பட மூலம், Groundviews

இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அடிப்படையிலான தேர்தல் பிரகடனங்கள் எதையுமே காணமுடியவில்லை. கடன் பிரச்சினை என்பது மாத்திரம் இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய ஒரேயொரு பிரச்சினையல்ல என்ற போதிலும் வெளிநாட்டுக் கடன் சுமையினை குறைப்பது தொடர்பான சிறந்த யோசனைகள் ஜனாதிபதி வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த என்பவரால் மாத்திரம் முன்வைக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தன்னிடம் பொறுப்பளிக்குமாறு கோரியது சாதாரண அளவிலேனும் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்ற நாட்டையல்ல. மாறாக அனைத்துத் துறைகளிலும் விழ்ச்சி கண்ட நிலையிலுள்ள நாட்டையே அவர்கள் தங்களிடம் பொறுப்பளிக்குமாறு கோரியிருந்தனர். வீழ்ச்சியடைந்த நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த நோக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளரிடமும் காண முடியவில்லை.

நாட்டின் நெருக்கடி

ஒரு நாடு என்ற அடிப்படையில் இலங்கை அடைந்திருக்கின்ற பாதகமான நிலை குறித்து கீழ்வருமாறு குறிப்பிடலாம்

  1. சமூகக்கட்டமைப்பானது சமூக முறையில் இருக்கவேண்டிய ஐக்கியத்தினை இழந்து இன மத ரீதியாக பிரிந்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோதல்கள் ஏற்படலாம் என்ற நிலையிலே காணப்படுகின்றது.
  2. அரசாங்கத்தின் பிரதான தூண்களாகக் கருதப்படுகின்ற அரசியலைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் போன்ற துறைகளுக்கிடையே இருக்கவேண்டிய கட்டுப்பாடுகளையும் சீரான நிலையினையும் இழந்திருப்பதுடன் அரச நிறுவனங்களும் செயற்திறன் அற்ற நிலையில் காணப்படுகின்றது.
  3. அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் நாட்டின் பிரஜைகளுக்கிடையே இருக்கவேண்டிய தொடர்புகள் குறித்தும் குறிப்பிடவேண்டிய அரசியல் யாப்பானது பல திருத்தங்களுக்கு உற்பட்டு அரசியல் யாப்பொன்றில் இருக்க வேண்டிய நேர்த்தியையும் ஒருமைப்பாட்டினையும் இழந்து குழப்ப நிலையில் இருக்கின்றது.
  4. சட்டத்தை இயக்குதல் மற்றும் சட்ட அமுலாக்கல் என்பனவற்றுக்கான நிறுவன முறைகனள் வலுவிழந்து ஊழலால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலைக்குள்ளாகியிருக்கின்றது.
  5. அரச ஊழியர்களின் தொகை 15 இலட்சம் என்ற அளவுக்கு விசாலமாக இருப்பதுடன் அரச ஊழியர்களின் வினைத்திறன் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அரசினால் சுமக்க முடியாத சுமைகளாக மாறியிருக்கின்றது.
  6. வெளிநாட்டுக் கடன்படு நிலை உச்ச மட்டத்தில் காணப்படுவதுடன் கடன் தவணை மற்றும் கடன் மீதான வட்டித் தவணைகள் என்பவற்றைச் செலுத்துவதற்காக வருடாந்தம் 4,000 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது. இது நாட்டின் வருமான எல்லையை விட அதிகரித்ததாகக் காணப்படுகின்றது.
  7. பொருளாதாரத்தின் அனைத்து பகுதிகளும் வீழ்ந்துவிடும் நிலையிலேயே காணப்படுகின்றன. கிராமிய விவசாயம் மற்றும் வாணிப விவசாயம் அதில் பிரதான இடத்தினை வகிக்கின்றன.
  8. இலங்கையின் கிராமிய மக்கள் மாத்திரமன்றி நகர்புறங்களில் வாழ்கின்ற நடுத்தர வருமானம் பெறுகின்றவர்களும் கடன் சுமையில் நசுங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.

நெருக்கடியின் போக்கு

இலங்கை முகம்கொடுக்கின்ற இந்தச் சிக்கலான நெருக்கடியினை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது புதிய ஜனாதிபதியின் முன்னால் இருக்கின்ற சவாலாகக் குறிப்பிடலாம். 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை சிறந்த நிலையிலே காணப்பட்டது.

சுதந்திரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஆசிய நாடுகளின் வரிசையில் தனிநபர் வருமானம் கூடிய நாடாக முதலாம் இடத்தை ஜப்பான் பிடித்திருந்த நிலையில் இரண்டாம் இடத்தில் இலங்கை காணப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளில் கூட ஆசிய நாடுகள் மத்தியில் இலங்கை சிறந்த நிலையிலேயே காணப்பட்டது. சுதந்திரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் 1,000 கிலோமீட்டர் அளவான புகையிரதப் பாதைகள் காணப்பட்டதுடன் 1900ஆம் ஆண்டுகளில் மொத்த வருமானத்தில் 30 வீத வருமானம் புகையிரதங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளும் அளவுக்கு புகையிரதங்களினால் பெற்றுக்கொண்ட வருமானங்கள் விசாலமானதாக காணப்பட்டது.

சுதந்திரம் கிடைக்கும் பொழுது ஆசியாவில் காணப்பட்ட துறைமுகங்களில் முதலாம் இடத்தை கொழும்புத் துறைமுகம் பெற்றிருந்தது. வருடம் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வருகின்ற கப்பல்களின் எண்ணிக்கை 4,400 ஆகும். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே அளவிலான கப்பல்களே இன்றளவிலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகின்றன.

இலங்கையில் ஏற்றுமதியினை நோக்காகக் கொண்ட கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்கின்ற துறையொன்று இல்லாதிருந்த போதிலும் தேயிலை, தென்னை, இறப்பர், வாசனைத் திரவியங்கள் என்பன சக்திவாய்ந்த ஏற்றுமதி வியாபார முறை ஓன்று இலங்கைக்கு இருந்தது. சிலோன் டீ என்பதாக அடையாளப்படுத்தப்பட்ட இலங்கையின் தேயிலை உலகிலேயே மிகச் சிறந்த தேயிலையாகக் கருதப்பட்டது. இலங்கையின் அதிக செலவிலான நலன்புரி நடவடிக்கைகள் இந்த வருமானத்தின் மூலமாகவே செயற்படுத்தப்பட்டு வந்தன.

அந்தக் காலப்பகுதியில் இன்று இருப்பதை விட எளிமையான அரசியல் முறை ஒன்றே காணப்பட்டது. அத்துடன், சுயாதீனமான நீதிக் கட்டமைப்பொன்றும் நாட்டில் இருந்துவந்தது. அந்தக் காலப்பகுதியில் ஆளுனர் என்பவர் இன்றைய ஜனாதிபதி போன்றே அதிகாரங்களைப் பெற்றிருந்த போதிலும் ஏதேனும் ஒரு தவறு அவர் மூலமாக நிகழும் சந்தர்ப்பங்களில் ஆளுனருக்கு எதிராகவெனிலும் தீர்ப்பு வழங்குவதற்கு அன்றைய நீதித்துறை பின்வாங்கவில்லை. பிரித்தானியர்கள் இலங்கையை விட்டுச் செல்லும் போது ஊழலான ஆட்சி முறை காணப்படவில்லை. பிரித்தானியா இலங்கையை விட்டுச் செல்லும் போது 1,200 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை விட்டுச் சென்றிருந்ததது.

நிலைமை மறு பக்கம் திருப்புதல்

அதுவரையிலான காலப்பகுதியில் நடைபெற்று வந்த நல்லாட்சி நிலை மாற்றமடைந்தது வெள்ளையர்களால் அல்ல. வெள்ளையருக்குப் பின்னர் ஆட்சியை கையிலெடுத்த எமது சுய நலவாதிகள் மூலமாகவாகும்.

இன பேதங்கள் தொடர்பில் இருக்கின்ற அங்கீகாரங்கள் நீக்கப்பட்டு சிறந்த விதத்தில் காணப்பட்ட இன மத ஒருமைப்பாடுகள் வலுப்பெறும் அமைப்பில் இலங்கைத் தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கான தேவையை சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டவர்களே பதவிகளை வகித்து வந்தனர். அவர்களது சம்பள அளவுகள் தீர்மானிக்கப்பட்டது அவர்கள் சொந்த நாட்டிலிருந்து இங்கு வந்திருப்பவர்கள் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையிலாகும். சுதந்திம் கிடைத்ததன் பின்னர் உள்நாட்டவர்கள் அந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்டனர். எனினும், அவர்களுக்கான சம்பளங்கள் நாட்டின் வருமானத்துடன் ஒப்பிடும் போது விசாலமான தொகையாகக் காணப்பட்ட போதிலும் அந்தச் சம்பளங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

சுதந்திரத்தின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மானியங்கள் வழங்கும் நடைமுறையானது வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட விதமாக அமைந்தது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி வழங்கிய அரிசி மானிய முறையானது கல்வி சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளுக்கு செலவிடும் நிதியிலும் பார்க்க கூடிய நிதி செலவிடப்படுவதாக இருந்தது. ஜன சத்துவ என்ற திட்டமானது வாணிப பயிர்த் தோட்டங்களுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. வெளிநாட்டு கம்பனிகள் வசமிருந்த காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அவற்றை பராமரிப்பதற்கான இயலுமை அற்ற நிலையிலேயே அவை சுவீகரிக்கப்பட்டன. தேயிலையின் தரத்தினைப் பாதுகாத்துக்கொள்வதில் தோல்வி கண்டதன் காரணமாக இலங்கைத் தேயிலைக்கு இருந்து வந்த உலக அங்கீகாரம் வீழ்ச்சி கண்டது.

சிங்கள மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட மொழிக் கொள்கையானது தமிழ் மக்களை தீவிரவாதிகள் என்ற நிலைக்கு தள்ளிவிட்டது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு மும்மொழிகளைகளையும் கற்றுக் கொள்வதற்கிருந்த சந்தர்ப்பமும் இல்லாமல் போனது.

நாட்டின் இன மதம் சார்ந்த கிளர்ச்சிகளை எமது தலைவர்களால் முகாமைப்படுத்திக்கொள்ள முடியாமல் போனது நாடு பாதாளத்தில் விழுவதற்கு முக்கிய காரணமாகக் கருதலாம். எமது நவீன காலத் தலைவர்கள் நாட்டை கட்டியெழுப்பத் தவறினார்கள் என்பது மாத்திரமன்றி வாக்குகளைப் பெறுவதற்காக இன மத ரீதியான கிளர்ச்சிகளை ஊக்குவிக்கும் நடைமுறையினையும் பின்பற்றிவந்தனர். 30 வருடங்களாக நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது.

அந்த நீண்டகால ஒழுக்கமற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற உயிரிழப்புக்களும் பொருள் இழப்புக்களும் மட்டிட முடியாத அளவு விசாலமானவை. கலவரங்கள் காரணமாக குறிப்பிட்ட தொகையினர் மரணித்த போதிலும் சாகாமல் வாழ்வதற்கு சிலருக்கு அதிஷ்டம் கிட்டியது. எனினும், பின்னர் அவர்கள் மனதளவால் கொல்லப்பட்டனர். இந்த ஒழுக்கமில்லாத செயற்பாடுகள் காரணமாக சமூகம் மாத்திரமன்றி அரசியல், மதம், கலை என்ற அனைத்துமே விகாரமாகிவிட்டது. பொதுச் சொத்துக்களை கொள்ளையிடுவது ஆட்சியாளர்களின் ஒரு முக்கியமான பன்பாக மாறியதும் பாரிய அளவில் ஊழல்கள் இடம்பெற்றதும் நீண்டகாலமாக நாட்டில் ஒழுக்கமற்ற சூழல் காணப்பட்ட காலப்பகுதியிலாகும். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டை மீள்கட்டமைக்காததன் விளைவாக இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றது எனலாம்.

தேசிய ஒருமைப்பாடு

இனம், மதம், சாதி போன்ற வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் கலவரங்கள் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. அவ்வப்போது இன மத சாதி அடிப்படையிலாக ஏற்பட்ட கலவரங்களை அடக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கான நிலையில் நவீன இலங்கை கட்டியெழுப்பப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான தீர்வுகள் காணப்படாமல் நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியாது. இவ்வாறான நிலையில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என்பன வெவ்வேறு அடிப்படைகளில் தீர்வுகளைக் கண்டுள்ளது. ஆனால், மேற்படி நிலையின் பாதகமான தன்மைகளைக் கூட புரிந்துகொள்ள முடியுமான நிலையை இலங்கை இன்னும் அடையவில்லை.

கலவரங்கள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு இடம்கொடுக்காத அடிப்படையிலான சூழல் அமையும் போது மாத்திரமே ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் காணப்படும். பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில் பயத்துடன் இருப்பவர்கள் வியாபாரங்களுக்காக முதலீடுகள் மேற்கொள்ளமாட்டார்கள். சமாதானமான சூழலும் அரசியல் ஸ்தீரத்தன்மையுமுள்ள நாடுகளுக்கு மாத்திரமே வெளிநாட்டவர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையை ஆபத்தான நாடாகவே கருதுகின்றனர். ECD அபாயச் சுட்டியின் அடிப்படையில் இலங்கைக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 6 ஆகும். முன்னர் இருந்த நிலை கூட 6 ஆகும். இலங்கையை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றிருப்பது அப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மாத்திரமாகும். அந்த இரண்டு நாடுகளின் புள்ளிகள் 7 ஆகும். புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை மற்றும் மியன்மார் என்பன ஒரே நிலையில் காணப்படுகின்றன. சிங்கப்பூர் 0.0 ஆகும். இந்தியா, பிலிபெய்ன், தாய்லாந்து போன்ற நாடுகள் ஒரே நிலையில் காணப்படுகின்றன (3.3).

அபாயச் சுட்டியானது கூடிய அளவில் இருக்கின்ற நாடுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதில்லை. 2016ஆம் ஆண்டின் வெளிநாட்டு முதலீட்டு வரவு 9.7 பில்லியன் டொலர்களாகும். 2016 ஆம் ஆண்டில் மற்றைய நாடுகளின் வெளிநாட்டு முதலீட்டு விபரங்கள் வருமாறு. தென் கொரியா 185.0, ஹொங்கொங் 1698.8, தாய்வான் 75.0, தாய்லாந்து 188.7, மலேசியா 121.6, சிங்கப்பூர் 1096.3. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீடுகள் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றன. இலங்கை என்பது வெளிநாட்டு முதலீடுகள் பெறத்தக்க ஒரு நாடாகும். இலங்கையின் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இனங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அபாய சுட்டியினை குறைக்க முடியுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு அது காரணமாக அமையும்.

தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் ஊழல்

இலங்கை இப்படியானதொரு பின்னடைவை அடைவதற்கு ஊழல் தலைக்கு மேலாக வளர்ந்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாக கருதலாம். அதிகார பிரமிட்டில் மேல்ப் பகுதி ஊழல் மிக்கதாக காணப்படுகின்றது. ஊழல் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருப்பதற்கான காரணமும் அதுவே. ஊழல் தொடர்பான சர்வதேச தரப்படுத்தலில் குறைந்த ஊழல் காணப்படுகின்ற நாடாக இருப்பது டென்மார்க்காகும். நியூசிலாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதுடன் பின்லாந்து, சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து ஆகியன மூன்றாவது இடத்தில் இருக்கின்ற நாடுகளாகும். இந்தத் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை 89ஆவது இடத்தில் இருக்கின்றது. முன்னர் அதிக ஊழல் உள்ள நாடாக கருதப்பட்டுவந்த ஹொங்கொங் தற்போது 14 வது இடத்தில் இருக்கின்றது.

சட்டத்துக்கு முரணாக பொருளீட்டுவதானது அரசியல்வாதிகளின் பண்பாக மாறியது 1997ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியிலாகும். அது திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஒன்றாக கருத முடியாது. ஊழல் குறைந்த நாடுகளாகக் கருதப்படுகின்ற டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுவது திறந்த பொருளாதார முறையாகும்.

1970 ஆண்டு வரை இலங்கையின் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களிடம் குறைகள் காணப்பட்ட போதிலும் அவர்களது அதிகாரங்கள் முறையற்ற விதத்தில் பொருளீட்டுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு முரணாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடபடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இலங்கையில் இருந்துவந்த இந்த நடைமுறையானது தலைகீழாக மாற்றப்பட்டது ஜனாதிபதி ஜயவர்தனவினாலாகும்.

தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையற்ற விதங்களில் பொருளீட்டுவதற்கு இடமளிக்கும் அமைப்பிலான நடைமுறையொன்றின் ஊடாக அவர்களை கட்டுப்படுத்தும் இயலுமை ஜனாதிபதி என்ற அடிப்படையில் தனக்கு கிடைக்கப்பெற்று அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான தேவைகள் ஏற்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கேற்ற வகையில் செயற்படுவார்கள் என்பதாக ஜயவர்தன எண்ணியிருந்தார் என்பதாகத் தெரிகின்றது. அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டது இதன் பிரதிபலனாலாகும். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் அந்த அலங்கோலமான முறைக்கு இன்னும் பல பகுதிகளைச் சேர்த்து இன்னும் அசிங்கப்படுத்தி அவர்களும் அதனைப் பயன்படுத்திக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களாக மாறியிருக்கின்றனர். சிலர் அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொண்ட தோட்டங்கள் ஊடாக தோட்ட உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். இன்னும் சிலர் அரசாங்கத்துடன் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுகின்ற ஒப்பந்தக்காரர்களாகியிருக்கின்றனர். இன்னும் சிலர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட மதுபான வியாபாரிகளாவர். இன்னும் சிலர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட கல் மணல் வியாபாரிகளாவர்.

தேர்தல்களுக்காக 197​ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த செலவுக் கட்டுப்பாட்டு சட்டம், தேர்தலுக்கான செலவுகள் குறித்து கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் முறைகள் என்பன நீக்கப்பட்டுவிட்டன. சில தேர்தல்கள் செலவுகள் உயர்ந்த போட்டிகளாக மாறிவிட்டன. அனைத்துப் போட்டிகளிலும் விலையுயர்ந்த போட்டியாக ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதற்கான செலவுகளைத் தேடிக்கொள்வதற்காக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் உதவியினால் ஜனாதிபதியானவர்கள் தமக்கு உதவியவர்களுக்கு பிரதி உபகாரமாக வேறு முறைகளில் அனுசரணை வழங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த ஊழலான செயன்முறை அனைத்துத் துறைகளையும் பாதிப்புக்குள்ளாக்குவதுடன் ஊழலை கட்டுப்படுத்தவே முடியாத நிலைக்கும் காரணமாக அமைகின்றது.

கடவுச் சீட்டு வழங்குகின்ற நிறுவனத்திடமிருந்து பணத்துக்காக போலி கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியுமான நிலை காணப்படுகின்றது. தேசிய அடையாள அட்டை வழங்குகின்ற நிறுவனத்திடமிருந்து பணத்துக்காக அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடிகின்றது. தேசிய அடையாள அட்டை வழங்குகின்ற நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எல்.டீ.டீ.ஈக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தேசிய அடையாள அட்டையினை விநியோகித்ததமையை குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர். அரச வரி சேகரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே ஊழல் மிக்கதாகவே காணப்படுகின்றன. பதிவாளர் நாயகம் நியூஸ் பெஸ்ட் செய்திகளுக்காக வழங்கியிருக்கும் செவ்விக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்ற காணி உறுதிகளில் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வீதமானவை போலி உறுதிகளாகக் கருதப்படுகின்றன. பாடசாலை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படுகின்ற பதிவுச் சான்றிதழ்களில் பாரிய தொகை போலியானவை என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

நாட்டின் நிறுவன முறைகளில் காணப்படுகின்ற அழுகல் நிலையை வெற்றிகொள்ளாத நிலையில் இலங்கையை முன்னேற்றப்பாதையில் எவ்வாறு தான் நகர்த்தமுடியும்.?

விக்டர் ஐவன்

අර්බුදයේ අත්තිවාරම් என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் வெ ளிவந்த கட்டுரை. தமிழில் மொழியாக்கம் செய்தவர் ராஃபி சரிப்தீன்.