Photo, Atlas of Humanity 

இலங்கை தற்போது முன்னொருபோதும் இல்லாத வகையில் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசானது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. எவ்வாறாயினும், இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இப் பொருளாதாரச் பின்னடைவு சூழலில் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு இந்த நாட்டு மக்களுக்கு முறையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல் உள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு வளர்ந்து வரும் குழுக்களிடையே சமூக மட்டததிலான உரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கை பழங்குடிச் சமூகத்தின் குரல் இதன் ஒர் முக்கிய அங்கமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இலங்கையின் பழங்குடிச் சமூகமத்தினது வாழ்வாதாரமானது உள்ளூர், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பொது அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் தவறான அறிவுரை மற்றும் அறியாமை நடவடிக்கைகளால் தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் ஆதிவாசி சமூகத்தின் அபிலாசைகளை ஏனைய சமூகத்தினர் பெருமளவில் உணர்கிறார்களா மற்றும் அவர்களின் தனித்துவமான அடையாளத்தையும் உரிமைகளையும் மதிக்கிறார்களா என்பதைப் புரிந்துகொள்வது சிறப்பானதாகும்.

எவ்வாறாயினும், ஊவா, வட மத்தி, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக, அவற்றுடன் மட்டும் மட்டுப்படாது, நாடு முழுவதும் வாழும் ஆதிவாசிகளுக்கு, அவ்வடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்குச் சாதகமான சமூக, பொருளாதார மற்றும் அரசியற் பின்புலமொன்று இருக்கின்றதா? பொதுவாக மனிதர்களின் உரிமைகள் தொடர்பில் முடிவில்லாத பிரச்சனைகளும் சவால்களும் காணப்பட்டாலும், சமமான உரிமைகளுள்ள பிரஜைகள் என்ற வகையில் தாம் பணிகளை ஆற்றுகின்ற போது ‘ஆதிவாசி’ மக்கள் என்ற பொருள்கோடலுக்கு உரித்தாகின்ற பிரஜைகளும் ‘ஆதிவாசி’ என தம்மை அறிமுகம் செய்து கொள்ள விரும்புபவர்கள் ஏனைய பிரசைகளைக் காட்டிலும் ஆபத்துகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 12(2)ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்படுகின்றவாறு, இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரஜையும் ஓரங்கட்டப்படலாகாது. பக்கச்சார்பு, மற்றும் ஓரங்கட்டுதலானது வெறுமனே அடிப்படை உரிமைகளில் ஒன்றை அல்லது சிலவற்றை மீறுவதோடு மட்டுப்படாததுடன், அவை அவர்களின் சமூக, பொருளாதார, கலாசார, குடியியல் மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகிய துறைகளில் உரிமைகள் மீதான பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் ((A/RES/61/295) ஊடாக உலகம் முழுவதுமான ஆதிவாசிகளின் உரிமைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களின் இன அடையாளங்களை இல்லாமற் செய்வது, அவர்களின் வசிப்பிடங்கள், பிரதேசங்கள் அல்லது வளங்களை அவர்களிடமிருந்து அகற்றுவது மற்றும் அவர்களுக்கு எதிராக ஏதேனுமொரு இன அல்லது இனரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் அல்லது அழுத்தும் விடுக்கப்படுகின்ற செயல்களைத் தடுப்பதற்கான பயனுள்ள பொறிமுறையொன்றை வழங்குவதற்காக அங்கத்துவ நாடுகளிடம் வலுவான கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இலங்கை, ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு சார்பாக வாக்களித்திருந்தாலும், நிலைப்பாடு, அடையாளம் மற்றும் உரிமைகளைத் தெளிவாக ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட கொள்கைக் கட்டமைப்போ, சட்டரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ள கருவியோ இல்லாதிருப்பது இவ் ஆதிவாசி மக்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கும் பக்கச்சார்பான கவனிப்புகளுக்கும் ஆளாக்குகின்றது. மேலும், ஆதிவாசிகளின் உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் எந்தவொரு ஏற்பாட்டையோ, 1989 ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்கள் உடன்படிக்கையின் (இலக்கம் 169) எந்தவொரு ஏற்பாடும் தேசிய சட்ட அல்லது கொள்கைக் கட்டமைப்புக்குள் மாற்றப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை. எனவே, கொள்கை வகுப்பாளர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் ஆகிய இரு பிரிவிலும் சில ஒத்துணர்வற்ற தொலைநோக்கற்ற, தன்னிச்சையானதும் சிலவேளைகளில் வேண்டுமென்றே பக்கச்சார்புடன் நடத்தும் செயல்கள் காரணமாக இலங்கையில் ‘ஆதிவாசி’ மக்களின் நிலைப்பாட்டில் காணப்படும் ஆபத்து தீவிரமடைந்துள்ளது.

இந்த சுருக்கக் குறிப்பின் மூலம் இலங்கையின் ‘ஆதிவாசி’ மக்கள் முகங்கொடுக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பான சாராம்சமொன்றைப் பெற்றுத் தருவதற்கும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உத்தேசிக்கப்பட்ட கொள்கை ரீதியான இடையீடுகளை முன்வைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் ஆதிவாசி மக்கள் முகங்கொடுக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகள்

  • இலங்கையில் பல்வேறு ஆதிவாசி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கான முறையான சட்டரீதியான அல்லது சட்டவாக்க ரீதியான அங்கீகாரம் இல்லாதிருத்தல். அவ்வாறான அங்கீகாரம் ஆதிவாசி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகைகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  • ஆதிவாசி மக்களின் தனிச் சிறப்பு வாய்ந்த, பொருளாதார, சமூக, கலாசார சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படவும் மேம்படுத்தப்படவும், தெளிவாக ஒதுக்கீடுகளை வழங்கும் குறிப்பிட்ட சட்டங்கள் வகுக்கப்படாமை.
  • ஆதிவாசி மக்களின் குடியியல், அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் மீது ஒத்துணர்வற்று சட்டத்தை நடைமுறைப்படுத்துதல். பிரதானமாக அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பிலுள்ள உரிமை உள்ளிட்ட, அவர்களின் நிலைப்பாடு மீது சமமற்ற அழுத்தங்களை ஏற்படுத்தும்.
  • ஆதிவாசி சமூகம் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் குற்றவியல் மற்றும் காடுகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டு இருப்பதால் நுண்கடன்களை நாடுவதன் மூலம் மாற்று வாழ்வாதாரத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கட்டாய மீள்குடியேற்றத்தின் விளைவாக அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியினர், வாழ்வதற்கான அடிப்படை இடத்தைக் கட்டுவதற்குக் கடன் வழங்கும் நிதிச் சேவை வழங்குநர்களிடம் இருந்து நிதியுதவி பெற ஊக்குவிப்பைக் கொண்டுள்ளனர். தற்போது அவர்களும் நுண்கடன்களின் வலையில் சிக்கியுள்ளனர். பெண்களை குறிவைத்து, அவர்களால் புரிந்துகொள்ள முடியாத அல்லது படிக்க முடியாத மொழிகளில் கடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவர்கள் அதிகப்படியான வட்டி விகிதங்கள் மற்றும் சட்டவிரோத மற்றும் நெறிமுறையற்ற மீட்பு முறைகளால் சுரண்டப்படுகிறார்கள். முறையற்ற கடன் மற்றும் வசூல் நடைமுறைகள் வெளிப்படையானவை அல்லது கடன் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அடிப்படை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறு கடன் மற்றும் பிற வகையான பணக்கடன் நடவடிக்கைகளில் சிக்கி, பரந்த சமூக பிரச்சினைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
  • நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு ஆதிவாசி மக்களின் வலுவானதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான சமூக பொருளாதார பார்வைக் கோணமொன்று இல்லாத காரணத்தால் அவர்களின் அங்கீகாரமற்ற நிலையால், அவர்கள் ஓரங்கட்டபட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். அதனூடாக மக்கள் தொடர்ச்சியாக பக்கச் சார்புகளுக்கு உள்ளாகின்றார்கள்.
  • ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக முன்வரும் பலவீனமான சமூகம் சார்ந்த அமைப்புகளிலேயே மீறப்படுகின்ற போது துன்பதுயரங்களைத் தீர்க்கும் பொறிமுறையும் நியாயமான வழக்கு விசாரணையொன்றும் இல்லாமை. அதனால் அவர்கள் அநீதிக்கு ஆளாகும் ஆபத்தைத் தடுக்க முடியாது.
  • நிர்வாக ரீதியான தீர்மானங்கள், சிலவேளைகளில் அரசியல் தேவைகளின் மீது, செயற்படக் கூடியதாக இருப்பதுடன், ஆதிவாசி மக்கள் தமது சுய கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவர்களின் மொழியைப் பாவிப்பதற்கு, தொழிலில் ஈடுபடும் மற்றும் பயணிக்கும் உரிமைக்கு இத்தால் நேரடியாக அல்லது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், அவர்களின் பிரசாவுரிமையை உறுதிப்படுத்தும் போதும், அதனூடாக பொதுவான சேவைகளை அணுகும் போது அரச தரப்பில் நிறுவன ரீதியான அங்கீகாரம் இல்லாமை பெரும் தடையாக அமைவதுடன் அவர்கள் அப்புறப்படுத்தப்பட காரணமாகின்றது.
  • பொதுவாக, அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாதிருப்பினும், ஆதிவாசி மக்களின் வாழ்வாதார உரிமைகள் இயற்கை வளங்களுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் வசிப்பிடங்கள் அல்லது மூதாதையாளர்களின் வாழ்விடங்களில், அவர்கள் அமைதியாக வாழப் பொருத்தமான சூழலொன்றை உறுதிப்படுத்துவதற்காக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் மீன்பிடித்தல், தேனி வளர்ப்பு, மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பில் ஆதிவாசி மக்களுக்கு உரித்தான உறுப்பினர்களைக் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சம்பவங்களை அடிக்கடிக் காணக் கூடியதாகவுள்ளது.

கொள்கை மற்றும் பாவனைக்கு ஏற்புடைய மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள்

  1. ஆதிவாசி சமூகம் மற்றும் அச்சமூகத்தின் தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் தேவைகளை உள்ளடக்கியதான ஆதிவாசி சமூகத்தின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்ட வரைபு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.
  2. ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் ஏற்பாடுகளுக்கு மதிப்பளிப்பதற்கு அரசின் அர்ப்பணிப்பு முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்கள் உடன்படிக்கை, 1989 (ILO உடன்படிக்கையை 169) அங்கீகரிப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  3. பழங்குடி மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்று இடையூறாக காணப்படுகின்ற விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு ஆணை, வனச்சட்டம், கடலோரப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆதிவாசி சமூகங்களின் மூதாதையர் வாழ்விடங்களைப் பயன்படுத்துவதை நியாயமற்ற முறையில் தடுக்கும் பிற சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உட்பட தற்போதுள்ள சில சட்டங்களை மீளாய்வு செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
  4. ஆதிவாசி சமூகங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் அல்லது அவர்களின் இருப்பை ஆபத்தில் ஆழ்த்தும் தற்காலிக தீர்விற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக, அத்தகைய சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதையும், சட்ட ஒழுங்குவிதிகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்வது சம்பந்தப்பட்ட பொது அதிகாரசபை அதிகாரிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
  5. பழங்குடிச் சமூகத்தின் விரிவான வரைவிலக்கணத்தின் ஒரு பகுதியாக இப்போது இனங்காணப்பட்டுள்ள பழங்குடிச் சமூகத்தினைச் சேர்ந்த பல்வேறு மக்கள் குழுக்களின் சமூக பொருளாதார கோணங்கள் தொடர்பான விரிவான கணக்கெடுப்பொன்றை நடத்துவதோடு இலங்கை பழங்குடிச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான “சுயாதீன குழுவொன்று” இலங்கை அரசினால் நியமிக்கப்பட வேண்டும்
  6. இலங்கையின் ஆதிவாசி மக்களுக்கு உரித்தான பல்வேறு மக்கள் குழுக்கள் முகங்கொடுக்கின்ற, பிரச்சினைகள் மற்றும் சவால்களை மீளாய்வு செய்வதற்கான மேலும் பொருத்தமான பிரிவு ரீதியான கண்காணிப்புச் செயற்குழுவின் கீழ், அரசாங்கத்தால் நாடாளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு உருவாக்கப்படுகின்ற உபகுழுவானது ‘இலங்கையின் ஆதிவாசி மக்களின் உரிமைகள் தொடர்பான சுயாதீன குழு’ மூலமாக சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகள் மீது கவனம் செலுத்துதல் வேண்டும்.
  7. ஆதிவாசி மக்கள் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு இன ரீதியான குழுவொன்றாக உள்ளடக்கப்படாததற்கு எடுக்கப்பட்ட தீர்மானமே, பக்கச்சார்பு மற்றும் ஓரங்கட்டுதல் தொடர்பான உதாரணமாக இருப்பதுடன், ஆதிவாசி மக்களின் அடையாளம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆதிவாசிகளின் உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 8(2)(அ) வாசகத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “குறிப்பிட்ட மக்கள் என்ற வகையில் அவர்களின் தொடர்ச்சியான நிலைப்பாடு அல்லது அவர்களின் கலாசார விழுமியங்கள் அல்லது இன அடையாளங்களை இழக்கச் செய்யும் நோக்கம் அல்லது அழுத்தத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும்” என்பதாகும். இதற்கேற்ப, ஆதிவாசி மக்களின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசு இயன்ற அனைத்து முறைகளில் பொருத்தமான நிலையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
  8. மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்புடனும் ஒத்துழைப்புடனும் ஏனைய தொகுதியின் கீழ், ஆதிவாசி மக்கள் தொகையின் எண்ணிக்கையை உள்ளடக்கும் சாத்தியத்திற்குப் பதிலாக ஆதிவாசி மக்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் பரவலை புரிந்துகொள்ளுவதற்கு மாவட்ட மட்டத்திலான தரவுகளைச் சேகரிக்கும் செயற்பாடுகளை நடத்துமாறு மாவட்ட செயலாளர்கள் மாவட்ட மட்டத்திலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியலுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் கோர வேண்டும். ஆதிவாசி மக்களை முக்கியமற்றவர்களாகக் கருதும் அரச உத்தியோகத்தர்களினதும் கொள்கை வகுப்பாளர்களினதும் மனப்பாங்குகளை மாற்ற வேண்டும்.
  9. நுண்கடன் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கி மற்றும் பிறவற்றின் காரணமாக வேடுவச் சமூகங்கள் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக, அங்கீகரிக்கப்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வேடுவச் சமூகங்கள் கடன் வாங்குபவர்களை உருவாக்கி, பின்னர் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கடன் வழங்குபவர்களுக்கு வழங்குதல் அல்லது அத்தகைய நிறுவனங்கள் கலைப்பதன் மூலம் அவர்களது சொத்துக்களை இழப்பதைத் தடுக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  10. காணி அமைச்சு, பிரதானமாக விவசாயம் மற்றும் வனஜீவிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு (வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவிகள் திணைக்களம்) உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏனைய ஏற்புடைய அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் ஆதிவாசி மக்களின் பரம்பரை மரபுரிமைகளை மீளாய்வு செய்ய வேண்டியதுடன் காணிகள் மற்றும் நீருக்கான அவர்களின் உரிமையை இழக்கச் செய்யும் தான்தோன்றித்தனமான நிர்வாகத் தீர்மானங்களை நிறுத்த வேண்டும்.
  11. ஆதிவாசி மக்களின் நிலைப்பாடு தொடர்பில் தோன்றுகின்ற பிரச்சனைகளைப் பேசும் ‘பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட’ அணுகுமுறை அரசால் நிறுத்தப்பட வேண்டியதுடன் அதற்குப் பதிலாக அம்மக்களுக்கு தாங்களே இந்த நிலத்தின் பிரஜைகளில் ஒரு பகுதியினர் எனக் கருதுவதை நிரூபிப்பதற்காக’ கொள்கை அடிப்படையிலான’ அணுகுமுறையொன்றை பின்பற்றுவதற்கான அரசியல் விருப்பத்தைக் காட்ட வேண்டியதுமான அவர்களின் தனித்துவம், சுயநிர்ணயம், குறிப்பிட்ட வசிப்பிடங்கள், மூதாதையர்களின் பிரதேசங்கள், பிரதானமாகக் காணிகள், மற்றும் நீர், மொழி மற்றும் கலாசாரப் பாவனைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதான அணுகலுக்கு அரசின் அங்கீகாரம் அவசியமானது.
  12. இயற்கையான வளங்களை அழிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதிவாசிகளின் பணிப்பொறுப்பை அரசு இனங்காண வேண்டும். மேலும் நாடுபூராகவும் உள்ள ஆதிவாசி மக்கள் அவர்களின் வசிப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களும் சுற்றாடற் தொகுதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களும் கொள்கைகளும் மீது மேலும் ஒத்துணர்வைக் கொள்வதற்கான அறிவூட்டலை மேம்படுத்துவது உட்பட நிலையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறான இடையீடுகள் ஊடாக ஆதிவாசி சமூக உறுப்பினர்கள் குறைவாக இருக்கும் காரணத்தால் மட்டும் அவர்கள் ஏனைய சமூகங்களின் வாழ்க்கை மட்டத்தை உள்வாங்கும் ஆபத்து அதிகரிப்பதை தடுத்தல் வேண்டும்.

துசித சிறிவர்தன