Photo credit: Selvaraja Rajasegar

இக்கட்டுரை சர்வதேச ஜனநாயக தினத்தினை முன்னிட்டு எழுதப்பட்டது. அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட பல நாடுகளில் ஜனநாயகம் தொடர்பான அதிகரித்த கரிசனையொன்று எழுச்சியடைந்து வருவதும் இக்கட்டுரை எழுதப்படுவதற்கு பிறிதொரு காரணமாகும். Freedom House நிறுவனம் “லொக் டவுன்” காலத்தில் ஜனநாயகத்தின் நிலை தொடர்பாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் பொது சுகாதாரம் என்ற பெயரில் ஜனநாயகம், அடிப்படை மனித சுதந்திரம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அச்சத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு இலங்கை விதிவிலக்கல்ல. தற்போது நடைமுறையிலுள்ள “அவசரகால ஆட்சி” இதனை தெளிவாகக் காட்டுகின்றது. இது ஒருபுறம் இருக்க, இன்னும் சில நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதனை காண முடிகின்றது. இதன் காரணமாகவே ஜனநாயகம் தன்னை அழித்துக்கொள்ளும் பண்பினைக் கொண்டுள்ளது என்ற விமர்சனம் பொதுவில் முன்வைக்கப்படுகின்றது. மக்கள் ஆணையினைப் பெற்று ஜனநாயக தேர்தல் ஊடாக ஆட்சிக்கு வரும் தலைவர்கள் காலவோட்டத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களை மற்றும் நெறிமுறைகளை தமது தனிப்பட்ட நலன்களுக்காக அழிக்க முற்படுவதே இத்தகையதொரு விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான பிரதான காரணமாகும். ஆயினும், அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் ஜனநாயகம் மீண்டும் எழுச்சிப்பெறும் என்பதனையும் நாம் மனங்கொள்ள வேண்டும் – அதனை உலகளாவிய அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக விழுமியங்களை மறுதலித்து ஆட்சி நடாத்தப்பட்ட பல நாடுகளில் இன்று ஜனநாயகத்துக்கான குரல் மிக வேகமாகவே எழுச்சிப்பெற்று வருகின்றன. ஜனநாயக தத்துவங்களை மறுதலித்து அபிவிருத்தியை அடைந்துக்கொண்ட நாடுகளிலும் இப்போக்கினை அவதானிக்க முடியும். அந்தவகையில் இக்கட்டுரையானது அபிவிருத்திக்கும் ஜனநாயகத்துக்குமிடையிலான தொடர்பு குறித்து ஆராய முற்படுகின்றது.

அபிவிருத்திக்கு ஜனநாயகத்தின் அவசியம் தொடர்பாக 1990களில் இருந்து வாதிடப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி என்பது ஜனநாயக சட்டகத்தில் இருந்து விடுபட்டு சுயாதீனமாக இடம்பெற வேண்டுமா அல்லது ஜனநாயகம் அபிவிருத்திக்கு அவசியமா? ஜனநாயகம் இல்லாத ஒரு சூழ்நிலையில் அபிவிருத்தி இடம்பெறுமா? ஜனநாயகம் அபிவிருத்தியை ஊக்குவிக்குமா என்பன இந்த தலைப்பு தொடர்பாக பேசுகின்றப்பொழுது எழுப்பப்படுகின்ற பிரதான கேள்விகளாகக் காணப்படுகின்றன. ஒரு நாட்டில் ஜனநாயக முறையொன்று காணப்படுவதானது தேர்தலில் வாக்களித்தல், பொருளாதார அபிவிருத்தி ஆகிய எல்லாவற்றையும் விட மேலானது என ஜனநாயகம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள் வாதிடுகின்றார்கள்.

இதனை விட ஜனநாயகம் தொடர்பாக இன்று உலகில் பிறிதொருவாதமும் இடம்பெற்றுவருகின்றது. அதாவது ஜனநாயகம் அபிவிருத்தியை தூண்டுமா அல்லது அபிவிருத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமா என்பதாகும். உலக வங்கியின் புகழ் பெற்ற ஆய்வாளரான டேனியல் கௌப்மன் (Daniel Kaufman) போன்றவர்கள் இவ்வாதத்தினை முன்வைக்கின்றார்கள். உலகில் சில நாடுகள் ஆரம்பத்தில் ஜனநாயக மரபுகளை புறந்தள்ளி பிரஜைகளின் தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தினையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அபிவிருத்தியை தழுவிக்கொண்டுள்ளன. இதற்காக மக்களும் தமது உரிமைகளை, சுதந்திரத்தை தியாகம் செய்தார்கள். இங்கு குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் யாதெனில், இத்தகைய செயற்பாடுகள் அந்நாடுகள் சுதந்திரம் பெற்ற உடனேயே இடம்பெற்றன என்பதாகும். இதற்கு சிங்கப்பூர், மலேசியா,ஹொங்கொங், பொஸ்வானா போன்ற பல நாடுகளை உதாரணமாக கூறலாம். மறுபுறமாக ஜனநாயக மரபுகளை நீண்டகாலமாக பின்பற்றும் இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேசில், பிலிபைன்ஸ், ஜமைக்கா, இந்தோனேசியா போன்ற பல நாடுகள் இன்னும் அபிவிருத்தியை அடைந்துக்கொள்ளவில்லை.

உதாரணமாக சிங்கபூர் மற்றும் கரேபியன் தீவில் அமைந்துள்ள ஜமைக்கா என்பன 1960களில் சுதந்திரம் பெற்ற நாடுகள் – ஜமைக்கா இயற்கை வளங்களுடன்  அபிவிருத்திக்கான பொருளாதார வாய்ப்புக்களைக் கொண்ட நாடாக காணப்பட்டது. ஆயினும், சிங்கப்பூர் வளங்கள் எதுவும் இல்லாத நாடாக விமர்சிக்கப்பட்டது. இன்று சிங்கப்பூர் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மறுபுறமாக, ஜமைக்கா ஜனநாயக மரபுகளுக்கு அதிகம் முன்னுரிமை வழங்கும் நாடாக தொடர்ந்தும் காணப்படுகின்றது – ஊடக சுதந்திரம் மிக அதிகளவில் மதிக்கப்படுகின்ற நாடு. Freedom House இதனை முழுமையான சுதந்திரத்தினைக் கொண்ட நாடாக அடையாளப்படுத்துகின்றது. 2020ஆம் ஆண்டு அறிக்கையின் படி 100க்கு 80 புள்ளிகளைப் பெற்று முழு அளவிலான ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சிங்கப்பூர் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தி அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கியது. இதற்கு லீக்குவான் யூவின்  தீர்க்கதரிசனக் கொள்கைகள், சிந்தனைகள், வழிக்காட்டல்கள், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியன. ஆயினும், இன்று சிங்கப்பூரில் ஜனநாயத்திற்கான குரல் மேலோங்கி வருகின்றது என்பதனையும் அவதானிக்க வேண்டும். Freedom House சிங்கப்பூரை பகுதியளவில் சுதந்திரமுடைய நாடாகவே தொடர்ந்தும் அடையாளப்படுத்துகின்றது – 100க்கு 48 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளது. மலேசியா (52 புள்ளிகள்) மற்றும் ஹொங்கொங் (52 புள்ளிகள்) ஆகிய நாடுகளும் இந்த வகைப்பாட்டிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறு அபிவிருத்தி மற்றும் ஜனநாயகம் தொடர்பாக மாறுபட்ட வாதங்கள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை போன்ற பன்மைத்தன்மைக் கொண்ட நாடுகளுக்கு நீண்ட போர், சமூகப் பிளவுகள், இன மேலாதிக்கம் காணப்படுகின்ற நாடுகளில் ஜனநாயக வழிமுறைகளுடன் கூடிய அபிவிருத்தி குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தை கட்டுப்படுத்தி அபிவிருத்தியை தழுவிக்கொண்ட நாடுகளின் சமூகப், பொருளாதார, அரசியல் கலாசார சூழ்நிலைகள் இலங்கையின் சூழலில் இருந்து வேறுப்பட்டதாகும். ஆகவே, இங்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற குறிப்பாக, ஸ்கென்டினேவிய நாடுகளில் (நோர்வே, சுவீடன், டென்மார்க்) பின்பற்றப்படும் சமூக ஜனநாயக தத்துவங்கள் ஊடாக அபிவிருத்தி, சமத்துவம், சமூக நீதி, ஐக்கியம் தொடர்பாக சிந்திக்க வேண்டும். இந்த மாதிரியினை உலக வங்கி உட்பட பல சர்வதேச நிதி மற்றும் நன்கொடை நிறுவனங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஊக்குவிக்கின்றன. இந்நாடுகளில் அபிவிருத்தி செயன்முறையின் போது உரிமைகள், பல்லினத்தன்மை, ஐக்கியம், சிறுபான்மையினரின் நலன்கள், சுற்றாடல் பாதுகாப்பு, பங்கேற்பு, கலாசார உரிமைகள், இயற்கை வளங்களின் பயன்பாடு என்பன பெரிதும் கவனத்தில்கொள்ளப்படுகின்ற விடயங்களாக காணப்படுகின்றன. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Freedom House நிறுவனம் உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலையினை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வருகின்றது. அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகிய இரண்டு பிரதான குறிகாட்டிகள் இவ்வாய்வில் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு சுமார் 210 நாடுகளை இவ்வாய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி 100 புள்ளிகளைப் பெற்று உலகில் முழு அளவிலான ஜனநாயகத்தைக் கொண்ட நாடுகளாக நோர்வே, சுவிடன் மற்றம் பின்லாந்து ஆகியன காணப்படுகின்றன. அத்துடன் இந்நாடுகள் மிக உயர் அபிவிருத்தி இலக்குகளை அடைந்த நாடுகளாகவும், சமாதானம், ஐக்கியம், நல்லாட்சி, ஜனநாயகம், ஊழலின்மை, பால்நிலை சமத்துவம், சமூகநீதி போன்ற விடயங்களில் முதல்நிலையில் காணப்படும் நாடுகளாக உள்ளன. பல்வேறு உலக தரப்படுத்தல்களை எடுத்து நோக்குகையில் இந்நாடுகளே முதல் இடங்களைப் பெற்றுக்கொள்கின்றன. இலங்கை 56 புள்ளிகளைப் பெற்று குறைப்பாடுகளைக் கொண்ட ஜனநாயகம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் தரம் தொடர்பாக ஆண்டுதோரும் வெளியிடப்படுகின்ற Democracy Matrix தரப்படுத்தலின் படி (2020) டென்மார்க், நோர்வே, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளே முறையே முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. மேலும் இந்நாடுகள் செயற்படும் அல்லது செயற்பாட்டு ஜனநாயகம் (working democracy) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இத்தரப்படுத்தலில் 93ஆவது இடத்திலும் குறைப்பாடுகளைக் கொண்ட ஜனநாயகம் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் தென்படும் பிறிதொரு விசித்திரமான விடயம் யாதெனில், மிக நீண்டகாலமாக முழு அளவிலான ஜனநாயக நாடாகவும் முழு அளவிலான சுதந்திரத்தினைக் கொண்ட நாடாகவும் கருதப்பட்ட இந்தியா இத்தரப்படுத்தல்களில் பல இடங்கள் பின்தள்ளப்பட்டு கலப்பு ஆட்சிமுறையினைக் கொண்ட நாடாகவும் (ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம்) பகுதியளவில் சுதந்திரமுடைய நாடாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகும். இதற்கு மோடியின் எதேச்சாதிகார ஆட்சி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பிரதான காரணமாகும் என்பதனை இப்போக்குகள் வெளிப்படுத்துகின்றன.

ஸ்கென்டினேவிய நாடுகளின் மாதிரியினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது ஆரம்பத்தில் கடினமான காரியமாக அமையும். ஆனால், தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, வழிக்காட்டல், கொள்கைகளின் நீடித்தத்தன்மை, உறுதியான ஆட்சி, ஊழலைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் ஓரளவேனும் முன்னேற்றம் காணமுடியும். அதன் மூலம் ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஒருமைப்பாட்டுடன் அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும். இது தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதம், ஆய்வுகள் பெரிதும் அவசியம். இத்தகைய மாதிரியை இலங்கையில் எவ்வாறு பின்பற்றலாம், அதன் நன்மைகள், சவால்கள், அவசியமான மூலோபாயங்கள், கொள்கைகள், திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும். நாட்டின் தற்போதைய இனத்துவ அரசியல் போக்குகள், நலிவடைந்து வரும் இன ஒற்றுமை, வீழ்ச்சிக்கண்டு வரும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை நோக்கும் போது இத்தகைய கலந்துரையாடல்களின் அவசியம் அதிகமாகவே உணரப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயகத்தின் அவசியத்தினை பின்வரும் ஐந்து காரணிகள் மூலம் புரிந்துக்கொள்ள முடியும்.

  1. கூட்டுச்செயற்பாடுகளை மேற்கொள்ளவும் கூட்டுத்தீர்மானங்களை எட்டவும்: ஜனநாயக நாடுகளில் இடம்பெறும் தேர்தல்கள் மூலம் பிரஜைகள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கொள்கைத்திட்டங்களை கூட்டாக சேர்ந்து உருவாக்குவதற்கான அதிகாரத்தை தமது பிரதிநிதிகளுக்கு வழங்குகின்றார்கள். இதன் மூலம் வேறுபட்ட இனங்களின், சமூகங்களின் தேவைகள், பிரச்சினைகள், அபிலாசைகள், கோரிக்கைகளை அறிந்து கூட்டாக கலந்தாலோசித்து அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பரந்த கட்டமைப்பினை ஜனநாயகம் வழங்குகின்றது. இதன் மூலம் வளமுகாமைத்துவம், சமூக கலாசார அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பெறுவதுடன், மக்கள் பிரதிநிதிகளும் தமக்கிடையே உள்ள இன, மத, மொழி, சாதி, பால்நிலை வேறுபாடுகளை மறந்து செயற்படுவதற்கான தளத்தை வழங்குகின்றது. ஆயினும், இதன் நடைமுறை முற்றிலும் எதிர்பார்த்தவாறு எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியினையும் எழுப்ப வேண்டும். இதனை இலங்கையினை உதாரணமாகக் கொண்டு சிந்திக்கலாம்.
  2. இயற்கை வளமுகாமைத்துவம்: ஜனநாயகம் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான சிறந்த வழிமுறையென சிலர் வாதிடுகின்றனர். ஆகவே, இயற்கை வளங்கள், சுற்றாடல் தொடர்பான தீர்மானங்களை ஜனநாயக வழிமுறையினூடாக மேற்கொள்வது சிறந்தது. இயற்கை வளங்களின் பயன்பாடு சகல சமூகத்தவருக்கும் சமமாக பகிர்வதற்கு அதன் பலன்களை அனுபவிக்க ஜனநாயகம் பங்களிப்பு செய்யும். இதன் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் சகல சமூகத்தவரையும் சென்றடையும். உலகில் இடம்பெற்ற மற்றும் இடம் பெற்று வரும் பல முரண்பாடுகளுக்கு பிரதான காரணமாக வளப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் அநீதிகள் காணப்படுகின்றன.
  3. மாற்றதிற்கான கருவி: அபிவிருத்தி என்பது இயக்கத்தன்மை கொண்ட ஒரு செயன்முறை. அது காலத்திற்கு காலம் பல பரிணாமங்களைப் பெறும். அதனை உள்ளக வெளியக காரணிகள் தீர்மாணிக்கும். ஆகவே, ஒவ்வொரு அரசாங்கமும் சர்வதேச தேசிய தேவைகளுக்கு அல்லது சவால்களுக்கு ஏற்ப கொள்கைத்திட்டங்களைத் தீட்ட வேண்டும். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி இலக்குகளும் கொள்கைகளும் மூலோபாயங்களும் மாறும் என்பதே உலகில் நாம் பொதுவாக அவதானிக்கும் விடயம். அந்தவகையில் மாற்றங்களைத் தழுவிக்கொள்ள ஜனநாயம் பெரிதும் அவசியமாகும். மாற்றங்களை நோக்கிச் செல்லும் போது எந்தவொரு இன அல்லது சமூகப் பிரிவினரும் பாதிப்புகளுக்கு அல்லது இழப்புகளுக்கு உள்ளாகக் கூடாது. அது அச்சமூகத்தின் உரிமைகளை, நலன்களை பாதித்துவிடும். அத்தகைய காரியங்களை அபிவிருத்தி செயன்முறையில் தடுப்பதற்கு ஜனநாயகம் அவசியம். இதன் மூலம் சகல இனங்களிடையும் ஐக்கிய உணர்வினை ஏற்படுத்த முடியும். காரணம், மாற்றங்கள் கலந்துரையாடல், பங்கேற்பு, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் இடம்பெறுவதாகும்.
  4. பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தியாக ஜனநாயகம் காணப்படும்: ஒரு உறுதியான ஜனநாயக சூழலானது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, வருமான பகிர்வு, உற்பத்தி, விவசாயம், கைத்தொழில், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியத்துறைகளில் யாவரும் சமமாக வளர்ச்சியைத் தழுவிக்கொள்ள ஜனநாயக சூழல் அவசியம். ஜனநாயக சூழல் இல்லாதப் போது, ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவினர் மேற்கூறிய துறைகளில் பயனடைய ஏனையோர் ஓரங்கட்டப்படுகின்றனர். இதனை இலங்கையில் சுதந்திரம் பெற்றக்காலத்தில் இருந்து அவதானிக்க முடியும். இவற்றை ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அபிவிருத்தியின் பயன்களை யாவரும் அடைய ஜனநாயக வழிமுறை ஊடான அபிவிருத்தி அவசியமாக உள்ளது. மிக முக்கியமாக, ஜனநாயக சூழல் ஒன்றிலேயே சட்டத்தின் ஆட்சியும் சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற தத்துவமும் காணப்படும். இது பொருளாதார அபிவிருத்திக்கான முதலீடுகளை கொண்டு வருவதற்கு, தனியார் துறையின் பங்களிப்பினை அபிவிருத்தியில் ஊக்குவிக்க பெரிதும் அவசியமாகும். எல்லாவற்றுக்கும் அப்பால் அரசாங்கத்தின் மீது பொது மக்களின் நம்பிக்கை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை உறுதி செய்ய ஜனநாயக ஆட்சிக்கட்டமைப்பு பெரிதும் அவசியமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மாரின் தற்போதைய நிலையினை உன்னிப்பாக அவதானித்தால் இதனை மேலும் விளங்கிக்கொள்ள முடியும்.
  5. சமாதானத்தை ஏற்படுத்த உதவும்: உறுதியான ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கட்டமைப்புக்கள் நிலையான அபிவிருத்திக்கு உதவும். அதன் மூலம் ஐக்கியம், சமாதானம் ஏற்படுவதாகப் பொதுவில் வாதிடப்படுகின்றது. ஜனநாயகமும் அபிவிருத்தியும் ஒருங்கிணைந்து செல்லும் போது அது சகல இன, மத, மொழி, சமூகப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்வதற்கு உதவும். அதன் ஊடாக ஐக்கியமும் சமாதானமும் பிறக்கின்றது என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது. ஜனநாயகமற்ற சமூகங்களில் சமாதானம் மற்றும் ஐக்கியம் என்பன சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தல் ஊடாக இடம்பெறும் – ஆயினும் இவை நிலையானவையல்ல.

மேற்குறிப்பிட்ட ஐந்து விடயங்களும் ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி பேசும் போது பரவலாக முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களாகக் காணப்படுகின்றன. இவற்றின் நடைமுறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. இதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல், கலாசார கட்டமைப்புகள், கலாசாரம், வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆகவே, உண்மையான அபிவிருத்தி, ஐக்கியம் என்பவற்றை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் மேற்கூறிய காரணிகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். இலங்கை மிக நீண்ட ஜனநாயக பாரம்பரியங்களை பின்பற்றிய நாடு. ஆயினும், அவ்வப்போது பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி செயன்முறையில் அல்லது தேசத்தை கட்டியெழுப்புதல் என்ற செயன்முறையில் விட்ட தவறுகள், காட்டிய பாகுபாடுகள், ஓரங்கட்டல்கள் என்பன ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் நாட்டின் ஐக்கியத்தையும் பெரிதும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.

உலகில் புகழ்பெற்ற பல்கலைகழகமான Massachusetts Institute of Technology (MIT) இல் பணியாற்றும் பேராசிரியரான Daron Acemoglu மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் வாதிடுவதுபோல் இன்று பல நாடுகளில் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.  இது தனிப்பட்ட அபிவிருத்திக்கும் பொருளாதார செழுமைக்கும் பெரிதும் அவசியமாகும். இவர்கள் சுதந்திரத்தை மிக எளிமையாக வரையறுக்கின்றார்கள். மக்கள் வன்முறையில் இருந்து விடுபட்டு, அச்சுறுத்தல் மற்றும் இழிவான, சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் இருந்து சுதந்திரமாக வாழும் நிலை என குறிப்பிடுகின்றார்கள். சுதந்திரமான சூழல் ஒன்று காணப்படும் போது மக்களால் சுயாதீனமான தெரிவுகளை, செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன், காரணமில்லாத தண்டனைகள், மூர்க்கத்தனமான சமூக தடைகள் இன்றி வாழ முடியும் என வாதிடுகின்றார்கள். சில நாடுகளில் சாதாரண மக்களின் சுதந்திரம் அரசாங்கத்தினால், அதன் நிறுவனங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையினை நாம் அவதானிக்க முடியும். அதன்போது சட்டத்தினை ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று பயன்படுத்தும் நிலை ஏற்படும். அந்நிலை இலங்கையில் தற்போது அதிகரித்து வருகின்றது.

ஆட்சிமுறை தொடர்பாக இடம்பெற்ற பல ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டிருப்பது யாதெனில், மிகவும் பலம் பொருந்திய, எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்ட அரசுகள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொள்ளும் அதேவேளை, பலவீனமான அரசொன்று நிலவும் போது சட்டமில்லாத நிலை ஏற்படும் என்பதாகும். இவ்விரண்டு போக்கினையும் நாம் இலங்கையில் பார்க்கலாம். இரண்டாவது போக்கினை இன்று அதிகமாகவே உணர முடிகின்றது. வேறு வகையில் கூறுவதாயின், ராஜபக்‌ஷவின் 10 வருட ஆட்சி முதலாவது கூற்றுடன் ஒத்துநிற்பதனையும் இரண்டாவது கூற்று தற்போதைய அரசாங்கத்துடன் ஒத்துநிற்பதனையும் அவதானிக்க முடியும். ஆகவே, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஆட்சியொன்றின் தேவை இன்று காணப்படுகின்றது.

சுதந்திரத்தை அடைந்துக்கொள்ள மற்றும் உறுதிசெய்ய சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும். அது அரசின் அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக அமையும். இத்தகைய போராட்டங்கள் சாதாரண மக்களின் அடிப்படை சுதந்திரத்தை உறுதிசெய்ய உதவும். சுதந்திரம் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டாலும், அரசாங்கத்தின் அதிகாரத்தினைக் கட்டுப்படுத்த தடைகள் மற்றும் சமன்பாடுகள் காணப்பட்டாலும், பலமான சக்திகள் அதிகாரத்திற்கு வரும் போது அவை சாதாரணமாக மீறப்படும். இதனை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நாம் வெளிப்படையாகவே அவதானிக்கலாம். பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அரியலமைப்பு ரீதியாக அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், பதவியில் இருக்கும் பலமான சக்திகள் அல்லது குடும்பத்திடம் அதிகாரம் குவியும் போது அவை சாதாரணமாகவே மீறப்படுகின்றன. மறுபுறமாக, அரசு பலவீனமாகக் காணப்படும் போது சமுகத்தில் கானப்படும் பலமான அல்லது ஆதிக்கம் செலுத்தும் இன, மத, சாதி அடிப்படையிலான குழுக்கள் அதிகாரத்தினைக் கைப்பற்றி அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.

இதற்கு மிக சுவாரஸ்யமான உதாரணமொன்றை Daron Acemoglu மற்றும் ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் “The Narrow Corridor : States, Societies and the Fate of Liberty” (2019) என்ற நூலில் வழங்கியுள்ளார்கள். இவ்விரு நூலாசிரியர்களே றூல Why Nations Fail என்ற  புகழ்ப்பெற்ற நூலினை எழுதியுள்ளார்கள். இவர்கள் முன்வைக்கும் உதாரணம் யாதெனில், சுமார் 4200 வருடங்களுக்கு முன்னர் உருக் யுகத்தில் (4000-3200 BC) சுமேரியன் நகரில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அங்கு கில்கமெஸ் என்பவர் ஆட்சியாளராக இருந்துள்ளார். இவர் சர்வாதிகார ஆட்சியாளர். இவர் சகல வசதிகளையும் கொண்ட பிரம்மாண்டமான நகரம் ஒன்றினை மக்களுக்கு பரிசாக வழங்கினார். அதற்கு மாற்றீடாக அவர்களின் சுதந்திரத்தை முழுமையாக அவருக்கு வழங்குமாறு கோரினார் – அதன் மூலம் மக்களின் சுதந்திரத்தினை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான சம்மதத்தினைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், மக்கள் தமது மகன்களை கில்கமெஸ்சின் கொலை விளையாட்டுக்கு தியாகம் செய்யவேண்டி ஏற்பட்டது. அத்துடன், பெண் பிள்ளைகளை அவரின் காமத்துக்கு இறையாக்கினார். அதன் பின்னர் மக்கள் கொடூரமான ஆட்சியின் அடக்குமுறையினை தாங்க முடியாமல் அவரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள். அவரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அரசியலமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும், அவை (அரசியலமைப்பு ரீதியான வரையறைகள், கட்டுப்பாடுகள்) பின்னர் கில்கமெஸ்சின் விருப்பங்களுக்கு ஏற்பவே செயற்படுத்தப்பட்டன. காரணம், ஆட்சியாளரின் அதிகாரம் சகல துறைகளிலும் மேலோங்கிக் காணப்பட்டது. இதன் மூலம் புலப்படுவது யாதெனில், எதேச்சாதிகார ஆட்சியின் கீழ் சட்டங்கள் இருந்தாலும் அவை ஆட்சியாளருக்கு சார்பாகவே பிரயோகிக்கப்படும் என்பதாகும். இது இன்று பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் நாம் காணும் பிரச்சினையாகும். இலங்கையில் இந்நிலைமையினை 2005-2014 வரையிலான காலத்தில் தெளிவாக அவதானித்தோம். மறுபுறமாக, மக்களின் உரிமையை பாதுகாக்க தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வரும் சக்திகள் பின்னர் சில தீய சக்திகளுடன் இணைந்து மக்களின் ஜனநாயக உரிமைகளை சுதந்திரத்தை அடக்க முற்படுவர்.

இலங்கையை பொறுத்தவரை  2005- 2014 வரை காணப்பட்ட சர்வாதிகார ஆட்சியினை இல்லாது செய்ய பல சமூக சக்திகள் முன் நின்று செயற்பட்டன. மீண்டும் தற்போது அத்தகையதொரு தோற்றப்பாட்டினை அவதானிக்க முடிகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சி மற்றும் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சக்திகளை அடக்க முற்படுகின்றது. அதன் மூலம்  “பொலிஸ் அரசு” ஒன்றினை நிலைநாட்ட முற்படுகின்றது. ஆகவே, இலங்கை போன்ற நாடுகளில் ஜனநாயகத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் அவசியமாகும். ஜனநாயகம் நிறுவனமயப்படுத்தப்படாத நாடுகளில் இத்தகைய போராட்டங்களே மானிட சுதந்திரத்திற்கான பாதைகளை ஓரளவேனும் திறந்துவிடும். அதன் மூலம் எதேச்சாதிகாரத்துக்கான பாதையினை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகவும் ஒரு கலாசாரமாகவும் மாறும் வரையில் இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்தும் அவசியமாகும் என்பதனையே உலக அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கலாநிதி இரா. ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்