Photo, Tamilguardian

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்  காண்பதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுடன் ஒப்பிடும்போது தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் அரசாங்கங்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்ததே வரலாறு. அரசாங்கங்கள் அந்த முயற்சிகளை எந்தளவுக்கு இதய சுத்தியான அக்கறையுடன் முன்னெடுத்தன என்பது வேறு விடயம்.

தற்போதைய முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வையும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற சிங்கள கடும்போக்கு தேசியவாதிகளின் கட்சிகளையும் தவிர, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கடந்த மாதம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூட்டிய மகாநாட்டில் கலந்துகொண்டன.

வீரவன்சவும் கம்மன்பிலவும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாதவர்கள். அவர்கள் மகாநாட்டைப் புறக்கணித்ததைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், ஜே.வி.பி. நிச்சயம் கலந்துகொண்டிருக்கவேண்டும்.

கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக தென்னிலங்கையில் ஜே.வி.பியின் செல்வாக்கு கணிசமானளவுக்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சிப்பொறுப்பை ஒரு தடவை தங்களிடம் கையளித்துப் பாருங்கள் என்று பிரமாண்டமான பேரணிகளை நடத்தி மக்களிடம் கோரும் அதன் தலைவர்கள் நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளில் பங்கேற்று தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தத் தவறக்கூடாது.

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் ஆணையை இழந்துவிட்டது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு. அதனால்தான் அதன் தலைவர்கள் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். அவ்வாறு மக்கள் ஆணை இல்லாத நாடாளுமன்றத்தினால் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதனால் அவரின் அதிகாரத்துக்கு ஒரு நியாயப்பாட்டைக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே ஜே.வி.பி. தலைவர்கள் மகாநாட்டில் பங்குபற்றவில்லை என்று சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

எது எவ்வாறிருந்தாலும்,பல வருடங்களுக்குப் பிறகு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக கூட்டப்பட்ட அந்த மகாநாட்டில் பங்கேற்று ஜே.வி.பி. அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அவர்களின்  புறக்கணிப்பு, காரணம் கூற முடியாதது மாத்திரமல்ல, மன்னிக்கவும் முடியாதது என்பது ஒரு அவதானியின் அபிப்பிராயம்.

ஜே.வி.பி. அதன் வரலாற்றில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறது. அத்தகைய எதிர்மறையான ஒரு வரலாற்றை தற்போதைய அதன் தலைவர்கள் மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை காலம் வேண்டிநிற்கிறது. தீர்வு முயற்சிகளுக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பியினால் பெருமளவுக்கு பங்களிப்பைச் செய்யமுடியும்.

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டில் பங்கேற்று தனது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதேவேளை மாகாண சபைகளை அறிமுகப்படுத்திய அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் பூரண ஆதரவு என்றும் அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஜே.வி.பியும் கூட அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கிளர்ந்தெழும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தற்போதைய முயற்சிகளுக்கு நாடாளுமன்ற எதிரணியிடம் இருந்து ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்பலாம். அதேவேளை, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் நலன்களுக்கும் விரோதமான பெரும்பான்மையினவாத நிலைப்பாட்டுகளைக் கொண்ட ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பலத்தின் அடிப்படையில் தனது ஆட்சியை நடத்திய வண்ணமே  ஜனாதிபதி இனப்பிரச்சினையை குறுகிய காலத்திற்குள் தீர்ப்பதற்கு முயற்சிகளில் இறங்கியிருக்கியிருப்பதைக் காண்கிறோம்.

ஜனாதிபதியாக அவர் தெரிவுசெய்யப்பட்ட பின்னரான ஐந்து மாதங்களுக்கும் சற்று அதிகமான காலப்பகுதியில் இதுவரையில் அவரின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவந்திருக்கிறது. ஆனால், இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தின் செயன்முறைகள்  தேவைப்படும் கட்டத்தில் அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது.

அதேவேளை, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்கின்ற சக்திகளுடன் ஒருபோதுமே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத சிங்கள தேசியவாதிகளான பிரதமர் தினேஷ் குணவர்தனவும் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவும் தற்போது தீர்வு முயற்சிகளில் ஜனாதிபதிக்கு உதவியாக செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டுக்கு புறம்பாக, தமிழ்க் கட்சிகளுடன் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விக்கிரமசிங்க தனியாக நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இவர்கள் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக சிங்கள தேசியவாத சக்திகளின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்திருக்கும் குணவர்தனவும் விஜேதாசவும் தங்களின் முன்னைய போக்கை மாற்றிக்கொண்டுவிட்டார்களா அல்லது அவர்கள் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு எந்த எல்லைவரை ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன.

எவ்வாறிருப்பினும், கடந்த கால தீர்வு முயற்சிகளுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிரணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதைப் போன்ற சூழ்நிலையை  ஜனாதிபதியின் தற்போதைய முயற்சிகள் எதிர்நோக்குவதாக இல்லை.

அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பிக்குமார் உட்பட சிங்கள பௌத்த கடும் தேசியவாத சக்திகள் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளுக்கு எதிராக முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டு வந்ததே வரலாறு. ஆனால், தாங்கள் முழுமையாக ஆதரித்து மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்த ராஜபக்‌ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்து மக்களை முன்னென்றும் இல்லாத துன்பங்களுக்கு உள்ளாக்கியிருக்கும் சூழ்நிலையில் அந்தச் சக்திகள் தற்போது பெருமளவுக்கு தலைகாட்டாமல் இருக்கின்றன. அவர்கள் சமூகங்கள் மத்தியில் குரோதங்களை ஏற்படுத்தும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுக்க வாய்ப்பான தருணத்துக்காக காத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகையதொரு பின்புலத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விடுத்த வேண்டுகோளை நோக்கவேண்டியிருக்கிறது.

முதுமை காரணமாக தளர்ந்துபோயிருக்கும் சம்பந்தனை சுகம் விசாரிப்பதற்காகவே மஹிந்த அவரைச் சந்தித்திருக்கவேண்டும். தீர்வு முயற்சிகள் தொடர்பாக பேசுவதற்கென்றே அவர் கூட்டமைப்பின் தலைவரின் வாசஸ்தலம் தேடி வந்தார் என்றா எதிர்பார்க்கமுடியும்?

இன்று இருக்கக்கூடிய மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் சம்பந்தன் மீது மஹிந்த ஒரு மரியாதையை வைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சம்பந்தனும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பேணுவதைப் போன்ற நெருக்கமான நல்லுறவை மஹிந்தவுடனும் நீண்டகாலமாக பேணிவருகிறார். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அத்தகைய உறவைப் பேணக்கூடிய பக்குவம் சம்பந்தனிடம் இருக்கிறது.

ஜனாதிபதியின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சம்பந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த மஹிந்த பேச்சுவார்த்தைகளின்போது ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அரசியல் தீர்வுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து உரிய நிலைப்பாட்டை எடுப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகள் கூறின.

பேச்சுவார்த்தையின் இறுதியில் வகுக்கப்படக்கூடிய தீர்வுத்திட்டத்தை ஆராயாமல் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளிப்பது என்பது கடினமான விடயம் என்றும் அவர் கூறியிருக்கிறார். தீர்வுத்திட்டத்தின் அம்சங்களைப் பொறுத்தே ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் ஆதரவு அமையும் என்பதே அதன் அர்த்தம்.

மஹிந்தவைப் பொறுத்தவரை, ஜனாதிபதியாகப் பதவிக்கு வருவதற்கு முன்னர் இனப்பிரச்சினை குறித்து அவர் பெரிதாகப் பேசியதில்லை. 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டபோது அந்தக் காலப்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிறுத்தியே சிங்கள மக்களிடம் அவர் வாக்கு கேட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தனது முதலாவது பதவிக்காலத்தில் போரை முழுவீச்சில் முன்னெடுத்து விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த பிறகு போர் வெற்றியின் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தனக்குக் கிடைத்த பேராதரவை தனது குடும்ப அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே மஹிந்த முழுமையாகப் பயன்படுத்தினார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இனப்பிரச்சினைக்குத் அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியம் இல்லை என்பதே அவரின் வெளியில் சொல்லாத நிலைப்பாடாக இருந்தது.

அரசியல் தீர்வொன்றைக் கண்டு சமூகங்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு வரலாறு மஹிந்தவுக்கு அரிய வாய்ப்பொன்றை வழங்கியது. ஆனால், அதை வேண்டுமென்றே அலட்சியம் செய்த அவர்  பெரும்பான்மையினவாத அரசியலை தீவிரமாக முன்னெடுப்பதன் மூலமாக தனது குடும்பத்தை பல தசாப்தங்களுக்கு ஆட்சியதிகாரத்தில் வைத்திருக்கலாம் என்று கனவு கண்டார். இறுதியில் அவரின் கனவுக்கு நேர்ந்த கதியை நாமெல்லோரும் கடந்த வருட நடுப்பகுதியில் கண்டோம்.

அந்தக் கதிக்குப் பின்னரும் அரசியலில் இருந்து ஓய்வுபெற மஹிந்த தயாராக இல்லை. அவர்களது பொதுஜன பெரமுனவே இன்னும் ஆளும் கட்சியாக இருக்கிறது. ஜனாதிபதியாக விக்கிரமசிங்க இருக்கின்றபோதிலும் அவரது ஆட்சியைப் பின்னால் இருந்து இயக்கும் வல்லமையைக் கொண்டவர்களாக ராஜபக்‌ஷர்கள் விளங்குகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது என்ற போதிலும் அதுவே நடைமுறை யதார்த்தம்.

இத்தகைய சூழ்நிலையில் மஹிந்த ஜனாதிபதியின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்தழைப்பை வழங்கி குறைந்தபட்சம் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வசதியாக சிங்கள அரசியல் சமுதாயம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் கருத்தொருமிப்பு ஏற்படுவதற்கு உதவினால் கடந்த காலத்தில் இனப்பிரச்சினையைக் கையாள்வதில் இழைத்த மோசமான தவறுகளுக்கு சிறியளவிலேனும் ஒரு  பிராயச்சித்தத்தை தேடிக்கொள்ளமுடியும்.

போரின் முடிவுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட அவருக்கு வரலாறு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதையும் அவர் தவறவிடுவாரா?

வீரகத்தி தனபாலசிங்கம்