Photo, Selvaraja Rajasegar, FLICKR
நவம்பர் இரண்டாம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினமாகும். 2020 இல் 22 ஊடகவியலாளர்கள் அவர்களுடைய பணிக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது, இது 2019ஆம் ஆண்டை விடஇரண்டு மடங்கு அதிகமாகும். 2021இன் புள்ளிவிபரங்களும் 2020ஆம் ஆண்டை போல காணப்படுகின்றன என தெரிவித்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு ஆப்கானிஸ்தானிலும் ஏனைய அதிகம் ஆபத்தான நாடுகளிலும் காணப்படும் அரசியல் கொந்தளிப்பான நிலை காரணமாக உறுதியான புள்ளிவிபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் படுகொலைகளில் 81 வீதமான கொலைகள் தொடர்பில் எவரையும் பொறுப்புக்கூறச்செய்ய முடியவில்லை என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
ஊடக சுதந்திர அமைப்புகளின் கூட்டமைப்புகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை அடிப்படையாக வைத்து ஹேக்கின் மக்கள் தீர்ப்பாயம் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. Free Press Unlimited, ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆகியன இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. அடுத்த வருடம் தனியாக மூன்று முக்கிய சம்பவங்கள் குறித்த மூன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இறுதி விசாரணை மே 3ஆம் திகதி உலக ஊடக சுதந்திர தினத்தன்று இடம்பெறும். மெக்சிக்கோ, சிரியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தே விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஊடகவியலாளர்கள் மிகுவல் ஏஞ்சலஸ்லோபஸ் வெலாஸ்கோ (Miguel Ángel López Velasco), நபில் அல் சர்பாஜி (Nabil Al-Sharbaji), லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் படுகொலைகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. லசந்த தொடர்பான விசாரணைகள் ஜனவரி 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வாழ்வதற்கான உரிமையை மீறியமை, கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2009 இல் லசந்த படுகொலை செய்யப்பட்டமைக்காக நீதியை நிலைநாட்டுவதற்கான சர்வதேச முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. 2019இல் அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் 2021இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவிடம் மனு கையளிக்கப்பட்டது. இலங்கையில் தசாப்தகாலமாக போதியளவு நீதியில்லாமை என்ற சூழமைவில் இது இடம்பெறுவதுடன் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க இந்த முயற்சிகளை முன்னெடுக்கின்றார்.
ஊடக சுதந்திர அமைப்புகள், ஊடகவியலாளர் சங்கங்கள், இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக நீதிக்காக பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். ஆனால், கைது, கொலைகள், பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுதல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றங்கள் குறித்த விசாரணைகள் அபூர்வமான விடயங்களாகக் காணப்படுகின்றன. பல சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை அல்லது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் நீதவான் விசாரணைகள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இயற்கை மரணத்தை எய்துகின்றன.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் அளவுக்கதிகமான குற்றங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவையாக காணப்படுகின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்து சிறிதளவு கவனம் கூட செலுத்தப்படுவதில்லை. முன்னைய அரசாங்கத்தின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து சிறிதளவு விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்ற போதிலும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை. சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தில் லசந்தவின் படுகொலை குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இந்தப் படுகொலைகளும் யுத்தத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்வதற்கான அனுமதிப்பத்திரமாக மாறியுள்ளது. கைதுகள், தடுத்துவைத்தல், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், அனுமதி மறுப்பு போன்ற வன்முறைகளே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பத்திரிகையாளர்கள் தொடர்ந்தும் நாட்டிலிருந்து தப்பியோடுவதுடன் தங்களை சுயதணிக்கைக்கும் உட்படுத்திவருகின்றனர்.
கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்படுதல் குறித்த சர்வதேச தினத்தின்போது விகல்ப என்ற உள்ளூர் இணையத்தளம் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட 8 பத்திரிகையாளர்கள் குறித்து அறிக்கையிட்டிருந்ததுடன், 3995 நாள் முதல் 7319 நாள் வரை எந்த பொறுப்புக்கூறலும் காணப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் கொலைகாரர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்து நீண்ட விலக்களிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கினை தொடரவேண்டாம் என சட்டமா அதிபர் நீதிமன்றங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் என ஊடகங்கள் தெரிவித்தன.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ஒரு நபர் கூட தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் சுதந்திர ஊடக இயக்கம் இரண்டு சம்பவங்கள் மாத்திரமே விசாரணை கட்டத்தை அடைந்துள்ளன என தெரிவிக்கின்றது. ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மற்றையது, 2010இல் பத்திரிகையாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமல்போனமை தொடர்பானது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான பாரதூரமான குற்றத்திற்காகப் பொறுப்புக்கூறுவதில் ஏனையவற்றை விட இது அதிகளவு முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலை காணப்பட்டது. 2015இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சி.ஐ.டியினரும் பொலிஸாரும் மேற்கொண்ட விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இராணுவம் ஒத்துழைப்பு வழங்காமல் முட்டுகட்டைகளை ஏற்படுத்திய போதிலும் இது இடம்பெற்றது.
பத்திரிகையாளர்களிற்கு குற்றங்களிற்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னொருபோதும் இடம்பெறாத நடவடிக்கையாக 2019 நவம்பர் 19 ம் திகதி முன்னர் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 9 இராணுவத்தினரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றச்சாட்டுகளை சுமத்தியது- எனினும் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றாக இல்லாத நிலை தற்போது காணப்படுகின்றது,குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட காலத்திலேயே காணாமல்போனமை இடம்பெற்ற ஆளும் குடும்பத்தின் மீள் வருகை இடம்பெற்றது.அவர்கள் யுத்த வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தப்போவதில்லை என உறுதி வழங்கியிருந்தனர். முக்கியமான விசாரணையாளர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று தலைமறைவானார். விசாரணைகளுக்குப் பொறுப்பான அவரது தலைவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். 2020-21 இல் நடைபெறவிருந்த பல வழக்குகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் விசாரணை வரை முன்னேறிச்செல்வதற்கான காரணமாக காணப்பட்டவர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொட. 12 வருடங்களாக தந்தையை இழந்த குழந்தைகளை வளர்க்கும் அதேவேளை அவர் மரண அச்சுறுத்தல்களை, அவதூறு, துன்புறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும், அசாதாரண உறுதியுடனும் விதிவிலக்கான தைரியத்துடனும் நீதியை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அவர் பல முறைப்பாடுகளை செய்துள்ளார், பல நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். நூற்றுக்காணக்கான நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார், எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களைப், பேரணிகளை ஏற்பாடு செய்தும் கலந்தும்கொண்டுள்ளார், அரசியல்வாதிகளைச் சந்தித்துள்ளார், சட்டமா அதிபர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார், இராணுவத் தளபதி, இராஜதந்திரிகள், பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்டவேளையிலும் உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுத்துள்ளார். தன்னை அச்சுறுத்திய பௌத்த மதகுருவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியவேளை மத்தியஸ்தத்தை மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் நீதிக்காக 411,220 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளார் என உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் மதிப்பிட்டுள்ளார்.
பிரகீத்தின் வழக்கு விசாரணைக்கு வருவதை உறுதி செய்வதற்காக சந்தியா ஒரு தசாப்தத்திற்கும்மேல் முன்னெடுத்த நீண்ட செயற்பாடுகள், தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை சவாலுக்கு உட்படுத்த முயல்பவர்கள் கற்றுக்கொள்வதற்கான ஒரு உதாரணமாகும்.
கடுமையான முயற்சிகள் தேவைப்படும் விடயங்களாக தனிப்பட்ட வழக்குகள் மற்றும் ஒட்டுமொத்த வழக்குகள் தொடர்பான முன்னேற்றம் அல்லது முன்னேற்றமின்மை குறித்த விடாயமுயற்சியுடனான ஆவணப்படுத்தல் அவசியமாகும். நீதிமன்ற அறைகளிற்குள் சட்ட செயல்முறைகள் பற்றிய முறையான மற்றும் விரிவான கண்காணிப்பு அவசியமானதாகும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தொடர்ச்சியான சட்ட பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் வேண்டும். பொலிஸ்மா அதிபர் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற தொடர்புடைய அமைப்புகளுடன் நேரடி சட்டத்தலையீடுகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான ஈடுபாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வளர்ச்சிகளைக் கண்காணித்து ஆவணப்படுத்த வேண்டும். பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க உதவியாக சர்வதேச ஆதரவைப் பெற வேண்டும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லசந்தவின் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதால் இது மிகவும் முக்கியமானதாகும். உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக சந்தியா எக்னெலிகொட மற்றும் அஹிம்சா விக்கிரமதுங்க போன்ற உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு சவால் விடுப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவது முக்கியமாகும்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மையை ஊக்குவிக்கும் சமீபத்தைய ஒரு நடவடிக்கையாக முன்னைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு காணப்படுகின்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அந்த ஆணைக்குழு மேற்கொண்ட முதலாவது நடவடிக்கையாக பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை உட்பட அந்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை, நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தை கேட்டுக்கொண்டமை காணப்படுகின்றது
எக்னலிகொட விவகாரத்தில் முக்கிய சாட்சியொருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜரானார். அவர் தான் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் சாட்சியமளித்திருந்ததாகத் தெரிவித்தார். 2020இல் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த தனது இறுதி அறிக்கையில் – மார்ச் 2021 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் – லசந்த கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்தார் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்திருந்தது. பிரகீத் எக்னலிகொட விவகாரத்தில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மீளப்பெறுமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. பத்திரிகையாளர் கீத்நொயரை கடத்தி சித்திரவதை செய்தார்கள் என குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டவர்கள் குறித்தும் இதேபோன்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.
எக்னலிகொட விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் முதலாவதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு வெளிநாட்டு சேவையில் பதவியை வழங்கவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்ட – இராணுவத்தினர், பொலிஸாருக்கு எதிராக ஆதாராங்களைக் கண்டுபிடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது ஆணைக்குழு. பாரிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக சித்திரிப்பதே இந்த ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த அணுகுமுறையாக உள்ளது.
ஏப்ரல் 2021 ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு கோரினார். ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், சாட்சிகள் மற்றும் ஏனையவர்கள் மீது குற்றவியல் வழக்குகளைத் தொடரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. லசந்தவிக்கிரமதுங்க கொலை, பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை கீத்நொயர் கடத்தப்பட்டமை ஆகிய வழக்குகளும் இதில் அடங்கும். இன்னொரு முக்கிய நடவடிக்கையாக சந்தியா எக்னலிகொட ஊடகவியலாளர் பிரகீத் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட புலனாய்வு அதிகாரிகளை விடுதலை செய்யவேண்டும் என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.
ஒட்டுமொத்தமாக இலங்கையை தொடர்ச்சியாக ஆண்டவர்கள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பாரதூரமான குற்றங்களுக்காக பொறுப்புக்கூறலை நிலைநாட்டத் தவறியுள்ளனர்.இது மாற்றமடையும் என்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. கடந்த ஆண்டின் 20ஆவது திருத்தம் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளையும் சட்டமா அதிபரையும் நியமிப்பதற்கான முழுமையான விருப்புரிமையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
தற்போது ஊடகவியலாளர்களை விட ஊடக சுதந்திர அமைப்புகள், சங்கங்கள், ஊடகவியலாளர்களையும் ஊடகப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தும் ஊடக முகவர் அமைப்புகள் போன்ற அமைப்புகள் இன்னமும் அதிகளவிற்கு ஆழமாக வேறுன்றியுள்ள ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களிற்கு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் மற்றும் அனைத்து விதமான தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலையும் மேலும் வலுவாக எதிர்கொள்ள தங்கள் அணுகுமுறைகளை மேலும் ஆக்கபூர்வமானதாகவும் நிலையானதாகவும் விரிவானதாகவும் மாற்றிக்கொள்ளவேண்டும்.
ருக்கி பெர்னாண்டோ
Challenging Impunity For Crimes Against Journalists என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.