பட மூலம், Sagi Thilipkumar
“அவர்கள் தமிழர்களை மனிதர்களாக மாத்திரம் மதிப்பார்களானால்” – ‘புனர்வாழ்வு பெற்ற’ முன்னாள் போராளியொருவர்.
2009ஆம் ஆண்டு மே மாதம் தாம் தோற்கடித்ததாக மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ அரசுகள் கோரும் ஆயுதபாணி இயக்கம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள். ராஜபக்ஷ குடும்பம் முதன் முதலில் ஆட்சி செய்த சமயத்திலும், அவர்கள் 2019 இல் மீண்டும் ஆட்சிபீடம் ஏறிய பின்னரும், தமது அரசுகள் இல்லாதொழித்ததாகக் கூறும் எல்ரீரீஈ இயக்கத்திற்கு எதிரான வெற்றியை வருடந்தோறும் கொண்டாடி மகிழத் தவறியதில்லை. அதேசமயம், ஆயுத முரண்பாடு முடிவடைந்து 11 வருடங்கள் கழிந்த 2021ஆம் ஆண்டிலும் கூட, இதே ராஜபக்ஷ ஆட்சியாளர்களே எல்ரீரீஈ பற்றிய கருத்தாடலை மக்கள் மத்தியில் உயிரோட்டமாக வைத்திருக்கிறார்கள். எல்ரீரீஈ பற்றி நினைவை மறக்கடிக்கச் செய்யவோ அல்லது அதனைக் கைவிடவோ இவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், எல்ரீரீஈ இயக்கத்தின் ஆவிக்கு உயிரூட்டி, அதன் பேராற்றலை மக்களுக்கு நினைவுபடுத்தி, நாட்டையும் மக்களையும் பாதுகாக்கக் கூடியவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரே என்பதை வலியுறுத்துவது சில வேளைகளில் அரசின் நாட்டமாக இருக்கலாம்.
போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர முடியாமல் தமிழர்களுக்குத் தடைவிதித்து, தமிழ் மக்கள் உட்பட மக்கள் எல்ரீரீஈ இயக்கத்தை மறக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் ஆற்றும் காரியம் முன்னுக்குப் பின் முரணானது. கடந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று அரச புனர்வாழ்வு நிலையங்களில் தமக்கு அறிவுறுத்தப்பட்டதாக முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவர்கள் கூறியதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். எனினும், இலங்கை இராணுவம் இவர்களைத் தொடர்ச்சியாக விசாரணை செய்து, கண்காணித்து, உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் இவர்களுக்கு கடந்த காலத்தை நினைவுகூரும் நிர்ப்பந்தம் எழுகிறது. “அவர்கள் கடந்த காலத்தை மறக்குமாறு கேட்பார்கள். ஆனால், இயக்கத்தில் இருந்த காலம் எப்படி இருந்ததென தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவார்கள்” என்று முன்னாள் அங்கத்தவர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.
எல்ரீரீஈ இயக்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அரசு மற்றும் சிங்கள மக்கள் ஆகிய இரு தரப்புகளும் தமிழர்களை எல்ரீரீஈ இயக்கத்துடன் சமப்படுத்தும் போக்கு வழமையானதாக இருந்தது. இதனைப் பல தடவைகள் எதிர்கொண்டவர்கள் என்ற ரீதியில் எனது சொந்த அனுபவத்தின் மூலமும், எனது பெற்றோர், உறவினர்கள் ஆகியோரினது அனுபவங்களின் மூலமும் நான் சொல்கிறேன். சிலர் புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக/ அனுதாபிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். இது, ஒருவர் பற்றி சமூகத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி, அவரை வில்லத்தனமாக சித்தரிக்கும் சாத்தியத்தை அதிகரித்து, பெரும்பாலும் புறக்கணிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையிலோ, ஆதாரம் இல்லாமலோ அவரைக் கைது செய்து, தடுத்து வைக்கக்கூடிய அபாயத்தையோ, அதனை விடவும் மோசமான நிலையையோ உருவாக்குகிறது. எனவே, ஒருவரை புலியாக முத்திரை குத்துதல் என்பது சமூக செயற்பாட்டையும், அதிருப்தியையும் கையாளக்கூடிய கருவியாக இருக்கிறது.
ஆட்களை புலிகளாக முத்திரை குத்தினாலும், இரு ராஜபக்ஷ அரசுகளும் போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமைகளை மீறல்களைக் கட்டவிழ்த்து விட்ட கருணா அம்மான், பிள்ளையான் உள்ளிட்ட மூத்த எல்ரீரீஈ அங்கத்தவர்களை தத்தமது அரசுகளில் சேர்த்துக் கொள்வதில் எதுவித மனக்கிலேசத்தையும் அடைவதில்லை. கருணாவும், பிள்ளையானும் யுத்தத்தை வெல்வதற்கு உதவினார்கள் என்று கூறி, ராஜபக்ஷ அரசுகள் தமது செயலை நியாயப்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தகைய செயல்கள், அவர்கள் கட்டவிழ்த்து விட்டதாகக் கூறப்படும் – 2020 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் கருணா அம்மான் பெருமைபடப் பேசியவையுமான – மனித உரிமை மீறல்களை காணாமல் போகச் செய்து விடுமா? நீங்கள் வெற்றி பெற்றவருடன் சேர்ந்துவிட்டால், மனித உரிமை மீறல்கள் பொருட்படுத்தத் தேவை அற்றவையாக மாறிவிடுமா? வெற்றி என்பது மனித உரிமை மீறல்கள் என்ற கிருமிகளைக் கழுவி விடக்கூடிய கிருமி நீக்கியா?
போரில் உயிர் நீத்தவர்களை ஞாபகப்படுத்துவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தகர்க்கப்பட்டமைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி மறுநாள் ஐரிஎன் இணையத் தளத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதற்கு “பயங்கரவாதிகளாக மாறப் போகும் மாணவர்கள் விசேட அதிரடிப்படையினரிடம் மண்டியிட்டனர்” என்று தலைப்பு இடப்பட்டிருந்தது. இது தமிழ் இளைஞர்களை புலிகளாக முத்திரை குத்தும் நடைமுறையின் மூலம் அதிருப்தியை அடக்கும் விதத்தை சித்தரிக்கிறது. அத்துடன், தமிழ் இளைஞர்கள் ஒடுக்குமுறைக்கு விடுக்கும் சவாலாக அன்றி, அதாவது தமது அதிகாரத்திற்கான சவாலாக அன்றி, இராணுவம் இளைஞர்களை அடக்கி, அதாவது தமிழ் இளைஞர்களை உரிய இடத்தில் வைப்பதற்குரிய முயற்சியாக சித்தரிப்பதன் மூலம் அரசாங்கமும், அதனைச் சார்ந்தவர்களும் பெறக்கூடிய அதிகாரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்தத் தலைப்பில் தவறவிடக்கூடாத இரு காரணிகள் இருக்கின்றன. சக பிரஜைகளான தமிழர்களுக்கு உரிய மரியாதையை வழங்கத் தவறுதல் என்பது முதற்காரணி. அவர்களை பலமிழக்கச் செய்யும் நோக்கம் என்பது இரண்டாம் காரணி.
யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து, அந்தத் தகர்த்தலை நியாயப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஒரு கடிதத்தையும், வீடியோவையும் வெளியிட்டது. முரண்நகை பற்றிய பிரக்ஞை எதுவும் இன்றி, ஆணைக்குழுவின் தலைவர் நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் தரவுகளுக்கு முரணான கூற்றை வெளியிட்டார். இந்த நினைவுச் சின்னமானது, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான ஐக்கியத்திற்கு குந்தகமாக அமைந்த போருடன் தொடர்புடையது என்பதால், இது சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருத்தமற்றது என்று அவர் கூறினார். இந்தக் கூற்று இரண்டு காரணங்களின் அடிப்படையில் தவறானதாக இருக்கிறது. படைவீரர்கள், துப்பாக்கிகள், கவச வாகனங்கள், ரவைகள் போன்றவற்றின் சிலைகள் வடிவில், போரையும், வன்முறைகளையும், இராணுவமயமாதலின் கொண்டாட்டத்தையும் சித்தரிக்கும் படிமங்களாக வடக்கின் பல பாகங்களில் காணக்கூடியவாறு நினைவுச் சின்னங்களை ராஜபக்ஷ அரசாங்கமே ஸ்தாபித்தது என்பது முதல் காரணி. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரது கூற்றுக்கு முரணான வகையில், பூமியில் இருந்து மேலேழும் கைகளை சித்தரிப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவுச் சின்னம் அமைந்திருந்தது. இது வேண்டுமென்று காட்டும் அசிரத்தைப் போக்காக இருக்கையில், இந்த விடயம் பற்றி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினது தலைவரின் போதிய புரிந்துணர்வின்மையானது அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், இது ஆச்சர்யப்படத்தக்கது அல்ல. தலைவரின் உளப்பான்மையானது வெறுமனே அரசாங்கமும், தென்னிலங்கை மக்களின் ஒரு சாராரும் கொண்டிருக்கும் நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. இந்த நம்பிக்கை வேறொன்றும் அல்ல. ‘முரண்பாடு என்பது பயங்கரவாத பிரச்சினையே அன்றி, இன நெருக்கடி அல்ல. எல்ரீரீஈ இயக்கத்தின் தோல்வியுடன் முடிந்து விட்ட பிரச்சினை’ என்பதேயாகும். எனவே, இவர்களைப் பொறுத்தவரையில், தீர்ப்பதற்கு எஞ்சியிருக்கும் பிரச்சினை என்று எதுவும் கிடையாது, ஞாபகப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை.
யதார்த்தம் யாதெனில், ராஜபக்ஷ அரசாங்கம் அடங்கலாக எவரும் தாம் விரும்பியவாறு சொல்வதன் மூலம் சில விடயங்களை இல்லாமல் செய்து விட முடியாது. பல தசாப்தகாலம் தொடர்ந்த இனமுரண்பாடுகளை அடுத்து, சுமார் 30 வருடகாலம் நீடித்த ஆயுத நெருக்கடியொன்று இலங்கையில் இருந்தது. இந்த இனமுரண்பாட்டின் மூலகாரணிகளான பாரபட்சம், ஓரங்கட்டுதல், வன்முறைகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இன்னமும் முறையாக கவனம் செலுத்தப்படவில்லை. இனவாதம், தப்பெண்ணம், மதவெறி போன்றவை இலங்கை சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளன. இவையும் முறையாக கையாளப்படவில்லை. எனினும், இவை இனத்துவ-தேசியவாத நிகழ்ச்சி நிரல்களுக்கு பொருந்தும் வகையில் வரலாறு நெடுகிலும் பரவியிருக்கின்றன. இதைச் சொல்வதன் மூலம் நான் எல்ரீரீஈயாகவோ, தேசத்துரோகியாகவோ மாற முடியாது. ஆம்! தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு உள்ளேயும் தப்பெண்ணம், மதவெறி போன்றவை உள்ளதை நான் அறிந்திருப்பதுடன், அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆம்! எல்ரீரீஈ இயக்கமும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது. எனினும், தமது மக்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புக்கள் பற்றியும் அரசாங்கத்தின் செயல்களும், செயலற்ற தன்மையும் எவ்வாறு சமூக தப்பெண்ணங்களை கட்டமைத்து, அவற்றைத் தீவிரப்படுத்தி, வன்முறைகளுக்கு வித்திடுகின்றன என்பது பற்றியுமான கலந்துரையாடலில் இருந்து நாம் கவனத்தைத் திருப்பாமல் இருக்க வேண்டும்.
போரில் வெற்றி இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஒரு அரசாங்கத்தின் பிரஜைகள் எந்த இனக்குழுமத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரஜைகளின் மரணத்தில் கொண்டாடுவதற்கு எதுவும் கிடையாது. ஒரு அரசாங்கத்தின் பிரஜைகள் எந்த இனக்குழுமத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களது சொத்துக்களும் உடமைகளும் நிர்மூலமாக்கப்படுகையில் சந்தோஷப்படுவதற்கு எதுவும் இருக்க முடியாது. போர் என்பது வலிமிக்கது என்பதை நிராகரிப்பதன் மூலம் தமது மக்கள் துயரத்தை உணர்வதற்கும் இடமளிக்க மறுக்கிறது. அதை வெளிப்படுத்த வாய்ப்பு ஏது? இலங்கையின் ஆயுதப் படைகளுக்காக போரிட்டு தம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்ற படைவீரர்களின் பராக்கிரமங்கள் பற்றி அவர்களின் குடும்பத்தவர்கள் பெருமை பேசலாம், சந்தோஷப்படலாம். ஆனால், தாம் அனுபவிக்கும் இழப்பு, தனிமை, துயரங்கள் போன்றவற்றை அவர்கள் வெளிப்படுத்தக்கூடாது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் விரும்புவதைப் போன்று, கசப்பானவைகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமானால், நாம் கடந்த காலத்தையும் கையாள வேண்டும். இந்த கடந்த காலம் நிகழ்காலத்திலும் வாழ்கிறது. எதிர்காலத்திலும் வளர்ச்சி பெறும். ஒரு விடயத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை முறையில் அனுசரிக்கப்படுவதைப் போன்று, நெருக்கடியின் மூல காரணங்களுக்கு தீர்வுகாண வேண்டுமாயின், முதலில் பிரச்சினை இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினை உள்ளதை மறுத்து, மறந்து விட நிர்ப்பந்தித்தலின் மூலம் மனக்குறைகள் நீறுபூத்த நெருப்பாக அடியில் கனன்று கொண்டிருக்கும். மேலோட்டமான சமாதானமே கட்டியெழுப்பப்படும். இலங்கையர்களாகிய நாம் நிராகரிப்பிற்கும், மாயைக்கும் அடிமையாகி இருக்கிறோம். நாம் அர்த்தமுள்ள சமாதானத்தை அடைய வேண்டுமாயின், அந்த நிராகரிப்பையும், மாயையும் களைவது அவசியம்.
அம்பிகா சற்குணநாதன்