பட மூலம், Deccanherald, REUTERS

பலம்பொருந்திய  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமானது என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகையாளர் ஒருவருடனான நேர்காணலில் வாதிட்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவித தடுப்பும் சமப்படுத்தலும் இல்லாமலும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமலும் சர்வாதிகார அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டால்தான் பெரிதாகப் பேசப்படுகின்ற ‘சுபீட்சத்துக்கும் சீர்மைக்குமான நோக்கை’ (Vistas of Prosperity and Splendour) சாதிக்கலாம்; அந்த குறிக்கோளை நோக்கியே அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுகிறது என்பதே பேராசிரியரின் நிலைப்பாடு.

துரதிர்ஷ்டவசமாக, எதேச்சாதிகாரத்துக்கும் துரித அபிவிருத்திக்கும் இடையில் இத்தகைய தொடர்பு இருப்பதாக எவ்வாறு முடிவுக்கு வந்தார் என்பதை அமைச்சர் விளக்கவில்லை. ஆனால், நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியின் மட்டமும் மிகவும் கடுமையான சூழ்நிலையில் இருக்கிறது என்பதையும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என்பதையும் ஒத்துக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

நாடுகளினதும் நிறுவனங்களினதும் கடன்செலுத்தும் ஆற்றல் குறித்து ஆய்வுசெய்யும் நிறுவனமான ‘மூடி’ (Moody) இலங்கையின் கடன் செலுத்தும் ஆற்றலை (Credit rating) மூன்று படிநிலையினால் தரக்குறைப்பு செய்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்தி அந்தஸ்தை மேல்மத்திய தரத்தில் இருந்து கீழ் மத்தியதரத்துக்கு குறைத்த உலக வங்கியின் முன்னைய கணிப்பீடு, நாட்டின் மோசமான கடன்சுமை, மூலமான வருவாய் ஆகியவை குறித்து ஹாவார்ட் பேராசிரியரான ஹவுஸ்மான் விடுத்த எச்சரிக்கை எல்லாமே கொள்கை வகுக்கும் செயன்முறைகளில் பொருளாதார செப்பனிடல் முன்னுரிமை பெறவேண்டும் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகள். இத்தகைய நிலைவரம் எதேச்சாதிகார ஜனாதிபதி ஒருவரை வேண்டிநிற்கிறதா என்பதே கேள்வியாகும். அவ்வாறு இல்லையானால், 20ஆவது திருத்தத்துக்குப் பின்னால் வேறு தீயநோக்கம் இருக்கிறதா?

அதே அமைச்சர் அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை அதாவது ராஜபக்‌ஷாக்களை பழிவாங்குவதற்காக முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டது என்று கூறியதன் மூலம் கவனக்குறைவால் இரகசியத்தை வெளியிட்டுவிட்டார். முன்னைய ஆட்சியை மீண்டும் கொண்டுவருவது மாத்திரமல்ல, அதற்கு நீண்ட ஆயுளை உறுதிசெய்வதுமே 20ஆவது திருத்தத்தின் பிரதான நோக்கம் என்பதா அதன் அர்த்தம்? நான் முன்னர் எனது கட்டுரையில் வாதிட்டதைப்போன்று 20ஆவது திருத்தத்துக்கு அபிவிருத்தியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக அது குடும்ப ஆட்சியுடன் சம்பந்தப்பட்டதேயாகும். அந்த ஆட்சியை வலுவான பொருளாதார தளமின்றி நிலைநிறுத்த முடியாது. அத்தகைய தளத்தை அமைப்பதற்கு  இலங்கை போன்ற பன்முகத்தன்மையுடைய நாட்டில் மக்களின் இறைமை (ஒரு குறிப்பிட்ட குழுவின் இறைமையல்ல), அவர்களின் ஜனநாயக சுதந்திரங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, 20ஆவது திருத்தத்தை கொண்டுவருபவர்கள் பொருளாதாரத் தளத்தைப் பலப்படுத்துவதற்கான விரிவான மூலோபாயம் எதுவுமின்றி , ஒரு குழுவின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு வம்சத்தின் அதிகார தளத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வகையில் நோக்குகையில், பௌத்த மேலாண்மை ஆதிக்கவாதிகள் இந்த நாட்டை ஒரு பௌத்த அரசாக மாற்றவேண்டும் என்ற தங்களின் நீண்டகாலக் குறிக்கோளை சாதிப்பதற்கு 20ஆவது திருத்தம் அவசியமாகிறது. அவர்கள் தங்களது குறிக்கோளை இவ்வாறு தெளிவாகக் கூறாமல் இருக்கக்கூடும். ஆனால், “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற அவர்களது சுலோகத்தின் தாக்கத்தை அல்லது விளைவை கருத்தூன்றி ஆராய்ந்து பார்த்தால், இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது, மற்றவர்கள் இங்கு வசிக்கின்ற அந்நியர்கள் என்பதே அவர்களது உரிமைக்கோரிக்கை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும் என்ற அவர்களது வலியுறுத்தல் அவர்கள் எந்தத் திசையில் நகருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவைக்கிறது.

19ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களில் பௌத்தமத விழிப்புணர்ச்சியாக தொடங்கிய இயக்கம் அரசியல் பௌத்தமாக படிநிலை வளர்ச்சி கண்டு சுதந்திரத்துக்குப் பிறகு சிங்கள தேசியவாதத்தின் ஊடாக தன்னை முனைப்பாக வெளிக்காட்டியது. உள்நாட்டுப் போருக்குப் பிறகு அந்த இயக்கம் இந்த நாட்டை ஒரு பௌத்த அரசாக மாற்றவேண்டுமென்ற நோக்கத்துடனான ஒரு பௌத்த மேலாண்மை ஆதிக்க இயக்கமாக முதிர்ச்சியடைந்தது. இதே போன்றுதான் உலகின் சில பாகங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசுகளை தோற்றுவிக்கும் நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது நோக்கத்தை அடைவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துகின்ற அதேவேளை, இலங்கையின் சிங்கள பௌத்த மேலாண்மை ஆதிக்கவாதிகள் தங்களது இலக்கை அடைவதற்கு ஜனநாயக செயன்முறைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இரு தரப்பினரையும் பொறுத்தவரை, இறுதி முடிவு ஒன்றேதான். அதாவது, ஜனநாயகத்தின் மரணமும் எதேச்சாதிகாரத்தின் வலுப்படுத்தலுமேயாகும்.

சிங்கள பௌத்த மேலாண்மை ஆதிக்கவாதிகளைப் பொறுத்தவரை, அதிர்ஷ்டவசமாக தங்களது இலட்சியத்துக்காக முழு அளவில் குரல்கொடுத்து பாடுபடக்கூடிய  ஒரு பௌத்தராக கோட்டபாய ராஜபக்‌ஷவைக் கண்டார்கள். சூழ்ச்சிக்குத் தயங்காத அவரது சாணக்கிய மனோபாவமும் போரில் தமிழர்களுக்கு எதிராக அவர் கண்ட வெற்றியும் காரணமாக தங்களது இலட்சியத்தை சாதித்து முடிக்கக்கூடிய பொருத்தமான ஆளாக அவரை மேலாதிக்கவாதிகள் பார்த்தார்கள். அதனால்தான் அவர்கள் 20ஆவது திருத்தத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்திருக்கும் உச்சநீதிமன்றம், அதனைத் தடுக்காத பட்சத்தில் அது நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதென்பது பெரும்பாலும் முடிந்துவிட்ட ஒரு காரியமேயாகும். எதிரணியின் உறுப்பினர்கள் சிலரின் ஆதரவைப்பெறுவதற்கு பேரம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இறுதித்தடையான சர்வஜன வாக்கெடுப்பு ஒரு பிரச்சினையை தோற்றுவிக்கப்போவதில்லை. ஏனென்றால், தங்களது நோக்கங்களுக்கு ஆதரவாக சிங்கள பௌத்தர்களின் ஆதரவைத் திரட்ட முடியும் என்பதை பௌத்த மேலாதிக்கவாதிகள் இதற்கு முன்னர் இரு தடவைகள் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள். 20ஆவது திருத்தம் நிறைவேறியதும் மாகாண சபைகளின் ஊடாக தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கு வழிவகுத்த 13ஆவது திருத்தமும் புதைக்கப்படும். இந்தியாவும் அதன் பொருாதார மற்றும் மூலோபாய அனுகூலங்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் அத்தகைய செயற்பாட்டுடன்  ஒத்துப்போகக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

திட்டமிட்டபடி இவையெல்லாம் நடந்தேறினாலும் கூட, மேலாதிக்கவாதிகளின் கப்பல் பொருளாதாரம் என்ற பாறையில் மோதிச் சேதமடையவேண்டிவரும். வலிமையான பொருளாதார வளர்ச்சியின்றி துரித அபிவிருத்தி சாத்தியமில்லை. அந்த வளர்ச்சியையும் கூட  ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு ஏற்றமுறையில் செயற்படவைக்கமுடியாது. பன்முக அரசியல் சமுதாயமொன்றில் சகல சமூகங்களினதும் சுறுசுறுப்பான பங்கேற்பில்லாவிடடால், பொருளாதார வளர்ச்சியும் இடைக்கிடை பின்னடைவைக் காணக்கூடிய சாத்தியமே இருக்கிறது. அதிகரிக்கும் கடன்சுமை, மந்தமான ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வரிகள் மூலமான வருமானத்தில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு மத்தியில், கொதிக்கும் இன மத பதற்றங்களிடையே எவ்வாறு பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. பொருளாதார நிலைவரம் சிறப்பானதாகவே இருக்கிறது என்று காட்சிப்படுத்துவதற்காக மத்திய வங்கியும் குடிசனமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் கவர்ச்சியான அறிக்கைகளை வெளியிடக்கூடும். ஆனால், நிலைவரத்தின் உண்மை நிலை நுகர்வோர் சந்தையிலும் வீடுகளிலுமே தெளிவாகப் பிரதிபலிக்கும்.

இறக்குமதித் தடைகள், வரிவிலக்கு, போக்கவரத்து விதிமுறைகள் மற்றம் சந்தைக்கட்டுப்பாடு போன்ற பெருவாரியான பொருத்தமற்ற இடைக்கால ஏற்பாடுகள் சந்தையின் ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்; நிச்சயமற்ற தன்மையை ஜனாதிபதியின் வாய்மூல உத்தரவுகள் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கான செயன்முறை ஏற்பாடாக மாறும்போது இத்தகைய நேர்மறையான விடயங்கள் தவிர்க்கமுடியாதவையாகலாம். அத்தகைய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் சீரான வளர்ச்சியை எதிர்பார்க்கமுடியுமா? அதனால், 20ஆவது திருத்தம் பலம்பொருந்திய ஜனாதிபதியை உருவாக்குவது நிச்சயமென்றாலும், அது துரித அபிவிருத்தியைக் கொண்டவரப்போவதில்லை. இரண்டுக்கும் இடையே உறுதியான இணைப்பு எதுவும் கிடையாது.

பேராசிரியர் அமீர் அலி