பட மூலம், Selvaraja Rajasegar
கண்டி சமூக நிலைமாற்ற மன்றம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு, மலையக பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்திவரும் பல மலையக மன்றங்களிடையே கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை நடாத்தியது. இந்தக் கருத்து பரிமாற்றங்களை நிறைவு செய்து வேட்பாளர்கள் மத்தியில் ஒரு தகுந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அனைத்து மன்றங்களினதும் அவாவாக இருந்தது. அதன்படி நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவமுள்ளவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகள் பெற்று கோரிக்கை ஆவணமொன்று வரையப்பட்டுள்ளது.
வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் கீழ் காணும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1. அரசியல் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் போது மலையகத் தமிழரின் தனித்துவமான அடையாளம் தெளிவாக உறுதிப்படுத்தப்படவேண்டும். இவ்வாறு உறுதிசெய்யப்படுவதன் மூலமே இலங்கை நாட்டின் சமத்துவமான உரிமை உடைய பிரஜைகளாக மலையக தமிழரை ஒன்றிணைக்க முடியும். அரசியல் யாப்பு அந்தஸ்த்து அளிப்பதன் மூலமே மலையக தமிழர் தங்கள் தனித்துவமான அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
பிரதிநிதித்துவ அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும் தேசிய, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் உரிய அதிகார பகிர்வு செயல்முறை உருவாக்கப்பட வேண்டும்.
பிரதேச ரீதியிலும், பிரதேசம் சாராத ரீதியிலும் ஒரே முறையில் கடைபிடிக்காமல் உரிய விதத்தில் அதிகார பகிர்வை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் முறை மாற்றங்கள் நடைபெறும் போது மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவ உரிமைகளைப் பாதிக்காத வகையில் செயல்படுத்துவது அவசியமாகும். விகிதாசாரத்திக்கு ஏற்ப அவர்களின் பிரதிநிதித்துவம் சகல மட்டங்களிலும் அதாவது தேசிய, மாகாண, உள்ளூர் அமைப்புகள் என்ற அடிப்படையில் இடம் பெற வேண்டும்.
தாங்களாகவே தங்கள் சமூகம் சார்ந்த விடையங்களில் முடிவெடுக்கக் கூடிய வகையிலும் அனைத்து பிரிவினரோடும் நல்லுறவை பேணி சமத்துவ நிலையை எய்தக் கூடிய வழிவகையை ஏற்படுத்த வேண்டும்.
வரலாற்று ரீதியாக பின்தள்ளப்பட்ட மலையக தமிழர் முன்னேற்றத்திற்கு காலவரையறை உடைய நேரோத்த நடவடிக்கைகள் (affirmative action) இன்றியமையாததாகும். அரசியல் யாப்பு சட்ட ரீதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும்.
2. பிரத்தியேகமான நிதிகளை ஒதுக்கி புதிதாக நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரதேச சபையின் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். அத்தோடு, கொட்டகல, அகரபத்தன, நோர்வூட், மஸ்கெலியா, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் பிரதேச சபைகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு புதிய பிரதேச சபைகளுக்கு ஒத்த பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்கி அவற்றை வளப்படுத்துவதற்கும் அமைச்சரவை முடிவு எடுக்க வேண்டும்.
3. அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து அதனுடைய பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.
4. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்தியத் தமிழர் என்பதற்கு பதிலாக மலையகத் தமிழர் என்ற பதம் இடம்பெற வேண்டும். இந்த பதம் சிங்களத்திலே “கந்துக்கரே தமிழ்” என்றும் ஆங்கிலத்தில் “Hill Country Tamil” என்றும் இடம்பெற வேண்டும்.
காணி மற்றும் வீட்டு உரிமை
5. தோட்டங்களையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அல்லாத குடும்பங்களுக்கும் வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். இது அரச காணிக் கொள்கை அடிப்படையில் அமைச்சின் மூலம் வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
6. மலையகத் தோட்டங்களில் 1994-2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 37,000 வீடுகளில் வசிப்பவர்களுக்கு உடனடியாக காணி உறுதிபத்திரங்களை வழங்க வேண்டும்.
7. NBRO அடையாளம் கண்டுள்ளபடி நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களுக்கு நில விநியோகம் மற்றும் மீள்குடியேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். எந்த மீள் குடியேற்ற திட்டமும் அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பதுளை மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு
8. ஆக்கபூர்வமான விதத்தில் தேயிலைத் தொழிற் துறை வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனுபவம் வாய்ந்த தோட்டத் தொழிலார்களிடமிருந்து தேயிலை தோட்டங்களுக்கான சிறு உரிமையாளர்களை உருவாக்குவதன் மூலம் தேயிலைத் தொழிற்துறையை மறுசீரமைக்கலாம். அடிப்படை அமைப்புகளான கூட்டுறவு அமைப்புகளை சிறந்த உற்பத்தி நிலையங்களாக மாற்ற முடியும். தற்பொழுது கைவிடப்பட்டுள்ள தோட்ட நிலங்களை மீண்டும் கையேற்று தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
9. தொழிலாளர்களினுடைய போதுமான ஆலோசனைகளோ அல்லது அரசாங்கத்தில் உரிய ஒப்புதலோ இன்றி பல்வேறு பிராந்திய தோட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வெளிவாரி பயிர்ச்செய்கை சோதனைகளை தடை செய்ய வேண்டும்.
10. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தோட்ட இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக தோட்டத் துறையிலுள்ள தொழிற்சாலைகளினுடைய தரத்தைக் கூட்டி அதன் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.
11. மலையகத்திலிருந்து தலைநகரை நோக்கி ஒரு பாரிய இளைஞர் யுவதிகள் நகர்வு ஏற்பட்டு வருவதை அனுசரித்து கொழும்பில் ஒரு மலையக இளைஞர் மையத்தை நிறுவ வேண்டும். அத்தோடு, தமிழ் மொழி மூலமான தொழிற்பயிற்சி, சட்ட உதவி மற்றும் கலாசார நிலையம் அமைக்கப்படுவதும் அவசியமாகும். இது ஆக்கத்திறன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். கொழும்புக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள், வீடுகளில் தொழில் புரிபவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் கடை உதவியாளர்கள் உள்ளிட்ட குறைந்த ஊதியம் கிடைக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் போன்றோரின் தற்போதய திறன் மேம்பாடு, ஆளுமை விருத்தி என்பவற்றுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும்.
12. பொலிஸ் மற்றும் நீதித்துறைச் சேவைகள் உள்ளிட்ட பொதுச்சேவையில் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு தகுதிவாய்ந்த மலையகத் தோட்ட இளைஞர்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும், இச்சேவையில் அவர்களை இணைத்து கொள்வதற்கு ஒரு விசேடமான இலங்கை நிர்வாக சேவை தேர்வு (SLAS exam) நடத்தப்பட வேண்டும்,
மொழிசார்ந்த உரிமைகள்
13. தமிழ் பேசும் ஊழியர்களை எல்லா அமைச்சுக்களிலும் நியமித்து, அவர்களின் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தோட்டத் தமிழ் மக்களுக்கு அனைத்து அமைச்சுக்களினதும் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
14. தோட்டத் துறைசார்ந்த மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்ட இரு மொழி பிரிவுகளில் தமிழர்களுக்கு அவர்களினுடைய மொழியிலேயே சேவைகளை பெற்று கொள்வதனை உறுதிசெய்ய வளங்களை ஒதுக்க வேண்டும்,
சுகாதாரம்
15. தோட்டப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை தேசிய சுகாதார அமைப்போடு இணைப்பதற்கான அரசாங்கத்தின் பல தசாப்தகால கொள்கை முடிவானது விரைவாக செயல்பட வேண்டும்.
16. தோட்ட தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வரக்கூடிய வைத்தியசாலைகளில் தமிழ் பேசக்கூடிய ஊழியர்களை கட்டாயமாக நியமிக்க வேண்டும்.
17. நேரொத்த நடவடிக்கையின் (Affirmative Action) ஒரு பகுதியாக மிகவும் மோசமான சுகாதார குறிகாட்டிகளை கொண்ட தோட்ட சமூகங்களை மையமாக கொண்டு விசேடமான ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டமொன்று விரைவாக செயல்படுத்த வேண்டும்.
கல்வி
18. அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை கவனத்திற்கு கொண்டு இரண்டாம் நிலை மட்டத்தில் தோட்ட கல்வித்துறைக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு, துணை கற்பித்தல் ஆகியவற்றில் உட்கட்டமைப்பு ஆதரவுடன் கல்வியில் ஒரு உறுதியான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
19. மலையகத் தமிழ்ச் சமூகம் மற்றும் தோட்டத் தொழிற்துறையின் நடைமுறைகள், சமூகப் பொருளாதார, அரசியல், கலாசார பிரச்சினைகள் குறித்த ஆராச்சிகளை மேற்கொள்வதற்கும் அவற்றை கற்பிப்பதற்கும் பேராதெனிய, சபரகமுவ, ஊவா வெல்லச போன்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடைய வகையில் ஒரு துறை, அலகு அல்லது ஒரு நிலையம் நிறுவப்பட வேண்டும்.
20. நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் கேகாலை போன்ற இடங்களில் அனைத்து மொழி ஊடகங்கள், விளையாட்டு வசதிகள், விடுதி வசதிகள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் மத்திய கல்லூரி ஒன்று நிறுவப்படுதல் அவசியமாகும்.
21. தோட்ட பகுதிகளில் தமிழ் மொழி மூலமான அறிவுறுத்தல்களை வழங்கும் தொழிற்பயிற்சி மையங்கள், விதாதா மையங்கள் மற்றும் பயிற்சி கல்லூரிகள் என்பவற்றின் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும்.
நலன்புரி மற்றும் பிற சேவைகள்
22. தேசிய அஞ்சல் சேவைகளை தோட்டங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், இதனால், தோட்ட சமூகங்களும் அரசாங்கத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
23. வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண சபைகள் அல்லது பிரதேச சபைகள் என்பவற்றின் கீழ் தோட்டப்பகுதி பாதைகளை கொண்டுவருவதன் மூலம் அவற்றை தேசிய வலையமைப்பிற்குள் இணைக்க முடியும். இதனால் பாதைகளை சிறந்த முறையில் பராமரிக்க முடியும்.
24. பிரதேச செயலகங்களில் கலாசார மையங்களை நிறுவுதல் வேண்டும். குறிப்பிடத்தக்க மலையக தமிழ் சமூகம் வாழும் இடத்தில தமிழ் கலாச்சார அதிகாரிகளை நியமித்தல் அவசியமாகும்.
25. மலையகத் தோட்டங்களில் பல இடங்கள் பேரழிவுக்குள்ளாகக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தகைய பிரதேசங்களில் ஆபத்தை குறைப்பதற்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சூழல் பாதுகாப்பு
26. மலையக நீரேந்து பிரதேசங்களை பாதுகாப்பதுடன் சமூகத்திற்கு சுத்தமான குடி நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.