பட மூலம், Getty Images/ axios

அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும் இலக்காகியிருக்கும் கறுப்பின இளைஞர்களுடைய வரலாறு இருக்கும் பட்சத்தில்தான் இந்த கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொவிட்-19 நெருக்கடி தீவிரமாகியிருக்கும் அமெரிக்காவில் அதாவது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ நெருக்கடியால் இறந்திருப்பதற்கு மத்தியிலும் கூட இலட்சக்கணக்கானவர்கள் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் வீதிகளில் இறங்கி தொடர்ச்சியாகப் போராடுவது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவமாகும்.

1968ஆம் ஆண்டில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக பெருமளவில் போராடிய பாதிரியும் செயற்பாட்டாளருமான மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King, Jr.) கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்கு பின்பு நிகழும் மாபெரும் எழுச்சி இதுதான் என்று பலரும் கருதுகிறார்கள். வரலாற்று ரீதியாக சுரண்டப்பட்டும் புறந்தள்ளப்பட்டும் வந்திருக்கும் அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு ஜோர்ஜ் ஃபிலோய்ட்டின் கொலையென்பது அவர்கள் நாளாந்தம் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளில் ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கறுப்பின மக்கள் எதிர்நோக்கிவரும் துயரத்தைப் பார்த்து அமெரிக்காவில் இருக்கும் ஏனைய சமூகங்களாலும் வேறு நாடுகளிலும் கூட ஆதரவு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொவிட்-19 அனர்த்தத்தின் இழப்புகளும் ஒப்பீட்டளவில் கறுப்பின மக்கள் மத்தியில்தான் அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால், மருத்துவ வசதிகளை அணுக முடியாத புறந்தள்ளப்பட்டிருக்கும் மக்களைத்தான் பெருமளவில் பாதிக்கிறது. உலகிலே மிகப்பெரிய முதலாளித்துவ பொருளாதாரத்தையுடைய ஒரு நாடாக இருக்கும் அமெரிக்காவில்தான் பாரியளவு ஏற்றத்தாழ்வும் உண்டு. அங்கு கறுப்பின மக்களுடைய வறுமையும் அவர்களுடைய சுகாதாரமும் பல அபிவிருத்தியடையாத நாடுகளிலும் பார்க்க மோசமாக இருக்கிறது.

அமெரிக்காவுடைய பொருளாதார நெருக்கடியுடன் தற்போது தோன்றியிருக்கும் அரசாங்கத்திற்கெதிரான மக்களுடைய போராட்டம் என்பது அந்த நாட்டிற்குள் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச ரீதியாக அமெரிக்காவினுடைய மேலாதிக்கத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடைய ஜனரஞ்சக எதேச்சாதிகார ஜனாதிபதியான ட்ரம்ப் இந்த நெருக்கடியை கையாள முடியாது தன்னுடைய சுயநலனையும் எதிர்வரும் தேர்தலையும் மட்டுமே கருதி முன்னெடுக்கும் கொள்கைகள் ஏற்கனவே அவிழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவினுடைய மேலாதிக்கத்தை மேலும் புதைக்கிறதாக பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இனவாத வரலாறு

அமெரிக்காவினுடைய வரலாறு என்பது அங்கிருந்த சுதேச இன மக்களை அழித்து கறுப்பின மக்களை அடிமைகளாக ஆபிரிக்காவிலிருந்து இறக்கி முதலாளித்துவ பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய அடித்தளத்தைக் கொண்டது. பல இடதுசாரி அரசியல் பொருளாதார அறிஞர்கள் இதை இனவாத முதலாளித்துவம் (Racial Capitalism) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்திருக்கிறார்கள். அதாவது அடிமைகளை வைத்து சுரண்டி உருவாக்கப்பட்ட அமெரிக்காவில் 1865ஆம் ஆண்டில் அடிமை கட்டமைப்பு ஒழிக்கப்பட்ட பின்பும்கூட ஒரு நூற்றாண்டுகாலமாக கறுப்பின மக்களை தீண்டாமை கட்டமைப்புகளின் மத்தியில்தான் ஒடுக்கி வைத்திருந்தார்கள். உதாரணமாக பாடசாலைகளிலிருந்து மருத்துவ வசதிகள் வரை அனைத்தும் இனரீதியாக வேறுபடுத்தப்பட்டு சமூக புறந்தள்ளல்களும் கொடூரமான அடக்குமுறைகளும் தொடர்ந்தது.

1960ஆம் ஆண்டுகளில் உருவாகிய சமூக உரிமைக்கான இயக்கத்துடன்தான் (Civil Rights Movement) நிறவெறிக்கும் தீண்டாமைக்கும் அமெரிக்காவில் பாரிய ஒரு தோல்வி ஏற்பட்டது. அங்கு மார்டின் லூதர் கிங் ஜூனியர் போன்ற செயற்பாட்டாளர்கள் அகிம்சை முறையிலும் மல்கம் எக்ஸ் போன்ற செயற்பாட்டாளர்கள் மற்றும் கறுப்பு சிறுத்தைகள்  (Black Panthers) போன்ற இயக்கங்கள் தீவிரமாகவும் ஆயுதமேந்தியும் போராடிய வரலாறு இங்கு முக்கியமானதாகும்.

ஆனால், அங்கு வந்த இன உறவுகளின் முன்னேற்றம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது. கறுப்பின மக்கள் தொடர்ந்தும் நகரங்களுக்குள் கூலிவேலை செய்வோராகவும் புறந்தள்ளப்படும் நிலையிலும்தான் இருந்தனர். 1980ஆம் ஆண்டுகளின் நவதாராளவாத கொள்கைகளுடன் சாதாரண மக்களுக்கு குறிப்பாக கறுப்பின மக்களுக்கான சமூகநலன் திட்டங்கள் மற்றும் சமூக சேவைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. மேலும், அவ்வாறு பொருளாதார ரீதியாக சுரண்டும் கொள்கைகளை முன்கொண்டு போவதற்கு அரசின் ஒடுக்கும் கரங்களாகிய பொலிஸிற்கு அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. அதாவது, மக்களை பொருளாதார ரீதியாக ஒடுக்கி வைப்பதற்கு அரசினுடைய ஒடுக்குமுறையும் வன்முறையும் பிரயோகிக்கப்பட்டது.

நூறு வருடங்களுக்கு முன்பு கறுப்பின மக்களை நிறவெறி குண்டர்கள் எவ்வாறு கொடூரமாக தாக்கி ஒடுக்கினார்களோ அதே முன்னெடுப்புகள்தான் அண்மை தசாப்தங்களில் அமெரிக்காவின் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது. கறுப்பின மக்களுக்கு அப்பால் இலத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக மெக்ஸிகோவிலிருந்து குடியேறியவர்கள் மீதான பொலிஸ் வன்முறையும் ஒடுக்குமுறையும் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறான ஒடுக்குமுறையை கையாளுவதற்குதான் அமெரிக்காவில் பெரும் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு தற்போது ஏறத்தாழ இருபத்திரண்டு லட்சம் மக்கள் தடுத்துவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவினுடைய சனத்தொகையில் கறுப்பின மற்றும் இலத்தீன் அமெரிக்க இனத்தவர்கள் மொத்த சனத்தொகையில் 32% ஆக இருந்த போதும் சிறைவைக்கப்பட்டோர் தொகையில் அவர்கள் 56% ஆக இருக்கிறார்கள்.

இவ்வாறான அரச நிறுவன ஒடுக்குமுறைக்கப்பால் அமெரிக்காவில் நிறவெறி பாசிச சக்திகளுடைய புதிய தோற்றத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான கருத்தியலும் அரசியலும்தான் ஐனாதிபதி ட்ரம்பினுடைய தோற்றத்திற்கு உந்துதலாகவும் அமைந்தது. கடந்த வாரத்தில் வந்திருக்கும் இந்த பெரும் போராட்டங்கள் அமெரிக்காவிற்குள் இருக்கும் இனவாத ரீதியான பெரும் பிளவையும் எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க மேலாதிக்கத்தின் நெருக்கடி

1970ஆம் ஆண்டுகளிலிருந்து தொடரும் முதலாளித்துவத்தினுடைய நீண்டகால வீழ்ச்சி, அதை குறுகிய நிலைப்பாட்டுடன் கையாண்ட நவதாராளவாத பொருளாதார கொள்கைகள், அதன் தாக்கத்துடன் உருவாகிய 2008ஆம் ஆண்டின் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போது உருவாகியிருக்கும் அனர்த்தத்துடன் வந்திருக்கும் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஆகியன உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஒரு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியதற்கப்பால் அமெரிக்காவினுடைய மேலாதிக்கத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளியாக அமையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதாவது, தற்போது வந்திருக்கும் உலகளாவிய நெருக்கடியுடன் நாலு கோடி அமெரிக்க மக்கள் கடந்த மாதங்களில் வேலைகளை இழந்துள்ளனர். அதற்கப்பால் உலக பொருளாதாரத்தை சுரண்டி இலாபத்தை குவித்த அமெரிக்காவினுடைய பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு உலக அரசியல் பொருளாதாரம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு கீழ்தான் இயங்கியது. அமெரிக்க மேலாதிக்கம் என்பது உலகளாவிய பொருளாதார தலைமைத்துவம் மற்றும் மாபெரும் இராணுவ பலத்தை வைத்து ஏனைய நாடுகளின் ஒப்புதல்களை திரட்டி தான் நிரூபிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தோன்றியிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியுடன் பல நாடுகள் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத நிலைமையும் உருவாகலாம். அதாவது, இது அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்காலம் என்றுகூட பல பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது அமெரிக்காவினுடைய மேலாதிக்கம் குலைந்துபோவது என்பது வியட்நாம் மற்றும் ஈராக் யுத்தத்தில் அமெரிக்கா கண்ட தோல்விகளுடன் தொடங்கியது. மேலும் இந்த யுத்தங்களிற்கு எதிராக அமெரிக்காவிற்குள் வந்த எதிர்ப்பும் அதன் அரசியல் ஸ்திரத்தை குறைத்தது. இறுதியாக அண்மைக்காலத்தில் வந்திருக்கும் மருத்துவ அனர்த்தம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஜோர்ஜ் ஃபிலோய்ட்டின் கொலைக்கு எதிரான போராட்டங்களும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சர்வதேச ரீதியாகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இங்கிருக்கும் அபாயம் என்னவென்றால் ஒரு பேரரசு தன் மேலாதிக்கத்தை இலகுவாக விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அது ஒரு பெரும் அழிவுடன்தான் இறங்கிப்போவது வழக்கம். அந்த விதத்தில் இவ்வாறான நெருக்கடியும் இடர்களும் நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு பாசிச அரசியலின் தோற்றத்திற்கான வாய்ப்பும் இருக்கிறதென்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த அபாயத்தை விளங்கிக்கொண்டு அமெரிக்காவிற்குள் இருக்கும் முற்போக்கு சக்திகள் அவ்வாறான பாசிச முன்னெடுப்புகளை முறியடிக்க வேண்டும். மேலும் உலகெங்குமிருக்கும் முற்போக்கு சக்திகள் அமெரிக்க மேலாதிக்கத்தை தோற்கடிக்கும் நிலைப்பாடடிற்கு வரவேண்டும்.

கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்