பட மூலம், AP Photo/Eranga Jayawardena, boston25news
கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் நாட்டின் தேர்தல் வரைபடத்திலும் அதுபோன்றே புதிய நாடாளுமன்றத்தின் அரசியல் அதிகாரச் சமனிலையிலும் ஓர் அதிர்ச்சியான மாற்றத்தைக் காண்பித்தது.
அனைத்து எதிர்கட்சிகளையும் உருக்குலைத்து முக்கியமற்றதாக்குவதன் மூலம், இலங்கை பொதுஜன பெரமுன கட்சி (SLPP – இலங்கை பொதுஜன முன்னணி) மூன்றிலிரண்டை அண்மித்த நாடாளுமன்ற பெரும்பான்மையை இலகுவாக அடைந்து கொள்வதானது, கடந்த காலத்தில் – ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் அப்போது தலைமை தாங்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியால் (ஐ.தே.க) 1977 இல் பெற்றுக் கொண்ட 5/6 பெரும்பான்மைக்கு, சமாந்தரமான ஒன்றாக மட்டுமே உள்ளது.
முக்கியமான போக்குகள்
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களைப் பெற்ற வேளை, முன்னாள் ஆளும் கட்சியான, ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க), ஒரேயொரு நாடாளுமன்ற ஆசனத்தை மட்டும் தக்க வைத்து, மிக அவமானகரமான ஒரு தோல்வியால் மூக்குடைபட்டது. அந்த ஆசனம் கூட தேசிய பட்டியல் மூலமாகக் கிடைத்த ஒன்றாகும். ஐ.தே.க. மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் தனியொரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ளத் தவறியதுடன் பல தேர்தல் தொகுதிகளில் அதற்கான வாக்குகள் ஒரு சில நூறுகளை மட்டுமே பதிவு செய்தன. ஐக்கிய தேசிய கட்சயிலிருந்து பிரிந்து சென்றதும் தனியே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மட்டும் உருவாக்கப்பட்ட, ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய), ஒரு திருப்தியான அளவிற்கு முன்னேற்றமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்கே உரியதான நன்றிகளுடன், 54 ஆசனங்களுடன் அது இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஒரு தேர்தல் ரீதியான சரிவில் நாடாளுமன்ற எதிர்கட்சியின் முழுமையான இல்லாதொழிதலையும் ஐக்கிய மக்கள் சக்தியே தடுத்து நிறுத்தியது.
இதேசமயம், இலங்கை சுதந்திரக் கட்சியானது (இ.சு.க), இலங்கை பொதுஜன முன்னணியினால், தான் கபளீகரம் செய்யப்படுவதை அனுமதித்தது. அதன் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனைய பல சுதந்திரக் கட்சி விசுவாசிகள் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் பட்டியலின் கீழ் போட்டியிட்டதுடன் அதில் சிலர் ஆசனங்களையும் கூட வென்றுள்ளனர். இ.சு.க இன் மதிப்பிற்குரிய சின்னமான கைச் சின்னத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பிரபல தமிழ் அரசியல் குடும்பத்தின், யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிட்ட ஒரு தமிழ் பிரஜை என்பது எதிர்பார்கப்படாத ஓர் அம்சமாக இருந்தது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் இந்த சௌகரியமான வெற்றி எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. இலங்கை பொதுஜன பெரமுன கட்சி உத்தியோகபூர்வ பேச்சாளர் ஏற்றுக்கொண்டவாறு, ‘அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் மேலான இவ்வெற்றி’, அநேகமான ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஐ.தே.க. வாக்காளர்களின் பெருமளவிலான வரவின்மை இருந்திருந்தாலும் கூட சாத்தியமாகியிருக்கலாம் என்பது இங்கு அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. இதே சமயம், ஒட்டுமொத்த வாக்காளிப்பு வீதம் 71%என்பது, இலங்கையின் எந்தவொரு தேர்தலிலும் வாக்காளர் பங்களிப்பு உயர்வாகவுள்ள தராதரத்துடன் பார்க்கையில், ஒப்பீட்டளவில் குறைவானதாகும்.
தேர்தல் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க வேறு இரண்டு மாற்றங்களும் காணப்பட்டன. அதில் முதலாவது, சுயாதீன அரசியல் அமைப்புகளாக சிறுபான்மை இனத்துவ பிரதிநிதித்துவங்களின் வீழ்ச்சி அல்லது குறைதல். இலங்கைப் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதானமான மற்றும் குரலாக ஒலிக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி (இ.த.அ.க), முன்னைய நாடாளுமன்றத்தில் அது பேணிய 16 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு இம்முறை வீழ்ச்சியுற்று, அதன் அரசியல் பலத்தை இழந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து ஆறு ஆசனங்கள் வேறு சிறிய தமிழ் கட்சிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டன, அதில் இரண்டு கட்சிகள் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்தவையாகும்.
தமிழ் பிரதிநிதித்துவத்தின் சிதறல் இம்முறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் வீழ்ச்சியுடன் சமாந்தரமானதாகவும் கூட இருந்தது. முஸ்லிம் கட்சிகள், அவை தனியாக போட்டியிட்ட மாகாணங்களில் தங்கள் சமூகத்திற்காக வெறுமனே இரண்டு ஆசனங்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்தன. அதன் மேலும் சில சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக இருக்கக் கூடும்.
மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) தங்களின் அரசியல் பலத்தில் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்கத் தவறியமை மிகவும் ஏமாற்றத்திற்குரியதாகும். அதன் வேட்பாளர்களுக்காக வாக்களித்தவர்களில் சிறிய அதிகரிப்பு இம்முறை இருந்தாலும், அது அவர்களுக்கான ஆசன எண்ணிக்கையை அதிகரிக்குமளவிற்கு வலுவானதாக இருக்கவில்லை. பல தேர்தல் தொகுதிகளில், ஐக்கிய மக்கள் சக்திக்கு மிகவும் பின்தங்கிய நிலையில், ஜே.வி.பி மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் கூட, மூன்றாம் இடத்திலிருப்பதற்கும் மற்றும் இலங்கையின் தேர்தல் அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியாக வருவதற்குமிடையில் ஜே.வி.பி பயணிப்பதற்கு ஒரு நீண்ட தூரம் உள்ளது.
புதிய நாடாளுமன்றத்திலுள்ள இரண்டு பெரும் கட்சிகளான, இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மிக அண்மையில் உருவானவை என்பதுடன் அவை இரண்டும் பாரம்பரிய பிரதான கட்சிகளிலிருந்தும் பிரிந்து போன பகுதிகளினால் உருவாக்கப்பட்டவை என்கின்ற யதார்த்தம், இங்குள்ள இரண்டாவதாகும். இது தொடர்பிலான அவர்களது அரசியல் உறுதிப்பாட்டில், பொதுஜன பெரமுன கட்சி ஐக்கிய மக்கள் சக்தியை விட வெகுவாக முன்னிலையில் உள்ளதுடன் இரண்டு புதிய கட்சிகளும் இலங்கை அரசியல் முறைமையினுள் ஒரு புதிய ஒழுங்கினை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
முக்கிய காரணங்கள்
இலங்கை அரசியல் தோற்றத்தில் இந்த சடுதியான மாற்றத்தை நான்கு காரணிகள் ஏற்படுத்தியதாகக் காணப்படுவதுடன், இது சாத்தியமான வகையில், இலங்கை பொதுஜன பெரமுனவினால் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கலாம்.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து 2015 இல் அதிகாரத்திற்கு வந்த முன்னைய கூட்டணி அரசாங்கத்தின் மோசமான தவறுகள், இதில் முதலாவதாகும்.
நல்லாட்சிக் கூட்டணி, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் கூட்டாகத் தலைமை தாங்கப்பட்டு, 2015 ஜனவரி இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆச்சரியப்படத்தக்கதொரு வெற்றியை அடைந்தது. ஜனநாயக மறுமலர்ச்சி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றுதல், ஊழலற்ற ஆட்சியை நிலைநாட்டுதல் மற்றும் அதிகளவிலான அதிகார மையப்படுத்தல் மூலமான ஆட்சி முறைகளை முடிவுறுத்துதல் என்பவற்றுக்கான அதன் வாக்குறுதி வாக்காளர்களிடமிருந்து ஓர் கரிசனையுடனான பிரதிவிளைவைக் கொண்டிருந்தது. எனினும், ஆட்சியில், விக்கிரமசிங்க – சிறிசேன ஆட்சியின் பதிவுகள், அந்த மேன்மையான இலக்குகளை முழுமையாகப் பயனுறுவதில் மிக மந்தமான செயற்பாடு கொண்டவற்றுள் ஒன்றாக இருந்ததைக் காட்டின.
வெகு விரைவாகவே ஊழலாட்சிக்குத் திரும்பியமை, ஆளும் கூட்டணிக்குள்ளான ஒற்றுமையின்மை, விரோதமான பிரிவினைவாதம், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதன் விளைவாக நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு முறைமைகளிலான சீர்குலைவு என்பனவும் ‘ஜனநாயகம் மூலமான ஆட்சி’ என்ற கருதுகோளுக்கு குறிப்பாக களங்கத்தைத் தந்தன.
அந்த ஆட்சி, அதன் மிக முக்கியமான அரசியல் சாதனையான அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணவும் கூடத் தவறியது. அத்திருத்தம், ஜனாதிபதியின் எதேச்சாதிகார அதிகாரங்களை கணிசமானளவு குறைத்ததுடன் இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அதேபோன்று நிறைவேற்றல் மற்றும் சட்டவாக்க அதிகாரத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் சமனிலைகள் முறைமையை மீள் நிலைநிறுத்தியது. அரசியல் மறுசீராக்கச் செய்முறைகளை மேலும் முன்னேற்றுவதற்கு ஒரு புதிய அரசியலமைப்பு வரையப்பட வேண்டியிருந்த போதிலும், ஒத்துழைத்தல் மற்றும் பயனுறுதியான தலைமைத்துவத்தை வழங்குதல் என்பவற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் தவறுதல், புதிய அரசியல் முன்னெடுப்புகளை எடுப்பதற்கு இரண்டு தலைவர்களில் எவருமே விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டியது. அதிகாரத்தில் இருந்த இரண்டு வருடங்களில், நல்லாட்சிக் கூட்டணி ஒரு மந்தமான மற்றும் தேக்க நிலையை அடைந்தது. அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட உள்ளக முரணப்பாடுகளின் ஆரம்ப காலத்தில் அச்சிறிய முரண்பாடுகளை விட்டு தங்களது அரசியல் கூட்டணியை வெளிவரச் செய்து பின் அதனை ஆட்சி, கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் முகாமைத்துவம் என்பவற்றுக்கான ஒரு பயனுறுதியான கருவியாகக் கூட்டணியை ஸ்திரப்படுத்துவதிலான அவர்களது இயலாமை இரண்டு தலைவர்களினதும் ஒரு முக்கியமான குறைபாடாக மிகத் தெளிவாக வெளித் தெரிந்தது.
இந்தத் தவறுதல், ‘ஒரு உறுதியான தலைவருடன் இலங்கைக்கான ஒரு முற்றிலும் புதிய மாற்று அரசியல் முறை, ஓர் உறுதியான அரசாங்கம், இராணுவப் பங்களிப்புடன் ஓர் உறுதியான நிர்வாகம், கட்டுப்பாடுகள் மற்றும் சமனிலைகளும் இல்லாத தனியே உறுதியான ஓர் அதிகார மையம்’ எனும் பொதுஜன பெரமுனக் கட்சியின் மிகவும் பயனுறுதியான, நீடித்து நிற்கும் சாத்தியமும் முக்கியமான அரசியல் மாற்றங்களுக்கு கட்டியம் கூறுகின்ற தேர்தல் சுலோகங்களில் ஒன்றாகும் வாய்ப்பையும் அதற்கு கொடுத்தது. இங்கு, ‘உறுதியான’ என்ற வார்த்தை மீதே அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் சில நாட்களிற்கு முன்னரான நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அமோக வெற்றிகள் ஐ.தே.க. மற்றும் அதன் தலைமைத்துவத்திற்கு வாக்காளர்களால் அளிக்கப்பட்ட ஒரு கடுமையான தண்டனையாகவும் நோக்கப்பட முடியும். கடந்த நான்கரை வருடங்களின் போது அதன் பொறுப்பற்ற, சச்சரவு கொண்ட மற்றும் பயனுறுதியற்ற ஆட்சியால் தங்களை மிக மோசமாக கைவிட்ட ஐ.தே.க. தலைமைத்துவத்தை வாக்காளர்கள் மன்னிக்கவில்லை என்பது இங்கு தெளிவாகவுள்ளது.
பொதுஜன பெரமுன நோக்கி வலுவாகக் கவரப்படுவதற்கு வாக்காளர்களுக்கு வேறு பிரதான காரணங்களும் கூட இருந்தன. வலுமிக்க ராஜபக்ஷ குடும்பத்தினால் 2016 இல் உருவாக்கப்பட்ட ஒப்பீட்டளவில் புதிய கட்சியான, பொதுஜன பெரமுன அதன் நிகழ்ச்சித் திட்டம், கருத்தியல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலில் மிகவும் கவர்ச்சியான ஒரு ‘ஜனரஞ்சகப்’ பரிமாணத்தைக் கொண்டிருந்தது. ஓர் உறுதியான தலைவரால் தலைமைத்துவம் அளிக்கப்படும் ஓர் உறுதியான அரசிற்கான சுலோகம் சிங்கள-பௌத்த தேசப்பற்று குறியீட்டுவாதம் மற்றும் உரைகளில் வெளிப்படுத்தப்பட்டது. இது உண்மையில் சிங்கள சமுதாயத்திலுள்ள அனைத்து சமூக வகுப்புகள் முழுவதற்குமான முக்கிய வேண்டுகோளைக் கட்டமைக்கிறது.
மக்கள் நல அரசு அம்சங்களை மீளக் கொண்டு வருதலுக்கான வாக்குறுதியுடன் இணைந்ததாக, பொருளாதாரம் மற்றும் மேற்குலகத் தேசியவாதத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் சொல்லாடல்கள், முன்னைய அரசாங்கத்தின் ஐ.தே.க. பிரிவினரால் மிகவும் விருப்புடன் கடைப்பிடிக்கப்பட்ட நவீன சுதந்திர சீர்திருத்தக் கொள்கைகளால் விட்டுச் செல்லப்பட்ட வறிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் மத்தியில் எப்போதுமே ஓர் ஈர்ப்பைக் கொண்டிருந்தன.
கடன் நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொண்ட ஒரு மந்த பொருளாதாரத்தால் ஏற்பட்ட பரந்துபட்ட சமூக அதிருப்தியின் மத்தியில், ஜனரஞ்சக அபிவிருத்தி சார்ந்த அம்சங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஒரு வலுவான தலைமைத்துவத்தின் கீழான அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பிரச்சாரம், ஓர் உடைவுற்ற அதிகாரக் கட்டமைப்புடன் கூடிய பலவீனமான ஜனநாயக ஆட்சிமுறைக்கான ஒரு மீள்திரும்புதலை விட கூடுதல் வசீகரத்தைக் கொண்டிருந்தது.
இதேவேளை, கொவிட்-19 இனால் ஏற்பட்ட பொதுச் சுகாதாரச் சவாலை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பயனுறுதியான வகையில் கையாண்டமை, இலங்கை வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. அதனால், இராணுவத்தின் வெளிப்படையான பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி அதனைத் தானே கையாளும் தன்மையுடன், பயனுறுதியான அரசாங்கத்தின் புதிய வடிவம், ஒரு புதிய அரசியல் பரிசோதனைக்காக, ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதற்கு பெறுமதியான ஒரு மாதிரியாக இருக்குமெனவும் அவர்கள் நம்பிக்கை கொண்டனர்.
பரபரப்பான கண்டுபிடித்தல்கள், சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகள் என்பவற்றுக்கான பெரும் ஊடக விளம்பரப்படுத்தல்களுடன், பயங்கரமான போதைப் பொருள் மன்னர்களுக்கு எதிராக தொடர்ச்சியான இரண்டு மாத கால யுத்தம், முழு எதிர்தரப்புக்கும் எதிரான ஒரு தீர்க்கமான அரசியல் சாதகத்தை மாத்திரம் ஜனாதிபதியின் அணிக்கு அளிக்கவில்லை. பழைய வடிவ சுதந்திர ஜனநாயகங்கள் பிரஜைகளுக்கு உறுதிப்படுத்துவதற்குத் தவறிய பாதுகாப்பின் ஒரு புதிய உணர்வை ஸ்தாபிக்கும் உறுதியளிக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பிரபல்யப்படுத்தும் புதிய வலதுசாரி ஜனரஞ்சக அரசியலிலான உலக போக்கினை பின்பற்றுவதற்கு இலங்கை தயார் என்பதையும் கூட அது காண்பித்தது.
பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில், இறுதியானதும், அநேகம் மிக முக்கியமானதுமான அடிப்படை சீர்திருத்தப் பொதி, எதிர்பார்கப்படுகிறதென்பது இலங்கைப் பிரஜைகள் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொருளாதார சுபீட்சம், மற்றும் மத – ஒழுக்கம் சார்ந்த மறுமலர்ச்சி என்பவை உச்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு பின்னதான ஓர் அரசியல் ஒழுங்குக்கு அவசரமான தேவையைக் கொண்டுள்ளனர் என்பதற்கான அதன் சூசகமான யோசனையாகும்.
கட்சி முறைமையிலான மாற்றம்
இறுதியாக, நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் இலங்கையின் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சி முறைமையில் ஒரு முழுமையான மாற்றத்தையும் கூட சுட்டிக்காட்டுகின்றன. இரண்டு பழம் பெரும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி என்பவை நாடாளுமன்றத்திலிருந்து உண்மையில் துடைத்தெறியப்பட்டுள்ளன என்பதுடன் ஒரு புதிய ஜனரஞ்சக கட்சியான, இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, தனித்து ஒரு முன்னணிக் கட்சியாக உருப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சி எனும் அதன் வழமையான வகிபாகத்தை நிரந்தரமாகவே இழந்துள்ளதுடன், வெறுமனே ஒரு சில மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற, சஜித் பிரேமதாசவினால் தலைமை தாங்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் தற்போது அது பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பயனுறுதியான மற்றும் உறுதியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே ஒரு தனிக் கட்சி ஆதிக்க முறைமை ஸ்தாபிக்கப்படுதலிருந்து நாட்டைத் தடுப்பதற்கு முடியும்.
சட்டமன்ற நிகழ்சிநிரல்
பொதுஜன பெரமுனை கட்சி, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்க மறுமலர்ச்சி நிகழ்ச்சித் திட்டம் பற்றி தெரிவிக்காதிருப்பதில் இது வரைக்கும் கவனமாக இருந்துள்ளது. இருப்பினும், ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் இராணுவத்திற்கு ஒரு நிர்வாக வகிபாகத்தை வழங்குகின்றதுமான அரசியலமைப்பை மீளக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு முக்கியமான அரசியலமைப்பு மாற்றங்கள் இருக்கும் என்பதற்கு அது போதுமான குறிக்காட்டிகளை அளித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கால மட்டுப்படுத்தல்களும் கூட அநேகம் நீக்கப்படலாம். நிறைவேற்றல் முறை மற்றும் சட்டமன்றத்திற்குமிடையில் தற்போதுள்ள அதிகாரச் சமனிலையும் கூட, நிறைவேற்ற அதிகாரத்திற்கு சாதகமாக அநேகம் மாற்றப்பட முடியும்.
எவ்வாறாயினும், 18ஆவது திருத்தத்தின் கீழிருந்ததை விட பிரதமருக்கு மற்றும் நாடாளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை அளித்த 19ஆவது திருத்தம் மீது ஒரு பெரும் திருத்தியமைத்தலைக் கொண்டு வருவது, தனிப்பட்ட ரீதியில், சகோதரர்களாகவுள்ள, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கும் அரசியல் ரீதியாக ஒரு சிக்கல் கொண்ட சவாலாக இருக்கும். அரசியலமைப்பு ரீதியாக பார்க்கையில், ஒப்பீட்டளவில் பலவீனமான ஓர் அரசியலமைப்பு அதிகாரத்துடன் ஜனாதிபதியை கடந்த நவம்பரிலும் மற்றும் ஒரு சில நாட்களின் முன் கூடுதல் பலமும் அதிகாரமும் கொண்ட ஒரு நாடாளுமன்றத்தையும் இலங்கை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் கூட தங்களது சொந்த வாக்கு வங்கிகளையும் மற்றும் அதிகார மையங்களையும் கொண்டுள்ள யதார்த்தம், ஒரு குடும்ப மைய ஆட்சிக்குள் அரசியல் பேரம் மற்றும் விட்டுக்கொடுத்தல் என்பவற்றுக்கான ஓர் அதிகரித்த சுவாரசியம் கொண்ட சம்பவக் கற்கையாக இதனை ஆக்கலாம்.
இதேவேளை, இத்தகைய ஒரு பாரிய வெற்றியின் பின்னதான தவிர்க்க இயலாத மகிழ்ச்சிகளின் மத்தியில், பொதுஜன பெரமுன கட்சியின் புதிய அரசாங்கம் உண்மையிலேயே அதன் முன் மிகுந்த சவாலான வருடங்களைக் கொண்டுள்ளது. விரைவிலேயே, கொவிட்-19 பெருந்தொற்றுதலினால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச் சரிவினால் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள முன்னொருபோதுமில்லாத அளவிலான எதிர்கால பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள், பெருந்தொற்றுதலுக்கு முன்பதாக அநேகம் உருவாக்கிய அவர்களது திட்டங்கள் பலவற்றை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கத் தலைவர்களை நிர்ப்பந்திக்கலாம்.
இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில், இலங்கைப் பிரஜைகளுக்கு வெறுமனே ஒரு பலமானதை விட, ஒரு மனிதாபிமானம் கொண்ட அரசாங்கமே தேவை. அதை விட எதுவும் குறைவில்லாத கூடுதல் ஜனநாயகம் கொண்டதும் மற்றும் கலந்தாலோசித்தல் செய்கின்றதுமாக அது இருத்தல் வேண்டும்.
ஜே.ஆர். ஜயவர்த்தன, ஜூலை 1977 இல் 5/6 நாடாளுமன்றப் பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட பின்னர் உடனேயே, அத்தகையதொரு பெரும் ஆணையைக் கொண்டிருப்பதிலான பின்னடைவுகளைத் தான் நன்கே அறிந்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த அபரிமித நாடாளுமன்ற அதிகாரத்தை கவனத்துடனும் விவேகமான முறையிலும் தான் உபயோகிப்பதாகவும் ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார். இருப்பினும், ஜயவர்த்தனவின் இயல்பு அதனை தனக்குத் தானே வாக்குறுதி செய்ததாக நம்பியது. ஒரு பெரும் நாடாளுமன்ற ஆணையுடனான ஒவ்வொரு அரசாங்கமும் அந்த அதிகாரத்தை ஒரு சர்வாதிகார வகையில் உபயோகிக்கும் தன்னாவலைத் தடுப்பதற்குத் தவறியதுடன் பதிலுக்கு நாட்டில் அதிகளவான ஸ்திரத்தன்மையின்மையை உருவாக்கின என்பதையே இலங்கையின் கடந்த கால அனுபவம் காண்பிக்கிறது.
இத்தகைய நிச்சயமற்ற சமயங்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதில் வினையாற்றுவதற்கு இதனை ஒரு பயனுள்ளதாக பாடமாகக் காணலாம்.
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
A Major Shift in Sri Lanka’s Politics என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.