படம் | Jera

“நீங்க அங்க போங்கம்மா…” பட்டியலிடப்பட்ட கேள்விகளை கேட்டு தீர்த்ததன் பின்னர் தாயொருவரை இன்னுமொரு மேசைக்கு ஆணைக்குழுவினர் அனுப்பிவைக்கின்றனர்.

அடுத்து… என்று சொல்லாம் சைகையால் அடுத்தவரை ஆணையாளர் அழைக்கிறார். கண்களில் கண்ணீர் நிறைந்து, முகம் முழுவதும் சோகம் கவ்வியிருந்த தாயொருவர் உள்ளே நுழைகிறார்.

“இங்க உட்காருங்கம்மா… சிவப்பா லைட் எரியுது, அந்த இடத்துல பேசுங்க” என்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

கேள்விகள் அந்த அம்மாவை நோக்கி வீசப்படுகின்றன. “உங்க பெயர்? யார் காணாமல்போனது? (காணாமல்தான் போயுள்ளார் என இவர்களே தீர்மானிக்கிறார்கள்) எங்கு வைத்து? எத்தனை வயது? ஏதாவது அமைப்புகளில் இருந்தவரா? நீங்கள் இப்போ எவ்வாறு சீவிக்கிறீர்கள்? இராணுவம் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கிறதா? ஏதாவது தொந்தரவு செய்கிறார்களா அல்லது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்களா?

செய்தியாளர்கள், சிவில் சமூகத்தவர்களுக்காக தனியொரு அறை ஒதுக்கப்பட்டு அங்கிருந்து கண்காணிப்பதற்கும், அவர்கள் பேசுவதை அவதானிப்பதற்குமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. நான் அங்கு இருந்தவாறு குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

பல ஆணைக்குழுக்களை, பிரதிநிதிகளை, பொலிஸ் நிலையங்களை, நான்கு தடவைகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை சந்தித்து தமது உறவுகள் காணாமல்போனமை பற்றி தெரிவித்திருந்த அனுபவம் நாகமணி தியாகராஜா என்ற இந்தத் தாய்க்கு உள்ளதால் இவ்வனைத்து கேள்விகளுக்கஞம் பதில் அளித்தார்.

ஆனாலும், ஆணைக்குழு விசாரணையின்போது அழத்தொடங்கிய அந்தத் தாய், வழங்கும் தகவல்களில் ஏதோ விடுபடுவது போல் எனக்குத் தோன்றியது. எனது நண்பனும் அதையே​ தெரிவித்தான். விசாரணையின் பின்னர் தனியாக அழைத்து கதைக்க நாங்கள் முடிவுசெய்தோம்.

ஆணைக்குழு விசாரணையின் பின்னர் அடுத்த மேசையில் உள்ளவர்களுக்கும் தகவல்களை வழங்கிவிட்டு வெளியே வர, நாங்கள் இருவரும் செய்தியாளர் அறையிலிருந்து அவரை சந்தித்துப் பேச வெளியே வந்தோம். எமக்கு முன்னர் அந்த இடத்தில் இருவர் காத்துக்கொண்டிருந்தனர். கமராவையும் மைக்கையும் பிடித்துக்கொண்டு வந்த செய்தியாளர்கள் இருவர் அந்தத் தாயை அழைத்துக்கொண்டு சென்றனர், இன்டர்வியூவ் எடுப்பதற்காக.

அவர்களும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள், ஒவ்வொருவராக ஒரே விஷயத்தையே கேட்பார்கள், கிட்டத்தட்ட நாங்களும் அதைத்தான் கேட்கப்போகிறோம், நாங்களும் அவரை அழைத்து கஷ்டப்படுத்துவது சரியா என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பன் எனது முகத்தைப் பார்க்க அவனுள்ளும் அதே வெளிப்பாடு – உணர்வு இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இருந்தாலும் உண்மைத் தகவலைப் பெற்றுக்கொள்வதற்காக அவரை சந்தித்து பேச முடிவுசெய்தோம்.

சரியாக அந்நேரம், மதிய உணவிற்காக ஆணைக்குழு விசாரணையும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கமராவில் அந்தத் தாயின் மனக்குமுறலை பதிவுசெய்துவிட்டு விடுவிக்க, தயக்கத்துடன் நாங்கள் இருவரும் அவரை அணுகினோம். “அம்மா உங்களோட கொஞ்சம் பேசனும். வாறீங்களா?” என அழைத்துக் கொண்டு நாங்கள் இருந்த அறைக்கு வந்தோம். அந்த நேரத்தில் அறையில் எவரும் இருக்கவில்லை. நாங்கள் இருவரும் அவருக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டோம். நடந்ததை சொல்லத் தொடங்கினார்.

“எனது கணவர் தியாகராஜா, முல்லைத்தீவு வலய பிரதி கல்விப் பணிப்பாளர். எனக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும். இறுதி யுத்த காலப்பகுதியில் எனது இரண்டாவது மகனான தியாகராஜா பிரதாப்பை (வயது – 20) விடுதலைப் புலிகள் பிடித்துக்கொண்டு சென்றனர். அந்தநேரம் அவர் மொறட்டுவை பல்கலைக்கழத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். புலிகள் பிடித்துக்கொண்டு போய் 15 நாட்களில் அவரது சடலத்தைக் கண்டோம்.”

“அதன் பின்னர் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிடுவோம் என்ற பயத்தில் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அவர்களை அனுப்பிவிட முடிவுசெய்தோம். கணவர், எனது இரு பிள்ளைகளையும் 4.4.2009 அன்று இரவு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பினேன். அவர்களை இராணுவப் பகுதிக்கு அழைத்துச் செல்ல, ஒரு குழுவினர் ஆளுக்கு 20 ஆயிரம் ரூபாய்கள் வீதம் பணம் பெற்றுக் கொண்டனர். அவர்களே சாலை – மாத்தளன் கடல் வழியாக என் கணவர் உட்பட்டவர்களை அழைத்துச் சென்றனர். அன்று இரவே, எனது கணவர், மகன் உட்பட்டவர்களை இராணுவ பகுதிக்குள் அனுப்பினர் எனவும் சொன்னார்கள்.

நானும், மகளும் இப்போது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. சரணடையும் பெண்கள் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என கதைகள் வந்தன. எனவே, நான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே மகளுடன் இருந்தேன்.

மே.17 இல் போர் முடிந்ததும், நான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மகளுடன் வந்து, இராமநாதபுரம் நலன்புரி நிலையத்தில் தங்கினேன். அங்கிருந்து கொண்டு, என் கணவரையும், மகன்மாரையும் தேடத் தொடங்கும்போது, அந்தச் சம்பவம் நடந்தது.

2009 ஜூன் மாதம் 6,7, அருணாசலம் முகாம் இருந்தபோது எங்களது உறவினர் ஒருவர் இறந்தார். அவரை அடக்கம் செய்ய முகாமில் இருந்து வெளியில் வந்தபோது, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தயசீலன் என்ற கிராம சேவகரை சந்தித்தேன். கணவரை வவுனியா வைத்தியசாலையில் கண்டதாகச் சொன்னார். எங்கேயோ என்னவர்கள் இருக்கின்றனர் என்கிற நம்பிக்கை எனக்குள் பிறக்கத் தயாரான நிலையில், கிராமசேவகர் தொடர்ந்து பேசிய வார்த்தைகள் பயத்தை ஏற்படுத்தின.

“ஏன் சார் இங்க இருக்கீங்க என்று கேட்டேன்”

“உள்ளே மகன் இருக்கிறார். மிகுதிக் கதைகளைப் புலம்பினார். அந்த நேரத்தில் உங்கள் கணவர் சித்தம் கலங்கியிருந்தார். நெஞ்சளவுக்கு தாடி வளர்த்திருந்தார். அதற்குப் பிறகு எதுவும் கதைக்காமல் வைத்தியசாலையின் உள்ளே சென்றுவிட்டார்”

”அவர் பற்றி நான் அறிந்த கடைசிச் செய்தி இவை மட்டும்தான்.”

“கணவரும் பிள்ளைகளும் வீடுவந்து சேராத நிலையில், மகளையும் படிக்கவைக்க முடியாமல் கஷ்டத்தில் இருந்த நான், கணவரின் மாத வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்கு முன்னர் வந்திருந்த நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விஷயத்தை தெரிவிக்க, அவர்கள் கணவருக்கான மரணசான்றிதழை எடுக்குமாறு என்னிடம் தெரிவித்தனர். அவ்வாறு எடுத்தால்தான் பென்ஸன் எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.”

“கணவரை நான்தான் அனுப்பிவைத்தேன். வவுனியா வைத்தியசாலையில் அவர் இருக்கிறார் என்றும் கிராமசேவகரின் தகவல்கள் இருக்க, வழியில்லாமல் – வறுமை காரணமாக கணவர் உயிரோடு இருக்க – மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். இப்போது மாதாமாதம் அவரின் பென்ஸன் காசு வந்துகொண்டிருக்கிறது.”

உயிரோடு கணவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் மரணசான்றிதழை பெற்றுக் கொண்டு வாழ்கிறோமே என அந்தத் தாய் அழத்தொடங்கினாள்.

அத்தோடு பேசுவதை நிறுத்திவிட்டு அவருக்கு ஆறுதல் தெரிவிக்கலானோம். வார்த்தைகளால் அல்ல.

நம்பியிருங்கள் அம்மா… நிச்சயமாக உங்கள் கணவரும் மகன்மாரும் வந்துசேருவார்கள் என எங்களால் ஆறுதல் கூற முடியவில்லை. அழுவதை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.

எப்போதாவது கணவரும் பிள்ளைகளும் வந்துவிடுவார்கள் என்று தெரிவித்துவிட்டு எங்களிடமிருந்து விடைபெற்று சென்றார்.

கனத்த இதயத்துடன் நாங்கள் மௌனித்துப் போய் இருந்தோம்.

செல்வராஜா ராஜசேகர்