பட மூலம், Motherhoodandmore

பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை ஊட்டுபவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால், இந்த அச்சத்தைப் பரப்பி வருபவர்கள் அந்தக் குழுக்களை இஸ்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசும் கணத்தில், அவர்கள் மிகவும் அழிவுகரமான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரில் செயற்பட்டு வரும் அதி தீவிர சிறுபான்மைக் கூறொன்றான IS தீவிரவாத அமைப்பின் கொடூரமான செயல்கள் காரணமாக, உலகெங்கிலும் நூறு கோடிக்கு மேல் விசுவாசிகளைக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்தமான ஒரு சமயக்குழுவினர் மீது ‘அபாயகரமானவர்கள்’ என்ற லேபள் குத்தப்படுகின்றது.

எந்தவொரு நபரையும் ஹிட்லருடன் அல்லது நாஸிசவாதிகளுடன் ஒப்பிடுவது மிகைப்படுத்திக் கூறுவதாக இருந்து வருவதாக நான் பொதுவாகக் கருதுகின்றேன். ஆனால், இன்று நான் அவ்வாறு உணரவில்லை. ஊடக மேதாவிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாதாரண நபர்கள் ஆகியோர் இப்பொழுது முஸ்லிம்கள் தொடர்பாக முன்வைத்து வரும் ஒரு சில கூற்றுக்கள், யூதர்களுக்கு எதிராக நாஸிசவாதிகளால் முன்வைக்கப்பட்ட அச்சமூட்டும் கூற்றுக்களை நினைவூட்டுகின்றன.

ஹேர்மன் கோரிங் அதி உயர் மட்ட நாஸிசவாதிகளில் ஒருவராக இருந்து வந்ததுடன், இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் கூட்டுப் படைகளினால் அவர் பிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். “போர்க் குற்றங்கள்”, “சமாதானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்” மற்றும் “மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்” என்பன தொடர்பாக நூரம்பேர்க் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்மானித்ததுடன், அவருக்கு மரண தண்டனையையும் வழங்கியது.

“நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் அவர்கள் தாக்கப்படுகின்றார்கள் எனக் கூறுவதும், சமாதானத்திற்காக குரலெழுப்பும் தேசத்துரோகிகளை கண்டிப்பதும், நாட்டை ஆபத்துக்குள் தள்ளி விடுவதும் ஆகும். இந்த நடைமுறை எந்த ஒரு நாட்டிலும் இதே விதத்திலேயே செயற்படுகின்றது.”

– ஹேர்மன் கோரிங், நூரம்பேர்க் போர்க்குற்ற விசாரணைகளின் போது வழங்கிய ஒரு     நேர்காணலில் (ஏப்ரல் 18, 1946)

மேலே காட்டப்பட்டிருக்கும் மேற்கோள் வாசகங்கள் பிரபல்யமான உளவியலாளர் ஒருவருடன் நடத்தப்பட்ட தனிப்பட்ட சாம்பாஷைணையின் அடிப்படையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு விபரணத்திலிருந்து பெறப்பட்டதாகும். அந்த சம்பாஷைணையில் “மக்களை எப்போதும் எவ்வாறு தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முடியும்;” என்பதனை கோரிங் எடுத்து விளக்குகின்றார்.

ஹிட்லரும், நாஸிசவாதிகளும் முதலில் பல இலட்சக்கணக்கான யூதர்கள் மீது விஷவாயுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் யூத இன அழிப்பை ஆரம்பிக்கவில்லை என்ற விடயத்தை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உண்மையிலேயே யூத இன அழிப்பு வார்த்தைகளின் மூலமே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லரும் நாஸிசவாதிகளும் ஏற்கனவே மக்கள் மத்தியில் நிலவி வந்த யூத எதிர்ப்புணர்வை தமக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். அச்சத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் தூண்டுவதன் மூலமும், யூத மக்கள் குறித்த பொய்யான அல்லது பிழையாக வழி நடத்தக்கூடிய தகவல்களை  (பிரச்சாரங்களை) பரப்புவதன் மூலமும் இதனை அவர்கள் செய்தார்கள். ஜேர்மனிய மக்களின் தேசாபிமானத்தை அவர்கள் தந்திரமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டதுடன், அவர்களுடைய அச்சம் மற்றும் அற உணர்வு என்பவற்றை மேலும் தூண்டினார்கள். யூதர்களை உத்தியோகபூர்வமாக அடையாளங்கண்டு, பாதுகாப்பை ஒரு சாக்காக வைத்து, அவர்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் நசுக்குவது “உலகில் செய்ய வேண்டிய மிகவும் தர்க்கரீதியான மற்றும் நியாயமான ஒரு காரியமாக இருந்து வருகின்றது” என்பதனை அவர்களை உணரச் செய்தார்கள். யூதர்களுக்கு எதிராகவும், ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எனக் கருதப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் – ஜேர்மனிய வாழ்க்கை முறைக்கு அவர்கள் திட்டவட்டமான ஓர் அச்சுறுத்தலை விடுத்து வந்த காரணத்தினால் – வெற்றிகரமான விதத்தில் அடக்குமுறையும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இது ஒரு நீண்ட விளையாட்டாக இருந்து வந்தது. ஹிட்லர் பல வருட காலம் தனது ஆதரவாளர்களைப் பொறுத்து யூத எதிர்ப்பு செயற்பாட்டை ஒரு சந்தர்ப்பத்தில் உச்ச மட்டத்திலும், வேறு சந்தர்ப்பங்களில் தாழ்ந்த மட்டங்களிலும் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். நீண்டகாலமாக வன்மம் மற்றும் அச்சம் என்பவற்றை ஒவ்வொரு துளியாக இடையறாத மக்களுக்கு ஊட்டுவதன் மூலம் அவர் தனது நாட்டு மக்களின் மனித நேயத்தை அழித்தொழித்தார். இதில் முற்றாக மூழ்கிப் போவதற்கு அவர் அவர்களுக்கு போதிய கால அவகாசத்தையும் வழங்கினார். யூதர்கள் மீது பழி சுமத்தக்கூடிய விதத்தில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளின் நீண்ட பட்டியல்களை அவர் மெதுவாக ஒன்றுதிரட்டி வந்தார்.

யூத இன அழிப்பு, பல்லாண்டு காலம் அந்நாட்டில் இடம்பெற்று வந்த சொற்போர் மற்றும் பிரச்சாரம் என்பவற்றுடன் இணைந்த விதத்திலேயே ஆரம்பமாகியது. அது பெருமளவுக்கு பாதுகாப்பு மற்றும் பத்திரம் என்பவற்றின் பெயரில் வன்மத்துக்கும், அடக்குமுறைக்கும் வழிகோலியது.

அதன் பின்னர் தடுப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டன.

அதனையடுத்து விஷவாயுக் கூடங்கள் எடுத்து வரப்பட்டன.

மேலும், அத்தகைய காரியங்களை பார்த்து சாதாரணமாக திடுக்கிடக்கூடிய கண்ணியமான மனிதர்கள், நாட்டில் நடப்பவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதும், பிரச்சாரமும் இதே காரியத்தையே செய்கின்றன. அதன் காரணமாக, அத்தகைய  செயற்பாடுகளை பார்க்கும் பொழுது, நாங்கள் அவற்றை சரியான பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இஸ்லாமிய எதிர்ப்பு இணையதளங்களிலிருந்து அல்லது மூலங்களிலிருந்து நீங்கள் இஸ்லாம் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொண்டால் அல்லது குடியேற்றவாசிகளுக்கு எதிரான இணையதளங்களிலிருந்து அல்லது மூலங்களிலிருந்து குடியேறிகள் அல்லது அகதிகள் குறித்த தகவல்களை நீங்கள் பெற்றுக்கொண்டால் ஒரு நிமிடம் நின்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து வந்தால், உண்மையான கிறிஸ்தவம் எது என்பதனை தெரிந்து கொள்வதற்காக ஒருவரை கிறிஸ்தவத்திற்கு எதிரான இணையதளமொன்றுக்கு அனுப்பி வைப்பீர்களா? யூத மதம் குறித்து கற்றுக்கொள்வதற்காக நீங்கள் ஒருவரை யூத எதிர்ப்பு இணையதளம் ஒன்றுக்கு அனுப்பி வைப்பீர்களா?

என்னால் மிக எளிதில் பைபிலிலிருந்து வாசகங்களை எடுத்து, கிறிஸ்தவ பயங்கரவாதக் குழுக்களின் அல்லது தனிநபர்களின் வன்முறை மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்த கதைகளுடன் அவற்றை பொருந்திக் காட்ட முடியும் (ஆம், அத்தகைய கிறிஸ்தவ பயங்கரவாதக் குழுக்கள் இருந்து வருகின்றன் கூகலில் தேடிப் பாருங்கள்) அல்லது கிறிஸ்தவர்கள் உலகத்தை கைப்பற்றி, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களை கொலை செய்து, பெண்களை அடிமைப்படுத்தி, கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகளை கல்லடித்துக் கொன்று, அனைவரையும் பலவந்தமாக தமது நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யத் தூண்டும் ஒரு இணையதளத்தை  மிக எளிதாக என்னால் ஆரம்பிக்க முடியும். அந்த இணையதளம் கிறிஸ்தவ சமயம் குறித்து கற்றுக்கொள்வதற்கு மிகப் பொருத்தமான ஒரு இடமாக இருந்துவர முடியுமா? சமயம் குறித்து நான் அறிந்து வைத்திருக்கும் அனைத்து விடயங்களும் வன்முறையாக இருந்து வந்தால், தீவிரதவாதக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் அனுப்பி வைக்கும் செய்திகளிலிருந்தே அவற்றை நான் பார்த்திருப்பேன்.

உண்மையிலேயே அப்படி இல்லை. அது மிக மோசமான ஒரு பிரச்சார வடிவமாக இருந்து வருவதுடன், பெரும்பாலான கிறிஸ்தவ மக்கள் நம்புவதிலும் பார்க்க,  முற்றிலும் பொய்யான ஒரு சித்திரத்தை உருவாக்கிக் காட்ட முடியும். ஆனால், இஸ்லாம் குறித்து தாம் மக்களுக்கு கல்வியூட்டுவதாகக் கூறிக் கொள்ளும் பல இணையதளங்கள் அவ்விதமான காரியங்களையே இப்பொழுது செய்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் இதனை இன்னமும் புரிந்து கொள்ளாதிருப்பது மிகவும் அச்சமூட்டுவதாக இருந்து வருகின்றது.

நாங்கள் இதற்கு முன்னரும் இதனைப் பார்த்திருக்கின்றோம். அதன் காரணமாக நாங்கள் வரலாற்றை படிக்கின்றோம். மனிதகுல வரலாற்றின் மிகக் கொடூரமான கதைகளிலொன்று எவ்வாறு நிகழ்த்திக் காட்டப்பட்டது என்பது குறித்த அனைத்துத் தகவல்களும் இப்பொழுது எம்மிடம் இருக்கின்றன. அத்தகைய ஒரு செயலை மீண்டும் ஒருபோதும் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு நாங்கள் மனச்சாட்சி மிக்க மக்களாக இருந்து வர வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும், பிரார்த்தனையுமாகும்.

ஆசிரியர் குறிப்பு: “The Holocaust Didn’t Begin With the Gassing of Jews. It Began With Prejudice and Propaganda” என்ற தலைபில் அன்னி ரேனோ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.