பட மூலம், Selvaraja Rajasegar Photo, Vikalpa, Groundviews, Maatram, CPA flickr 

அரசியல்கைதி கணேசன் நிமலரூபன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடந்த (ஜூலை) 4ஆம் திகதியோடு 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மகனுக்கு நீதி வழங்குமாறு உயர்நீதிமன்ற வாசல்படியேறிய தந்தை கணேசனை, “பிள்ளையை வளர்க்கத் தெரியாதவர்” என்றார் நீதியரசர்.

மாரடைப்பினால் உயிரிழந்ததாக இலங்கையின் உயர் நீதிமன்றமும் உறுதியாகக் கூறியது. ஒரே பிள்ளையை இழந்த பெற்றோர்கள் தன்னுடைய மகன் சித்திரவதைக்கு உட்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான் என்று தெரிந்திருந்தும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலை. இப்போது கணவர் கணேசனும் இல்லை. தனி மனுஷியாக நீதியின் மீது நம்பிக்கையற்று தான் வாழும் காலப்பகுதியிலாவது பிள்ளையைக் கொன்றவர்களை கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

குறிப்பு: நிமலரூபனின் நான்காம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மாற்றம் தளத்தில் வெளியாகிய கட்டுரையை சில திருத்தங்களுடன் மீள்பிரசுரம் செய்கிறோம்.

###

கணேசன் நிமலரூபன் விபத்தினால் உயிரிழக்கவில்லை. கொள்ளையர்களினால் அல்லது கொலைகாரர்களினால் அவன் கொல்லப்படவுமில்லை. திட்டமிட்ட வகையில் சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டான். சிறைச்சாலையின் மூலையொன்றில் வலியை தாங்கிக்கொள்ளமுடியாமல் தனது வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கதறிக் கொண்டிருந்தவனை அரச பயங்கரவாதம் சாகும்வரை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது.

நிமலரூபன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். சிலர் அவ்வாறே திருப்திகொள்கின்றனர். ஆனால், அவனும் ஒரு மனிதன், அவனுக்கென ஒரு வாழ்க்கை இருந்துள்ளது. அவன் மீது அன்புகாட்டவென உறவுகள் இருந்துள்ளன. இலங்கையில் வாழும் ஏனைய மக்களைப் போன்றே எதிர்கால வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்புகளை சுமந்துகொண்டு அதனை வெற்றிகொள்வதற்கு முயன்ற ஒருவன். சீமேந்து கற்களினூடாக, கிராமசேவகர் பரீட்சை, எழுதுவிளைஞர் பரீட்சை, தொழில்நுட்பக் கல்லூரியினூடாக நிமலரூபன் தன் வாழ்க்கையைத் தேடினான். சீட், மணல் மூலம் வாழ்க்கையைப் புதுப்பிக்க முயற்சித்தான்.

ஆனால், அவன் மீது அதீத அன்பு செலுத்திய, அவனுக்காக பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திக்கொண்ட, வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை மறந்து அவனுக்காக வாழத் தீர்மானித்த இரு மனிதர்களை தனிமையில் தவிக்கவிட்டு நிமலரூபன் மரணத்தை தழுவிக்கொண்டான், தழுவச்செய்யப்பட்டான்.

சம்பவம்

2012 ஜூன் 27 வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல்கைதிகளில் ஒருவரான சரவணபன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புபட்டவரகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தினார்கள். சாதகமான பதில் கிடைக்காத நிலையில் 3 சிறைச்சாலை அதிகாரிகளைப் பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டார்கள். 19 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் பணயக்கைதிகளை மீட்டெடுக்க 2012 ஜூன் 30ஆம் திகதி விசேட அதிரடிப் படையினர் சிறைச்சாலையினுள் புகுந்தனர். கொடூரமான தாக்குதல், சித்திரவதையின் பின்னர் மூவரும் மீட்கப்பட, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சிறைக்கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்கள். இலங்கையின் அரச பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தை, இறுதிப் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான தாக்குதல்/ மீட்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டிருந்தது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்தும் தாக்குதல்கள், சித்திரவைகள் தொடர்ந்துள்ளன. மீண்டும் அங்கிருந்து கொழும்பு, மஹர சிறைச்சாலைக்கு ஒரு பிரிவினர் அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் வரும் வரை தயார் நிலையில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று தங்களுடைய கொடூர முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள சிறைச்சாலையினுள் அடித்து துவம்சம் செய்யப்பட்ட நிமலரூபன் ஜூலை மாதம் 4ஆம் திகதி சிகிச்சை எதுவும் வழங்கப்படாமல் உயிரிழக்கிறான் (கொல்லப்படுகிறான்). சடலத்தை ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்து ஏற்பட்ட மாரடைப்பாதால்தான் நிமலரூபன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. தனது ஒரே பிள்ளையான நிமலரூபனை உயிருடன்தான் தன்னிடம் ஒப்படைக்கவில்லை, அவனின் உடலையாவது தாங்களே என கெஞ்சிய பெற்றோர் மீது கூட அனுதாபம் காட்டவில்லை. சுமார் 20 நாட்கள் நீதிமன்ற வாசலில் அலையவைத்தது. ஜூலை 23ஆம் திகதி உடல் கிடைக்கப்பெற்றவுடன் இனி இறுதிக் கிரியையாவது நிம்மதியாக செய்யலாம் என எண்ணியிருந்த பெற்றோரையும், உறவினர்களையும் சுற்றத்தாரையும் அரச பயங்கரவாதம் விடவில்லை. உடல் வவுனியா, நெலுக்குளம் கொண்டுவருவதற்கு முன்னரே பொலிஸார், இராணுவத்தினர் நிமலரூபனின் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். இறுதிக்கிரியைகள் தொடர்பாக எவருக்கும் தெரிவிக்கக்கூடாது என நிமலரூபனின் அக்காவுக்கு (உடன் பிறவாத) அநாமதேய அழைப்புக்களும் வந்திருக்கின்றன.

நிமலரூபனின் வீட்டிலிருந்து நெலுக்குளம் பொது மயானத்துக்கு சுமார் 3 கிலோமீற்றர் வரை தூரம் இருக்கும். அதுவரைக்கும் பாதையின் இருமருங்கிலும் பொலிஸார், இராணுவத்தினர் துப்பாக்கிகள், பட்டன் பொல்லுகள் சகிதம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அத்தனையும் எங்களின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெறவேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக இருந்தது. புதைக்குழியையும் பொலிஸார்தான் தோண்டியிருந்தனர், மண் அகழும் இயந்திரத்தைக் கொண்டு பொலிஸார் நிமலரூபனை புதைப்பதற்கான குழியை தோண்டியிருந்தனர். முற்றாக குழி மூடுபடும் வரை இராணுவத்தினரும் பொலிஸாரும் மயானத்தை விட்டு அகழவில்லை.

தாயின் சாபம்

நிமலரூபனின் சடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் சுற்றிவளைத்திருந்தனர். அவர்களைப் பார்த்து தாயார் இராஜேஷ்வரி ஆக்ரோஷமாகப் பேசினார்.

“பிள்ள வெளிய வந்துரும். கல்யாணத்த பண்ணி வைக்கலாமுனு இருந்தன். ஆனா இப்படி நடந்துருச்சே… உங்கள அடித்துக்கொல்லச் சொல்லி எந்தச் சட்டத்தில இருக்கு? எத்தனையாவது சட்டத்தில இருக்கு? என்ட பிள்ளைய கொன்றிருக்காங்க. நீங்க யாராயிருந்தாலும் பரவாயில்ல. என்ன வந்து சுட்டுப்போட்டு போகலாம். நான் பயப்படமாட்டன். ஒரு மனுஷனுக்கு நீதி, நியாயம், உண்மைதான் தேவை. மிருகங்கள்… நீதியில்லாம.. என்ட வயிறு எரியிறமாதிரி உங்கட வயிறு எரியும். இந்தக் கிழவன் உழைச்சிதான் மகன வளர்த்தார். கொலை செய்து, கொள்ளையடித்து என்ட மகன நான் வளர்கல. நன்மையில்ல, தீம… என்ன சுடு பயமில்ல… மற்றவன்ட நெஞ்சில குண்டு பாயிற மாதிரி என்ட நெஞ்சிலயும் குண்டு பாயலாம்… மற்றவனுக்கு நோகுற மாதிரி எனக்கும் நோகலாம்… 12 வருஷம் தவமிருந்து பெற்ற என் பிள்ளை… ஆசையா என் பிள்ளைய வளர்த்தன். குற்றம் செய்திருந்தால் தண்டனை கொடுத்திருக்கனும். கொலைசெய்யனும்னு எந்த சட்டத்தில இருக்கு? எங்க இருக்கு? ஒழிச்சி வச்சி என்ட மகன கொலை செய்திருக்கினம். ஆயிரக்கணக்குல துவக்கோடு என்ட வீட்ட சுத்தி இருக்கினம். எங்கிட்ட ஒன்னுமே இல்ல. முடிஞ்சா வா… எனக்கு முன்னாடி என் மகன கொலை செய்திருக்கனும், அப்ப தெரிஞ்சிருக்கும் நான் யார் என்டு.”

தனது மகன் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013ஆம் ஆண்டு நிமலரூபனின் தந்தை உயர்நீதிமன்றில் சிவில் அமைப்புகளின் உதவியுடன் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லையென்று கூறி 2013 ஒக்டோபர் 14ஆம் திகதி முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீறிஸ் உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம் வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தது.

கடைசியாக வழக்கு விசாரிக்கப்பட்ட மே மாதம் 22 மற்றும் ஒக்டோபர் 14ஆம் திகதிகளில் முன்னாள் நீதியசர் நிமலரூபன் கொல்லப்பட்டமைக்கும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்:

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியைப் பார்த்து, “கைதிகளால் சிறைச்சாலை முற்றுகையில் இருக்கும்போது சிறைச்சாலை ஆணையாளர் ஐ.நா. சாசனத்தை வாசிக்க வேண்டும் என்றா கூறுகிறீர்கள்?”

(சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையின் பிரதியொன்று தனக்கும் கிடைக்கச் செய்யுமாறு மனுதாரர் கணேசன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டிருக்கிறார்), அதற்கு மொஹான் பீறிஸ்,“எதற்காக இதைக் கேட்கிறீர்கள்? நீதிமன்றம் என்பது மனுதாரர்கள் ஆவணங்கள் பெறும் இடம் அல்ல.”

சான்றுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை உலகம் பூராகவும் விநியோகித்துவிட்டு நாட்டின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்.

சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதால் நிமலரூபனின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என சட்டத்தரணி தெரிவித்தார். அதற்கு நீதியரசர், “சிறை முற்றுகையிலிருந்து அதிகாரிகளைக் காப்பாற்ற பாலர் பாடசாலை சிறுவர்களை அனுப்பவில்லை. காயங்கள் ஏற்படுவது வழமை.”

ஒக்டோபர் 14ஆம் திகதி வழக்கின் ஆரம்பத்தில் மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தைகூட கேட்காமல், இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதம நீதியரசர் கூறியிருக்கிறார். “சட்டத்தரணிகளுக்கு பொறுப்பிருக்க வேண்டும், இவ்வாறான மனுக்களைத் தாக்கல் செய்வதன் மூலம் சிறைக்கைதிகளுக்கு கலகங்களில் ஈடுபட ஊக்கம் கிடைக்கக்கூடும்.”

“பிள்ளைகள் நன்றாக வளர்ந்திருந்தால், அவர்கள் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.”

“பணயக்கைதிகளாக இருக்கும் அதிகாரிகளை மீட்க ஒரு சில நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே நிமலரூபனும் ஒரு இதயநோயாளி. மீட்பு நடவடிக்கையின்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்.”

இந்த இடத்தில் இரண்டு விதமான உயிரிழப்புகள் குறித்து முன்னாள் நீதியரசர் குறிப்பிடுகிறார்.

தான் அரச தரப்பு சட்டத்தரணியாக இருக்கும்போது ஒரு வழக்கிற்கு முகம்கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். “கடை உரிமையாளர் ஒருவர் வேலை செய்பவரின் கன்னத்தில் அறைந்ததால் அவர் கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியால் வேலை செய்பவர் உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் கடை உரிமையாளர் மீது கொலைக் குற்றம் சுமத்த முடியாது.

வெள்ளை மாளிகையை நோக்கி காரை செலுத்தி வந்த பெண்ணொருவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். ஏன் அவர் காரின் ரயர் மீது சுடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறுதான் செயற்படுவார்கள். அவர்களை குற்றம்கூற முடியாது.

நாட்டின் அனைத்து இன மக்களும் சமமானவர்கள், எல்லோருக்கும் ஒரே நீதி என்றும் கருதும் உயர் நீதிமன்றின் நீதியரசர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள்தான் மேல் இருப்பவை. நிமலரூபனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரத்தை தேடியறிய முனையாமல், மனுதாரரின் கருத்துக்குக் கூட செவி சாய்க்காமல் இவ்வாறு நடந்திருக்கலாம் என்ற அனுமானத்தை நீதியரசர் நீதிமன்றில் முன்வைத்திருக்கிறார்.

“மகனின் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் பல இருப்பதைக் கண்டேன். தலையிலிருந்து, நெஞ்சிலிருந்து இரத்தம் வடிந்திருந்தது. கால், கைகள் உடைக்கப்பட்டிருந்தன. கால்கள் இரண்டும் கட்டப்பட்டு இருந்தன. மகனின் உடலிலிருந்து நாற்றம் வந்தது. உடம்பில் ஒரு துணிக்கூட இருக்கவில்லை.”

பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மகனின் உடலை பார்த்த பின் வயதான தந்தை தெரிவித்த கருத்து இது.

மகன் கொல்லப்பட்டமைக்கு நீதி கேட்டு மீண்டும் நீதிமன்ற வாசல்படி ஏற முடியாத நிலையில் நிமலரூபனின் தாய் இருக்கிறார். உடல், உள ரீதியாகவும் அவர் தயாராக இல்லை. நீதித்துறை மீதும் நம்பிக்கையில்லை. கடவுளை நம்பிக்கொண்டிருக்கிறார்.

செல்வராஜா ராஜசேகர்