பட மூலம், The Morning
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பிற்பாடு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மோசமான காலம் பிறந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரமான பல குற்றங்களை வெளிக்கொணர்ந்த, அந்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுத்த மற்றும் அந்த விசாரணைகளைக் கண்காணித்த அதிகாரிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை இப்போது தீவிரம் பெற்றுள்ளது.
முதலாவது இலக்காக குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவே இனங்காணப்பட்டார். ஷானி அபேசேகர மிகவும் திறமை வாய்ந்த அதிகாரியாவார். பல குற்ற விசாரணைகள் அவரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் நீதிபதிகளிடம் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். தன்னுடைய உயர் அதிகாரியொருவர் குற்றங்களுடன் தொடர்புபட்டவராக இருந்தாலும் அவருக்காக எந்த சலுகையும் வழங்காதவர். பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணை இதற்கு சிறந்த உதாரணமாகும். கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட வாஸ் குணவர்தன உட்பட சிலர் இன்னும் சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் ஷானி அபேசேகரவின் கண்காணிப்பின் கீழேயே நடத்தப்பட்டது. இந்த விசாரணைகளுக்காக ஷானி காட்டிய அக்கறை, ஊடகவியலாளர்களான எமக்கு நம்பிக்கையை தந்தது.
ஊடகவியாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கியமை, ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடத்திச் செல்ல முயன்றமை, ஆயுதங்களைக் காண்பித்து ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று வீதியில் வீசிச் சென்றமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக இடம்பெற்று வந்த விசாரணைகளுக்கு ஷானி அபேசேகர வழங்கிவந்த பங்களிப்பு அளப்பரியது.
இந்தக் குற்றச் சம்பவங்கள் மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் நடந்திருந்தாலும் அது தொடர்பான பைல்கள் தூசிப்படிந்தே இருந்தன. ஆனால், ஷானி அபேசேகர வந்தவுடன் அவை தூசித் தட்டப்பட்டு மேலே எடுக்கப்பட்டன. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற அந்தக் குற்றங்களின் அடி நுனியை குற்றத்தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்க முடிந்தது.
காணாமலாக்கியமை, கடத்தியமை மற்றும் கொலைசெய்தமையுடன் தொடர்புடைய விசாரணைகளைக் கைவிடுவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் விசாரணைகள் மூலம் தெரியவந்ததனை அடுத்து அவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். இந்த விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளிவர வெளிவர அப்போது எதிர்கட்சியில் இருந்த, இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள், இராணுவ வீரர்களைக் கைதுசெய்வதாக கூச்சலிட்டார்கள், பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி கைதுசெய்வதாகக் கூறினார்கள். அதுமட்டுமன்றி, பிரகீத் எக்னலிகொட போன்றவர்கள் புலிகளுக்குத் தகவல் வழங்குபவர்கள் என்று அப்போதிருந்த எதிர்க்கட்சியினரின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.
அத்தோடு நிறுத்தாமல், விசாரணைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளை புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுடன் இயங்குபவர்கள் என்றும் குற்றம்சாட்டினார்கள். இதற்கு சிறந்த உதாரணம், குற்ற விசாரணை பிரிவின் ஒன்றிணைந்த கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா. இப்போது அவருடைய பெயருடன் கந்தப்பா என்ற பெயரும் சேர்ந்துள்ளது. நிசாந்த சில்வா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக விஜயதாசவே ஊடகங்களில் தெரிவித்துள்ளதோடு, அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து குற்ற விசாரணைப் பிரிவின் ரவி செனவிரத்ன என்பவரே நிசாந்தவைக் காப்பாற்றியுள்ளார் என்றும் விஜயதாஸ ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
புலம்பெயர் முகவரென இவர்கள் கூறும் நிசாந்த சில்வா என்பவர்தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வித்தியா என்ற மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை வெற்றிகரமாக நிறைவுசெய்தவர். அந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழர் என்று ஞாபகமிருக்கிறது. இந்த விசாரணை நடக்கும்போது நிசாந்த சில்வாவின் புலி முகவர் கதை எங்கு சென்றது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும்.
குற்ற விசாரணை பிரிவின் பணப்பாளராக இருந்த சிரேஷ் பொலிஸ் அதிகாரி சுதத் நாகஹமுல்ல பதவியுயர்வைப் பெற்று திருகோணமலை சென்றபோது அவருக்குப் பதிலாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மெவன் சில்வாவை பொலிஸ் மா அதிபர் நியமித்திருந்தார். ஆனால், அப்போதிருந்த பொலிஸ் ஆணைக்குழு அதனை தடுத்து நிறுத்தியதோடு அந்த இடைவெளிக்கு ஷானி அபேசேகரவை நியமித்தது. சுயாதீனமான நிறுவனம் என்பதை ஷானி நியமனத்தின் மூலம் பொலிஸ் ஆணைக்குழு நிரூபித்துக் காட்டியது. பி.எம். மனதுங்க என்பவரே அப்போது பொலிஸ் திணைக்களத்தின் தலைவராக இருந்தார். இப்போது தலைவராக இருப்பவர் கே.டபிள்யூ.ஈ. கரல்லியத்த. காலி பிராந்திய பிரதி பொலிமா அதிபரின் உதவி பொலிஸ் அதிகாரியாக ஷானி அபேசேகர இடமாற்றம் செய்ய கரல்லியத்த உட்பட ஆணைக்குழு அதிகாரிகள் அனுமதிய வழங்கியமை அதிர்ச்சியளிக்கக்கூடியது. எமக்கு கிடைத்த தகவல்களின் படி ஷானி அபேசேகரவின் இடமாற்றம் தொடர்பாக ஆணைக்குழு கடந்த நவம்பர் 28ஆம் திகதி மீண்டும் கூடி கலந்துரையாடி இருப்பதாக தெரியவருகிறது.
ஷானி அபேசேகர தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பெல்லன்வில விகாரையில் வைத்து கூறிய கருத்து அவ்வளவு நல்லதல்ல. இப்போதே ஜனாதிபதி எதிர்காலத்தில் எடுக்கப்போகும் தீர்மானம் குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல் தெரிகிறது. அதேபோல இந்த அரசாங்கத்துக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்பவே 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நவம்பர் 25ஆம் திகதி நடந்த ஒரு சம்பவம் ஊடகவியலாளர்கள் உட்பட மாற்றுக் கருத்துக்களைக் கொண்டோரை நடுங்கச் செய்துள்ளது. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சிங்கள பெண் அதிகாரி ஒருவர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் வீதியில் வீசியெறியப்பட்டுள்ள சம்பவமே அது. கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்தும் கேட்டும் உள்ளவர்களுக்கு இந்தச் சம்பவம் பீதியைக் கிளப்புவதாகும்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவும் இதுபோன்றதொரு சம்பவத்துக்கு முகம்கொடுக்க மாட்டார் என்று யாராலும் உறுதிகூற முடியுமா? அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. யாரின் தேவை கருத்தி இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர்தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றைப் பார்க்கும்போது நாடு குரூரமான ஒரு பாதையை நோக்கி செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.
நிமல் அபேசிங்க
ராவய பத்திரிகையில் “ගොරකා දඩමස් කිරීම සහ ශානිට ඇඟිල්ල දිගු කිරීම” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
ஆசிரியர் குறிப்பு: மூலக் கட்டுரையின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.