பட மூலம், The New Humanitarian

பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது.

கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும் தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்திருந்தன. ஆயினும், இதன் பின்புலத்தில் வகுக்கப்பட்ட இராஜதந்திர நகர்வுகளும் இவற்றுக்கு மேலால் நடத்தப்பட்ட உரிமைப் போராட்டங்களும் எமது இருப்புகள் தொடர்பாகத் தெளிவான ஒரு செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு கற்றுத்தந்துள்ளன.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்குத் தமிழ் இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதாக உரிமை கோரும் தமிழ் அரசியல்க் கட்சிகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அவை அனைத்தும், ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் அறிக்கைகளையும் அதற்கும் மிஞ்சிய முறையில் முட்டிமோதிக் கொண்டும் உள்ளன.

கடந்த கால வரலாற்றில், தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொள்பவைகள், காலத்துக்குக் காலம் ஆட்சிபீடம் ஏறும் பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளன. ஆனால், அதனால் சாதித்தவைகள் எதுவும் இல்லை; இழந்தவைகளே அதிகம்.

இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள், கடந்த சில வாரங்களாகக் கூப்பாடு போட்ட நிலை மாறி, இன்று திடீரென “தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளிப்படையாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும் என்று வாக்குறுதி தந்தால்தான் ஆதரவு” என்றும் வாய்கிழியப் பேசியும் அறிக்கையும் வெளியிட்டும் வருகின்றார்கள்.

இன்று, திடீரென உயர்கல்விப்புலம் சார் மாணவ அமைப்புகளின் அழைப்பின் பேரில் ஒன்றிணைந்து, தேர்தலைப் பகிஷ்கரிப்பது; ஐ.தே.கவை நிராகரிப்பது; பொதுஜன பெரமுனவை வெல்ல வைப்பது என்ற சிக்கல் நிலைக் கருத்தாடல்களும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கருத்துகளை மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தும் அமைப்புகள் எந்த அடிப்படையில், எவர் ஆலோசனையில் இத்தகைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றார்கள், இந்த அமைப்புகளின் பின்புலத்தில் நிற்பவர் யார் என்பதையும் தமிழ்த் தேசியத்துக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் இதயசுத்தியுடன் வெளிப்படுத்த வேண்டும்.

ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என விடுதலைப் போராட்டத்தை விமர்சித்த நபர்கள் எல்லோரும், இன்று மாணவர் அமைப்பின் முடிவுக்குக் கட்டுப்பட முனைவது வேடிக்கையாகவே தெரிகின்றது.

தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த, கட்சிகள் சார்ந்த உறுப்பினர்கள், தங்கள் சுயநல அரசியல் காரணங்களுக்காக, இந்த முடிவுகளின் நிமித்தம், எதிர்காலத்தில் நிகழவிருக்கும் எதிர்வினைகளை மக்களே அனுபவிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்தறுவாயில், இத்தகைய சுயநல அரசியல்வாதிகள், தாங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்கள் இலாப நட்டங்களைச் சரி பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு மூலோபாயமாகவே, இத்தகைய நடவடிக்கையின் சார்பான கருத்து வெளிப்பாடுகள் புடம் போட்டுக் காட்டுகின்றன.

ஏனெனில், கடந்த கால வரலாற்றில் தமிழினம், புலிகளின் பலத்தோடு பேரம்பேசும் சக்தியாக இருந்த காலத்தில் எடுத்த தேர்தல் பகிஷ்கரிப்பு முடிவானது, தமிழினத்தை அழித்து மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த இருள் சூழ்ந்த காலத்திலிருந்து மீள முடியாத ஒரு சூழலில், 10ஆண்டு காலத்துக்குள் மீண்டும் அத்தகையதொரு முடிவானது, தமிழினம் பேரம் பேசும் எந்தவித சக்தியும் சர்வதேச ஆதரவும் மிகமிக நலிவடைந்த காலத்தில் முன்னெடுக்க முனைவது என்பது, போரின் விளைவுகளின் துயரங்களிலிருந்து மீட்சி பெறாத தமிழினத்தை இன்னும் ஓர் இருண்ட யுகத்துக்குள் தள்ளிவிடும் பேராபத்தான படுகுழி அரசியல் நிலைக்கு இட்டுச்செல்லும். தூர சிந்தனையற்ற உள்ளூர், வெளியூர், இராஜதந்திரம், புத்தி சாதுரியமற்ற இழி அரசியல் முடிவாகவே இதைத் தமிழ் மக்கள் நோக்குகின்றனர்.

அரசியல் உரிமைகளில் வாக்குரிமை மிகப் பிரதானமானது. இலங்கை அரசியல் யாப்பின் முதல் அத்தியாயத்தின் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளைத் தாமாகவே மறுக்கும் மறுதலைச் சிந்தனை என்பதும் தமக்குரிய பிரஜாவுரிமை அந்தஸ்தைத் தாரைவார்க்கத் துணியும் மிக மோசமானதோர் அறிவியல் பூர்வமற்ற, அடிப்படை அரசியல் தெளிவற்ற குழந்தைத்தனமான முடிவை, தமிழ் மக்களை எடுக்கும் படி பணிப்பதும் தூண்டுவதுமான இந்த முடிவென்பது, ஒரு தற்கொலை அரசியல் செயற்படாகவே பார்க்க வேண்டியுள்ளது.

நாம் எதைச் செய்கிறோம்; எவ்வாறு செய்கிறோம்; எதற்காகச் செய்கிறோம்; ஏன் செய்கிறோம் என்ற தூர நோக்குடைய சிந்தனையற்ற இத்தகைய முடிவுகள் கடந்த கால வரலாற்றில் கற்றுக்கொண்ட எந்தவொரு பாடத்தையும் இவர்களுக்கு நினைவூட்டவில்லையா? அல்லது இத்தகைய முடிவுகளை எடுத்தவர்களுக்கும், அதற்கு ஆதரவாக நின்று செயற்படுபவர்களுக்கும், துணைபோகும் இச்சக்திகளுக்கும் இவை பற்றிய தெளிவில்லையா? அல்லது அவர்கள் இந்த வரலாற்றுக் காலத்தை அறியாதவர்களா என்ற வினாக்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் முகிழ்ந்துள்ளன எனலாம்.

இவற்றுக்கு மேலாக மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை பகிஷ்கரிக்கும்படி தூண்டுவது என்பது அவர்களுக்கு இத்தீவில் கிடைத்த அதிகுறைந்தபட்ச உரிமையையும் விட்டுக் கொடுக்கும் அல்லது இல்லாதொழிக்கும் நடவடிக்கை எனலாம். இதை மறுவாசிப்பு செய்தால் பிரஜாவுரிமை அந்தஸ்தற்ற நாடற்றவன் என்ற சிங்கள பெருந்தேசியவாத சிந்தனைக்கு ஒத்தூதும் சக்திகளாக இவர்களைத் தமிழ் மக்கள் ஏன் நோக்க முடியாது.

தமிழர் தம் வாக்குகளை நிராகரிப்பது என்பது வேறு; வாக்களிப்பை பகிஷ்கரிப்பது என்பது வேறு. எனவே பகிஷ்கரிக்கும்படி கோர எவருக்கும் உரிமை இல்லை; நிராகரிக்கும் படி கோர உரிமை உண்டு. ஆனால், இந்த நிராகரிப்புகளால் இத்தீவின் வரலாற்றுப் புலத்தில் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதும் சர்வதேச நிலைமைகள், இந்திய அரசின் சமிக்ஞையின்றி இதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதும், தற்கால அரசியல் நிகழ்வுகள் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன, காட்டிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு நிலையில், இலங்கை வரலாற்றின் அதிகப்படியான அதாவது, 35 வேட்பாளர்கள் போட்டியிடும் களத்தில் ஐ.தே.க., பொதுஜன பெரமுன இடையே கடும் போட்டி நிகழவிருக்கிறது. இது, காலம் காலமாக இலங்கை வரலாற்றில் இவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது. ஆயினும், காலத்துக்குக் காலம் ஆட்சி மாறினாலும் கட்சிகள் ஒருபோதும் மாறவில்லை; மாறப் போவதுமில்லை.

இந்த வகையில் இன்றைய தமிழினத்தின் இருப்புகள் தற்சார்பு அரசியலே! எனவே, இணக்க அரசியலுக்குச் செல்ல வேண்டும்; இல்லையேல் நாம் தொடர்ந்தும் இதே துயரத்தைத்தான் அடுத்த சந்ததிக்கும் வழங்கவேண்டும். மாறாக, எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற  நம்பிக்கை இருக்குமானால் அது, இந்தியக் கண்டத்தில் இந்தியா என்ற நாடு இருக்கும் வரை, ஈழத் தமிழினத்துக்குக் கிடைக்கும் தீர்வு, 1987இல் கிடைத்த இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றே. அதை மிஞ்சி இங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதே, தற்கால அரசியல் சூழ்நிலைகளும் கடந்தகால அரசியல் வரலாறும் கற்றுத்தந்த பாடங்கள் ஆகும்.

இந்த அரசியல் நிலைமை என்பது, சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகளுக்கும் புரியும்; தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியும்; புலம்பெயர் தமிழர்களுக்கும் புரியும்.

ஆயினும், விடுதலையின் பெயராலும் போரில் பாதிக்கப்பட்ட தமிழரின் பெயராலும் தங்கள் சுயநல அரசியலை நடத்தத் துணிந்தவர்களுக்கு இவற்றைப் புரிந்துகொள்ளும் தன்மை, அறிவு நிலையிலோ அரசியல் அனுபவத்திலோ இல்லை என்பதே உண்மை.

எனவேதான், தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற பிற்போக்குத்தனமான அரசியல் ஞானமற்ற, தமிழினத்தை ஒரு தேச விரோத சக்தியாக, இனவாத சக்தியாக, சிங்கள இனத்துக்குக் காட்டும் முயற்சியாகவே இது அமையும்.

எனவே, தமிழினத் தமிழ் மக்கள், தாமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் அழித்து, பகிஷ்கரிப்பு கருத்தாடல் கருத்துரைக்கும் சக்திகள் மௌனமாக இருப்பதே தமிழினத்தை இன்றைய சூழலில் காப்பாற்றும்.

இதுவே ஈழத்தமிழ் மக்களின் மன வெளிப்பாடுமாகும். இது சாத்தியப்படுமா? ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரும் இத்தகையவர்களின் தமிழ் மக்களுக்கான  தெளிவான பதில் என்ன?

இலட்சுமணன்

ஆசிரியர் குறிப்பு: ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையை நன்றியுணர்வுடன் இங்கு பகிர்கிறோம்.