Photo: FORBES

உத்தேச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவினால் உருவாகக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்டரீதியிலான பாதிப்புகள் என்ன? வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பாதிப்புகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் சட்ட மூலம் எங்கள் அரசமைப்பிற்கு முரணாண விதத்தில் வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக துறைமுகநகர் உருவாக்கம் முயல்கின்றது என்ற கருத்தை நான் கொண்டிருக்கின்றேன்.

இந்த உத்தேச சட்டமூலம் எங்கள் அரசமைப்பு நிர்வாக முறைக்கு வெளியே புதிய புவியியல் மற்றும் சட்ட இடத்தை கற்பனை செய்கின்றது. ஜனாதிபதி அல்லது பொறுப்பான அமைச்சர் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்படாத ஐந்து முதல் ஏழு பேரின் கீழ் வரக்கூடிய பிரதேசமொன்று குறித்தும் குழுவொன்று குறித்தும் அது கற்பனை செய்கின்றது.

இந்த விதிவிலக்கான சட்ட ஆட்சி, அரசமைப்பில் எங்கள் மக்களின் இறைமை குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துகின்றது. விதிவிலக்கான சட்ட ஆட்சி என்பது இலங்கைக்கு புதிய விடயமில்லை. உதாரணத்திற்கு, உயர் பாதுகாப்பு வலயங்கள் (பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை), ஏற்றுமதி வர்த்தக வலயங்கள் (முதலீட்டு சபை சட்டத்தின் கீழ்) ஆகியவற்றை குறிப்பிடலாம். வாழ்வியல் அனுபவங்களும், சட்டம், மானுடவியல், பாலின ஆய்வுகள் போன்ற துறைகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளும், இவ்வாறான விதிவிலக்கான சட்ட ஆட்சிகள், குறைந்தபட்ச அரசமைப்பு அதிகாரம் அரசியல் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவதற்கான அரசாங்கங்களின் அதிகாரங்களை வலுப்படுத்துகின்றன. இதன் மூலம் உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகளை உருவாக்கியுள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

உத்தேச பொருளாதார ஆணைக்குழு முன்மொழிந்துள்ள விசேட பொருளாதார வலயம், அதன் சட்ட வடிவத்தில் மிகவும் சிக்கலானது. அதன் தாக்கங்களை ஆய்வு செய்வதற்கு அரசமைப்பு சட்டம், நிர்வாக சட்டம், சுற்றுசூழல் சட்டம், சர்வதேச முதலீட்டுச்சட்டம், நீதிமன்ற சட்டம், வங்கிச் சட்டம் வரிவிதிப்பு சட்டம் உட்பட சட்டத்தின் பல பிரிவுகள் குறித்த நிபுணத்துவம் அவசியம்.

இங்கே நான் எனது மதிப்பீடுகளை எனக்கு மிகவும் பரிச்சயமான அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் முன்வைக்கின்றேன். இந்த விடயத்தில் கூட இந்த சட்டமூலம் மாகாண சபைகளிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எவ்வாறு பாதிக்கின்றது மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது உட்பட பல சிக்கல்கள் எழுகின்றன.

இந்தச் சட்டமூலம் அரசமைப்பின் 154 (G)யில் தெரிவிக்கப்படும் விடயங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் குறித்த மாகாண சபைகளின் சம்மதத்தைப் பெறவேண்டும். அரசமைப்பின் இரண்டு அடித்தள கருத்தாக்கங்களான சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரங்களை பிரித்தல் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தச் சட்டமூலம் எவ்வாறு தவறிவிட்டது என்ற மதிப்பீடுகளுடன் நான் எனது கருத்தினை இங்கு மட்டுப்படுத்துகின்றேன். இது இலங்கையின் அரசமைப்பின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள மக்களின் இறைமையை மீறும் நடவடிக்கை என்பதை நான் இங்கு தெளிவுபடுத்துகின்றேன்.

குறிப்பிடப்பட்ட நோக்கங்கள்

சட்டமூலத்தின் நீண்ட தலைப்பின்படி அது, கொழும்புதுறைமுக நகரில் வர்த்தக நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான அதிகாரத்தை உடைய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த முயல்கின்றது. வணிகத்தை எளிதாக்குவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், நிலங்களை பரிமாறுதல், சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், தகராறுகளிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச நிலையமொன்றை ஏற்படுத்துதல், வலயத்திற்குள் நகர்புற வசதி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், ஒரு குடியிருப்பு சமூகத்தினை குடியேற்றல் ஆகிய திட்டவட்டமான செயல்பாடுகளும் உள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் முன்னுரை அரசமைப்பின் அரசகொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகளுடன் இந்த நோக்கங்களை இணைக்கின்றது. முன்னுரை அரசமைப்பின் 27(2) (D)யில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டுகின்றது – அரசாங்கம் தேசிய நலனின் அடிப்படையில் தனியார் பொது பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அதேவேளை நாட்டின் விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்தவேண்டும். புதிய முதலீட்டை ஈர்ப்பது, அந்நிய செலாவணியின் வருகையை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியன இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

அரச கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் எங்கள் அரசமைப்பில் உள்ள கொள்கைகளின் அறிக்கைகள். மேலும் அவை அரசாங்கத்தின் கடமைகள். இலங்கையின் ஒவ்வொரு நபரின் கடமைகளையும் விபரிக்கின்றன. இந்தக் கொள்கைகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடியவை அல்ல என அரசமைப்பு குறிப்பாக தெரிவிக்கின்றது. இந்த கொள்கைகள் மீறப்பட்டால் நியாயம் கோருவதற்காக எவரும் நீதிமன்றம் செல்ல முடியாது என்பதே அதன் அர்த்தம்.

எனினும், பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் உச்சநீதிமன்றம், அரசமைப்பின்  கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அரச கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகளுடன் சேர்ந்து நோக்கவேண்டும் என தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு சுன்னாகம் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பின்வருமாறு தெரிவித்திருந்தது. “அரச கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் அரசமைப்பில் வீணடிக்கப்படவில்லை. அவை உயிர்ப்புடன் இருக்கும், அரசாங்கமும் அதன் முகவர் அமைப்புகளும் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்” (Kariyawasam v CEA [SCFR 141/2015, SC Minutes 04 April 2019, p 50). இதன் காரணமாக அரசமைப்பை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்ததை விட இந்த வழிநடத்தும் கோட்பாடுகள் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.

உத்தேச சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிநடத்தும் கோட்பாடுகளை முழுமையாக ஆராயும் போது அவை பொது நலன்புரி/ நன்மைகள் என்ற விடயத்தை துரித அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்துவதை உணரமுடிகின்றது.

இதன் அடிப்படையில் அடுத்தடுத்த இரண்டு வழிநடத்தும் கோட்பாடுகள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் அவை மூன்றையும் கீழே தருகின்றேன்.

இலங்கையில் ஒரு ஜனநாயக சோசலிச சமூகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இதன் நோக்கங்களாக பின்வருபவையும் காணப்படுகின்றன.

(d) முழு நாட்டின் துரித அபிவிருத்தி என்பது தனியார் மற்றும் பொதுத்துறை பொருளாதார நடவடிக்கைகள் மூலமும் இத்தகைய பொது மற்றும் தனியார்  பொருளாதார நடவடிக்கைகளை சமூக நோக்கங்களிற்காகவும் பொதுமக்களின் நலன்களிற்காகவும் வழிநடத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை முன்வைக்கும் சட்டங்கள் மூலம் முன்னெடுத்தல்

(e) பொதுவான நன்மைகளை வழங்குவதற்காக சமூகத்தின் பொருட்கள், வளங்கள் மற்றும் சமூக உற்பத்தியை சமூகத்தின் அனைத்து பிரஜைகள் மத்தியிலும் சமமாக வழங்குதல்.

(f) உற்பத்தி விநியோகம் மற்றும் பரிமாற்றம் ஆகிய அரசாங்கத்தை மையப்படுத்தி அல்லது அரசாங்கத்தில் தங்கியிருக்காத சமூக ஒழுங்கினை ஏற்படுத்துதல். அரச ஸ்தாபனங்கள் சிறப்புரிமை பெற்ற சிலரின் கரங்களில் காணப்படும். ஆனால், இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியில் வழங்கப்பட்டதாக அவர்களுக்கு சொந்தமானதாகக் காணப்படும்.

எங்கள் அரசமைப்பின் அடிப்படையில் விரைவான பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம், பொது நன்மை மற்றும் ஒரு நியாயமான சமூக ஒழுங்கின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகின்றது. அத்தகைய வளர்ச்சியினை அடைவதற்கான வழிவகைகளோ அல்லது அதன் பலாபலன்களையோ அரசாங்கத்திடமோ அல்லது சலுகை பெற்ற ஒரு சிலரிடமோ குவிக்க முடியாது. ஆனால், அது அனைத்து இலங்கையர்களையும் சென்றடையவேண்டும். பொருளாதார வளர்ச்சியின் பொது நன்மை குறித்த ஒரு பார்வை பல தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை சொல்லத்தேவையில்லை.

உதாரணத்திற்கு, பொதுவான நன்மை குறித்து குறிப்பிடப்படுவதன் அர்த்தம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியைப் பரந்தளவில் அணுகவேண்டும் என்பதே. வளர்ச்சி என்பது முழுமையானதாக இருக்கவேண்டும் என்ற எமது புரிதலை இது பிரதிபலிக்கவேண்டும். இது ஒரு மானுடத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தாண்டி சுற்றுசூழலின் மரியாதையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும். இலங்கை மக்கள் அனைவருக்கும் என குறிப்பிடப்பட்டிருப்பது, அபிவிருத்தி என்பது சமகாலம் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தவில்லை. மாறாக தலைமுறைக்கு இடையிலான சமத்துவத்தை எதிர்பார்க்கின்றது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரங்களைப் பிரித்தல்

சட்டத்தின் ஆட்சி அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றிற்கு அடிப்படையானது என்பதை உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக அங்கீகரித்து வந்துள்ளது. விசேட பொருளாதார வலயம் மற்றும் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவற்றின் நிறுவன வடிவமைப்பு, சட்டத்தின் ஆட்சியின் நடைமுறை மற்றும் குறிப்பிடத்தக்க தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் காணப்படவில்லை. நான் பின்வரும் காரணங்களிற்காக இதனைத் தெரிவிக்கின்றேன்.

முதலாவதாக – ஜனாதிபதி அல்லதுபொறுப்பான அமைச்சரால் செயல்படுத்தப்படும் நிறைவேற்று அதிகாரம், மிகவும் விரிவானது மற்றும் குறைந்தபட்ச பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது. தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை (5 முதல் 7) ஜனாதிபதி தனது விருப்பின் படி நியமிக்கலாம், நீக்கலாம் (s 7, 9 and 10). முன்னைய பதவிக்காலத்தில் பதவியிலிருந்து நீக்கப்படாத பட்சத்தில் இவர்களை மீண்டும் அந்தப் பதவிகளிற்கு நியமிக்கலாம் (s 9). ஜனாதிபதி பதவியிலிருக்கும் காலப்பகுதியில் அந்த அலுவலகத்திற்கு எதிராக எடுக்கக்கூடிய ஒரேயொரு சட்ட நடவடிக்கையாக சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வது மாத்திரமே காணப்படுகின்றது (Art 35).

இதன் காரணமாக இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பது, நீக்குவது தொடர்பான ஜனாதிபதியின் நடவடிக்கைகளை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தாத பட்சத்தில், ஜனாதிபதியின் நடவடிக்கைகளிற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்வது மாத்திரமே சாத்தியமானதாகக் காணப்படுகின்றது. மேலும் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக காணப்படவேண்டும். மேலும், உரிமை மீறல் இடம்பெற்று 30 நாட்களிற்குள் அதனைத் தாக்கல் செய்யவேண்டும்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட அரிய சந்தர்ப்பங்களை தவிர பொது அதிகாரத்தைப் பயன்படுத்துவது நீதித்துறையின் ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது சட்டத்தின் விதியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட அடிப்படை உரிமைகளிற்கு கௌரவத்தை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திவருகின்றது. இதன் காரணமாக துறைமுகநகரத்தை, விடுபாட்டுரிமையை அனுபவிக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நபர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது பொறுப்புக்கூறலை அலட்சியப்படுத்துவதுடன் சட்டத்தின் ஆட்சியையும் அலட்சியப்படுத்துகின்றது.

இரண்டாவதாக – ஆணைக்குழுவிற்கு குறிப்பிடத்தக்க சட்டவாக்க சபை மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன ( s 5 and 6). ஆணைக்குழுவில் எழக்கூடிய மோதல்களை தீர்ப்பது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது (s 62). இது எங்கள் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் என்பதை அலட்சியம் செய்கின்றது. இந்த ஆணைக்குழுவின் அதிகாரம் பொருளாதாரம் தொடர்பானது மாத்திரமில்லை, மாறாக கொழும்புதுறைமுக நகரம் தொடர்பான விடயங்களில் ஜனாதிபதி அல்லது அமைச்சருக்கு கொள்கை உருவாக்கம் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்களையும் இது கொண்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளிற்கு உரிமம் வழங்குதல், குத்தகை நிலம் – குடியிருப்புகளை பரிமாற்றம் செய்தல், குறிப்பாக ஒற்றை சாளர முதலீட்டாளாராக முதலீட்டை  எளிதாக்குதல், சுற்றுசூழல் தரங்களை மேம்படுத்தல், ஒப்புதல் அளித்தல், கட்டுமானம் உள்ளூர் மதிப்பீட்டு வீதங்களை நிர்ணயித்தல் மற்றும் சமூக அபிவிருத்தி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்குதல் போன்றவற்றிற்கான அதிகாரமும் ஆணைக்குழுவிற்குள்ளது. ஆணைக்குழுவிற்கும் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கும் அல்லது உள்ளே வசிப்பவருக்கும் அல்லது ஆக்கிரமிப்பாளருக்கும் இடையில் எழும் எந்த பிரச்சினையையும் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கவேண்டும்.

இந்த நோக்கத்திற்காக சர்வதேச வர்த்தக தகராறு தீர்க்கும் நிலையத்தை உருவாக்கும் யோசனையை உத்தேச சட்டமூலம் முன்வைத்துள்ளது. கட்டாய மத்தியஸ்த்தம் என்ற இந்த வகையும் நோக்கமும் துறைமுக நகரத்திற்குள் எழும் தகராறுகளிற்கு – இலங்கையில் வழமையாக பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் முறைக்கு மாறாக அதற்கு வெளியே தீர்வை காண முயல்கின்றது.

இந்தச் சட்ட மூலம் இலங்கையின் நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லையை வெளிப்படையாக நீக்காத போதிலும், கட்டாய மத்தியஸ்தத்திற்கான ஏற்பாடுகளை மறைமுக வெளியேற்றமாக கருதலாமா என கேள்வி எழக்கூடும். தங்கள் நியாயாதிக்க எல்லையை சட்டங்கள் மூலம் நீக்க முடியாது என இலங்கை நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்துள்ளன.

மூன்றாவதாக – இந்தச் சட்டமூலத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை சட்டம் உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய விதத்தில் பொதுவான சட்டமூலத்தினால் உருவாக்கப்பட்டபொதுச்சட்டத்தின் கொள்கைகளை புறக்கணிக்கின்றது. ஆணைக்குழு ஒரு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடமிருந்து அனுமதியைப் பெறவேண்டும் என்ற நிலை காணப்படுகின்ற போதிலும், சட்டமூலம் அதிகாரசபை சூழ்நிலைகளின் கீழ் நடைமுறைக்கு வந்தவுடன் முன்னுரிமையாக ஆணையகத்திற்கு அத்தகைய ஒப்புதலை வழங்கும் என தெரிவிக்கின்றது. ஒவ்வொரு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தன்னிடம் உள்ள விடயங்களை நியாயபூர்வமான விதத்தில் விவேகத்துடன் செயற்படுத்தவேண்டும். தொடர்புடைய உண்மைகளை கருத்திலெடுத்து ஒவ்வொரு விடயத்தையும் ஒவ்வொன்றாக ஆராயவேண்டும். ஒழுங்குபடுத்தும் அதிகார சபையொன்றை கட்டாயமாக ஒத்துழைப்பை வழங்குமாறு அழுத்தம் கொடுப்பது அரசமைப்பு ஜனநாயகத்தில் சாத்தியமான விடயமில்லை.

மக்களின் இறைமை பொது நம்பிக்கை மற்றும் சமத்துவம்

இலங்கையின் அரசமைப்பு, இறைமை மக்களிடமே காணப்படுகின்றது என தெளிவாக தெரிவித்துள்ளது (Art 3). இறைமை என்பது எங்களை நாங்களே ஆள்வதற்கான உள்ளாந்த உரிமையை முன்வைக்கும் ஒரு அரசியல் கருத்து. 1972இன் முதலாவது குடியரசு அரசமைப்பு எங்கள் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகின்றது. ஏனென்றால், இதுவே ஒரு தன்னியக்க அரசமைப்பு அல்லது இலங்கை மண்ணிலிருந்து உருவான அரசமைப்பாகும். முதல் குடியரசு யாப்பு உண்மையில் அரசியலமைப்பு ஆட்சியின் பல விடயங்களை மீறிய அரசமைப்பு என நான் கருதுகின்றேன். எனினும், இறையாண்மை என்பது மக்களிடம் உள்ளது. அவர்களின் சம்மதம், நலன், நன்மை என்பனவே ஆட்சியின் குறிக்கோள், அரசமைப்பின் அடிப்படை என்ற எண்ணக்கருவிற்கு இந்த அரசமைப்பு ஒரு எடுத்துக்காட்டு. கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தை முழுமையாக எடுத்துக்கொண்டால் – அது நிறைவேற்றப்பட்டால் – அது தனக்கென புவிசார் நீதி தளத்தை உருவாக்கி அதனை இலங்கையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் கொண்டுசெல்லும்.

ஒரு அரசமைப்பு, ஜனநாயகத்தின் ஆட்சி முறை, நாடாளுமன்றத்தின் நிதி ஆய்வு, அரசாங்கத்தின் நீதித்துறையின் தகராறுக்கு தீர்வு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. கொழும்புதுறைமுகத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ள சட்டங்களில் நகராட்சி சட்டம் உட்பட பல சட்டங்கள் காணப்படுகின்றன. அங்கு பணியாற்றும், வசிக்கும் மக்கள், ஐந்து முதல் ஏழு பேர் கொண்ட தெரிவு செய்யப்படாத குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது அதிகாரத்தின் கீழ் காணப்படுவார்கள். தற்போதைய அரசமைப்பின் கீழ் இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இலங்கை நாடாளுமன்றத்திற்குள்ளதா என்பது கேள்விக்குரிய விடயம்.

துறைமுகநகரம் அதன் தனித்துவத்தைப் பேணுவதற்காக இந்த முறையில் நிர்வகிக்கப்படவேண்டும் என வாதிப்படலாம். அதிகபட்ச 1) அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும் 2) விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கும் இந்த முறையில் நிர்வகிக்கப்படவேண்டும் என வாதிடப்படலாம். இந்த வாதங்களின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு வலுவான கருத்துக்கள் உள்ளன. எனினும், இங்கு நான் அதிகம் படித்த பொதுச்சட்டத்துடன் எனது கருத்துக்களை மட்டுப்படுத்துகின்றேன். அரசமைப்பு ரீதியில் இந்த சட்டமூலம், இலங்கையின் பொதுசட்டத்தில் நிறுவப்பட்ட எண்ணக்கருவாக உள்ள சட்டத்தின் ஆட்சியின் கீழான அரசமைப்பு தராதரங்களிற்கு குறைவாக காணப்படுகின்றது. அத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமிருப்பதாக ஒருவர் கருதினாலும் கூட உத்தேச சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கை நோக்கங்கள் மிகவும் பொதுவானவை. துரித அபிவிருத்தியின் எந்த அம்சங்களிற்கு அதிகாரங்களை ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு பதிலளிக்ககூடிய சிறிய குழுவினரிடம் வழங்கவேண்டிய அவசியம் உள்ளது?

மேலும், இந்தச் சட்ட மூலம் நமது சம உரிமைகள் மீது தாக்கத்தினைச் செலுத்துகின்றது. கொழும்புதுறைமுக நகரிற்குள் செல்வதை இந்த ஆணைக்குழு எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. கடைகள், பொது உணவகங்கள், பொதுபொழுதுபோக்கு இடங்களான ஹோட்டல்கள் போன்றவற்றிற்குள் எவரும் நுழைவதை மத அல்லது இனங்களை அடிப்படையாக வைத்து கட்டுப்படுத்த முடியாது அல்லது பாகுபாடு காட்ட முடியாது என எங்களின் அரசமைப்பு உத்தரவாதமளிக்கின்றது (Art 12 (1) மற்றும் (3). சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமமானவர்கள், சட்டத்தின் கீழ் அனைவரும் பாதுகாப்பிற்குரியவர்கள் என்பதையும் எங்கள் அரசமைப்பு உறுதி செய்கின்றது (Art 12(1)). சட்டமூலத்தின் பல அம்சங்கள் இந்த உத்தரவாதத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அலட்சியம் செய்கின்றன.

கொழும்புதுறைமுக நகரம் குறித்த விவகாரங்களிற்கு நீதிமன்றம் முன்னுரிமை வழங்கவேண்டும் என சட்டமூலம் தெரிவிக்கின்றது (s 63). இது சட்டமூலங்கள் மூலம் நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிடும் ஒரு நடவடிக்கையாகும். இது சமத்துவமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு வழிவகுக்கும். கொழும்பு துறைமுகத்திற்குள் யார் வர்த்தக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடலாம், யார் அதற்குள் நுழையலாம் என்பதை கட்டுப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரம் சமத்துவத்திற்கான உரிமை, பாரபட்சத்திலிருந்து விடுபடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதிக்கலாம்.

BRI யும் சர்வதேச சூழமைவும்

இந்தச் சட்டமூலம் நாடு கடந்த பரிமாணத்தை கொண்டுள்ளது. துறைமுக நகரம் சீனாவுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றது .சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் (Belt and Road Initiative) அதன் இராஜதந்திர நடவடிக்கைகளினதும் வெளிவிவகார கொள்கைகளினதும் மையமாகக் காணப்படுகின்றது. மேலும் அது வெளிநாடுகளில் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. துறைமுகநகரத்திற்கும் அதன் சட்டஒழுங்குமுறைக்கும் பிராந்திய உலகளாவிய பரிமாணங்கள் உள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கான திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தும் திட்டம் எங்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் இறைமைக்குள்ளேயே காணப்படுகின்றது என்ற அரசமைப்பு உத்தரவாதத்தை பெறுவதற்கு இலங்கையர்களாகிய எங்களிற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. மேலும் இது எங்களின் கூட்டுநலன் மற்றும் நன்மைகளுடன் தொடர்புபட்டது.

எனவே, இந்த செயற்பாட்டில் அதிகபட்ச அளவிலான வெளிப்படைத் தன்மை மற்றும் பொருத்தமான தகவல்களை உறுதிப்படுத்தவேண்டும்.

உதாரணமாக குறிப்பிட்ட சட்டமூலம், இலங்கையின் பிரஜைகள் இல்லாதவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்க முடியுமா அல்லது பணிப்பாளர் நாயகமாக நியமிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும். இலங்கையர்கள் அல்லாதவர்களை நியமிப்பது தேசத்தின் பாதுகாப்பு அல்லது தேசத்தின் நலன்களிற்கு ஆபத்தான விடயம் என நான் கருதவில்லை.

எனினும், துறைமுக நகரத்திற்கான உத்தேச திட்டத்தின் கீழ் அதிகாரம் செலுத்துபவர்களிற்கு, இலங்கைக்குள் அரசமைப்பு, சட்ட மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல் அவசியமானது. பொறுப்புக்கூறலின் இந்த முறைகள் அலட்சியம் செய்யப்படாமலிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும். இந்த காரணங்களிற்காக துறைகநகர சட்டமூலத்தின் குறிப்பிட்ட அம்சங்களும் மற்றும் முழுமையான சட்டமும் எங்கள் அரசமைப்பிற்கு முரணானவை. இவை சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரங்களைப் பிரித்தல் போன்ற அடிப்படை அரசமைப்பு கொள்கைகளை அலட்சியப்படுத்துவதுடன் அவை சிக்கலான சட்ட ஆட்சியை உருவாக்கக்கூடியன. இது அரசமைப்பு ஜனநாயகம் குறித்த அடிப்படை எண்ணக்கருவிற்கு முரணானது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசமைப்பிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிற்கான முதலாவது துறைமுகமாக துறைமுகநகரம் காணப்படலாம்.

தினேசா சமரரத்ன

The Port City Bill: Legislative Carving Out from a Constitutional Democracy? என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.