பட மூலம், NEWSCIENTIST

தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல் முன்னுரிமைகளை அறிவதாக அமையும் – பிரான்ங் எம் ஸ்னொவ்டன். (தொற்றுநோய்களும் சமூகங்களும் – கறுப்பு மரணம் முதல் தற்போது வரை)

இந்த வாரம் சீன அதிகாரிகள் கண் மருத்துவர் லி வென்லியாங் குறித்து பெரும் பாராட்டுகளை வெளியிட்டனர். பொது ஒழுங்கை குழப்பியவர் என்ற அவர் மீதான குற்றச்சாட்டினை கைவிட்டனர்.

சார்ஸ் போன்ற வைரஸ் குறித்து எச்சரித்தமைக்காக எந்த அமைப்புமுறை அவரை துன்புறுத்தியதோ – அந்த வதந்திகளை பரப்பியவர் என்று கூறியவரை அந்த அமைப்பு முறை துணிச்சலுடன் போராடியவர் என பாராட்டியுள்ளது.

சீனாவிலும் உலகளாவிய அளவிலும் 13,000 பேர் கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோயினால் உயிரிழந்த பின்னர், வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தல் தாமதமாக இடம்பெற்றுள்ளது.

சீனா ஜனாதிபதியும் அவரது ஏனைய அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை விடுத்த மருத்துவரை தண்டித்து மௌனமாக்குவதற்கு பதில் அவர் சொல்வதை செவிமடுத்திருந்தால் உலகளாவிய நோய் தொற்றினை தவிர்த்திருக்கலாம்.

சௌத்தாம்டன் பல்கலைகழகத்தின் ஆய்வொன்றின் படி சீனா இரண்டு வாரங்கள் முன்னதாகவே (மருத்துவர் எச்சரித்த காலப்பகுதி) நடவடிக்கை எடுத்திருந்தால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 86 வீதத்தினால் குறைத்திருக்கலாம்.

சீனாவின் அனுபவம் தங்கள் முன் இருந்தபோதிலும் அரசியல் தலைவர்கள் கொவிட் 19 இன் ஆபத்தை குறைத்து மதிப்பிட்டார்கள் அல்லது அலட்சியம் செய்தார்கள்.

டொனால்ட் டிரம்ப் இந்த வைரஸ் ஒரு காய்ச்சல் போன்றது அது தீடிரென அதிசயமான விதத்தில் மறைந்து போகும் எனத் தெரிவித்தார்.

இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்த அன்று அந்த நாட்டின் ஆளும் கட்சியின் தலைவர் நாட்டு மக்களை அவர்களின் பழக்கவழக்கங்களை மாற்றவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஈரானின் தலைவர்கள் வைரசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முடக்குவதற்கு மறுத்ததுடன் நாடாளுமன்றத் தேர்தல்களை தொடர்ந்து நடத்தினார்கள்.

இலங்கை கொவிட் 19 லிருந்து பாதுகாப்பானது என  இலங்கையின் சுற்றுலாப்பயண சபை சுயதம்பட்டம் அடிக்கும் விளம்பரத்தை வெளியிட்டது.

மிகச்சிறப்பான சுகாதார பரிசோதனைகள், சிறந்த சுகாதார சேவை, 34 நாட்களில் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார், உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் சர்வதேச தொற்றுநோய் என அறிவித்த பின்னரும் எவரும் இலங்கையில் பாதிக்கப்படவில்லை என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான குருட்டுத்தனமும், செயற்பாடின்மையும் சீனாவில் தோன்றிய கொவிட் -19 (மனிதர்கள் எறும்புண்ணிகளை  உள்ளடக்கிய  உணவுச்சங்கிலி காரணமாக) மூன்று மாதங்களில் சர்வதேச தொற்றுநோயாக மாறுவதற்கு வழிவகுத்தது.

வைரஸின் வீச்சும் பரவலும் தேசிய எல்லைகளை மூடுவது அவசியமானது என்பதை நிருபித்துள்ளது. ஆனால், இறுதித் தீர்வு சர்வதேச தீர்வாக அமையவேண்டும். வைரஸ், உலகின் ஒரு நிலத்தினை, நாட்டினை நிரந்தரமாக ஆக்கிரமித்தால் கூட ஏனைய உலகம் முழுவதும் பாதுகாப்பானதாகக் காணப்படாது.

ஜோன்டொன் கூறுவது போல, நமது உலகமயமாக்கப்பட்ட உலகில் புலம்பெயர்வும் சுற்றுலாவும் எங்கும் நிறைந்திருக்கும், தீவுகள் கூட தீவுகளாக இல்லை.

1968இல் ஒரு மில்லியன் மக்களை பலிகொண்ட ஹொங்ஹொங் காய்ச்சலும் 1956 இல் இரண்டு மில்லியன் மக்களை பலியெடுத்த சீனாவில் உருவான ஆசிய காய்ச்சலும் எங்கள் நாட்டினை தொடவேயில்லை. அற்புதமான தனிமைப்படுத்தல் காணப்பட்ட அன்றைய நாட்கள் போய்விட்டன. சுற்றுலாத்துறை என்பது எங்கள் வாழ்வாதாரத்தின் முக்கிய விடயமாக மாறியுள்ளது. மேலும், யூத புலம்பெயர்ந்தவர்களிற்கு அடுத்ததாக அதிகமான புலம்பெயர்ந்தவர்களை கொண்டவர்களாக நாங்கள் காணப்படுகின்றோம், நாங்கள் எந்த சொந்த கண்ணில் மட்டும் தனித்துவமானவர்கள், ஏனைய உலகத்திற்கு அடிக்கும் எந்த மணியும் இப்போது எங்களுக்கும் அடிக்கின்றது.

அரசியல் யுத்தநிறுத்தத்திற்கான தருணம்

கொவிட் 19 தாக்கத் தொடங்கியிருந்தவேளை ஈரானில் இடம்பெற்ற தேர்தலில் குறைந்தளவானவர்களே வாக்களித்தனர், இதன் காரணமாக கடும்போக்குவாதிகள் பெரும் வெற்றியைப் பெற்றனர்.

தொற்றுநோய் பரவ ஆரம்பித்தவேளையிலும் தேர்தலை நடத்தவேண்டும் என பிடிவாதம் பிடித்ததன் மூலம்    எங்களின் ஆட்சியாளர்களும் அவ்வாறான வெற்றியை பெற விரும்பினார்கள்.

பொது அறிவை அரசியல் நோக்கங்கள் வெற்றிகொண்டதுடன் இலங்கையில் வைரஸ் மையம் கொண்டுள்ள பகுதிகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அவசர அவசரமாக அகற்றப்பட்டு  வேட்புமனு தாக்கல் செய்வது இடம்பெற்றது.

19ஆவது திருத்தத்தின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையகம் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.

தேர்தல் ஆணையகம் அவ்வாறான நடவடிக்கையை எடுக்காமலிருந்திருந்தால் வைரஸ் மேலும் பல உயிர்களைப் பலியெடுத்திருக்கும். வைரஸின் வேலையை எப்படி தேர்தல் பிரச்சாரம் நிறைவேற்றியிருக்கும் என்பது குறித்த எச்சரிக்கையை கம்பஹா மாவட்ட மருத்துவரும் தேர்தல் வேட்பாளருமான ஒருவரின் செயற்பாடுகள் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தன.

அந்த வேட்பாளர் தன்னை பாராட்டுவதற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன் மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனையை மீறி அந்தக் கூட்டத்திற்குச் சென்றவர்களை பாராட்டியிருந்தார் – அவருக்கு அருகில் அவர்கள் அமர்ந்திருந்தனர். தேர்தல் ஒத்திவைக்காவிட்டால் அவர் கொரோனா வைரஸினால் மாத்திரமன்றி உலகளாவிய தொற்றுநோய் குறித்த முட்டாள்தனத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பார்.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை, வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டமை போன்றவற்றினால் உருவான தேர்தல் மனோநிலை இன்னமும் தொடர்கின்றது, சில கட்சிகளின் தலைவர்கள் பாதுகாப்பாக நடந்துகொள்ளலாம், ஆனால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட அடுத்த நிமிடமே வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிப்பார்கள், ஆயிரக்கணக்கான நோய் காரணிகளை அவர்கள் எழுப்புகின்றார்கள்.

ஊரடங்கு சட்டம் அமுலிற்கு வருவதற்கு அரைமணித்தியாலத்திற்கு முன்னர் பதுளை மாவட்ட வேட்பாளர் ஒருவர் வாகனத்தில் சென்று பௌத்தர்களின் புனித நீரை மக்களிற்கு விநியோகித்தார். ஊரடங்கு நீக்கப்பட்டதும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடரலாம், வலுக்கட்டாயமான தனிமைப்படுத்தல் காரணமாக கிடைத்த நன்மைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நிலைமை ஸ்திரமானதாக மாறும் வரை தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துவது என தேர்தலில் போட்டியிடும கட்சிகள்  இணக்கப்பாட்டிற்கு வந்தால் மாத்திரமே அவ்வாறான ஆபத்தினை தடுக்க முடியும். அவ்வாறான பலகட்சி இணக்கப்பாடு ஏற்பட்டதும், விருப்புவாக்கிற்கான குழந்தை போர்களில் – மோதலில் வேட்பாளர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான சந்தர்ப்பம் கட்சி தலைவர்களிற்கு கிடைக்கும்.

துரதிஸ்டவசமாக அவசியமான அரசியல் யுத்தநிறுத்தம் இன்னமும் ஏற்படவில்லை. ஜனாதிபதி யுத்தத்தில் வெற்றிகொண்டது போல இதுவும் இராணுவத்தின் உதவியுடன் தன்னால் தனித்து தீர்வை காணக்கூடிய பிரச்சினை எனக் கருதுகின்றார்.

கொவிட் 19 செயலணியின் கூட்டத்தில் பொதுவான முடக்கலிற்கான தேவையை அவர் ஒரு ஏளனச்சிரிப்புடன்  நிராகரித்துள்ளார். ஊரடங்கு பிரதேசங்களை அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதொரு நடவடிக்கையாகும்.

சமீபத்தில் வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள உள்ளூர் அரசியல்வாதியினை சந்தித்ததன் காரணமாக தன்னை தனிமைப்படுத்தவேண்டியுள்ளதை கருத்தில் கொண்டே பசில் ராஜபக்‌ஷ ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்திருக்கலாம்.

தொற்றுநோயை ஒழிப்பதற்கு முன்னர் பிரச்சாரம் ஆரம்பமானால் ஜனாதிபதி அவரது குடும்பத்தவர்கள் உட்பட எவரும் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள்

நிதி தொடர்பான காரணங்களுக்காகவும் அரசியல் யுத்தநிறுத்தம் அவசியமாகின்றது. அரசாங்கத்தினால் ஏப்ரல் வரையே நிதியை செலவிடமுடியும், அதன் பின்னர் அரச நிதியை செலவிடுவதற்கான அனுமதியை பெறுவதற்காக நாடாளுமன்றம் கூடவேண்டும். அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது. ஆனால், அது ஒரு இடைக்கால நடவடிக்கை மாத்திரமே. ஏப்ரலிற்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பில்லை. இதனால், பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவேண்டும். இதன் காரணமாக நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதே ஜனாதிபதிக்கு உள்ள ஒரேயொரு வழிமுறையாகும். இதன் மூலம் அவர் அரசியல் யுத்தநிறுத்தத்திற்கான முதல் நடவடிக்கையை எடுப்பதற்கு தயராகயிருந்தால் எதிர்கட்சியினர் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தங்கள் எண்ணிக்கையைப் பயன்படுத்தி தொற்றுநோயை ஒழிப்பதற்கு மாத்திரமல்லாமல் நாடு தொடர்ந்தும் இயங்குவதற்கும், அதிகளவு பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் வீடுகளிற்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியையையும் ஒதுக்குவதற்கும் அவர்கள் ஆதரவை வழங்கவேண்டும்.

தீவிரமான நோய் பரிசோதனையை மேற்கொண்ட நாடுகளே இந்தத் தொற்றுநோயை கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. தொற்றுநோய் அறிகுறிகள் அற்றவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக முன்கூட்டியே கண்டுபிடித்து தனிமைப்படுத்த முடிந்தது. அதிகளவு பரிசோதனை சாதனங்களும், மருத்துவமனை கட்டில்கள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவசங்கள் உட்பட ஏனைய வசதிகளும் அவசியம். இவற்றிற்கு நிதி ஒதுக்குவதற்கு மக்களைக் கவராத  நடவடிக்கைகள் அவசியமாகலாம். 2019 டிசம்பரின் அர்த்தமற்ற வரிச்சலுகைகள் சிலவற்றை இரத்து செய்யவேண்டிய நிலையேற்படலாம். இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு  அரசாங்கத்திடம் துணிச்சல் இருக்குமானால் எதிர்கட்சிகள் அதற்கு ஆதரவளிக்கும் கொள்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் இதனை தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தகூடாது.

பொதுவான அச்சுறுத்தல் காணப்படும் தருணத்தில் சரியான சமூக மனோநிலையை உருவாக்குவதற்கும் அரசியல் யுத்த நிறுத்தம் அவசியம். ஒத்துழைப்பு ஐக்கியம் – ஒற்றுமை ஆகியனவே இன்று எங்களுக்கு அவசியமானவையாக உள்ளன. தேர்தல்கள் கடும் மோதலிற்கான தருணமாகும், கட்சிகளிற்கு மத்தியில் மாத்திரமல்ல கட்சிகளிற்கு உள்ளேயும் மோதல்கள் இடம்பெறும். தற்போதைய சமயத்தில் இடம்பெறும் தேர்தல் பிரச்சாரங்கள் இன மத மற்றும் சமூக ரீதியான பிளவுகளை ஆபத்தானதாக மாற்றிவிடும். கட்சிகளுக்கு இடையிலான மோதல், கட்சிக்குள் மோதல் காணப்படுகின்ற சூழ்நிலைகளில் தொற்றுநோய் என்பது போரிடுவதிற்கு முக்கியத்துவம் குறைந்த எதிரியாக மாறிவிடும். நாங்கள் ஒரு நாள் கண்விழிக்கும்போது நிலவரம் சீனா அல்லது இத்தாலி போன்று காணப்படும்.

முட்டாள்தனமான தொற்றுநோயை தவிர்ப்பது

அமெரிக்காவின் வானியற்பியல் நிபுணர் நெய்ஸ் டி கிராஸ் டைசன் உலகளாவிய அளவில் பாரிய பரிசோதனைக்கு நடுவில் நாங்கள் காணப்படுகின்றோம், மக்கள் விஞ்ஞானிகளை செவிமடுப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் சாதனைகள் இதுவரை நம்பிக்கையளிப்பதாகக் காணப்படவில்லை. வைரஸ் குறித்த எங்கள் நடவடிக்கைகள் உண்மைகள் மற்றும் காரணங்களை காட்டிலும் முன்கூட்டிய கற்பிதங்கள், தப்பான எண்ணங்கள், விருப்பத்தேர்வுகளை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு தலைமைத் தாங்குவதற்கு இராணுவ அதிகாரியை நியமிப்பது முற்றாக இராணுவ பயிற்சி அற்ற மருத்துவரை போரிற்கு தலைமை தாங்குமாறு கேட்டுக்கொள்வதை போன்ற பைத்தியத்தனம் மிக்க செயற்பாடாகும்.

அரசியல் தலைவர்கள் தங்கள் சிங்கள வாக்காளர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாததன் காரணமாக அனேகமான தனிமைப்படுத்தல் நிலையங்கள் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் வடக் கிழக்கிற்கு வெளியே உள்ளன என்பது இதனை விட கவலையளிக்க கூடிய விடயம்.

சில தரப்பினர் தெரிவிப்பது போல இலங்கை மருத்துவர்கள் கொவிட் 19ற்கான மருந்தினை உருவாக்கவில்லை. இரண்டும் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளன. குளோரோ குயின், ஹைட்டிராக்சி குளோரோ குயின் ஆகிய இந்த இரண்டு மருந்துகளும் குணமளிக்கும் என பொய்யான தம்பட்டங்கள் காரணமாக கொவிட்டினால் பாதிக்கப்படாதவர்கள் அதன் ஆபத்தினை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம், பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைக்குச் செல்லாமல் தாங்களே தங்களிற்கு சிகிச்சை வழங்க முற்படலாம் (சில அரசியல்வாதிகள் தெரிவிப்பது போல, இந்த மருந்துகளிற்கு அமெரிக்காவின் எவ்டீஏ இன்னமும் அனுமதி வழங்கவில்லை).

நெருக்கடியான தருணங்களில் மக்கள் மதங்களை நாடுவார்கள், இது புரிந்துகொள்ளக்கூடிய விடயம். ஆனால் நோயின் தன்மையை கருத்தில்கொள்ளும்போது மத வழிபாடுகளை தனியாக மேற்கொள்ளவேண்டும், கூட்டாகயில்லை. கத்தோலிக்க இஸ்லாமிய மத வழிபாடுகளை அந்த மதங்களின் தலைவர்கள் இரத்துச்செய்துள்ளனர். ஆனால், பௌத்த தலைமைப்பீடம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தவறியுள்ளது. சிறீபாதவிற்குப் பொறுப்பாகவுள்ள பௌத்த மதகுரு யாத்திரீகர்களைத் தொடர்ந்து வருமாறு கேட்டுக்கொண்டார்.

புத்தர் நோய்வாய்ப்பட்டிருந்வேளை அவரும் ஜீவக, கொமார பஞ்ச போன்ற மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றினார் என கல்கந்தே தர்மானந்த தேரர் நினைவுபடுத்தியுள்ளார். மூடநம்பிக்கைகள் எனும் பாரிய கடலில் அவர்  பகுத்தறிவின் தனியொரு குரலாக காணப்படுகின்றார்.

மகாநாயக்க தேரர்களின் மௌனமும் அரசாங்கத்தின் அலட்சியமும் மதநம்பிக்கையின் பெயரால் பெருமளவானவர்கள் ஒன்றுகூடக்கூடிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம், யாழ்ப்பாணத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்த மதபோதகர் நடத்திய ஆராதனையாகும். அவர் சுவிட்ஸர்லாந்து திரும்பிச் சென்றவுடன் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் வைரஸினை கொண்டுவந்தாரா அல்லது அவருக்கு இங்கே வைரஸ் தொற்றியதா என்பது  தெளிவாக தெரியவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. அரசாங்கம் அனைத்து மத நிகழ்வுகளையும் தடைசெய்வதும் மதத் தலைவர்கள் தங்கள் மக்களை வீடுகளில் பாதுகாப்பாகயிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதும்  இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கத்திற்கு உள்ள வழியாகும்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள சம்பவம் எங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பொதுவான ஆபத்திற்கு ஒரு உதாரணமாகும். எங்கள் சிறைச்சாலைகளில் பெருமளவில் கைதிகள் நிரம்பியுள்ளமையாலும்   மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாகவும், கைகளை கழுவுதல், சமூக தனிமைப்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முற்றாக சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன.

சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு சிறிய இடம் கிடைத்தாலும் வைரஸ் காட்டுத்தீயைப் போல பரவும். சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அபராதம் செலுத்தாமைக்காக தண்டிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை விடுதலை செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலை குறைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.

இன்று நாங்கள் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். மிகவேகமாக நகரும் இன்னமும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் வைரஸினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அமெரிக்காவின் சமஷ்டி செயலணியின் அறிக்கையின் படி உலகளாவிய தொற்றிற்கு எதிரான போராட்டம் 18 மாதங்கள்  நீடிக்கலாம். அது பல தொடர்ச்சியான அலைகளாகக் காணப்படலாம். குணமடைந்தவர்களில் குறிப்பிட்ட சதவீதமானவர்கள் மீண்டும் நோய்வாய்ப்படலாம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இரண்டாவது சுற்று தொற்று வெளிநாடுகளில் இருந்து வரலாம்.

உலகம் சர்வதேச பதில் நடவடிக்கையை உருவாக்கவேண்டும். வறிய நாடுகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும். விஞ்ஞான ரீதியில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு முன்னேற்றமடைந்த நாடுகள் உதவவேண்டும். வைரஸ், அதன் பின்னர் உருவாகக் கூடிய பேரழிவு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும், ஏனைய பன்னாட்டு நிதியமைப்புகளும் பலவீனமான நதாடுகளுக்கு விசேட நிதியங்களை உருவாக்கும் என நம்பலாம்.

2020 இன் முதல் காலாண்டு பகுதியில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கலாச்சார புரட்சி காலத்தின் போது காணப்பட்டது போன்று குறைவானதாகக் காணப்படும் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எங்களைப் போன்ற நாடுகள் மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

தற்போதைய உலகளாவிய நோய் தொற்றின் மூலமான முக்கியமான பாடம் என்ன என்றால், சமூகநலன்புரி திட்டங்களிற்கு செலவிடுவதன் முக்கியத்துவமும், வலுவான, உறுதியான பொது சுகாதார மற்றும் கல்வி முறைகளின் முக்கியத்துவமுமாகும். இலங்கையில் பல தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், இதில் ஒன்று கூட அரசாங்கத்திற்கு இலவசமாக உதவவில்லை.

எங்களை போன்ற நாடுகளின் உண்மையான தேசிய பாதுகாப்பு தாக்குதல் ஹெலிக்கொப்டர்கள், யுத்தக்கப்பல்கள், நவீன ஆயுதங்கள் போன்றவற்றில் இல்லை. மாறாக விஸ்தரிக்கப்பட்ட பொது சுகாதார சேவை, மருத்துவமனைகளில் அதிக கட்டில்கள், ஐசியூக்கள், வெளிநோயாளர் பிரிவுகள், மருத்துவர்கள் தாதிமார்கள் ஆகியவற்றிலேயே உள்ளது என்பதை நாங்கள் உணரத் தவறினால் இந்த நெருக்கடியிலிருந்து நாங்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது அர்த்தம்.


A bell tolls for the world என்ற தலைப்பில் திசரணி குணசேகர எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.