Photo, LAKRUWAN WANNIARACHCHI/AFP via Getty
2014 மே 7ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் சந்துன் மாலிங்க என்ற 17 வயது இளைஞனும், மேலும் நால்வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்கள். அடுத்த நாள் பிற்பகல் 2.30 அளவில் சந்துனின் தாயார் பொலிஸ் நிலையத்திற்கு வந்து, அவனைப் பார்த்த பொழுது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சந்துன் கூறினார். தனது மகனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டுமென தாயார் விடுத்த வேண்டுகோளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிராகரித்தார்கள். சந்துனின் தாயார் மீண்டும் இரவு 7.30 அளவில் அங்கு வந்து மகனைப் பார்த்ததுடன், தனது மகனின் நிலைமை மோசமாக இருந்து வருவதனை அவதானித்துள்ளார். அப்போது சந்துன் அழுதவாறு குளிர்ந்த தரையில் படுத்திருந்துள்ளார். சந்துனின் நெஞ்சை தடவிய பொழுது, நெஞ்சுப் பகுதி வீங்கியிருப்பதை தாயார் தெரிந்து கொண்டார். தனது மகனை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு மீண்டும் அவர் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதனையடுத்து, சந்துனும் ஏனைய நால்வரும் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் (DMO) எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் மாஜிஸ்ட்ரேட் நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அன்று மாலையில் பதுளை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். அவர்களுடன் சேர்த்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்துனின் மற்றொரு சகோதரர் அடுத்த நாள் மே 09ஆம் திகதி அதிகாலை 5.30 அளவில் சந்துனுக்கு மூச்சுத் திணறல் இருந்து வருவதனையும், மூச்சு விடுவதற்கு அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இதனை உடனடியாக சிறை உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்ததுடன், அவர்கள் சந்துனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால், ஏற்கனவே கால தாமதம் ஏற்பட்டிருந்த பின்னணியில் சந்துனின் மரணத்தை தடுக்க முடியாது போய்விட்டது.
சட்டத்தரணிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சந்துனின் குடும்பத்தினர் இது தொடர்பாக நீதிக்காக குரலெழுப்பி வந்ததுடன், பதுளை உயர் நீதிமன்றம் சந்துனின் கொலையை நிகழ்த்திய குற்றத்தின் பேரில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவருக்கும் 2017 ஜனவரி 09ஆம் திகதி மரண தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது.[i]
அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இந்த ஆறு உத்தியோகத்தர்கள் சந்துனின் அரசியல் யாப்பு ரீதியான உரிமைகளை மீறி இருப்பதாக 2021 மே 21ஆம் திகதி பிரகடனம் செய்தது.[ii] மேலும், அது சந்துனின் தாயாருக்கு ஒரு நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தது. அவ்விதம் மீறப்பட்டிருந்த திட்டவட்டமான உரிமைகள் வருமாறு: சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல் மற்றும் குரூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்தப்படுதல் என்பவற்றுக்கு உள்ளாகாதிருப்பதற்கான உரிமை (உறுப்புரை 11), சட்டத்தின் சமமான பாதுகாப்பு (உறுப்புரை 12-1) மற்றும் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உரிய நடைமுறையின் பிரகாரமன்றி வேறு விதத்தில் கைது செய்யப்படாதிருத்தல் (உறுப்புரை 13-1). பிரேத பரிசோதனை அறிக்கை சந்துனின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததனை எடுத்துக் காட்டியிருந்தது. தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முனை மழுங்கிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டதனால் ஏற்பட்டிருந்த காயங்கள் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், அக்காயங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டிருந்ததை போல ஒரு ‘குழப்ப நிலை’ காரணமாக அல்லது ‘குறைந்தபட்ச பலத்தைப்’ பயன்படுத்தியதன் விளைவாக ஏற்பட்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, கடும் தாக்குதல்களின் விளைவாகவே அக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அச்சம்பவத்தின் போது, அதே உத்தியோகத்தர்களினால் உரிமைகள் மீறப்பட்டிருந்ததன் அடிப்படையில் சந்துனுடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்த ஏனைய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தது.
மாஜிஸ்ட்ரேட் நீதவான், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிறை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் உதாசீனம்
பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், உரிய நேரத்தில் சந்துனுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்க முடியுமென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அவரை அடித்து, துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது உரிமைகளை மீறிய முதன்மை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வேறு பல அரச அதிகாரிகளின் உதாசீனமான நடத்தையையும் சுட்டிக் காட்டியிருந்தது. எனினும், எனக்குத் தெரிந்த வரையில், தமது உதாசீனம் தொடர்பாக தொழில்சார் ரீதியிலோ அல்லது குற்றவியல் அடிப்படையிலோ அவர்களில் எவரும் பொறுப்பாக்கப்பட்டிருக்கவில்லை.
சந்துனும், ஏனையவர்களும் மீகஹகிவுல மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் (DMO) எடுத்துச் செல்லப்பட்டிருந்த பொழுது, அந்த அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் சுமார் 30 நிமிட நேரம் தனிப்பட்ட உரையாடலொன்றை நடத்தியிருந்ததாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவர் சந்துனின் உடலிலிருந்த காயங்கள் தொடர்பாகவோ அல்லது சந்துன் மற்றும் ஏனையவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவோ எந்தவொரு விடயத்தையும் பொலிஸாரிடம் கேட்டிருக்கவில்லை. மாவட்ட மருத்துவ அதிகாரி தனது உச்சமட்ட ஆற்றலின் அடிப்படையில் தனது கடப்பாடுகளை நிறைவேற்றி வைத்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், சந்துன் மற்றும் ஏனையவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக அவர் அதிகளவில் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
சந்துன் மற்றும் ஏனையவர்கள் பசறை மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்துனின் தாயார் அமர்த்தியிருந்த சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைக்க முயன்ற பொழுது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து அவருக்கு இடையூறு விளைவித்து வந்த பின்னணியில், மாஜிஸ்ட்ரேட் நீதவான் சந்துன் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு அந்த சட்டத்தரணிக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கவில்லை என மனுதாரர்கள் கூறியிருந்த விடயத்தையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. சந்துன் மற்றும் ஏனையவர்கள், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதையின் பின்னர் நல்ல உடல் ஆரோக்கிய நிலையில் இருந்து வரவில்லையென்ற விடயத்தை கவனத்தில் எடுத்து, மிகச் சிறந்த விதத்தில் இந்த நிலைமையை அணுகுவதற்கு மாஜிஸ்ட்ரேட் நீதவான் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமென்ற விடயத்தையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
சிறைச்சாலை கட்டளைச் சட்டம் தொடர்பாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சிறைக் கைதிகளை பரிசோதனை செய்ய வேண்டிய சட்ட ரீதியான கடப்பாட்டினை சிறை அதிகாரிகள் கொண்டுள்ளார்கள் என்ற விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தது. சந்துன் கடுமையாக தாக்கப்பட்டிருந்தமை மற்றும் அவரது உடலில் வெளிப்படையாக தெரியும் காயங்கள் இருந்து வந்தமை என்பவற்றை கவனத்தில் எடுத்து, சிறையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவரை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டிய கடப்பாட்டினை சிறை அதிகாரிகள் கொண்டிருந்தார்கள் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. பதுளையில் அமைந்திருக்கும் மாகாண பொது வைத்தியசாலை, பதுளை சிறைச்சாலைக்கருகில் அமைந்திருப்பதாகவும், அவருக்கு வைத்தியசாலையில் வெளி அல்லது உள் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டிருக்க முடியுமென்றும் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இதிலும் பார்க்க பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்க முடியும் என்ற விடயத்தையும் சுட்டிக் காட்டியிருந்தது.
இலங்கை மனித உரிமைகள்; ஆணைக்குழுவினால் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை[iii] சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் (JMOs) , ஆட்களை கைது செய்யும் உத்தியோகத்தர்களுக்குமிடையில் ஒரு விதமான கள்ள கூட்டு இருந்து வருவதற்கான வலுவான குறிகாட்டிகளை அவர்கள் நேர்காணலுக்குட்படுத்திய தடுப்புக் காவல் கைதிகளின் கதைகளிலிருந்து கண்டுகொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ளது. சட்ட மருத்துவ அதிகாரிகளின் பரிசோதனைகளில் பொலிஸார் தலையிட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. மேலும், ஏதேனும் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பான கேள்விகளை சட்ட மருத்துவ அதிகாரிகள் கேட்பதில்லை என்றும், ஒரு சில நிமிடங்களில் அந்தப் பரிசோதனையை முடித்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், தாம் முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதவான் ஒருவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பான வெளிப்படையான அடையாளங்கள் இருந்து வந்த போதிலும் அல்லது தாம் அனுபவித்த வன்செயல்கள் குறித்து மாஜிஸ்ட்ரேட் நீதவானிடம் அவர்கள் தெரிவித்திருந்த போதிலும், சம்பந்தப்பட்ட அக்கைதிகள் ஒரு சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னால் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெனவோ நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல்கள் குறித்த ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவோ அவர் கட்டளையிட்டிருக்கவில்லை அல்லது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட நபர் மருத்துவ பராமரிப்பை அணுகுவதனை உறுதிப்படுத்தியிருக்கவுமில்லை. சிறையில் அனுமதிக்கப்படும் பொழுது, சட்டத்தின் பிரகாரம் கட்டாயமாக ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு சில சிறைச்சாலைகளில் வசதிக் குறைபாடுகள் மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை என்பன காரணமாக இத்தகைய மருத்துவ பரிசோதனை இடம்பெறுவதில்லை என்ற விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
அண்மைக்கால தடுப்புக் காவல் மரணங்கள்
உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று புகழ் மிக்க தீர்ப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஊரு ஜுவா என்ற பெயரில் அழைக்கப்பட்ட மெலன் மாபுல மற்றும் கொஸ்கொட தாரக என்ற பெயரில் அழைக்கப்பட்ட தாரக விஜேசேகர ஆகிய இருவரும் இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்து வந்த நிலையில் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாக முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேண்டுகோள்கள் மற்றும் அவர்களுடைய மரணங்கள் இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளியாகிய அறிக்கைகள் என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. முதலாவது சம்பவத்தினை உடனடுத்தும், இரண்டாவது சம்பவத்துக்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னரும் (மே 12 இரவு) சம்பந்தப்பட்ட நபரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் வட்ஸப் என்பவற்றுக்கூடாக பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சந்தேக நபரின் சட்டத்தரணிகளில் ஒருவரும் தனது கட்சிக்காரர் எதிர்கொண்டு வரும் மரண அச்சுறுத்தல்கள் குறித்து மே 12ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கும், சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.[iv]
திரு. டி. சுனில் இந்திரஜித் என்ற 49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை (தனிமைப்படுத்தப்பட்டிருந்த) தனது குடும்பத்தினருக்கு உணவைப் பெற்றுக் கொள்வதற்கு வெளியில் சென்ற பொழுது மே 17ஆம் திகதி மரணமடைந்திருந்தார். வெளியில் செல்வதற்கு முன்னர் அவர் பொலிஸாருக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் முன்னரேயே அது குறித்து தெரிவித்திருந்தார். முன்னணி சட்டத்தரணி ஒருவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில், இந்திரஜித் மீது தாக்குதல் நடத்துமாறு இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றொரு நபரிடம் கேட்டுக் கொண்டதாகவும், இந்திரஜித் பாதையில் விழுந்த பின்னர் ஒரு பேருந்து அவரது உடலுக்கு மேலால் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார். கடமை புறக்கணிப்பு காரணமாக இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 வயதான திரு. சந்திரன் விதூசன் என்பவர் ஜூன் 3ஆம் திகதி மரணமடைந்தார். மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் படிவத்தின் பிரகாரம், ஐஸ் என்ற பெயரில் பொதுவாக மக்களால் அழைக்கப்படும் மெதாபெதமைன் (methamphetamine) போதை காரணமாக அவர் மரணமடைந்திருந்தார். ஆனால், (பொதுவாக மரணத்தை ஏற்படுத்தாத) அவரது உடலிலிருந்த ஒரு சில சிறு காயங்களையும் இந்தப் படிவம் குறிப்பிடுகின்றது. அவர் பொல்லுகளால் தாக்கப்பட்டார் என குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக ஊடங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரைத் தூக்கி, தரையில் அடித்ததாகவும், அந்தத் தாக்குதலின் விளைவாக மரணம் நிகழ்ந்திருப்பதாக சந்தேகிப்பதாகவும் அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டிருந்தன.
இரு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான திரு. மொஹமட் அலி மேல் மாகாணத்தில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருந்த பொழுது ஜூன் 6ஆம் திகதி மரணமடைந்தார். பொலிஸ் பேச்சாளரின் கூற்றின் பிரகாரம், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர் பொலிஸ் ஜீப்பிலிருந்து வெளியே குதித்துள்ளார். கடமையை புறக்கணித்தமைக்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. பொலிஸார் தனது கணவரை அடித்துக் கொன்றுள்ளார்கள் என அவருடைய மனைவி கூறியுள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகளின் மரணத்தையடுத்து, தமது காவலின் கீழ் இருந்து வந்த ஆயுதம் தரிக்காத சந்தேக நபர்களை பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் பாதுகாக்கத் தவறியிருக்கும் விடயத்தை நம்ப முடியாதுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மே 13ஆம் திகதி குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக அது ஆழ்ந்த, பாரதூரமான கவலையை வெளிப்படுத்தியதுடன், தமது தடுப்புக் காவலில் இருந்து வரும் ஆட்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறும் பொலிஸ் மா அதிபரையும் உள்ளடக்கிய விதத்தில் பொலிஸாரை கண்டனம் செய்திருந்தது.[v] இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு ஜூன் 8ஆம் திகதி அனுப்பி வைத்த கடிதத்தில், ஜூன் 3 மற்றும் ஜூன் 6 ஆகிய திகதிகளில் தடுப்புக் காவலில் இடம்பெற்றிருந்த இரண்டு மரணங்கள் குறித்து எடுத்துக் காட்டியிருந்தது. ஐந்து நாட்களுக்குள் அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் குறித்த ஓர் அறிக்கையை அது கோரியிருந்தது.[vi]
பொலிஸ் காவலில் மற்றும் சிறையில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற மரணங்கள்
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காவல் கைதி ஒருவர் எதிர்கொண்டு வந்த மரண அச்சுறுத்தல்கள் குறித்து தெரியப்படுத்தி பொலிஸ் மா அதிபருக்கும், கொழும்பு குற்றப் பிரிவுக்கும், பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் 2020 அக்டோபர் மாதம் 19ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொலைநகல்களை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அடுத்த நாள் அந்த தடுப்புக் காவல் கைதி பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த பொழுது மரணமடைந்தார்.[vii] இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2020 அக்டோபர் 20 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த ஒரு கடிதத்தில், அந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் பொலிஸ் தடுப்புக் காவலில் எட்டு மரணங்கள் இடம்பெற்று வந்திருப்பதனை தாம் அவதானிருந்ததை சுட்டிக் காட்டியிருந்ததுடன், இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி, அத்தகைய சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறுவதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஐந்து நாட்களுக்குள் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
கடந்த ஆண்டின் போது 16 தடுப்புக் காவல் கைதிகள் மரணமடைந்திருப்பதாக அறிக்கையிடப்பட்டிருப்பதுடன், நான்கு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற ஐந்து சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்திருந்தார்கள். கொவிட்-19 சம்பந்தப்பட்ட எதிர்ப்புக்களின் போது எதிர்கொள்ள நேரிட்ட பதில் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். மிதமிஞ்சிய அளவில் ஆட்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருத்தல், கொவிட்-19 ஊர்ஜிதப்படுத்தப்பட்ட கைதிகளை ஏனைய கைதிகளிலிருந்து புறம்பாக பிரித்து வைக்காதிருந்த நிலை, வருகை தருபவர்கள் தொடர்பான கட்டுப்பாடுகள், குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதற்கான மாற்றுத் தொடர்பாடல் முறைகள் வழங்கப்படாமை என்பன சிறைச்சாலைகளுக்குள் எதிர்ப்புக்களை தூண்டிய காரணங்களாக இருந்து வந்தன. வருகை தருபவர்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக போஷாக்கு மிக்க உணவு வகைகள் கிடைக்கும் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டு காலப் பிரிவின் போது சுமார் ஐந்து சிறைச்சாலைகளில் 12 சிறைக் கைதிகள் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் போதை வஸ்துக்கள் அல்லது சட்ட விரோதமான மதுபான வகைகளை பயன்படுத்தியவர்கள் அல்லது வியாபாரம் செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது. அவர்கள் விளக்கமறியலில் இருந்து வரும் காரணத்தினாலும், இன்னமும் அவர்கள் மீது குற்றத் தீர்ப்பு வழங்கப்படாத காரணத்தினாலும் அத்தகைய கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க முடியாதிருப்பதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், தற்கொலை செய்து கொண்ட கைதிகளில் ஒருவருக்கு எதிராக குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மற்றொரு கைதி சிறை ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.
நீதியை நிலை நிறுத்துதல் மற்றும் தடுப்புக் காவல் மரணங்களை தடுத்து நிறுத்துதல்
கந்தகெட்டிய சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டும், வெளியில் தெரியாத மற்றொரு துன்பியல் நாடகம், குற்றச் செயல்களை இழைத்த நபர்களுக்கு நீண்டகால சிறைத் தண்டனைகள் மற்றும் உயரளவிலான அபராதங்கள் விதிக்கப்படும் பொழுது அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு நேரும் கதியாகும். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்கிறார்கள். சந்துனின் தாயாரின் கூற்றின் பிரகாரம், தான் தனது மகனை நிரந்தரமாக இழந்து விட்டாலும் கூட, ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து கேள்விப்பட்ட போது தனக்கு கவலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். அவர் ஊடகங்களிடம் இப்படி தெரிவித்திருந்தார்: “தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய தினம் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் குடும்ப உறுப்பினர்கள் அங்கு சமூகமளித்திருந்தார்கள். தீர்ப்பு வாசிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் அழுது புலம்பினார்கள். சிறு குழந்தைகளையும் உள்ளடக்கிய விதத்தில் சுமார் 30 குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருந்தார்கள். எனது மகன் கொல்லப்பட்டிருந்தாலும் கூட, ஆறு குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியிருப்பதை பார்க்கும் பொழுது எனக்கு பெரும் கவலை ஏற்படுகின்றது. இப்பொழுது குற்றமிழைத்த நபர்கள் தமது செயல்கள் குறித்து வருந்திக் கொண்டிருக்க முடியும்.”
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆட்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதற்கான சட்ட ரீதியான பொறுப்பினையும், தார்மீக ரீதியான பொறுப்பினையும் அரசு கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பொறுப்பு தொடர்ந்தும் மீறப்பட்டு வந்துள்ளது என்பதனையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதங்களுக்கான பொலிஸ் மா அதிபரின் எதிர்வினை மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளின் முன்னேற்றம் என்பன தொடர்பாக எதுவும் தெரியாதிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டது. பல சம்பவங்கள் தொடர்பாக நீதியை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு வெகு தொலைவில் இருந்து வருவதுடன், அதற்கான சந்தர்ப்பங்களும் இருண்டவையாகவே உள்ளன.
கந்தகெட்டிய பொலிஸ் படுகொலை, சிறிய ஆனால் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்களில் ஒன்றாகும். இச்சந்தர்ப்பங்களில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியிலும் கூட அவற்றிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும், சட்டத்தரணிகளும் காட்டிய திடசங்கற்பம் மற்றும் துணிச்சல் என்பன காரணமாக அரச தடுப்புக் காவலில் இடம்பெற்றிருக்கும் மரணங்கள், சித்திரவதை, குரூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவுபடுத்தும் செயல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு நீதி கிடைத்துள்ளது. நீதி மற்றும் பொறுப்புக் கூற வேண்டிய நிலை என்பன, தவறிழைக்கும் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொடர்பாக ஒரு தடுப்புக் காரணியாக செயற்பட முடியும். மேலும், அது மாஜிஸ்ட்ரேட் நீதவான்கள், மருத்துவ அதிகாரிகள் போன்ற ஏனைய பொறுப்பு வாய்ந்த நபர்கள் இத்தகைய சம்பவங்களின் போது மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் செயற்படுவதற்கு அவர்களைத் தூண்ட முடியும். கட்டமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் மற்றும் அத்தகைய சம்பவங்களுக்கு எதிராக சமுதாயத்திலிருந்து வரக்கூடிய கடும் எதிர்ப்புணர்வு என்பனவும், அத்தயை சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வைக்கும் விடயத்திலும், எதிர்காலத்தில் அத்தகைய சம்பவங்கள் ஏற்படுவதனை தடுப்பதிலும் நிர்ணயகரமான காரணிகளாக இருந்து வருகின்றன.
ருக்கி பெர்னாண்டோ
Kandaketiya Judgement and Continuing Deaths in State Custody என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
[i] பதுளை உயர் நீதிமன்ற வழக்கு இல. 2015
[ii] SC/FR/157/2014
[iii] இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சிறைச்சாலைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு, டிசம்பர் 2020
[iv] சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் கமிட்டி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த கடிதம், மே 17, 2021
[v] இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை, மே 13, 2021
[vi] இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2021 ஜூன் 8ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதம்
[vii] இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2020 அக்டோபர் 21ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதம்