பட மூலம், GLOBAL PRESS JOURNAL

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வரவு செலவுத் திட்ட அறிக்கையில் உள்ளடங்கும்போது, கடந்த 2020 ஜனவரி மாதம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தையும் நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது.

அதனை ஜனாதிபதி சமர்ப்பிக்க ‘தைபிறந்தால் வழிபிறக்கும்’ என ஆயிரம் ரூபா சம்பளத் தொகைக்கு புதிய அர்த்தம் கூற முனைந்தார் அப்போதைய அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான். கூடவே ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைவாக அரசாங்கம் ஆயிரம் ரூபா வேதனத்தைப் பெற்றுக்கொடுக்க உள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அதனை வழிமொழிந்து அப்போதைய ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது உறுதி என சபையில் கூறினார். அப்போதைய பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் பதிலுரையில் உறுதி செய்தார். அந்தளவு தூரம் அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என அவர்கள் நம்பினார்கள்.

அதேநேரம் அந்த விவாதத்தில்  கலந்துகொண்ட அப்போதைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா (கட்டுரையாளர்) நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஒருவரே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கத்தால்பெற்றுக் கொடுக்க முடியாது என வாதிட்டு இருந்தார். அத்தோடு, 2020 பெப்ரவரியிலேயே இன்னுமொரு ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு, அவர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்குவதே என முன்மொழிவு செய்ததுடன், கடந்த 25 ஆண்டுகளாகச் செய்யப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்தத்தின் அத்தனை பிரதிகளையும் சபையில் சமர்ப்பித்து அரசாங்கத்தின் வகிபாகம் அல்லது ஆணை (Mandate) அதில் இல்லை என்பதை உறுதி செய்திருந்தார். பெருந்தோட்ட அமைச்சருக்கும் அதன் பிரதிகளை வழங்கியிருந்தார்.

2019 இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் மூலமாகவும் 2020இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவும் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் எடுத்த முதலாவது படியில் சறுக்கி இருந்தார்கள். அதுதான் நிறைவேற்றதிகார ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் அந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் கூறியதுபோல ‘தைபிறந்தால் வழிபிறக்கும்’ என  எந்த வழியையும் திறக்கவில்லை. இந்த நிலையிலேயே அடுத்த ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபா வரையான சம்பள அதிகரிப்பை வழங்க உள்ளதாக ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற பிரதமரான நிதி அமைச்சர் அறிவித்து உள்ளார். இது இரண்டாவது சறுக்கல் ஆகவே அமையும்.

ஆனாலும், இந்த அறிவிப்பு அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் ஒரு பொறி என்பது தெளிவு. அதற்கு இரண்டு காரணங்களை இந்த வரவு செலவுத்திட்ட அறிவிப்பில் இருந்து பெறலாம்.

  1. இந்த அறிவிப்பின் தலைப்பு ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பது அல்ல. பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை மறுசீரமைத்தல் என்ற தலைப்பின் உள்ளம்சமாகவே ஆயிரம் ரூபா வரையான சம்பளம் எனக் குறிப்பிட்டு உள்ளனர். எனவே, வழங்கப்படப்போவது 1000/= அடிப்படைச் சம்பளமல்ல என்பது தெளிவு. எனவே, எதிர்கட்சிகள் அதனைப் பெருங்கண்டுபிடிப்பாக காட்டுவதனை விடுத்து, ‘மறுசீரமைத்தல்’ எனும் விடயத்தில் கவனம்செலுத்த வேண்டும்.
  2. இந்த 1000/= வரையான சம்பள அதிகரிப்பை வழங்கத் தவறுகின்ற கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களைப் பெற்று (ஒப்பந்தத்தை மாற்றியமைத்து) வெற்றிகரமான வியாபாரத்திட்டம் ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் அதற்காக புதிய சட்டம் ஒன்றை ஜனவரியில் முன்வைக்க உள்ளதாகவும் பிரதமர் வரவு செலவு திட்ட வாசிப்பில் கூறி உள்ளார்.

இந்தக் கட்டத்தில் ஏற்கனவே அரசாங்கம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் வெற்றி அளிக்காததன் வெளிப்பாடு தெரிகிறது. எனவே, அந்தத் தோல்வியில் பாடம் கற்றுக்கொண்ட அரசாங்கம் கம்பனிகளை நெருக்கத்துக்கு உள்ளாக்கி காரியம் சாதிக்க நினைப்பது போல் மேலோட்டமாகத் தெரிந்தாலும், அரசாங்கம் பெருந்தோட்டமுறைமை மாற்றத்தை நோக்கி முன்னகர்கின்றது என்பதே உண்மையாகும். ஏற்கனவே, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் கொள்கை விளக்க உரையிலும் இதே கூற்றினை ஜனாதிபதி விடுத்து இருந்தார்.

எனவேதான் வரவு செலவுத் திட்டம் அறிவித்த நாளன்றே முதலாளிமார் சம்மேளனம் ஒரு மெய்நிகர் ஊடக சந்திப்பை நடாத்தி தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது, ஆயிரம் ரூபாவைவிட அதிக வருமானத்தை நாளொன்றில் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய முறைமை ஒன்றை தாங்கள் கைவசம் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. ‘அவுட்குரோவர்’ முறைதான் அது. அதனை ஓரளவுக்கு ஏற்கனவே கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதனைத்தோட்டங்களில் நடைமுறையிலும் கம்பனிகள் பின்பற்றுகின்றன.

ஆனால், அதனை 100% நடைமுறைப்படுத்தவே கம்பனிகள் முயற்சிக்கின்றன. அதில் உள்ள சிக்கல் தோட்டத்தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் தொழில் உரிமைகள் (ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி போன்றன) தொடர்பான பிரச்சினையாகும். அதனை முற்றுமுழுதாக தவிர்த்த முறைமை ஒன்றால் அரசாங்கத்தின் நிதியத்துக்கு வந்து சேரவேண்டிய தொகை வந்து சேராதுவிடும். இது அரசின் திறைசேரிக்குப் பாதகமானது. ஆனால், கம்பனிகளுக்கு அதனைக் கட்டாமல் விடுவதனால் ஏற்படும் தொகையை தொழிலாளர்கைக்கு போகுமாறு வடிவமைத்து அதனை சம்பள உயர்வாக (வருமான உயர்வாக) காட்ட முனைகிறது.

இதனைப் புரிந்து கொண்ட அரசாங்கம் கம்பனிகள் முன்வைக்கும் முறைமையை தமக்கு‘அவசியமானவர்களுக்கு’ வழங்குவதன் மூலம் ஏன் தங்கள் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவும் பெருந்தோட்டப் பகுதியில் இருந்து பணப்பயிர்களை அகற்றவும் மாற்று வியாபார முறைமைகளை அறிமுகம்செய்வதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களை இயல்பாகவே துறையில் இருந்து அகற்றும் நீண்ட காலநிகழ்ச்சி நிரலைக் கையில் எடுத்துள்ளது.

இந்த எல்லா வழிமுறைகளையும் எடுத்து நோக்குமிடத்து இறுதிப் பாதிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கே. ஒருபுறம் தொழில் பாதுகாப்பு இழப்பினை கம்பனிகளிடமும், மறுபுறமாக பாரம்பரிய தொழிலை இழக்கும் ஆபத்தினை அரசாங்கத்திடமும் எதிர்நோக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பினை விடுப்பதன் மூலம் ஆளுங்கட்சியில் உள்ள மலையகத் தரப்பைத் திருப்திப்படுத்தவும், அது அடிப்படைச் சம்பளம் அல்ல என்ற கோஷத்தை எழுப்பி எதிர்க்கட்சியில் உள்ள மலையகத் தரப்பை ஆயிரம் ரூபாவுக்குள்ளாகவே வட்டமடிக்கச்செய்யவும், கம்பனிகளை நெருக்குதலுக்கு உள்ளாக்கி முறைமை மாற்றம் செய்யவுமே அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் ரூபா அறவிப்பை முன்மொழிந்துள்ளது.

இதனைப் புரிந்துகொண்டு மலையக அரசியல் தரப்பு எவ்வாறு காய்களை நகர்த்துகின்றது என்பதிலேயே மலையகப் பெருந்தோட்ட மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் இவர்கள் எவ்வாறு நாடாளுமன்றத்தை கையாள்கிறார்கள் என்பது அல்ல, எதிர்வரும் ஜனவரி முதல் அவர்கள் எவ்வாறு இயங்கப் போகிறார்கள் என்பதே கவனத்தில் எடுக்க வேண்டி உள்ளது.

மயில்வாகனம் திலகராஜா