AFP photo/ Ishara S. Kodikara, ASIA TIMES

முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக கோரி வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீதான சீர்திருத்தங்கள் மீண்டும் ஒரு தடவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. சுவாரசியமாக, தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்து வந்த – அவ்வாறான சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வந்த முஸ்லிம் முக்கியஸ்தர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் தற்போது தமக்கு இந்த சீர்திருத்தம் அவசியம் எனக் கூறுகின்றனர்; இவர்களின் இந்த புதுமையான மாற்றம் அவதானத்துடன் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மீதான சில மாற்றங்கள் அவசியம் என்பதை சில ஆண் தலைவர்கள் ஏற்கும் நிலைக்கு வந்துள்ள அதேவேளை, திருத்தியமைக்கப்படவுள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பலதார மணம் மற்றும் காதி முறைமை என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகின்றது. அவர்களில் சிலர் முஸ்லிம்கள் தாம் திருமணம் செய்வதற்கு பொதுவான திருமண கட்டளைச் சட்டத்தினைத் தெரிவு செய்யும் விருப்பத் தெரிவை உள்ளடக்குவதற்குக் கூட தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் போராட்டங்களையும் நோக்கும் போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எந்த ஒரு தடையுமின்றி பலதார மணத்தை அனுமதித்து, பாதுகாத்து ஊக்குவிக்கின்றமை, அத்துடன் வழமையான நீதி முறைமைக்கு அப்பால் தனித்து நிற்கும் காதி முறைமையை பேணுகின்றமை என்பன இத்துயரங்களுக்கான பிரதான காரணங்களாக அமைகின்றன. வியப்பு மிக்க வகையில் மற்றும் துரதிஷ்டவசமாக, பலதார மணம் மற்றும் காதி முறைமை என்பவை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை கோபத்துடன் எதிர்க்கும் பல முஸ்லிம் ஆண்களை நோக்கும் போது அவர்களின் பாரம்பரியம் மற்றும் அடையாளம் என்பன பலதார மணம் மற்றும் காதி முறைமை என்பவற்றுக்குள் மாத்திரமே அடங்கியிருப்பது போல் தோன்றுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு வழங்கப்படும் காலாவதியான ஷரீஆ விளக்கங்களில் தங்கியிருப்பதுடன் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் என்பது புனிதமானதொரு சட்டம் என்பதால் ஷரீஆவின் சரத்துக்களுக்கு பொருள் கோடல் வழங்க விசேடமானதொரு முறைமை அவசியம் என்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) கூற்றுடன் ஒத்திசைபவர்களுமாகவே உள்ளனர். இவ்வாறான நோக்குகள் இஸ்லாம் சமத்துவமின்மை மற்றும் அநீதி என்பவற்றை ஊக்குவிக்கும் மார்க்கம் என்ற தோற்றப்பாட்டையே மற்றவர்களுக்கு வழங்குகின்றது. குர்ஆன் போதிக்கும் நீதி மற்றும் நியாயம் பற்றி குர்ஆன் போதிக்கும் கொள்கைகளை தமது வசதிக்கு ஏற்றவாறு அவர்கள் மறந்து விட்டனர்.

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் தன்னதிகாரம் மிக்க, அடக்குமுறை கொண்ட வகையில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள், மற்றும் பல்வேறுபட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச தளங்களில் எம்மில் சிலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் அவ்வாறான சீர்திருத்தங்களைக் கோருவதற்கு உகந்தது அல்ல என எனது சகபாடிகளான பல மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். நாம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டங்களின் மீதான சீர்திருத்தங்கள் பற்றிப் பேசும் போதெல்லாம் அதிகமான பெண்ணின வெறுப்பு மிக்க மற்றும் உயர்குடி முஸ்லிம்கள் இதே சாக்கையே சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் நோக்கில் முன்வைக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான இச்சீர்திருத்தங்களுக்கான போராட்டம் நான்கு ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்ற நிலையிலும் தற்போது வரை தொடர்கின்றது. ஒவ்வொரு ஆட்சியின் போதும் இது சரியான நேரமல்ல என்ற வாதமே முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறெனின், எது சரியான நேரம் என எமக்குக் கூறுங்கள். இன்னும் வளரிளம் பருவத்தில் உள்ள எத்தனை பிள்ளைகள் இந்த கட்டமைப்பினுள் இன்னும் துயருற வேண்டும்? இன்னும் எத்தனை பெண்கள் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டு வீதிகளில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவதுடன் அப்பெண்களின் பிள்ளைகள் குர்ஆனை மனனமிட மட்டும் போதிக்கும் மதரசாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும்? விசேடமாக, இப்போதைய நேரம் அமைதியாக இருப்பதற்கான நேரம் அல்ல.

துரதிஷ்டவசமாக, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் சீர்திருத்தங்களுக்காக குரல்கொடுத்து வரும் பெண்களும் கடந்த பல வருடங்களாக தாம் எதிர்கொள்ளும் வீரியம் மிக்க தாக்குதல்கள் பற்றி அமைதியாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் ஆண்கள் மற்றும் சில முஸ்லிம் பெண்களும் கூட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டங்களை சீர்திருத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இனவாத அரசாங்கத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்பு என சித்தரிப்பதேயாகும். முஸ்லிம் பெண்கள் நீண்டகாலமாக மேற்கொள்ளும் பெண்கள் உரிமைப் போராட்டத்தை, குறிப்பாக முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் காதி முறைமை என்பவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைப் போராட்டத்தை தமக்கு வசதியான முறையில் மறுக்கவோ அல்லது அங்கீகாரம் வழங்காமல் இருக்கவோ செய்கின்றனர். அவர்கள் நீண்டகாலமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தை அங்கீகரிப்பவர்களாகவோ அல்லது சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என மீளாய்வு செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவோ காணப்படவில்லை. முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தை திருத்தியமைப்பதற்கான முன்னெடுப்புகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் அச்சட்டத்தை நாம் முழுமையாக இழந்து விடும் அபாயம் உள்ளது என்ற யதார்த்தம் அவர்களுக்கு கரிசனையற்ற விடயமாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட ‘கற்றறிந்த’ முஸ்லிம்களின் அகம்பாவம் மற்றும் தன்முனைப்பு, வேறுபட்ட குழுக்களின் தீவிரத்தன்மை, சுயலாபம் தேடும் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அடாவடித்தனம் மற்றும் விட்டுக்கொடுக்கா நிலைப்பாடு என்பனவே இன்று வரை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் சீர்திருத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்களாகும்.

சீர்திருத்தங்களுக்கு ஆதரித்து வாதிட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை வெளியில் கொண்டுவந்த பல மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) ஆகிய அமைப்புகளால் பழிவாங்கும் நோக்கில் 2016 மற்றும் 2017 இல் இலக்கு வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர்கள் தமது வாக்குமூலங்களை லால் விஜேநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய பொதுமக்கள் ஆலோசனை பெறும் குழு மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வை உப குழு என்பவற்றுக்கு வழங்கியதன் பின்னரே இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. நானும் எனது சகபாடி ஒருவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னிலை ஆகியமை மற்றும் பெண்கள், சிறுவர்களின் உரிமைகளுக்காக வாதாடிய குற்றங்களுக்காக எம்மைக் கொன்று தகுந்த இஸ்லாமிய பாடம் புகட்டுமாறு NTJ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் புத்தளத்தில் உள்ள இளைஞர்களுக்கு தனது காணொளி போதனை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  நாம் ஆதரித்து வாதிடும் விடயங்கள் ஏற்கனவே அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களேயாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளுள் ஒன்றாக திருமணத்துக்கான வயதெல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்பட்டமைக்கு எதிராக பேருந்துகளில் மக்களைக் கொண்டு வந்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை SLTJ அமைப்பு கடந்த நவம்பர் 3, 2016 அன்று நடத்தியிருந்தது.  அந்த ஆர்ப்பாட்டத்தில் SLTJ அமைப்பின் செயலாளர் பெண்கள் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மேற்குலகின் கைப்பாவைகளாக செயற்பட்டு துரோகம் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். கிழக்கில் உள்ள சகபணியாளர் ஒருவர் முஸ்லிம் சமூகத்தில் குழந்தைத் திருமணங்கள் பற்றிய புள்ளி விபரங்களைச் சேகரித்த வேளை அவர் உள்ளூர் முல்லாக்கள் மற்றும் றிழ்வான் என்ற நபரால் அச்சுறுத்தப்பட்டு அமைதிப்படுத்தப்பட்டார். இந்த றிழ்வான் என்ற நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஒரு தற்கொலைக் குண்டுதாரியாக செயற்பட்டு மரணமடைந்தார். இந்தக் குழுக்கள் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நடுநிலையான மற்றும் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் பெண்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மிரட்டல் மற்றும் அடாவடித்தனம் என்பவற்றைக் கையாள்கின்றன. இதற்கு எதிராக நாம் மேற்கொண்ட முறைப்பாடுகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத் தரப்புகளால் புறக்கணிக்கப்பட்டன. தற்பொழுது கூட இந்தத் தீவிரவாதக் குழுக்கள் 2016 இன் இறுதிப் பகுதி மற்றும் 2017 இன் ஆரம்பப் பகுதிகளில் போதித்த போதனைகளுக்கு ஒத்ததாக அதிகமான முஸ்லிம் ஆண்கள் மற்றும் சில முஸ்லிம் பெண்கள் போன்றோர் நச்சைக் கக்குவதை எம்மால் அவதானிக்க முடியுமாகவுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கவனமாக நோக்குமாறு ஏனைய மதநம்பிக்கைகள் கொண்ட பெண்களை நான் வேண்டிக்கொள்கின்றேன். நாம் எமது சொந்த விடுதலைக்காகப் போராடும் நேரத்தில் மாத்திரமன்றி உண்மைகளைக் கூறுவதன் மூலம் ஏனையோரையும் பாதுகாக்க முற்படும் வேளை உங்களின் முஸ்லிம் சகோதரிகளுக்காக நீங்கள் கை கொடுப்பது இன்றியமையாததாகும்.

சீர்திருத்தப்படாத முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் காதி முறைமை என்பவற்றின் ஊடாக முஸ்லிம் பெண்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுவது முஸ்லிம் சமூகத்தில் ஆழ வேரூன்றிக் காணப்படும் ஆணாதிக்கம் மற்றும் ஆண் மேலாதிக்க மனநிலை என்பவற்றின் ஒரு வெளிப்படுத்தலாகவே நோக்கப்படுகின்றது. “பெண்களின் பாதுகாப்புக்காக”, “அது எமது பெண்களுக்கு கடினமானது” மற்றும் “எமது பெண்கள் ஏனையோருடன் கலக்கும் நிலை ஏற்படும் (முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் சீர்திருத்தப்பட்டு அது வழமையான நீதி முறைமைக்குள் உள்வாங்கப்பட்டால்)” போன்ற வாசகங்கள் அவசரமாக சீர்திருத்தங்களுக்கு எதிராக உச்சரிக்கப்படுவனவாக அமைந்துள்ளன. இது முஸ்லிம் பெண்களை அசைவற்ற ஜடங்களாக மற்றும் அவர்களால் சொந்தமாக நிலைத்திருக்க முடியாதவர்கள் என்ற நிலையில் நோக்கப்படும் மனநிலையை வெளிப்படுத்துகின்றது. இந்த சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் தமது எதிர்ப்பினை காரண விளக்கத்துடன் நியாயப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். பெண்களை சமமாக நடத்துமாறு இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள போதும், அதனை தொடர்ச்சியாக மறுத்து வரும் நிலை மத அடிப்படையில் அன்றி கலாச்சார அடிப்படைகளால் உருவாக்கப்பட்டதாகக் காணப்படுவதுடன் பெண்கள் வலுப்படுத்தப்படுவது தமக்குச் சவாலாக மாற்றமுறும் என்பதாலுமாகும். இந்தப் பின்புலத்தில் நோக்கும் வேளை, முஸ்லிம்கள் தம்மை சமமாக நடத்துமாறும் விசேட சலுகைகளை வழங்குமாறும் அரசாங்கத்திடம் கூறுவது திடமற்றதாகவும் இரட்டைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் மீதான சீர்திருத்தங்கள் தொடர்பான போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களின் பரம்பல் மற்றும் சீர்திருத்தங்களுக்காகப் போராடும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள் என்பன அதிகரித்த வண்ணமுள்ளன. கடந்த செப்டம்பர் 16, 2021 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் நினைவு நாளன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் அடிப்படையையே இல்லாதொழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார். பலதார மணம் மற்றும் காதி முறைமை என்பன இல்லாதொழிக்கப்படுவதற்கான முன்மொழிவுகளை மனதில் நிலைநிறுத்தியே அவர் இக்கூற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்தது. இது அவரின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை எடுத்துக்காட்டுகின்றது. திரு. ஹக்கீம் கடந்த 2010 தொடக்கம் 2014 வரை நீதி அமைச்சராக செயற்பட்டிருந்தார். அவர் நீதி அமைச்சராக செயற்பட்ட காலம் மற்றும் அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளடங்கலாக பல பெண்கள் குழுக்கள் அவருடன் ஏற்படுத்திய பல சந்திப்புகளில் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களை விளக்கியிருந்தனர். இக்குழுக்கள் முன்னாள் அமைச்சருடன் ஈடுபாடுகளைக் கொண்டிருந்த வேளை அவர் சீர்திருத்தங்களுக்கு தான் ஆதரவளிப்பேன் என போலியாக உறுதியளித்திருந்தார். சில மேடைப் பேச்சுக்களிலும் மற்றும் சில செயற்கையான இணக்கப்பாடுகளைக் காண்பிக்கும் சந்தர்ப்பங்கள் தவிர, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை சீர்திருத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் எதனையும் செய்யவில்லை. மாறாக அவர் வசதியாக சீர்திருத்தங்களை எதிர்க்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து அவ்வமைப்பின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார்.

அப்போதைய பிரதமரின் பாரியார் ஸஹ்ரான் பற்றியும் அவரது அதிகரித்து வரும் தீவிரவாதம் பற்றியும் கலக்கமடைய வைக்கும் அறிக்கைகள் அவருக்கு கிடைத்ததாக குறிப்பிட்டு கடந்த பெப்ரவரி 2019 இல் தன்னிடம் விசாரித்ததாக திரு. ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். அச்சமயத்தில் அதிகாரம் மிக்க அமைச்சராக இருந்த அவர் அதற்கு என்ன பதிலை வழங்கியிருந்தார் அல்லது அதற்கு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருந்தார் எனச் சொல்லவில்லை. மேலும், ஸஹ்ரானின் குழு மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவனைப் பற்றி முஸ்லிம் பெண்கள் முன்னரே பிரதமரின் அலுவலகத்துக்கு எச்சரிக்கைகளை மேற்கொண்டமையினை எடுத்துக் கூறவும் அவர் தவறியிருந்தார். பெண்களிடம் இருந்து கிடைத்த இந்த எச்சரிக்கை பெண்களால் மேற்கொள்ளப்பட்டமையினால் அது உண்மையாக இருக்காது என அவர் உதாசீனம் செய்திருப்பார் போலும்.

தற்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்துக்கு மிகவும் அவசியமான இந்தச் சீர்திருத்தங்களுக்கு எதிராக தரப்புகள் ஒன்று குவிவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கடந்த செப்டம்பர் 19, 2021 அன்று “நாடளாவிய முஸ்லிம் இளைஞர்கள் (Muslim Youth Islandwide)” என்ற அமைப்பு தனது இரண்டாவது நிகழ்நிலைக் கருத்தரங்கை நடத்தியிருந்தது. இவ்வமைப்பு அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பில் முதலில் நடத்திய இவ்வாறான கருத்தரங்கில் கருத்துக்களை முன்வைப்பதற்கு ஆண்களை மட்டும் அழைத்திருந்தமை சமூக ஊடகத்தில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. தேசிய நலன் மிக்க இந்த முக்கிய பிரச்சினை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பல்வகைத் தன்மை மிக்க நோக்குகளுக்கு தளம் ஒன்றை வழங்குவதை விடுத்து இந்தக் குழு முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பையே வெளிக்காட்டியது. மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பெண் கருத்துத் தெரிவிப்பாளர்கள் மற்றும் ஏனையோருக்கு எதிராக அக்குழு காண்பித்த நடத்தை சில இளைஞர்கள் கொண்டிருந்த மத சகிப்புத்தன்மையற்ற நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. தாம் தெரிவு செய்த தீவிரத்தன்மை மிக்க ஆண்கள் மற்றவர்களை பயமுறுத்தும் மற்றும் மேலாதிக்கம் செலுத்தும் வகையில் நடந்துகொள்ள அனுமதித்ததுடன் பெண் கருத்துத் தெரிவிப்பாளர்களின் கருத்துக்களை இடைமறித்தல் மற்றும் அவர்களின் ஒலிவாங்கிகளை செயலிழக்கச் செய்து அநாகரிமாக நடந்துள்ளனர். பெண் கருத்துத் தெரிவிப்பாளர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என மீண்டும் மீண்டும் வேண்டுகோள்களை விடுத்தும் இதே நிலை அந்த நிகழ்நிலைக் கருத்தரங்கு முழுவதும் காணப்பட்டது. பலதார மணம் மற்றும் காதி முறைமை என்பவற்றை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் தீவிரமான நோக்குகளை ஊக்குவித்ததுடன் ஏனையோரின் பங்கேற்பை தடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டிருந்தனர். முஸ்லிம் பெண்களை சமமாக நடத்தாத போது, அவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள மறுக்கும் நிலையில் ஒருவர் முஸ்லிம் விரோதக் கொள்கைகளுக்காக ஒரு மேலாதிக்க அரசை மாத்திரம் பொறுப்புக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இக்குழுவின் புறக்கணிப்பு சித்தாந்தம் மற்றும் அதனுடன் இணைந்ததாகக் காணப்படும் சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மை மிக்க ஆணாதிக்கம் என்பன அனைத்து பக்கங்களிலும் தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் தன்மைமிக்கதாக அமைவதால் இது கரிசனை கொள்ள வேண்டிய விடயமொன்றாக அமைந்துள்ளது. மேலும் தீவிரமடைவதால் ஏற்படும் அனர்த்தங்களை முன் தடுக்கும் வகையில் தமது சமூகத்தில் அவதானிக்கத்தக்க எந்தவொரு தீவிரமயமாக்கல் முயற்சிகளையும் முஸ்லிம் சமூகம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

பலதார மணம் மற்றும் காதி முறைமை அகற்றல் என்பன சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களின் பகுதிகளாக அமைந்திருக்கவில்லை என்ற பிழையான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. உண்மையில், இவ்விரு விடயங்களும் 9 வருட காலமாக நீண்ட உரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நீதிபதி சலீம் மர்சூப்பின் குழுவின் ( JSM) அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களாகக் காணப்படுகின்றன. உண்மையில், காதிகள் கட்டமைப்பினை இலங்கையின் நீதித்துறையுடன் இணைந்த அமைப்பாக தரமுயர்த்தல் காதிகளின் எண்ணிக்கையை குறைத்தல் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்தல் என்பன தொடர்பில் JSM குழு ஏகமனதாக இணங்கியிருந்ததுடன் அவற்றுக்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன.

மிலேச்சத்தனமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், தேசிய பாதுகாப்பு என்பது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக்கான மேற்பார்வைக் குழுவில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்திருந்தனர், இம்மேற்பார்வைக்குழு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தை தேசிய பாதுகாப்புடன் தொடர்புறும் விடயமாக அடையாளம் கண்டிருந்தது. இந்த மேற்பார்வைக்குழு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என ஏகமனதாக பரிந்துரை செய்திருந்ததுடன், சீர்திருத்தப்பட வேண்டிய பகுதிகளையும் அடையாளம் கண்டிருந்தது. மேலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரை செய்திருந்தது. அவை பிழையான வியாக்கியானங்களின் அடிப்படையில் காணப்படும் சமூக உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முடியுமான அளவு அரசியலமைப்பின் அடிப்படையில் மதிப்பீட்டுக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

மதநம்பிக்கைகளின் அடிப்படையில் செயற்படும் போகோ ஹராம், ISIS, கடவுளின் எதிர்ப்புச் சேனை, RSS, பஜ்ரங் தள், அல் குவைதா, அல் ஷபாப் அல்லது கடவுளின் சேனை போன்ற எந்தவொரு அமைப்பும் தமது வன்முறை வெளிப்படுத்தல்களை – தீவிரவாதக் கொள்கைகளை பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது இலக்கு வைப்பதன் மூலமே தமது வன்முறைகளை ஆரம்பம் செய்கின்றன. சமூகமொன்றை தீவிரமயமாக்குவதன் முதற் படிநிலையாக பெண்களைக் கட்டுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றிடம் இருந்து சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க போராடும் நாம் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற அபாயகரமான கொள்கையை ஆதரித்து வாதிடும் தீவிரவாத அலகுகள் மற்றும் இனவாத அரசியல்வாதிகளிடம் இருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சமூகத்தினுள் காணப்படும் பால்நிலை பாகுபாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் மீதும் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

ஷரீன் சரூர்