பட மூலம், @GotabayaR

தனது அமைச்சரவை சகா மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்பாராத வகையிலான ஒரு கூட்டணியை அமைத்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தபோது அவரின் அடுத்த நகர்வு நிச்சயமற்றதாகவே இருந்தது. ராஜபக்‌ஷ சூளுரைத்ததைப் போன்று ஐந்து வருடங்களில் அவர் பிரதமராக ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பது மாத்திரமல்ல, அவரது புதிய கட்சி நாட்டின் அரசியல் களத்தை இடித்து தள்ளிக்கொண்டு இரு பிரதான தேசிய அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் முற்றாக துவம்சம் செய்திருக்கிறது. இவ்விரு கட்சிகளும் சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் அரங்கில் 7 தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்தவையாகும்.

தாபிக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளாக பொதுஜன பெரமுன மக்களின் கட்சியாக அதுவும் பிரதானமாக சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களின் கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் விக்கிரகங்களாக விளங்கும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் நாட்டின் தலைவர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களது கட்சியின் வளர்ச்சி மிகவும் விரைவானதாக இருந்த  அதேவேளை, நிலையுறதியான ஒழுங்கமைப்பும்  நன்கு திறமையாக திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான அரசியல் வியூகங்களும் அந்த வளர்ச்சியின் ஆதாரங்களாக அமைந்தன. மிகவும் மெத்தனமாக இருந்த அரசியல் எதிரிகளுக்கு பொஜன பெரமுனவின் நகர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு தீர்க்கமானவையாக தெரியவில்லை. ஆனால், அவை இறுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் மூலத்தின் தடயத்தை பலவீனப்பட்டுப்போயிருக்கும் சுதந்திரக் கட்சியிலேயே காணமுடியும். சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சிப் பிரிவு அரசாங்கத்தில் அங்கம் வகித்தவேளை, எஞ்சிய பிரிவு முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முனனணியாக நேசக்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ராஜபக்‌ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்தது. அவர்கள் தங்களை கூட்டு எதிரணி என்று அழைத்துக்கொண்டார்கள். சிறிசேனவினதும் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான சகவாழ்வு அரசாங்கத்தை கூட்டு எதிரணி கடுமைமையாக எதிர்த்து தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தது.

சிறிசேனவினதும் விக்கிரமசிங்கவினதும் அலங்கோலமான தோழமை அவர்களது அரசாங்கத்திற்குள் தொடர்ச்சியாக நிலவிய பதற்றங்களினாலும் ஆட்சிமுறையின் சீர்கேடுகளினாலும் அம்பலமாகி நின்றன. அந்த நிலைவரம் கூட்டு எதிரணி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதற்குப் போதுமான வாய்ப்புக்களை வழங்கியது. தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் பெரும் பகுதியில் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் எதிராளியாக அன்றி பெரும்பாலும் ஒரு பங்காளியாகவே இருந்தமையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தைக் கண்டிப்பதில் ராஜபக்‌ஷ பிரிவுக்குக் கிட்டத்தட்ட ஒரு ஏகபோகத்தையே ஏற்படுத்திக்கொடுத்தது.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் பின்னணியில் இருக்கும் ‘மூளையான’ பசில் ராஜபக்‌ஷ தங்களது குடும்பத்துக்கென்று பிரத்தியேகமான புதிய அரசியல் வாகனம் ஒன்றை உருவாக்கும் தொடக்க வேலைகளைச் செய்யத்தொடங்கினார். பொது நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான  வழக்கில் பிணையில் விடப்பட்டிருக்கும் (மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரரான) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ காலத்தை விரயமாக்காமல் புதிய கட்சியைக் கட்டியெழுப்பும் பணிகளை சுறுசுறுப்பாக முன்னெடுத்தார்.

பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை, மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் செல்வாக்கு மூலதனம் முழுவதையும் அது கொண்டிருந்தாலும் அவர் தனது அரசியல் வாழ்க்கையைக் கட்டியெழுப்பி நாட்டின் அதியுயர் பதவிக்கு உயர்வதற்கு பயன்படுத்திய சுதந்திர கட்சியின் தவறுகளும் குறைபாடுகளும் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது செய்த தவறுகளும் புதிய கட்சியை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. பண்டாரநாயக்கவின் மரபுடனான கட்சியொன்று ராஜபக்‌ஷாக்களுக்கு இனிமேல் தேவைப்படவில்லை. பொதுஜன பெரமுன ராஜபக்‌ஷாக்களுக்கான ஒரு கட்சியாகும். 2017 மே தினத்தன்று கொழும்பு காலிமுகத்திடலில் கூட்டு எதிரணி பேரணியொன்றை நடத்தியது. பதவி கவிழ்க்கப்பட்டு இரு வருடங்களுக்குப் பிறகு மஹிந்த ராஜபக்‌ஷவை வரவேற்க அந்த மேதினப் பேரணியில் பெரும் மக்கள் வெள்ளம் திரண்டது. அதைக் கண்ட ராஜபக்‌ஷாக்கள் தாங்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொண்டார்கள். அடிமட்டத்தில் மக்களை அணிதிரட்டும் பணிகளை பசில் ராஜபக்‌ஷ தீவிரப்படுத்தத் தொடங்கினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவர்களின் மூன்றாவது சகோதரர் கோட்டபாய ராஜபக்‌ஷ இலங்கையின் தார்மீக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் துறைசார் நிபுணர்களையும் புத்திஜீவிகளையும் தன்பக்கம் கவர ஆரம்பித்தார். பாரம்பரிய அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்துபோன பல கல்விமான்களும் வர்த்தக தலைவர்களும் துறைசார் நிபுணர்களும் கோட்டபாயவின் இரு அமைப்புக்களான வியத்மக (சிறப்பான எதிர்காலத்துக்கான துறைசார் நிபுணர்கள்) மற்றும் எலிய (வெளிச்சம்) ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டார்கள்.

தேர்தல் பரீட்சை

2018 பெப்ரவரியில் இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டபோது பொதுஜன பெரமுன அதன் முதன்முதலான தேர்தல் பரீட்சைக்கு முகங்கொடுத்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவுடன் (அவர் சுதந்திரக்கட்சியுடன் உறவுகளைத் துண்டிக்காமலும் அதன் உறுப்புரிமையை கைவிடாமலும் இருந்த நிலையில்) மகத்தான வெற்றியைப் பெற்றது. மஹிந்த ராஜபக்‌ஷவின் சால்வையின் நிறத்தை ஒத்ததாக பழுப்பு கலந்த செந்நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கட்சியின் சின்னமான ‘பொஹொட்டுவ ‘ (தாமரை மொட்டு) மக்களின் கவர்ச்சிக்குரியதாகியது. அதன் மூலமாக கட்சியின் பிரதான சிற்பி பசில் ராஜபக்‌ஷவின் புத்திசாதுரியமிக்க தேர்தல் கணிப்பீடுகள் மீளவும் உறுதிசெய்யப்பட்டன. கூட்டு எதிரணி அந்தக் கட்டத்தில் முழு அளவில் பொதுஜன பெரமுனவுடன் சங்கமமாகிவிட்டது.

பிரதமர் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை அந்தப் பதவிக்கு நியமித்ததுடன் நாடாளுமன்றத்தையும் உரிய காலத்துக்கு முன்கூட்டியே கலைத்து ஜனாதிபதி சிறிசேன நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வரை குறைந்தது 8 மாதங்களாக பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் மிகவும் நன்றாகவேஇருந்தது. 52 நாட்கள் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகவே கருதப்பட்டார். ஆனால், அந்த நிகழ்வுப் போக்குகளினால் பொதுஜன பெரமுனவின் பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல் வெற்றியின் விளைவான உத்வேகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. சட்டத்துக்கு மேலாக தங்கள் தலைவர் அரசியல் அனுகூலத்தை மனதிற்கொண்டு செயற்பட்டமை ஆதரவாளர்களில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. சிறிசேனவின் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். 2018 பெப்ரவரியில் இருந்து ராஜபக்‌ஷவும் கட்சியும் பளபளப்பை ஓரளவுக்கு இழந்தபோதிலும், பிறகு அவர் பயனடையக்கூடியதாகவே நிலைவரங்கள் மாறின. அந்தவேளையில் அவர் சுதந்திர கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிட்டார். சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான  பிரிவு உறுதியாகியது. அவர் எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்டது இதில் முக்கியமானது.

அடுத்து வந்த மாதங்களில் ஆட்சிமுறை முற்றிலும் சீர்குலைந்தது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தவறுகளை அம்பலப்படுத்தின. இதன் மூலமாக பொதுஜன பெரமுனவுக்கு செங்கம்பளம் விரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பக்கான 19ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பீதியில் உறைந்திருந்த நாட்டுக்கு தேசிய பாதுகாப்பையும் அதனுடன் சேர்த்து அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் தருவதாக உறுதியளித்த முன்னாள் லெப்ரினன்ட் கேணல் கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு சகோதரர்கள் தங்களது முழுமையான ஆதரவை கொடுத்தார்கள். நாட்டுக்கு உறுதியான – பலம்பொருந்திய தலைவர் என்ற வாக்குறுதியும் சினமூட்டும் தேசியவாத சுலோகங்களும் பெரும் வித்தையைக் காட்டின.

2019 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வேட்பாளரான கோட்டபாய 52 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார். மக்களின் பாரிய ஆணையைக் கொண்டிருந்த கோட்டபாய நாட்டின் விவகாரங்களை விரைவாகவே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டபாயவுக்கு மஹிந்த தேவைப்பட்டது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது மஹிந்தவுக்கு  கோட்டபாய  தேவைப்பட்டார்.

ஆகஸ்ட் நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி ராஜபக்‌ஷ உடனடியாக முதல் செய்த காரியங்களில் ஒன்று அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பிறப்பித்த உத்தரவாகும். அந்தத் திருத்தச்சட்ட மூலம் மேலும் கூடுதலான அளவுக்கு பலம்பொருந்தியவராக ஜனாதிபதியை மாற்றுவதையும் பிரதமரை ஒரு சம்பிரதாயமான பதவியாக தரங்குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். இன்று அசியல் ரீதியாகவும் தேர்தல் வெற்றிகளின் மூலமாகவும் மிகவும் பலம்பொருந்தியதாக விளங்கும் பொதுஜன பெரமுன சிங்கள பௌத்த ஆதரவாளர்களை மேலும் குறிப்பாக கடும்போக்கு சக்திகளை திருப்திப்படுத்துவதிலேயே அதீத அக்கறை காட்டுகின்ற அதேவேளை, சிறுபான்மையின சமூகங்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தை பொறுத்தவரை, பசில் ராஜபக்‌ஷ கூறிய மிகவும் பிரபல்யமான கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியையும் சிறந்த இரு உதாரணங்களாகக் கொண்டு தங்களது கட்சியை கட்டியெழுப்பப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.

மீரா ஶ்ரீனிவாசன்

Sri Lanka Podujana Peramuna | A party for the Rajapaksas என்ற தலைப்பில் தி இந்து தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.