Photo, Colombo Telegraph

தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன.

இந்த மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கலந்துகொள்வதில்லை. அதன் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ளாதமை பெரும்பாலும் காரணம் காட்ட இயலாததாகும். அவர்கள் கலந்தகொண்டிருக்கமுடியும்; கலந்துகொண்டிருக்கவும் வேண்டும். கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஜே.வி.பியின் செல்வாக்கு கணிசமானளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கருதப்படும் நிலையில் – மாற்று அரசியல் சக்தியாக தங்களை முன்னிலைப்படுத்தி அதன் தலைவர்கள் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வாய்ப்பைத் தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில்​ சர்வகட்சி மகாநாடு போன்ற முக்கிய செயன்முறைகளைப் புறக்கணிப்பது பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டிய பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கு ஒப்பானதாகும் என்று சில அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டினர்.

ஜே.வி.பியின் தலைவர்கள் ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டில் கலந்துகொண்டு அந்த செயன்முறையை ஆட்சேபிப்பதற்கான காரணத்தையாவது விளக்கிக் கூறி தங்களது மாற்று யோசனையை முன்வைத்திருக்கலாம். மாற்றமடைந்திருக்கும் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் தங்களது முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பை அந்தத் தலைவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபா ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும் பதவியில் இருந்து இறங்கியதை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 2019 ஜனாதிபதி தேர்தலிலும் 2020 நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை வலுவிழந்து விட்டது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட ஜே.வி.பி. அந்த நாடாளுமன்றத்தினால் தெரிவான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பதவிக்கு ஒரு நியாயப்பாட்டை கொடுப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக மகாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்திருக்கக்கூடும் என்று வேறு சில அவதானிகள் கூறினர்.

இப்போது அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் யோசனையை ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளியிட்ட பிறகு அதற்குக் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளிடம் இருந்தும் பௌத்த மகாசங்கத்திடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கும் நிலையில் ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டின் அடுத்த சுற்றின் கதி குறித்து சிந்திக்கவேண்டியிருக்கிறது. அவ்வாறு அடுத்த சுற்றைக் கூட்டினாலும் கூட அதனால் எந்தவிதமான பயனுறுதியுடைய விளைவையும் கொண்டுவர முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

முதற்சுற்றில் பங்கேற்ற சில கட்சிகள் இரண்டாவது சுற்றில் பங்கேற்கவில்லை. 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக பேசி வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காதமை குறிப்பிடத்தக்கதாகும். மகாநாட்டில் பங்கேற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் ஜனாதிபதியும் மற்றையவர்களும் பேசுவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இல்லை.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒன்றில் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அதை ஒழித்துவிடவேண்டும்; அதை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எவராவது அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தத்தை தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரலாம். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் போவதில்லை, அதை ஒழிக்கவும் போவதில்லை என்று ஒரு இடைநடுவில் தொடர்ந்து நிற்கமுடியாது என்று கடுமையான தொனியில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இத்தகைய பின்புலத்தில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் யோசனை தொடர்பில் ஜே.வி.பியிடம் இருந்து வெளிவந்திருக்கும் பிரதிபலிப்பு மிகுந்த கவனத்துக்குரியதாகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக 13ஆவது திருத்தம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருப்பதால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய கடந்த வாரம் ‘த ஐலண்ட்’ பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

“அந்தத் திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவுமா என்பது குறித்து எமது கட்சிக்குள் விவாதம் ஒன்று இருக்கிறது. ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதிமொழிகளிலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் அவரது முன்முயற்சிகளிலும் எமக்கு நம்பிக்கை இல்லை.

“இந்தக் கட்டத்தில் எதற்காக அவர் அந்தத் திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் குறித்து பேசுகிறார். அதைச் செய்வதற்கு அவருக்கு தாராளமாக வாய்ப்புக்கள் இருந்தன. அதனால், அவரது உறுதிமொழிகள் வெற்று வார்த்தைகள் என்றே நாம் நம்புகிறோம். முழுமையான நடைமுறைப்படுத்தலை அவர் முன்னெடுக்கப்போவதில்லை” என்றும் கலாநிதி அமரசூரிய கூறினார்.

13ஆவது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக அது முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது ஏற்கெனவே அரசியலமைப்பில் இருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று நாம் நம்புகிறோம். தேசிய இனப்பிரச்சினைக்கு சாத்தியமான ஒரு தீர்வாக அமையமுடியுமா என்பது தொடர்பில் எம்மிடையே ஒரு விவாதம இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் மெய்யான அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. மற்றைய கட்சிகளில் எமக்கு நம்பிக்கையில்லை. தேசிய மக்கள் சக்தியால் அதைச் செய்யமுடியும்” பதிலளித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை அவரிடம் கொடுக்கவேண்டும் என்று பல அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்ற அளவுக்கு ஒரு மதிப்பைப் பெற்றவராக கலாநிதி அமரசூரிய விளங்குகிறார். அவரின் கருத்துக்கு ஒரு கனதி இருக்கிறது என்று நம்பமுடியும். என்றாலும் ஜே.வி.பியின் தலைவர்களிடம் இருந்து இது விடயத்தில் உறுதியான கருத்து வெளிப்படுவதே கூடுதல் நம்பிக்கையை தரும்.

ஜே.வி.பியின் தலைவர் அநுராகுமார திசாநாயக்க மாகாண சபை முறையை தாங்கள் எதிர்க்கப்போவதில்லை என்றும் ஆனால், அரசியல் தீர்வு என்ற பெயரில் தமிழ் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து ஏமாற்ற முயற்சிக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சதிவலையில் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவரிடமிருந்து உறுதியான கருத்து வெளிவந்ததாக இல்லை.

கடந்த நூற்றாண்டின் பின் அரைக்கூறில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி. மார்க்சிய – லெனினிச கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கின்ற போதிலும், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் முற்போக்கான கொள்கையை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்று ஒரு வரலாறு இருக்கிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 1957ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜே.வி.பி. இருக்கவில்லை. ஆனால் 1965ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் தாபக தலைவர் ரோஹண விஜேவீர கலந்துகொண்டார்.

அப்போது என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் கழகத்தின் முக்கியமான ஒரு தலைவராக இருந்த விஜேவீர இனவாத நோக்கில் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் உறுப்பினர் எவரும் பங்கேற்கக்கூடாது என்று கட்சி எடுத்த முடிவையும் மீறி பங்கேற்றார் என்பது  குறிப்பிடத்தக்கது.

1971 ஏப்ரல் கிளர்ச்சிக்குப் பிறகு சிறிமா அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்ட ஜே.வி.பி. தலைவர்களையும் உறுப்பினர்களையும் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கம் விடுதலை செய்தது. அதற்குப் பிறகு ஜனநாயக அரசியலில் இறங்கிய போதிலும் ஜே.விபி. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கங்கள் முன்னெடுத்த எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கவில்லை.

1987 ஜூலையில் ஜெயவர்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைச் செய்துகொண்டபோது ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்பட்டபோதிலும், நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தியது. ‘இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு’ எதிராக தீவிரமாக பிரசாரம் செய்த அவர்கள் இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதுடன் சமாதான உடன்படிக்கையை ஆதரித்த சிங்கள அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தனர்.

13ஆவது திருத்தத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளை எதிர்த்த ஜே.வி.பி. அவற்றை நாட்டுப் பிரிவினையை நோக்கிய ஒரு அடியெடுத்துவைப்பு என்று வர்ணித்தது. கிளர்ச்சியை பிரேமதாச அரசாங்கம் கொடூரமான முறையில் ஒடுக்கியது. 1989 நவம்பரில் தலைவர் விஜேவீர கொல்லப்பட்டார்.

அதையடுத்து ஒரு ஐந்து வருடங்கள் உறங்குநிலையில் இருந்த ஜே.வி.பியினர் 1994 பிற்பகுதியில் தொடங்கி ஜனநாயக அரசியலுக்கு வந்தனர். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபைகள் உட்பட சகல தேர்தல்களிலும் அவர்கள் போட்டியிட்டார்கள்.

பிரதமர் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் விடுதலை புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்துகொண்டு நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஜே.வி.பி. முன்னரங்கத்தில் நின்றது. பிறகு சந்திரிகா அரசாங்கத்துடன் அரசியல் கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொண்ட ஜே.வி.பியின் தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், 2004 சுனாமியினால் வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு ஏற்பாடுகள் குறித்து விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்கள்.

2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்கு எதிரான நலைப்பாட்டை பிரதான பிரசாரமாக முன்னிறுத்தி போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்த ஜே.வி.பி. அவரது அரசாங்கத்தில் பங்கேற்காவிட்டாலும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்ட போரை உறுதியாக ஆதரித்தது.

ஜே.வி.பி. இந்தச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்த முயற்சியையும் ஒருபோதுமே ஆதரிக்காத –  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஆதரிக்கின்ற முற்போக்கு சக்திகளுடன் தன்னை ஒருபோதுமே அடையாளம் காட்டக்கொள்ளாத ஒரு அரசியல் கட்சியாக அதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இந்த நேர்மறையான வரலாற்றை மாற்றியமைக்கவேண்டிய காலம் வந்துவிடடது என்பதை ஜே.வி.பி.யின் இன்றைய தலைவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். காலமாற்றம் வேண்டிநிற்கும் அரசியல் கடமையை நிறைவேற்ற அவர்கள் தொலைநோக்குடன் செயற்படக்கூடியதாக துணிவாற்றலை வரவழைத்துக்கொள்ளவேண்டும். இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இனவாத அரசியலும் முக்கியமான ஒரு காரணி என்பதை அவர்கள் சிங்கள மக்களுக்கு விளங்கவைக்கவேண்டும்.

இலங்கை அதன் வரலாற்றில் கண்டிராத பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் காரணமான ராஜபக்‌ஷர்களின் தவறான ஆட்சிமுறைக்கு எதிரான கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியின்போது இனவாத அரசியலின் பாதகங்கள் பற்றிய ஒரு புரிதல் தென்னிலங்கையில் ஓரளவுக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ராஜபக்‌ஷர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பெரிதும் காரணமாக இருந்த கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் அப்போது பதுங்கிக்கொண்டன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்ததை அந்தச் சக்திகளினால் சீரணிக்கமுடியவில்லை. மீண்டும் தலைகாட்டுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றுக்காக அவர்கள் காத்திருந்தார்கள். இப்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க பேசுகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்தக் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் சமூகங்களுக்கிடையில் குரோதங்களை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை படிப்படியாக அதிகரிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலுக்கான சூழ்நிலைகள் தோன்றும் ஆபத்து இருக்கிறது. இது மக்களினால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்‌ஷர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளுக்குமே அனுகூலமாக அமையும்.

அத்தகைய சூழ்நிலை தோன்றுவதைத் தடுப்பதற்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆரோக்கியமான  பிரசாரங்களை முன்னெடுக்கக்கூடிய அரசியல் இயக்கக் கட்டமைப்பு ஜே.வி.பியிடம் இருக்கிறது. பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் எப்போதுமே தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மோசடிகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் மூடிமறைப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ராஜபக்‌ஷர்களின் வீழ்ச்சியை பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் தோல்வியாகவும் நோக்கவேண்டும். அத்தகைய அணிதிரட்டல் சிங்கள மக்களுக்கு எந்த பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்து மக்களை அது நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவந்திருக்கிறது.

அதனால், மீண்டும் நாட்டின் அரசியல் திசைமார்க்கத்தை பேரினவாத சக்திகள் தீர்மானிக்கக்கூடிய நிலைமை தோன்ற அனுமதிக்கக்கூடாது. இதில் ஜே.வி.பி.பெரும் பங்களிப்பைச் செய்யமுடியும்.

வீரகத்தி தனபாலசிங்கம்