Photo, Myadvo
அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார். அந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அந்த முறைப்பாட்டை ஒரு குற்றச்சாட்டாய்க் கருதி நடவடிக்கைகள் அவர் ஆரம்பித்து விட்டார்.
இலங்கையிலே நெறிமுறையற்ற மதமாற்றத்தில் அதிகம் ஈடுபடுபடுபவர்கள் அரசாங்கத்தினரும் பௌத்தர்களுமே. அரச காணிகளையும் கட்டடங்ளையும் புத்த சமயத்திற்கும், புத்த குருமாருக்கு சம்பளமும் புலமைப்பரிசிலும் கொடுப்பது அரசாங்கமே. செம்மலை போன்ற பல இடங்களில் சைவக்கோவில்களை புத்த கோவில்களாக்குவதும் சிங்களவரே. இப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தின் செயலாளர் கே. ராஜ்குமார் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அநேகர் இராணுவ ஸ்தலங்களில் சிங்களவராயும் புத்த சமயத்தவர்களாயும் வாழ்கிறார்கள் என்று ஒரு அறிக்கையை வெளிவிட்டுள்ளார். அப்படிபட்ட அரசிடம் பலவீனமற்ற குற்றச்சாட்டுகளை சுமப்பது கிறிஸ்வர்களுக்கெதிரான ஒரு சதியாகத்தான் எனக்குப் படுகிறது.
வன்முறைகள் உபயோகித்து சமயம் மாற வைத்தால் அது பிழைதான். இந்தக்காலத்தில் அப்படி மாறவைப்பது கஷ்டம். நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை. தெல்லிப்பளையில் பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளை ஞானஸ்நானம் பெற்றால்தான் தாம் சம்மதிப்பார்கள் என்பது வன்முறையோ, பலாத்காரமோ இல்லை. ஆனால் அது அப்படியிருக்க, பத்திரிகை ஒன்று சச்சிதானந்தன் சொன்னதென்று எழுதாமல் – மன்னார் மாவட்டத்தில் மன்னார் ஆயர் மேற்கொண்ட 37 அராஜகங்ளை எம்மால் சாட்சிகள், காணொலிகள் போன்ற சான்றுகளுடன் நிரூபிக்க முடியும் என்பதனால் இதற்கு ஓர் விசாரணைக் குழுவை அமைத்து உடன் விசாரணை நடத்த வேண்டும் – என்று நிரூபிக்கப்பட்ட உண்மை போல் எழுதியுள்ளது. இதுவும் பத்திரிகையே விசாரித்து கண்டறிந்தது போல் ஒரு பெரிய சமூகத்தலைவரான மன்னார் ஆயருக்கு எதிராக, சச்சிதானந்தனின் குற்றச்சாட்டை முழுமையாய் விழுங்கி, எழுதியுள்ளது.
இதே சச்சிதானந்தனே 2018 உள்ளூராட்சித் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு – சைவத்தை காக்காதவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் – என்று பல இடங்களில் பகைப்பேச்சுச் சட்டங்களை மீறி சமயப் பகைப்பேச்சு விளம்பரங்களை ஒட்டிய சிவசேனை பிரமுகரே. ஊடகங்கள் நடுநிலையைப் பேணி சிறுபான்மையினருக்கு தமது ஊடகங்களிலிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
சச்சிதானந்தனின் அடிப்படை கூற்று நாம் பிறந்த சமயத்திலேயே நாம் வாழவேண்டும் என்பதே. இது கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கும் தமிழர் பாரம்பரியத்திற்கும் முரணானது. இயேசுக் கிறிஸ்து பரத்துக்கு எடுபடுமுதல் அடியார்களுக்குக் கொடுத்த இறுதிக் கட்டளையானது தேவ அன்பின் பயனான மீட்பை எல்லா ஜாதிகளுடனும் பகிரவேண்டும் என்பதாம். ஆகவே, ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம் தம்மிடம் உண்டென்றும், சகல மனிதர்களிலும் அன்புசெய்யும்படி தாம் அந்நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற ஒரு அடிப்படைக் கூற்று கிறிஸ்தவர் மத்தியிலுண்டு. இயேசுவின் இக்கட்டளைக்கான வேதவாக்கியங்கள் வருடம் தோறும் எமது ஆராதனைகளில் எடுத்துரைக்கப்படுவது மட்டுமன்றி நற்செய்திக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. நற்செய்தியைப் பரப்பி அந்தச் செய்தியின் மகிழ்ச்சியை அதை அறியாதவர்களுக்கும் கொடுத்து உள்வருபவரை திருச்சபைக்குள் எடுப்பது கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரித்து எடுக்கமுடியாத பணி. அத்தெய்வீகப் பகிர்வை நிறுத்துவது கிறிஸ்தவ சமயத்தையே தடைசெய்வதாக அமையும். சைவப்பெரியார் ஒருவர் சைவத்திற்குத் தான் மதம் மாற்றுவதன் காரணம் “யான் பெற்ற இன்பம் வையம் பெறவேண்டும்” என்றார்.
குறிப்பிட வேண்டியதாவது, இப்படி அடியார்கள் தம் நம்பிக்கையைப் பகிர்வது எல்லாச் சமயங்களினதும் பாரம்பரியமுமாகும். ஏதும் நல்ல காரியம் ஒன்று இருந்தால் அதோடு அடுத்தவர் மேல் பிரியமுமிருந்தால் அப்படியான காரியத்தைப் பொத்தி வைப்பது மரக்காலால் தீபத்தை மூடிவைப்பதாகும் என்று இயேசு மொழிந்துள்ளார்.
சமயமாற்றத்தைத் தமிழனின் பாரம்பரியத்திலிருந்து பிரிக்க முடியாது. சங்ககாலத்தில் நாம் பறைமேளங்களையும் மலைகளையும் ஆறுகளையும் வணங்கி இரத்தப் பலிகளையும் செய்துவந்தோம். பின்பு சமணர்கள் மரபில் கண்ணகியையும் பௌத்த மரபில் புத்தரையும் வணங்கினோம். 2000 வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையிலும் கிறிஸ்தவம் நாட்டப்பட்டிருந்தது. இதைத் தெடர்ந்து தேவாரகாலத்தில் சைவர்களாய் மதம் மாறினோம். இந்த மாற்றத்தின் போதுதான் தெரிந்த அளவுக்கு முதற் தடவையாக சைவசமயத்துக்கு உக்கிரமாக மாற்றப் பட்டோம். இதற்கு இன்றும் ஆதாரமாக மதுரையில் சமயமாற்றத்துக்கு மறுத்த எண்ணாயிரம் சமணத்தலைவர்கள் கமுகேற்றப்பட்டதைக் கொண்டாடி திருவிழா எடுக்கப்படுகிறது. இறுதியாக கிறிஸ்தவ சமயம் இரண்டாம் தடவை போத்துக்கேயரால் கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் வன்முறைகளின் காரணமாகக் கிறிஸ்தவர்களாகினர் என்றும், இதேபோல பலர் தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டனர் என்றும் சரித்திரப் புத்தகங்கள் கூறுகின்றன.
ஆங்கிலேயர் வந்தபொழுது கிட்டத்தட்ட தமிழர் யாவரும் கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் பெற்றிருந்தார்களென்று நம்பிக்கையான சரித்திரமும் அரச புள்ளி மதிப்பீடும் காட்டுகின்றன. கிறிஸ்தவராகப் பிறந்த பலர் பின் ஆங்கிலேயர் காலத்தில் மீண்டும் சைவசமயத்துக்கு மாறினர்.
1619இல் போத்துக்கேயராச்சியம் யாழ்ப்பாணத்தை இணைத்தபோது ஏற்கனவே 12,000 கிறிஸ்தவர் இருந்தனர். 1624இல் இருந்து 1626 வரை ஃப்ரான்சிஸ்கர் சபையினரால் மட்டுமே 52,000 தமிழர் ஞானஸ்நானம் பெற்றனர். இவர்களில் யாழ் இராச்சியத்தின் பிரமுகர்கள் யாவரும், இராச்சியத்தின் மூன்று முதலியார்களும், பிராமணர்களில் பெரும்பான்மையினரும் அவர்களின் மனைவியரும் குடும்பத்தினரும் அடங்குவர் (வண. பிதா ஃபெர்னான் டி. கேரோஸ் 1688 – வண பிதா எஸ் ஜீ பெரேராவின் மொழி பெயர்ப்பு 1930, ப. 659). டிக்கிரி அபேசிங்க (1986, ப. 54) இதை உறுதிப்படுத்துகின்றார்.
டச்சுக்காரர் பட்டிணங்களில் மட்டுமே சைவத்தை தடை செய்தனர். எனினும் 1684இல் யாழ்ப்பாணத்தின் 278,759 மக்களில் 180,364 ரோமன் கத்தோலிக்கர் அல்லாத புரொட்டெஸ்டன்ட் கிறிஸ்தவர்களும் இருந்தனர். இறுதி டச்சுக்காலத்தில் சைவசமயத்திற்கான எதிர்ப்பு டச்சு அரசில் இறங்கி அவர்கள் கோவில்கள் கட்டுவதையும் அனுமதிக்க, 1758ஆம் ஆண்டு வர, 200,233 ரோமன் கத்தோலிக்கர் அல்லாத புரொட்டெஸ்டன்ட் கிறிஸ்தவர்களே இருந்தனர். சனத்தொகை வளர்ச்சி குறைவான அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை கழித்து விட்டால் இந்து சமயத்தவர் யாவரும் கிறிஸ்தவர் ஆகிவிட்டனர் என்று எடுக்கலாம். பேராசிரியர் எஸ். பத்மநாதனும் டச்சுக்கார வலன்டைனின் கணக்கீட்டின் அடிப்படையில், 1722இல் யாழ்ப்பாணப் பட்டினத்தில் 1722இல் 189,388 கிறிஸ்தவர்களே இருந்ததாகவும், 1760இல் இந்த எண்ணிக்கை 182,226 ஆனதாகவும் ஆங்கிலேயர் வந்தபின் 4 வருட காலத்தில் (1802-1806) ரோமன் கத்தோலிக்கம் இல்லாத கிறிஸ்தவம் மறைந்துவிட்டதாகவும், 1806இல் அங்கு சேவித்த ஒரு போதகரின்படி மிகத்திறமையாயிருந்த தேவாலயங்கள் பாழடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். ஓர் இந்து உபதேசியாரே முழு மாகாணத்திற்கும் இத்தேவாலயங்களுக்குப் பொறுப்பாய் இருந்தார்.
இவ்வீழ்ச்சி தமிழ் நாட்டில் பரிதோமாவால் முதலாம் நூற்றாண்டில் தமிழர் மத்தியில் நிலைநாட்டப்பட்ட திருச்சபை 1300 அளவில் எஞ்சிய ஆலயம் ஒரு முஸ்லிம் துறவியிடம் மெழுகுவர்த்தி எரிக்க ஒப்படைக்கப்பட்டது போல். அதுபோல் இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் அத்தியட்சர்மார் சிவனின் பொட்டுப்போட்டு ஆலயமத்தியில் பலிபீடத்தின் முன்பு ஒரு மரியாதையும் காட்டாது பரதநாட்டியங்களுக்கு தலைமை தாங்கத் தொடங்கியுள்ளனர்.
இம்மாற்றங்கள் பொதுவாக பலாத்காரமற்று நடைபெற்றன. நீலகண்டசாஸ்திரியின்படி (1958, ப. 422-423) தேவார காலத்தில் பல புத்த விகாரைகள் சைவக் கோவில்களாக்கப்பட்டன. நம்பி ஆண்டார் (ஆளுடைய பிள்ளையார் திருவுளமாலை வாக்கியங்கள் 59, 74), 8000 சமணத்துறவி, ஆசிரியர் திருஞான சம்பந்தரின் கட்டளைக்கமைய கமுகேற்றிக் கொலை செய்யப்பட்டதை குறித்துள்ளார். இது மதுரை பெரிய கோவிலில் உள்ள வர்ணப் படங்களின் மூலமும் திருவிழா மூலமும் கொண்டாடப்படுவதும் சரித்திரப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (கிங்ஸ்பெரியும் ஃபிலிப்சும் 1921, ப. 11 – சாஸ்திரி 1958, ப. 413 – முஜூம்டார் 1960, ப. 430). எம்சரித்திரம் இப்படியிருக்க அந்ந 8000 அப்பாவி சமணரும் ஏதோ சத்தியபிரமாணத்தின் நிமித்தம் தம்மை தாமே குத்திக் கொண்டார்களென்றும் இன்று விக்கிப்பீடியாவில் தவறாய் எழுதப்பட அதை நம்புவோரும் உண்டு!
எனினும், மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்ற கூற்றிற்கு அமைய சலுகைகளுக்கு பலர் மாறியிருந்தார்கள். மேலும் டச்சுக்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரின் சொத்தை சுதந்தரித்து கொள்ள பெற்றோர் கிறிஸ்தவ கல்யாணம் செய்திருக்க வேண்டும். அரச உத்தியோகத்திற்கும் கிறிஸ்தவர்களாய் இருந்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சமய மாற்றம் எமது பாரம்பரியமே. எமது காலனித்துவ செயலாளர் எமசன் டெனன்ட் 1850இல் எழுதியதில் (ப. 73-74) சிங்களவர் தமிழரைப்போல் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று முரண்படும் ரோமாபுரி சபையினதும் பின்பு ஒல்லாந்துச் சபையினதும் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், பிராமணர் கூட (டச்சுக்காலத்தில் சைவம் தடைசெய்யப்பட்டதால்) தமது உழைப்பையும், சமூக மரியாதையின் இழப்பையும் தாங்க முடியாது மிகத் தயாராக கிறிஸ்தவ கோட்பாடுகளை ஏற்று அறிக்கை செய்தனர் என்கிறார் (இஸ்லாமியர்களில் ஒருவர் தன்னும் கிறிஸ்தவனாக தூண்டப்பட்டதாக ஒரு பதிவும் இல்லை என்கிறார்).
சமயமாற்றத்தைத் தமிழனின் பாரம்பரியத்திலிருந்து பிரிக்க முடியாது. ஒரு சமயத்தில் பிறந்து இனனொரு சமயத்திற்கு 2000 வருடங்களாக மாறியுள்ளோம். சங்ககாலத்தில் இறுதியாக கிறிஸ்தவராக பிறந்தோர் அநேகர் பின் ஆங்கிலேயர் காலத்தில் சைவசமயத்துக்கு மாறினர்.
இந்தச் சுதந்திரம் எமக்கு இன்று இல்லையா? எம்மில் ஒருவருக்கு ஏற்க முடியாத கூற்றுகள் எம் சமயத்தில் இருந்தால் நாம் எம் சமயத்ததை நிராகரிக்கக்கூடாதா? உதாரணம் பிராமணரை தவிர, எம்மில் வெள்ளாளர் உட்பட, யாவரும் சூத்திரரே.
பகவத் கீதை 4.13 ஓதுவது:
சாதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணமவிபாஸ
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்
அதன் அர்த்தம்:
குணத்திற்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை அமைத்தேன்
செயற்கையற்றவனும் அழிவற்றனுமாகிய யானே அவற்றை செய்தேனென்றுணர்.
ஒரு சூத்திரன் என்ற முறையில் என்னை பிறப்பில் கெட்டவன் என்று ஏற்க முடியாது. தன்மானம், மரியாதையுடைய யாரும் பகவத் கீதையை தூக்கி எறிவார்கள் இல்லையா? இப்படிப்பட்ட துர் கொள்கைகள் எம்மில் ஊறியே யாவரும் சாதியை வைத்து ஒருவனை நசுக்க, அவன் தன் சாதிப்புத்தியை காட்டிவிட்டான் என்று சொல்லி வெல்லமுடியாத விவாதங்களை மூடுவதை கேட்டுள்ளோம். பகவத் கீதையே இப்படியான நம்பிக்கைகளை எம்மில் நாட்டி எம்மை கெட்டவர் ஆக்குகிறது என்று சொல்ல எம்மத்தியில் சுதந்திரம் இல்லையா?
சமய மாற்றம் எமது அடிப்படை உரிமை. எல்லா சமயங்களும் சமனல்ல. சில சமயங்கள் எம்மை நல்லவர்களும் சில எம்மை தீயவர்களும் ஆக்கும். தமிழருக்கென்று ஒரு சமயம் ஒருபோதும் இருக்கவில்லை. மாறாய் தமது சமயத்தை மற்றோர் தொண்டைக்குள் திணிக்க விரும்புவர்களே தமிழருக்கு என்று ஒரு சமயம் உண்டென்பார்கள்.
சா. இரத்தினஜீவன் ஹே. ஹூல்