பட மூலம், Dailymaverick.co.za, இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் பொன்டொக் ரங்கூன் என்ற மயானத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள்.
கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ முடியும் என்று இதுவரையில் எந்தவொரு விஞ்ஞானியும் அல்லது தொற்றுநோயியல் நிபுணரும் உலகின் எந்தப் பகுதியிலும் உறுதிவாய்ந்த ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.
இலங்கையில் சுகாதார நிபுணர்கள் குழுவொன்று மாத்திரமே கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நிலத்தடி நீரின் மட்டம் உயர்வானதாக இருப்பதே அதற்குக் காரணம் என்றும் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறது. அதனால், அவர்கள் கொரோனா மரணத்துக்கு உள்ளாகுபவர்கள் சகலரினதும் சடலங்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்று விதந்துரை செய்திருக்கிறார்கள். இது நேரடியாகவே முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைகின்றது.
உள்நாட்டு முஸ்லிம்களிடமிருந்து அல்லது வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து என்னதான் எதிர்ப்புகள் வந்திருந்தாலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளைக் கூட அவர்கள் நம்பவில்லை. சுகாதார நிபுணர்கள் குழு பச்சைக்கொடி காட்டாத பட்சத்தில் தான் ஒருபோதும் இதுவிடயத்தில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி உறுதியாகக் கூறியிருக்கிறார். இது ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்ற மந்திரத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்ற இன்னொரு சந்தரப்பமாகும்.
அதேவேளை, ஒரு முஸ்லிமான நீதியமைச்சர் தனது சமூகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை பார்க்கத் தவறுகிறார். தகனத்துக்குப் பிறகு அஸ்தியை எவ்வாறு புதைக்கவேண்டும் என்று முஸ்லிம் சட்ட அறிஞர்கள் போதித்திருக்கிறார்கள். “அவர்களை உங்களால் மாற்ற முடியாவிட்டால், அவர்களுடன் இணைந்துகொள்ளுங்கள்” என்பதே இந்தத் தலைவர்கள் பின்பற்றுகின்ற மந்திரம் போல் தெரிகிறது. மறுபுறத்தில் சமூகமும் செவிமடுக்கத் தயாராயில்லை.
இந்த நாடகம் முழுவதுமே அரசியலைத் தவிர விஞ்ஞானத்துடனோ அல்லது தொற்றுநோயியலுடனோ எந்தச் சம்பந்தமும் இல்லாததாகும். நிபுணர்கள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள அபிப்பிராயம், 2009ஆம் ஆண்டில் இருந்து, குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கும் பிறகு முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்கத் துடிக்கும் பெளத்த மேலாதிக்கவாதிகளுக்கு ஆகாயத்தில் இருந்து கிடைக்குப்பெற்ற அமுதமாக இருக்கிறது.
இந்த மேலாதிக்கவாதிகளோ ராஜபக்ஷ அரசாங்கத்தின் தூணாக விளக்குகிறார்கள். ஒரு மேலாதிக்க பௌத்த இலங்கை என்ற அவர்களின் கோட்பாடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ‘வியத்மக’ அமைப்பில் உள்ள துறைசார் நிபுணர்களின் சிந்தனையையும் கோட்பாட்டையும் ஆதிக்கம் செய்கிறது. இன்றைய ஜாதிக சிந்தனையின் முழுநிறைவான அம்சமாக இந்த கோட்பாடே விளங்குகிறது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் அதன் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யப்போவதாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் வதந்தியொன்று பரவியதையடுத்து பௌத்த மேலாதிக்க கோட்பாட்டின் சிற்பிகளில் ஒருவரான வயதில் முதிர்ந்த குணதாச அமரசேகர, முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்று அரசாங்கத்தை எச்சரிக்கை செய்தார். சில தினங்களுக்கு முன்னர் ஞானசார தேரரும் தனது வழமையான முஸ்லிம் விரோத தொனியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ பற்றி நினைவுபடுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
வைரஸ் பரவலை தடுப்பு மருந்தின் மூலமாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றபோதிலும், குறைந்தது இன்னொரு இரண்டு, மூன்று வருடங்களுக்கு வைரஸ் போவதற்கான அறிகுறி எதையும் காணவில்லை. அப்போதுகூட, அந்த தடுப்புமருந்தை இலங்கையர்களினால் எந்தளவுக்கு மலிவாகவும் சுலபமாகவும் பெறக்கூடியதாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. ஏனென்றால், நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அரசாங்கம் ஏற்கனவே நாட்டை வர்த்தகங்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. ஏனென்றால், பொதுச் சுகாதார நெருக்கடி காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் மூலமான பயன்கள் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்று பசில் ராஜபக்ஷ உணருகிறார்.
இதனால், போலியான விஞ்ஞானத்தின் அடிப்படையிலும், ஜாதிக சிந்தனையின் ஆதரவுடனும் அவசரகாலநிலை என்ற போர்வையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்து தகனம் செய்யப்படவிருக்கின்றன. ஜனாஸாவை தகனம் செய்துவிட்டு இஸ்லாமிய முறைப்படி அஸ்தியை புதைப்பது என்ற விட்டுக்கொடுப்பின் அடிப்படையிலான தீர்வு ஒன்றை முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் (முப்தி) தொடர்ந்து போதித்துக்கொண்டிருப்பாரேயானால், அவரால் ஆட்சியாளர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியுமே தவிர, தனது சமூகத்தின் இதயங்களை நிச்சயமாக வென்றெடுக்க முடியாது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது மற்றும் உத்தேச பசுவதை தடை பிரச்சினைகள் எல்லாம் ஒரு கோட்பாட்டு அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டவையாகும். முஸ்லிம்களின் தனிச்சட்டமும் இந்த கோட்பாட்டு கோடாரியின் வேட்டுக்கு விரைவில் இலக்காகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்துக்கு வரும்போது முஸ்லிம் நீதியமைச்சர் அதை எவ்வாறு கையாளப் போகிறார் என்பது முக்கியமாக கவனத்திற் கொடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அதேவேளை, இந்தக் கோட்பாட்டின் சார்பாளர்கள் தங்களது நட்பு நாடான சீனா சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். உய்குர் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி பலவந்தமாக ஊட்டப்படுவது, அவர்களது பெண்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு மயிர் கைத்தொழில் உற்பத்திகளை தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய தகவல்கள் அறிக்கையொன்றில் அம்பலமாகியிருக்கின்றன.
ஏற்கனவே சீன அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் பல பள்ளிவாசல்களையும் முஸ்லிம் மையவாதிகளையும் நிர்மூலம் செய்துவிட்டது. அந்த அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான மட்டத்துக்கு இலங்கையில் நிலைவரங்கள் சீர்கெடாது என்று நம்புவோமாக. காலனித்துவ காலகட்டத்துக்கு முன்னதாக இலங்கையில் பன்முக கலாசாரம் மிகவும் பிரத்தியேகமான முறையில் வெற்றிகரமாக கையாளப்பட்டமை ஆசியப் பிராந்தியம் முழுவதற்குமே ஒரு தனித்துவமான உதாரணமாக இருந்தது.
முஸ்லிம்களுக்கு இருக்கும் தெரிவுகள்
ஆனால், மேலும் இடர்பாடுகள் நேருவதை தவிர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு இருக்க க்கூடிய தெரிவுகள் எவை? எல்லாவற்றுக்கும் மேலாக, பதவியில் இருக்கும் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படுவதன் மூலம் இடர்மிக்க நிலைமைகளின் கீழ்கூட தங்களைப் பாதுகாத்து அமைதியாக வாழ முடியும் என்ற சிந்தனையை அவர்கள் கைவிடவேண்டும். இதேநேரம், தற்போதைய எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொள்வதன் மூலம் முஸ்லிம்கள் தங்களது வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான உந்த உத்தரவாதமும் கிடையாது என்றாலும், சமகி ஜன பலவேகயவும் அதன் தாய்க் கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தற்போதைய ஆபத்தான கோட்பாட்டுக்கு நாளடைவில் இரையாகும்.
எனவே, முஸ்லிம்களும் அதேபோன்று தமிர்களும் கூட மூன்றாவது மாற்றுவழியொன்றை நாடவேண்டும். அது ஜனநாயகத்தை அதற்கே இயல்பாக உரித்தான பண்பு விழுமியங்களுடன் மீட்டுக்கொண்டு வருவதிலும் நாட்டின் பன்முக அரசியல் மற்றும் கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்ட ஒரு மாற்று வழியாக இருக்கவேண்டும்.
இவ்வாறான நிலைமை போன்று வேண்டும் என்று விரும்புகிற நிதானமான சிந்தனை கொண்ட – செல்வாக்குமிக்க ஒரு கணிசமான பிரிவினர் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் (மகாவம்சம் உட்பட) மத்தியிலிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. அவர்களை அணுகி கரங்கோர்த்து தங்கள் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதும் சிறப்பான ஒரு இலங்கைக்காக அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதும் முஸ்லிம் அறிவுஜீவிகளின் கடமையாகும்.
இதுவெல்லாம் உடனடியாக நடந்துவிடப்போகிற மாற்றங்கள் அல்ல. ஆனால், எதிர்காலத்துக்காக இப்போதே அத்திபாரத்தை அமைக்கவேண்டும். நெருங்கிவரும் பொருளாதார அனர்த்தத்தின் முன்னால் தற்போதைய அரசாங்கத்தின் ஜனரஞ்சக படிமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
முஸ்லிம் சமூகம் தற்போதைய இடர்பாட்டுக்குள் அகப்பட்டதற்குக் காரணம் அதன் சொந்த இனத்துவ அரசியலாகும். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் உடனடியாகக் கலைத்துவிட்டு சமூகத்தின் உறுப்பினர்களினால் அல்லது மற்றைய சமூகத்தின் உறுப்பினர்களினால் பிரதிநிதித்துவப்படுத்துவதில் என்ன தவறு இருக்கப்போகிறது? பாரம்பரியமான வட்டத்துக்கு வெளியே புதிதாக சிந்திக்கவேண்டிய நேரம் இது.
பேராசிரியர் அமீர் அலி