ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், பல குழுக்களால், ஆணைக்குழுக்களால், அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து பலமுறை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக இணக்கம் காணப்படாததால் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அத்தோடு, இது தொடர்பான கலந்துரையாடல்களில், பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம் பெண்கள், சிறுமிகள் திட்டமிட்ட வகையில் ஆண்கள் தலைமையைக் கொண்ட அமைப்புகளால், அரசியல்வாதிகளால், பழமைவாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையுடன், இகழ்ச்சிக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். அதேபோல, பாதிப்புக்குள்ளான முஸ்லிம் பெண்கள், சிறுமிகள், பிள்ளைகளின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி இவர்கள் ஒருபோதும் கரிசனைக் கொண்டதுமில்லை.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், ‘பலதாரமணத்தை ஒழித்தல்’ என்ற விடயமும் திருத்தத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றிய அமைச்சரவையின் தீர்மானத்திலும் பலதார மணத்தினை ஒழித்தல் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று குரல் எழுப்பும் பாதிக்கப்பட்ட பெண்களுள் பெரும்பாலானோர், தங்கள் குடும்பத்துள் பிரச்சினை ஏற்படுவதற்குப் பிரதான காரணமாக பலதார மணத்தினைக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பலதார மணத்தின் மூலம் குறித்த பெண்/ ஆண் மட்டும் பாதிப்புறாமல் அவர்களது பிள்ளைகளும் பல்வேறு வகையில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு பலதார மணத்தின் மூலம் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் பற்றிய குறும் ஆவணப்படமொன்று கீழே தரப்பட்டுள்ளது.