பட மூலம், President’s Twitter account
கொவிட்-19 தொற்று ஒருபுறம் பாரிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மறுபுறமாக ஜனநாயகத்தின் மீதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதனை உலகில் இடம்பெற்று வரும் பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, அமெரிக்கா, பிரேசில், ஆர்ஜென்ரீனா, இந்தியா, சீனா, துருக்கி, இஸ்ரேல், இலங்கை போன்ற பல நாடுகளில் இப்போக்கினை அவதானிக்க முடியும். பொது சுகாதாரம் என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் மற்றும் சிவில் நிறுவனங்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுவதனை அவதானிக்க முடிகிறது. ஒருபுறம் எதேச்சதிகார ஆட்சி மிக வேகமாக பரவிவருவதுடன், மறுபுறம் அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மலுங்கடிக்கப்படுவதனையும் சிவில் சமூகம் இன, மத மற்றும் பிரதேச அடிப்படையில் திட்டமிடப்பட்ட வகையில் பிளவுப்படுத்தப்பட்டிருப்பதனையும் காண முடிகின்றது. பேரினவாத ஆட்சியாளர்கள் அதிகாரத்துவத்தினைப் பயன்படுத்தி தமக்கெதிரான எதிர்ப்புக்களை/ விமர்சனங்களை தடுப்பதற்கும் தொடர்ந்தும் அதிகாரத்தை தக்கவைக்கவும் கையாளும் ஒரு உபாயமாக இனவாதம், நிறவாதம், மதவாதம், சாதியம் என்பன காணப்படுகின்றன. இதனை இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மியன்மார் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் காண முடிகின்றது. தீவிர வலதுசாரி தலைவர்கள் அல்லது ஜனரஞ்சக தவைர்கள் (Populist Leaders) மேற்கூறிய உபாயங்களின் மூலம் ஆட்சி அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்ள முற்படுகின்றார்கள் என்பது அன்மைக்காலங்களில் முன்வைக்கப்படும் வாதமாகும். இலங்கை போன்ற பன்மைத்துவ சமூகங்களில் இப்போக்குகள் சிறுபான்மை மக்கள் மத்தியில் ‘எதிரி’ உணர்வினை, அச்சத்தினை, தண்டனை மீதான பயத்தினை ஏற்படுத்தியிருப்பதுடன், அரசாங்கத்தின் எதேச்சைத்தனமான போக்குகளை எதிர்க்க அணித்திரள்வதற்கான வாய்ப்பினையும் பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இப்பின்புலத்திலேயே இக்கட்டுரை இலங்கையில் ஜனநாயகத்தின் மீதான சவால்கள் மற்றும் அதனை மீட்டெடுப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் வாய்ப்புக்களை ஆராய முற்படுகின்றது.
நிலைமாற்றம் காணும் ஜனநாயம்
“ஏன் தேசங்கள் தோல்வியடைகின்றன” என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்களான பேராசிரியர்கள் டெரோன் எசீமொல்கு மற்றும் ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் 2019ஆம் ஆண்டு “ஜனநாயகத்திற்கான பாதையினை சுருக்குதல்: அரசுகள், சமூகங்கள் மற்றும் சுதந்திரத்தின் தலைவிதி” என்ற பிரிதொரு முக்கியமான நூலினை வெளியிட்டுள்ளனர். ஒரு நாட்டின் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலைபெற வேண்டுமெனில் சமூகமும் – அரசும் பலமாக இருக்க வேண்டும் என வாதிடுகின்றார்கள். அரசு பலமாக இருந்து சமூகம் பலவீனமாகக் காணப்பட்டால் அங்கு முழு அளவிலான எதேச்சதிகார ஆட்சி ஏற்படும். மறுபுறமாக, சமூகம் பலமாக இருந்து அரசு பலவீனமாக இருந்தால் அங்கு அராஜக நிலை ஏற்படும் என்பதனை ஆதாரங்களுடன் வாதிடுகின்றார்கள். ஆகவே, ஆரோக்கியமான ஆட்சி நிலவ, ஜனநாயகத்தினையும், சுதந்திரத்தினையும் பாதுகாக்க, பொறுப்புக்கூறும் அரசாங்கமும், பலமான சிவில் சமூகமும் அவசியமாகும். அரசு-சமூகம் என்பவற்றுக்கிடையிலான தொடர்ச்சியான போராட்டமே இதனை நிர்ணயிக்கும். இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், பொறுப்புகூறும்/ வரையறுக்கப்பட்ட அரசாங்கமொன்றினை அரசியலமைப்பு ஏற்பாடுகளின் மூலம் மாத்திரம் (சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை) அல்லது ஸ்தாபிக்கப்பட்ட நிறுவன ஒழுங்குகளின் மூலம் மாத்திரம் ஏற்படுத்த முடியாது என்பதாகும். அதற்கு துடிப்பான, இயக்கத்தன்மைக் கொண்ட சமூகம் மிகவும் அடிப்படையானது. அதற்கு இனங்களுக்கிடையிலான ஐக்கியம், தூரநோக்கு மற்றும் ஒருமைப்பாடு முன்னிலைப் பெறுகின்றது. இவ்வாதம் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
1931ஆம் ஆண்டில் இருந்து நாம் தேர்தல் ஜனநாயகத்தினை இலங்கையில் அனுபவிக்கின்றோம். கடந்த 72 ஆண்டுகளில் ஜனநாயகம் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக தேர்தல் இடம்பெற்றாலும் ஆட்சி இடம்பெற்ற விதம் முழுமையான ஜனநாயக அடிப்படைகளை தழுவியதாக அமையவில்லை என்பதனை விளக்க வேண்டிய அவசியமில்லை. இதற்குப் பல காரணிகளை முன்வைக்கலாம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தினை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்கின்ற அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Freedom House என்ற சர்வதேச நிறுவனம் தொடர்ந்தும் இலங்கையினை பகுதியளவில் சுதந்திரத்தைக் கொண்ட (Partly Free) நாடாகவே அடையாளப்படுத்துகின்றது. 2020ஆம் ஆண்டு அறிக்கையில் (210 நாடுகளை மதிப்பீட்டுக்குட்படுத்தியது) மொத்த 100 புள்ளிகளில் இலங்கைக்கு 55 புள்ளிகளே வழங்கப்பட்டுள்ளன. இங்கு அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகிய இரண்டு குறிக்காட்டிகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன. 100 புள்ளிகளையும் பெற்று நோர்வே முதலாவது இடத்தில் முழுமையான சுதந்திரத்தினைக் கொண்ட நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வருடாந்தம் ஜனநாயக சுட்டெண்ணை வெளியிட்டு வரும் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் Economist Intelligence Unit 2019ஆம் ஆண்டு அறிக்கையில் சுமார் 167 நாடுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தியுள்ளது. பிரதானமாக 5 குறிக்காட்டிகள் மதிப்பிடப்படுகின்றன. அவை முறையே: (i) தேர்தல் செயன்முறை மற்றும் பன்மைத்துவம், (ii) அரசாங்கத்தின் செயற்பாடுகள், (iii) அரசியல் பங்கேற்பு, (iv) ஜனநாயக அரசியல் கலாசாரம் மற்றும் (v) சிவில் சுதந்திரம் என்பனவாகும். இவ்வறிக்கையில் கடந்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஜனநாயகம் வீழ்ச்சிக்கண்டுள்ளதாகவும், சுமார் 22 நாடுகளில் மாத்திரமே முழுமையான ஜனநாயகம் காணப்படுவதாகவும் (430 மில்லியன் பேர் வாழும்) அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் ஆட்சி முறையினை நான்கு அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது. (i). முழுமையான ஜனநாயக ஆட்சி (ii). குறைப்பாடுடைய ஜனநாயகம் (iii). கலப்பு ஆட்சி (பகுதியளவில் சர்வாதிகாரமும் பகுதியளவில் ஜனநாயகமும்) (iv). சர்வாதிகார ஆட்சி என்பனவாகும். அந்த வகையில், இலங்கை இரண்டாவது வகைப்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படுகின்ற இந்தியா 61ஆவது இடத்தில் இருந்து (2018) பத்து இடங்கள் வீழ்ச்சியடைந்து 2019ஆம் ஆண்டு 51ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை ஒரு குறிப்பிட்ட அளவில் வீழ்ச்சியடைந்து செல்வதனை இவ்வறிக்கை வெளிக்காட்டுகின்றது – அதற்கு தற்போதைய மோடியின் ஆட்சி மற்றும் மிக வேகமாக எழுச்சிப்பெற்று வரும் இந்துத்துவ தேசியவாதம், முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை என்பவற்றுக்கு பெரும் பங்குண்டு. ஜனநாயகத்தின் வீழ்ச்சியினை ஆபிரிக்க நாடுகளிலும், லத்தின் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது. அடுத்து வரும் வருடங்களில் இதன் போக்கு எவ்வாறு அமையும் என்பதனை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஜனநாயகத்தினை மீட்டெடுப்பது நீண்டதொரு பயணமாக அமையலாம் – அது பல வழிகளில் செலவுமிக்கதாகவும் இழப்புகளைக் கொண்டதாவும் அமையலாம்.
பொதுவில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கடந்த 25 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருப்பதனை சர்வதேச ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கு நவதாரளக் கொள்கைகளின் தாக்கமும் காரணமாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருந்த மக்கள் இன்று ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.
தமது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ் தமது வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதானது ஆட்சிமுறையின் ‘ஜனநாயகத்தில்’ நம்பிக்கை இழக்க வைக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கடந்த 25 வருட காலத்தில் 2019ஆம் ஆண்டில் பல செல்வந்த நாடுகளில், விசேடமாக பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் பெருமளவிலானோர் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர். பல நாடுகளில் முன்னர் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் மத்தியில் கடந்த பத்து வருட காலத்தில் பொதுவாக ஏமாற்றமே அதிகரித்துள்ளது என்பதை 154 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக அண்மையில் பேராசிரியர் ந. சன்முகரத்தினம் எழுதிய “பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உலகளாவிய போராட்டங்கள், அமைப்புக்கள், தோற்றம்பெற்று வருவதுடன், தொடர்ந்தும் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கைக் கொண்டிருக்கும் நாடுகளாக நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை தொடர்பான ஆய்வு முடிவுகள்
இலங்கையிலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருப்பதினை அவதானிக்க முடிகின்றது – அதற்கு போதிய சான்றுகள் காணப்படுகின்றன. கொழும்பில் அமைந்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் 2012ஆம் ஆண்டு மேற்கொண்ட “தென்னாசியாவில் ஜனநாயகத்தின் நிலை” எனும் ஆய்வில் 24.4%மானவர்கள் சிங்கள மக்கள் பலமான தலைவர் ஒருவரை விரும்பியுள்ளதனைக் காட்டுகின்றது. ஆயினும், அதில் 91.1%மானவர்கள் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படும் தலைவரையே விரும்பினர். ஆயினும், பலமான தலைவர் ஒருவருக்கான தேவை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அதிகம் உணரப்பட்டது போல் தென்படுகின்றது. குறிப்பாக, சிங்கள மக்கள் மத்தியில். இதற்கு ஆட்சி முறையின் குறைப்பாடுகள் பிரதான காரணமாக அமைந்ததுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வரசாங்கம் நிறைவேற்றுவதில் பெரும் தோல்வியைத் தழுவிக்கொண்டது. தேசிய அரசாங்கம் பிரிதொரு பிரதான காரணம் என்பதில் ஐயமில்லை – கட்சி மற்றும் தேர்தல் அரசியல் ஆதிக்கம் செலுத்தும், இன தேசியவாதம் மேலோங்கிக் காணப்படும் இலங்கைப் போன்ற நாடுகளில் தேசிய அரசாங்கம் சவாலுக்குரிய விடயமாகும். 2018ஆம் ஆண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட பிரிதொரு ஆய்வொன்றின் மூலம் 52.1%மான சிங்கள மக்கள் பலமான ஆட்சியாளரின் தேவையினை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான விரக்தி/ ஏமாற்றம் காரணம் என்பது தெளிவாகியது. ஆயினும், 80.9மானவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவரின் ஆட்சியினை ஆதரித்திருந்தார்கள். ஒப்பீட்டு ரீதியில் பாரக்கும்போது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை 2012ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இதற்கு நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் குறைந்தளவிலான நம்பிக்கையும் பிறிதொரு காரணமாகும். இலங்கை மக்கள் அரசியல் கட்சிகள் மீது (20%க்கு குறைவானவர்கள் மாத்திரமே அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர்) மிகக் குறைந்த நம்பிக்கைக் கொண்டிருப்பதனை அண்மைய ஆய்வொன்று வெளிப்படுத்தியது. ஆய்வு முடிவுகளை அவதானிக்கும் போது இராணுவத்தின் மீதான சிங்கள மக்களின் நம்பிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் இராணுவத்தின் தலையீடு அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் அதிகரித்து வருவதனையும் காணமுடிகின்றது. இத்தகைய போக்கு லத்தின் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. ஆசியாவில் மியன்மாரிலும் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு முன்னரான ஆட்சியிலும் இதனைக் காணமுடியும். இதனை “சிவில் -இராணுவ ஆட்சி” என லத்தீன் அமெரிக்க நாடுகளில் அழைக்கின்றார்கள்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தகவல்களின் படி 2011-2018 காலப்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான சிங்கள மக்களின் நம்பிக்கை எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதனை அவதானிக்க முடிகின்றது. 2011ஆம் ஆண்டு 64.1% ஆக காணப்பட்ட நாடாளுமன்றத்தின் மீதான நம்பிக்கை 2018இல் 16%ஆக குறைவடைந்துள்ளது. அதேபோல், 56.3% ஆக காணப்பட்ட அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை 2018இல் 16.7% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், 92.3%ஆக (2011இல்) காணப்பட்ட இராணுவத்தின் மீதான நம்பிக்கை பெரியளவில் மாற்றமின்றி 91.4% ஆக காணப்பட்டது. பெறும்பான்மை சிங்கள மக்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் இராணுவ ஆட்சியின் மீது பெரியளவில் உடன்பாடற்றவர்களாக காணப்படுவதனை அண்மைய ஆய்வொன்று வெளிப்படுத்தியது. கட்டுரையாசிரியர் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் 11 மாவட்டங்களில் (அனைத்து மாகாணங்களையும் உள்வாங்கி) சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சுமார் 1300 பேரிடம் “அரச மற்றும் சமூக நிறுவனங்கள் மீதான பிரஜைகளின் நம்பிக்கை” என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில் ஆட்சி முறையின் வேறுப்பட்ட வடிவங்கள் தொடர்பாக ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் பின்வருமாறு:
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 68.7 விகிதமானவர்கள் நாடாளுமன்ற ஆட்சியினை ஆதரிக்கின்றார்கள். ஜனாதிபதி ஆட்சி முறையினை 43.1%மானவர்கள் ஆதரிப்பதுடன், 41%மானவர்கள் முழுமையாக எதிர்க்கின்றார்கள். ஒரு தனிக்கட்சியின் ஆட்சியினை 18.4%மானவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதுடன், அதனை 45.1%மானவர்கள் எதிர்க்கின்றார்கள். சமஷ்டி மற்றும் மாகாண ஆட்சி தொடர்பாக வினவியபோது 47.2%மானவர்கள் ஆதரிக்க, அதனை 35.8%மானவர்கள் முழுமையாக மறுதலித்தார்கள். கலப்பு அரசாங்க முறை தொடர்பாக (நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி) கேட்டபோது 63.6%மானவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், 30.3%மானவர்கள் மறுதலித்தார்கள். மிக முக்கியமாக ஒற்றையாட்சி அரசாங்க முறையினை 45.1%மானவர்கள் ஏற்றுக்கொள்வதுடன், 49.9%மானவர்கள் அதனை முழுமையாக எதிர்க்கின்றார்கள். இராணுவ ஆட்சி தொடர்பாக வினவியபோது 78.2%மானவர்கள் முழுமையாக ஏற்க மறுத்ததுடன், 11.5%மானவர்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டனர், 10.2%மானவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். இது இலங்கையர்கள் பொதுவில் இராணுவத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் இராணுவ ஆட்சி தொடர்பாகக் கொண்டுள்ள எண்ணப்பாங்கினையும் சித்தரிக்கின்றது. இறுதியாக நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்களை பொருட்படுத்தாத தனிமனித சர்வாதிகார ஆட்சி தொடர்பாக கேட்டப்போது 74.2%மானவர்கள் அத்தகைய ஆட்சிமுறையினை ஏற்க மறுத்தார்கள் – மறுபுறமாக, 14.2%மானவர்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டதுடன், 11.3%மானவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். இம்முடிவுகள் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்துக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட இலங்கையர்களின் ஜனநாயக தாற்பரியங்களுக்கு எதிரான எண்ணப்பாங்கினைக் வெளிக்காட்டுகின்றன. மறுபுறமாக இலங்கையில் ஜனநாயக மரபுகளை மற்றும் அடிப்படைகளை கலைவது அத்தகைய இலகுவான காரியமாக அமையாது என எண்ணத்தோன்றுகிறது. ஆயினும், தொடர்ச்சியான சவாலும் அச்சுறுத்தலும் நிலவும்.
ஜனநாயக மரபுகளை மறுதலிக்கும் ஆட்சிமுறையின் போக்குகள்
கடந்த ஜூன் 3ம் திகதி ஜனாதிபதி நியமித்த இரண்டு படையணி தொடர்பான பரந்தளவிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுபான்மை மக்கள் மத்தியிலும் ஜனநாயகத்தினை விரும்பும் தரப்பினர் மத்தியிலும் இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “பாதுகாப்பான, ஒழுக்கமான மற்றும் சட்டத்துக்குட்பட்ட சமூகத்தினைக்” கட்டியெழுப்ப அமைக்கப்பட்டிருக்கும் படையணியானது முற்று முழுதாக இராணுவ அதிகாரிகளையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் குற்றச்செயல்கள், போர் குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களுடன் தொடர்புடையவர்களாவர். இதன் காரணமாக இக்குழு மீதான நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு அரசியல்வாதிகளையும் சிவில் சேவையினையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தினை கொண்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான செயலாகும். இலங்கையின் சிவில் சேவைக்கு நீண்டகால மதிப்பு, கௌரவம் உண்டு. இத்தகைய செயல் அதன் மீதான பிரஜைகளின் நம்பிக்கையினை சீர்குலைப்பதாக அமைந்துவிடும். மூன்று தசாப்தகால சிவில் யுத்தத்திற்கு முகம்கொடுத்த நாட்டில் ஒரு குறுகிய காலத்தில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவது இனங்களுக்கிடையிலான நம்பிக்கையினை மேலும் சீர்குலைப்பதாகவும் நல்லிணக்கம், நிலையான சமாதானம் என்பவற்றினை மேலும் மோசமாக்கும். உண்மையில், ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான, சட்டத்திற்குட்பட்ட சமூகங்கள் சிங்கப்பூர், ஹாங்கொங், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் இராணுவ தலையீட்டின் மூலம் உருவாக்கப்படவில்லை. இத்தகைய செயலணி ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் சவூதி ஆரேபியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக அறிய முடிகின்றது.
மிக முக்கியமாக, இச்செயலணி நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள், அமைச்சரவை, நாடாளுமன்ற ஆலோசனைக்குழுக்கள் ஆகியன மேற்கொள்ள வேண்டிய வேலைகளைச் செய்ய முற்படுவதாக தென்படுகின்றது. இது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அதன் நிலையினை வலுவிலக்கச் செய்யும். அதேபோல் கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருள் மரபுரிமை தொடர்பான செயலணி இலங்கையின் பன்மைத்துவக் கட்டமைப்பினை மறுதலிக்கும் செயற்பாடாகும். குறிப்பாக, தனிச்சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட செயலணியினை தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் ஒரு மாகாணத்திற்கு நியமித்திருப்பதானது சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரர் சிங்கள பௌத்தக் கோட்பாட்டினை வட கிழக்கில் தீவிரமாக நிலைநாட்ட முற்படும் ஒருவர் என்பது பலரும் அறிந்த விடயமாகும். இதன் ஏனைய உறுப்பினர்களாக இராணுவ அதிகாரிகளே காணப்படுகின்றனர். சிறுபான்மை மதத்தலைவர்களை/ சிவில் சமூக உறுப்பினர்களை, அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்ளாமையானது தீவிர அரச ஆதரவுடன் கூடிய சிங்கள மயமாக்கத்திற்கு வழிச் செய்யலாம் என ஊகிக்க முடிகின்றது. வரலாறு முழுவதும் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் செறிவினை இல்லாது செய்யும் நோக்குடன் பெரும் எண்ணிக்கையிலான குடியேற்றங்கள் அம்பாறை, திருக்கோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தீவிரத்தன்மையினை முதல் இரண்டு மாவட்டங்களில் காண முடியும். இவ்விரண்டு மாவட்டங்களிலும் 30%க்கு மேற்பட்டவர்கள் சிங்களவர்கள் ஆகும். ஆயினும், மாகாண ரீதியாக பார்க்கும்போது தமிழ் மக்கள் 39.79% ஆகவும் முஸ்லிம்கள் 36.69% ஆகவும் சிங்களவர்கள் 23.15% ஆகவும் காணப்படுகின்றனர். 25% சிறுபான்மை மக்கள் வாழும் பன்மைத்துவ நாட்டில் ஓரினத்தை அடிப்படையாகக் கொண்ட செயலணிகள் தாபிப்பது இன ஒதுக்கல் என குறிப்பிடலாம். இச்செயலணியில் தெரன தொலைக்காட்சியின் உரிமையாளர் திலித் ஜயவீரவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலை நிறுவனமயப்படுத்தப்படுமாயின் ஜனநாயகத்திற்கான பெரும் அச்சுறுத்தலாக அமையும். எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்/ நிறுவனக்கட்டமைப்புக்கள் ஆட்சி செயன்முறையில் நிறுவனமயப்படுத்தப்படுமாயின் நீண்டகாலத்திற்கு அவற்றை நீக்குவது பெரிதும் கடினமாக அமையும். ஜனநாயக ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அதன் வேர்களை/ அடிப்படைகளை கலைவது கடினமான காரியமாக அமையும். அந்நிலையினை லத்தின் அமெரிக்க நாடுகளில், பாகிஸ்தானில், இன்று மியன்மாரில் காண முடியும். மியன்மார் நாடாளுமன்றத்தில் 1/4பங்கு பிரதிநிதித்துவத்தினை இராணுவத்திற்கு ஒதுக்குமாறு இராணுவத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள். இதன் நோக்கம் சட்ட மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் நிலையினை உருவாக்குவதாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஜனாதிபதி உருவாக்கியுள்ள செயலணிகள் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு அப்பாட்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையிலான ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள்/ தற்போது சேவையில் இருக்கும் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இவற்றின் சட்டத்தன்மை, வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக சிவில் சமூக மட்டத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், இவை நாட்டில் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளின் பணிகளை நிறைவேற்ற முற்படுகின்றன – இதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதனை எதிர்காலத்தில் பார்க்க முடியும்.
குறிப்பாக, சட்டம், ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பான சமூகத்திற்கான செயலணி நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பணிகளை ஆற்ற முற்படுகின்றது. இச்செயலணி ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது மதத்தின் சுதந்திரத்தினை/ உரிமைகளை மட்டுப்படுத்தும் வகையில் செயற்பட வாய்ப்புண்டு என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் இடங்களில் இதன் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதனை எதிர்காலத்தில் அறிந்துகொள்ள முடியும். ஒழுக்கமான, சட்டத்திற்குட்பட்ட சமூகத்தினை உருவாக்குதல் என்ற பெயரில் இச்செயலணி சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தகைய செயலணிகளின் சட்டத்தன்மையே பிரதான கேள்வியாக காணப்படுகின்றது.
அண்மைக்காலங்களில் அரசாங்கத்தின் செய்பாடுகளை விமர்சிப்போர் கைது செய்யப்படுவது, அச்சுறுத்தப்படுவது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இது ஜனநாயக விரும்பிகளுக்கு, சிவில் சமூக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிப்பதற்கு சிவில் சமூக அமைப்புகளுக்குள்ள சமூகத் தளம் இல்லாது செய்யப்படலாம். டெரன் எசீமொல்கு மற்றும் ஜேம்ஸ் ரொபின்சன் வாதிடுவது போன்று இந்நிலை எதேச்சதிகார ஆட்சியினை உருவாக்கும். சர்வதேச அமைப்புகள், இலங்கையின் நிலைமையினை அவதானித்து வருகின்றன – மனித உரிமை அமைப்புக்கள் சிவில் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீட்டினை கண்டித்துள்ளன. போர்குற்ற விசாரணைகள் ஒருபுறம் இருக்கும் பட்சத்தில் ஜனநாயகத்திற்கு எதிரான முன்னெடுப்புக்கள் சர்வதேச அழுத்தங்களை மற்றும் ‘எதிரி உணர்வினை’ மேலும் அதிகரிக்கலாம். மனித உரிமைகளை, ஜனநாயகத்தினை மற்றும் சட்டத்தின் ஆட்சியினை மதிக்கும் பல அமைப்புக்களில் இலங்கை உறுப்புரிமைக் கொண்டுள்ளதுடன் (ஐ.நா. பொது நலவாய அமைப்பு) அதேக்கொள்கைகளைக் கொண்ட பல சர்வதேச அமைப்புக்களிடம் நிதி/ கடன் உதவிகளைப் பெற்றுள்ளது (உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா முகவராண்மை நிறுவனங்கள்). அதிகார குவிப்பு, இராணுவமயமாக்கம் மற்றும் சிங்கள-பௌத்த அடிப்படைவாதம் என்பன பன்மைத்துவ இலங்கையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்த கரிசனையினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சர்வதேச அக்கறையொன்றும் காணப்படுகின்றது.
ஜனாதிபதி செயலணிகளான (i). வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி (ii). சமூக வாழ்க்கையினை தொடர்ச்சியாக பேணுவதற்கான சேவைகள், வளங்களை வழங்க, நெறிப்படுத்த கண்காணிக்கும் செயலணி (iii). பொருளாதார மீட்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி (iv). கொரோனா பரவலை தடுப்பதற்கான செயலணி (v). கல்வி செயலணி (vi). தொல்பொருள் மரபுரிமை செயலணி (vii). ஒழுக்கமாக பாதுகாப்பான மற்றும் சட்டத்திற்குட்பட்ட சமூகத்தைச் கட்டியெழுப்பும் செயலணி என்பன ஜனாதிபதியால் தாபிக்கப்பட்டவை. இவற்றின் சட்டத்தன்மை, உறுப்பினர் தெரிவு என்பன தொடர்ந்தும் விமர்சனத்துக்குட்படுத்தப்படுகின்றது.
சில உயர்மட்ட பதவி நியமனங்கள் தொடர்பாகவும் குறிப்பிட வேண்டும். ஓய்வுப்பெற்ற பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பொதுமக்களின் மனக்குறைகளை விசாரிக்கும் ஒம்புட்ஸ்மன் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், சுகாதார அமைச்சு, விவசாயம், கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்சின் செயலாளர்கள், சுங்கவரி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் (ஓய்வு பெற்ற/ சேவையில் இருக்கும்) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர் குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை நீதித்துறை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலாக அமைந்தது. இத்தகைய செயற்பாடுகளை முன்னால் ஜனாதிபதியும் செய்தார் – பொது மன்னிப்பு வழங்குவதற்கென பின்பற்றப்படும் சட்ட ஒழுங்குகள் மறுதலிக்கப்படுவது ஆட்சி முறை மற்றும் நீதித்துறை மீதான பிரஜைகளின் நம்பிக்கையினை சீர்குழைப்பதாக அமைந்துவிடும். மறுபுறமாக பண்மைத்துவ நாட்டில் பொது மனிதராக திகழ வேண்டிய ஜனாதிபதி தொடரச்சியாக ஒரு குறிப்பிட்ட மதத்தினைச் சேர்ந்த தலைவர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவது சிறுபான்மை மற்றும் பன்மைத்துவத்தினை விரும்பும் தரப்பினர் மத்தியில் பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சியில் மதத்தின் தலையீடு எந்தளவுக்கு காணப்படும் என்பதனை ஜனாதிபதி பதவியேற்பின் போது உணர முடிந்தது – ஆயினும் ஆட்சி செயன்முறையில் மதத் தலையீடு அதிகரிப்பதானது நவீன ஆட்சிமுறையின் அடிப்படை தத்துவங்களை மறுதலிப்பதாகவும் தாராள ஜனநாயகத்தினை தடம்புரல செய்வதாகவும் அமைகின்றது. இன்று உலகில் மதசார்பின்மைவாதத்தினை ஆதரிக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பின் கீழ் அது ஒரு மதசார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும். உலகின் ஒரே ஒரு இந்து நாடு என அழைக்கப்படுகின்றது – மொத்த சனத்தொகையில் 99%மானவர்கள் இந்துக்கள். இவற்றையெல்லாம் தாண்டி, கருப்பினத்தவர்கள் மீதான வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற அமைதி வழி எதிர்ப்பினை பாதுகாப்புப் படையினர் அடக்கிய விதம் ஒரு புறம் அச்சத்தினையும் மறுபுறமாக எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதற்கான முன்கூட்டிய சமிஞ்சையாகவும் தென்பட்டது. இலங்கையின் சமகால போக்குகள் ஜனநாயகத்தை மீட்டெடுத்தல் என்பதற்கு மாறாக ஆட்சியைக் கைப்பற்றும் தந்திரோபாயமாக ஜனநாயகத்தைப் பயன்படுத்துவதில் காணப்படும் அக்கறையினை வெளிப்படுத்துகின்றது – இதில் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்க முடியும்.
ஜனநாயகத்தினை மீட்டெடுத்தல்: சாத்தியப்பாடுகள்
ஜனநாயகம் தொடர்பான கட்டுக்கதைகள் காணப்படுவது போன்று சர்வாதிகார ஆட்சித்தொடர்பான ஆர்வமும் கட்டுக்கதைகளும் இலங்கையில் எழுச்சி பெற்று வருகின்றன. பலமான தனிமனித ஆட்சி, நிபுணத்துவம் பெற்ற சிறு குழுவின் ஆட்சி அல்லது பலமான தலைவர் ஒருவரின் ஆட்சி போன்ற எல்லாவற்றிலும் குறைப்பாடுகள் உண்டு என்பதனை உலகின் பல்வேறு வரலாற்று சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஆட்சிக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி சக்திகளில் இருந்தும் எதிர்ப்புக்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. ஜனநாயகத்திற்கு எதிரான மரபுகளைக் கொண்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் தொடர்பான கரிசனை இன்று வேகமாகவே எழுச்சிபெற்று வருகின்றன. சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பிரேசில், மியன்மார் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே, நாடாளுமன்ற மரபுகளுக்கு அப்பாற்பட்ட, இனத்தேசியவாத, சிங்கள – பௌத்த அடிப்படைவாதத்தினை மூலாதாரமாகக் கொண்ட ஜனரஞ்சக தலைவர்களின் ஆட்சி நீண்டகாலத்தில் மக்களின் அதிருப்திக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதனை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன. பொறுப்புக்கூறலை மறுதலித்தல், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை தொடர்ச்சியாக மறுதலிக்கும் ஆட்சியினை பெரும்பான்மை சிங்கள மக்கள்கூட ஒரு கட்டத்தில் விரும்ப மாட்டார்கள் என எண்ணத் தோன்றுகிறது. இதற்கு அண்மைக்கால அமெரிக்க நிகழ்வுகள் நல்ல உதாரணமாகக் கொள்ள முடியும்.
இன்று இலங்கையில் ஜனரஞ்சக ஆட்சி மீதான மோகம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தீவிரமாக எழுச்சிபெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அழிவுகளை ஓரளவேணும் தடுத்து ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க கலாநிதி தயான் ஜயதிலக்க எழுதியக் கட்டுரையொன்றில் கூறியது போன்று, பலமான எதிர்கட்சியினை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள், குறிப்பாக, நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். சர்வதேச உறவுகளை மீள்புதுபிக்க வேண்டும். வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அத்துடன், பலமான சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் நேர்மையான ஜனநாயகத்தினை மதிக்கும் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் அவசியமாகும். ஆயினும், அதற்கான இடைவெளியும் இலங்கையில் பெரியளவில் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். இதனை மங்கள சமரவீர கட்சி அரசியலில் இருந்து முற்றாக விலகிய நிகழ்வு வெளிக்காட்டுகின்றது. நீண்டகால ஜனநாயக மரபுகளைக் கொண்ட, பல்லினத்தன்மையினை மதிக்கும், நாட்டின் நிலையான சமாதானம், நல்லிணக்கம், சிறுபான்மையினரின் உரிமை என்பவற்றுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்த, எந்த அரசாங்கத்தில் இருந்தாலும் தமது கொள்கையில் மாற்றங்களை செய்யாத முதிர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் தேர்தல் கலாசாரத்தில் இருந்து விலகியிருப்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இதன் மூலம் புலப்படுவது மேற்கூறிய கொள்கைகளை ஏற்று அரசியல் செய்யக்கூடிய அல்லது அவற்றை பின்பற்றக்கூடிய அரசியல் சக்தியொன்று இன்று இலங்கையில் இல்லை என்பதாகும். அந்தளவுக்கு அதிகார அரசியல் இன, மத மற்றும் பல்வேறு அடிப்படைகளில் நாட்டு மக்களையும் தலைவர்களையும் பிளவுப்படுத்தியுள்ளது. அந்த விரக்தியே அவரின் முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே, இலங்கையில் ஜனநாயகத்தினை பாதுகாக்க அல்லது அதன் குறைந்தபட்ச பண்புகளையேனும் பாதுகாக்க மங்கள சமரவீர, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் போன்றவர்கள் பெரிதும் அவசியமாகும். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி பேட்டியொன்றில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்திற்காக, நீதிக்காக குரல் கொடுப்பதனை நிறுத்திவிடக்கூடாது” என்று குறிப்பிட்ட விடயமானது மனதை பெரிதும் நெகிழவைத்தது.
சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் பொருளாதார தோற்றம் (Economic origins of dictatorship and democracy)என்ற புகழ்ப்பெற்ற நூலை, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று உலகில் தலைச்சிறந்த பல்கலைகழகமான Massachusetts Institute of Technology (MIT)யில் பணியாற்றும் பேராசிரியர் டெரொன் எசீமொல்கு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் 2006ஆம் ஆண்டு வெளியிட்டனர். அதில் பெரும்பான்மையான மக்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும், அதிகாரவாதம் கொண்ட உயர்குழாம் அதனை எதிர்ப்பதாகவும், அவர்கள் தொடர்ந்தும் சர்வாதிகாரத்தை விரும்புவதாகவும் வாதிடுகின்றார்கள். நிலையான பொருளாதார அபிவிருத்தியினை ஜனநாயக ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவே அடைந்துகொள்ள முடியும் என்பதனை ஆதாரபூர்மாக நிறுவியுள்ளார்கள். நூலாசிரியர்கள் ஜனநாயகத்தை சக்திப்படுத்தும் செயன்முறையில் ஆறு விடயங்கள் பாதிப்புச் செழுத்துவதாக அல்லது அதனை நிர்ணயிப்பதாக குறிப்பிடுகின்றனர். அவை முறையே, சக்திமிக்க சிவில் சமூகம், அரசியல் நிறுவனங்களின் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தன்மை, பொருளாதார அசமத்துவத்தின் அளவு, பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் உலகமயமாக்களின் எல்லை மற்றும் வகை என்பனவாகும். இவற்றில் ஏற்படும் சாதக மற்றும் பாதக மாற்றங்கள் ஜனநாயகத்தின் மீது பாதிப்புச் செழுத்துவதாக வாதிடுகின்றார்கள். உலகில் ஜனநாயகத்திற்கு எதிரான அலையொன்று எழுச்சிபெற்று வருவதனால் மேற்கூறிய விடயங்கள் அண்மைக்காலங்களில் அதிக கலந்துரையாடலுக்கு பாத்திரமாகியுள்ளன எனலாம். ஜனநாயகம் பற்றி ஹிட்லரின் பிரச்சார அமைச்சரின் கூற்று சமீபகாலங்களில் பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் நினைவுகூறப்படுவதைக் காணலாம் – அதாவது தன்னை அழிக்கவல்ல அல்லது சீர்குலைக்கவல்ல விதைகளை ஜனநாயகம் தனக்குள்ளேயே கொண்டுள்ளது எனும் கருத்து மீண்டும் பலமாகவே கேட்கிறது.
கலாநிதி இரா. ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்