலை உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் வேலையிலே ஈடுபட்டாலும், அதிகரித்த கேள்வியினால் ஏற்பட்ட பொருளாதார நன்மைகள் தோட்டங்களிலே வேலை செய்த தொழிலாளர்களுக்கு நெருக்கடி காலத்திலே அவர்கள் எதிர்கொண்ட சவால்களை எதிர்கொள்ளுவதற்கு உதவவில்லை. தோட்ட நிருவாகம் சில நிவாரணப் பொருட்களைத் தொழிலாளர்களுக்கு வழங்கினாலும், அப்பொருட்களிற்கான பணத்தினை அவர்களின் சம்பளத்தில் இருந்து எதிர்காலத்தில் வசூலிப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பல இடங்களிலே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மலையகத்துக்கு வெளியே பணியாற்றியவர்களிலே பலர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதிலே இடர்களை எதிர்நோக்கினர். சுதந்திர வர்த்தக வலயத்திலே பணியாற்றிய தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்த போது, மலையகத் தமிழர்கள் சில வேற்றுமைப்படுத்தல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்ததாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாகக் கொழும்பிலே அடைபட்டுப் போயிருந்த தொழிலாளர்களுக்கு நாளாந்தச் செலவுக்குக் கூட பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டது. அதனால் மலையகத்திலே வாழ்ந்த அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தமது பிள்ளைகளின் மருத்துவ, பொருளாதார நிலைமை குறித்துப் பெற்றோர் உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.

ஏனைய பகுதிகளிலே பணிபுரிந்த பல தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண்கள், மலையகம் திரும்பிய போது தமது குடும்பங்களிலே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது அவர்களுக்கு இருந்த சிறிய அளவிலான சுதந்திரத்துக்கும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியும், தொழிலாளர்களின் வீடு திரும்புகையும், குடும்பங்களினுள்ளே சச்சரவுகளையும், வீட்டு வன்முறையினையும் தோற்றுவித்துள்ளது. இதனால் பெண்களும், சிறுவர்களும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

நாட்டிலே இந்த நெருக்கடி காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இணையவழிக் கல்வியானது மலையக சமூகத்தினைச் சேர்ந்த மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்துள்ளது. தோட்டங்களை அண்மித்த‌ பகுதிகளிலே இணையச் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கின்றன. ஏற்கனவே தமது நாளாந்தச் செலவுகளுக்கு பணவசதி அற்ற சில குடும்பங்கள் கடன் பெற்று ஸ்மார்ட் தொலைபேசி வாங்க வேண்டிய நிலையினையும் இந்தப் புதிய கல்வி முறைமை உருவாக்கியிருக்கிறது. மாணவர்கள் மத்தியிலேயே ஏற்றத்தாழ்வுகளும் இதனால் அதிகரித்து வருகின்றன‌.

நிவாரண நடவடிக்கைகளின் போதாமை

இவ்வாறான பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தினருக்கு இந்த நெருக்கடியினைக் கையாளுவதற்கு அரசினால் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமற்றனவாகவும், பொருத்தமற்றனவாகவும், சில வேளைகளில் மக்களைச் சென்றடையாதவையாகவும் இருக்கின்றன. அரசினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு தோட்டங்களிலே வேலை செய்யும் பலருக்கும் கிடைக்கவில்லை. மலையகத்துக்கு வெளியிலே பதிவுகளை வைத்திருப்போர் இந்த உதவித் தொகையினைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்தக் கொடுப்பனவினை வழங்குவதில் இருக்கும் அரசியல் மற்றும் கட்சி சார் இடையூறுகள் மற்றும் சாதி அடிப்படையிலான வேற்றுமைப்படுத்தல்கள் காரணமாக‌ இந்தக் கொடுப்பனவு அவசியமாகத் தேவைப்படும் வறுமையினால் பாதிக்கப்பட்ட பலருக்குக் கிடைக்கவில்லை.

கொரொணாக் காலத்திலே அரசினால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ மற்றும் பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளும் தீர்வுகளும் மலையக சமூகத்தில் இருக்கும் வீடமைப்பு, காணி நிலைமைகளைக் கருத்திலே எடுக்கவில்லை. உதாரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து மலையகம் திரும்பியோரினைத் தனிமைப்படுத்துவதற்கான தேவைகள் மிகவும் சிறிய வீடுகளிலே வாழும் மலையகக் குடும்பங்களுக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தியது. வீடு திரும்பியவர்களுடன் ஒரே வீட்டிலே வாழ்பவர்கள் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இக்காலகட்டத்திலே எழும்பியது.

நெருக்கடியினைக் கையாளும் வகையில் வீட்டுத்தோட்ட முயற்சிகளிலே ஈடுபடும் படி அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியது. ஆனால், வீட்டுத்தோட்டங்களைச் செய்யும் அளவுக்கான நிலவசதி மலையகத் தொழிலாளர் மத்தியிலே இருக்கவில்லை. கடன்களைப் பெற்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காணி உரிமை மக்களிடம் இல்லாத நிலையும் எதிர்நோக்கப்படுகிறது. நாட்டின் மையத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிடல்களும், தீர்வு முன்வைப்புக்களும் மலையக சமூகத்தினை நெருக்கடி காலத்திலும் பாதித்தன. சில இடங்களிலே தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், அனர்த்த நிவாரணம், வீட்டு வசதிகள் போன்றன கம்பனிகளிலே தங்கியிருப்பதனால், இந்த விடயங்கள் தொடர்பிலே அரசினால் முன்னெடுக்கப்படும் பொதுவான கொள்கைகளினாலும், தீர்வு முயற்சிகளினாலும் மலையகத் தொழிலாளர்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருக்கின்ற நிலைமையும் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாகத் நோய்த் தொற்றுக் காலத்தில் தோட்டப் பகுதிகளிலே கிருமிநாசினிகள் தெளிப்பதற்குக் கூட அரச மருத்துவர்கள் வரவில்லை என‌ மலையக சமூகத்தினைச் சேர்ந்த சிலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

மலையகத் தமிழ் மக்களும் ஏனைய சமூகங்களும்

வரலாற்று ரீதியாகவும், கொரொணாவுக்கு முன்னைய காலத்திலும் சரி, தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் போதும் சரி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மலையகத் தமிழர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினரின் பிரச்சினைகள் தொடர்பிலே நாட்டின் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தோர் வெளிப்படுத்தும் கரிசனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அரசு மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களும் மலையக மக்களை இந்த நாட்டுக்கு உரித்தற்றவர்கள் என்று பார்க்கின்ற வழமையே காணப்படுகிறது.

ஒரு சிறுபான்மை அடையாளத்தினைத் தாங்கிய இந்தச் சமூகத்தவரினை, இலங்கையின் வடக்குக் கிழக்கிலே எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியவாதத்தின் சில தரப்பினரும் புறமொதுக்கினர். இந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும், இச்சமூகத்தினரைச் சேர்ந்தோர் மீளவும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போதும், இனவாத வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தஞ்சம் அடைந்த போதும், இவர்கள் தமிழ்த் தேசியவாதத்தின் ஆதிக்க மிக்க சில பிரிவினரினால் இழிவுபடுத்தும் முறையிலேயே நடாத்தப்பட்டனர். வட பகுதியிலே மத்திய தரக் காணி வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். வடக்குக் கிழக்கின் சில எல்லைக் கிராமங்களிலே இவர்கள் குடியமர்த்தப்பட்ட போது, அரச படைகளின் இனவாதத் தாக்குதலுக்கும் பலிக்கடாவாக்கப்பட்டனர். இந்தச் செயன்முறைகளிலே தமிழ்ச் சமூகத்துக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இந்த மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியினை அவமதிக்கும் செயற்பாடுகளை இன்றும் கூட நாம் யாழ்ப்பாணத்திலே காண்கிறோம்.

நாடு முழுவதனையும் பாதிக்கும் கொரொணா நெருக்கடி மலையக சமூகத்தினைக் கூடுதலான அளவுக்கு பாதிப்பதற்கு அவர்கள் வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டமையே காரணம். இந்தப் புறக்கணிப்புக்கு நாட்டின் ஏனைய சமூகங்கள் மலையகத்தமிழர் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து காத்து வந்த மௌனமும் ஒரு காரணம். கொரொணாவிற்குப் பின்னர் மலையகச் சமூகத்திலே பொருளாதார, சுகாதார, ஊழியம் சார், கல்வி போன்ற விடயங்களிலே முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாயின் நாட்டின் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த சகவாழ்வினையும், சமூக நீதியினையும் வலியுறுத்தும் சக்திகள் மலையக சமூகத்துக்கும், அதனது போராட்ட முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்பதும் தமது தோழமையினையும், ஒத்துழைப்பினையும் வழங்குவதும் அவசியம். மலையகத்திலே தொழிற்படும் முற்போக்கு சக்திகளுடன் நாமும் இணைந்து நீதிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்குமான முயற்சிகளிலே ஈடுபட வேண்டும்.


(சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான மூன்று சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பந்தியினை எழுதும் போது பல தகவல்களையும் எமக்குத் தந்துதவிய மலையகத்தினைச் சேர்ந்தோருக்கு எமது நன்றிகளை வெளியிடுகிறோம். இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.)