பட மூலம், Vikatan

ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பலரும் அறம் என்ற திரைப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்தான். பின்னர் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணற்று மரணங்கள் புதியவை அல்ல. தமிழகத்தில் மாத்திரம் பத்துக் குழந்தைகள் வரை பலியாகியிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதுவொரு சமூகப் பிரச்சனை என்பதை அறம் திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பிரச்சனையின் பின்புலத்திலுள்ள அரசியல், சமூக, பொருளாதார காரணிகளை அறம் ஆராய்கிறது.

சிக்கலான வாழ்க்கை முறையும் கைத்தொழில்மயமாக்கமும் விளைநிலத்தை கந்தக பூமியாக்கியதில் தண்ணீருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, அதற்குத் தற்காலிகத் தீர்வாக முறையற்ற விதத்தில் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகள்.

அதற்குள் சிக்கிய பிள்ளையொன்றை மீட்பதில் கட்சி அரசியலும், ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் நிலவும் ஊழல் மோசடிகளும், ஊடக சுதந்திரத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களும் எந்தளவு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன என்பதை பேசிய படைப்பாக அறத்தைக் குறிப்பிடலாம்.

நிஜவுலகில் நிகழ்ந்த சுர்ஜித் சம்பவத்திற்கும், கோபி நயினார் என்ற படைப்பாளி திரையுலகில் காட்டிய கற்பனா சம்பவத்திற்கும் இடையில் பிரதானமானதொரு வித்தியாசத்தைக் கூறலாம். உண்மைச் சம்பவத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய பிள்ளை இறந்து விடுவான். கற்பனா சம்பவத்தில் பிள்ளைக் காப்பாற்றப்பட்டு விடும்.

மற்றபடி சுர்ஜித்தின் மரணத்தைத் தொடர்ந்து பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் கேட்கப்பட்ட சகல கேள்விகளையும் முன்கூட்டியே அறம் திரைப்படம் தர்க்கரீதியாக முன்வைத்தது.

அந்தத் திரைப்படமானது, சுமார் 80 அடி ஆழத்தில் ஊசலாடும் உயிரைக் காப்பாற்ற முடியாமல், நிலவிற்கு ரொக்கட் அனுப்பும் தொழில்நுட்பத்தால் ஏது பயன்? மனித நேயத்தை மறந்த விஞ்ஞான முன்னேற்றத்தின் பயன் என்ன என்ற கேள்வியை எழுப்பும்.

ஜனநாயகத்தின் ஆதாரம் மக்கள் சக்தி என்பதை மறந்த அதிகார வர்க்கத்தால், ஒரு பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் நிற்கும் ஒரு இராஜ்ஜியத்தின் கையாலாகத தனத்தை அறம் துகிலுரித்துக் காட்டும். எல்லா ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்ட படைப்பென்பது அறத்தின் சிறப்பு.

அறம் திரைப்படத்தைப் பார்ப்பவர், ஒரு கற்றறிந்த கல்விமானென வைத்துக் கொள்வோம். ஒரு தோல்வி கண்ட ஜனநாயக கட்டமைப்பில் நீதித்துறை, மத நிறுவனங்கள், சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புக்கள், ஊடகம் என்ற நான்கு தூண்கள் இற்றுப்போகும் விதம் பற்றிய கருத்தாடலை அவரோடு நிகழ்த்தும்.

நன்றாகப் படித்தவர் படத்தைப் பார்க்கிறார் என்போம். ஒரு தீவிரமான சமூக நெருக்கடியை தர்க்க ரீதியாக வலுவான காட்சி மொழியின் ஊடாக அவருக்குள் ஊடுகடத்தும்.

நீங்கள் சராசரி ரசிகரா? கவலையில்லை. உங்களை நகம் கடிக்க வைக்கும் காட்சிகள் மூலம் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய சுயபிரக்ஞையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் படைத்ததாக அறம் என்ற திரைப்படம் அமைந்திருந்தது.

சுஜிர்த்தின் மரணம் நிகழ்ந்த தமிழக மண்ணும், அந்த மரணம் பற்றி அதிகமாகக் கவலைப்பட்ட தமிழ்பேசும் சமூகமும் சினிமா என்ற வலுவான ஊடகத்தில் இருந்து பிரிக்க முடியாதவை. தமிழக மண்ணை எடுத்துக் கொண்டால், திராவிட அரசியலின் வலுவான பிரசார ஊடகமாகத் திகழ்ந்து சமூகத்தில் புதிய போக்குகளை ஏற்படுத்தி மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப சமூகத்தை வடிவமைக்கக் கூடிய ஆற்றல் படைத்தவையாக திரைப்படங்கள் திகழ்ந்தன.

புவியியல், கலாசார, சமூக எல்லைகளைத் தாண்டி உலகெங்கிலும் பரந்து வாழும் சுமார் ஏழு கோடி தமிழர்களை ஒன்றிணைக்கக் கூடிய கருவியாக தமிழ்த் திரைப்படம் காணப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு பற்றிய பிரச்சனைகள் மீது வெளிச்சம் பாய்ச்சி அறம் திரைப்படம் ஆரம்பித்த கருத்தாடலை, தமிழக மண்ணோ உலகெங்கிலும் வாழும் தமிழர்களோ சரியாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், ஆட்சி அதிகார பீடத்தின் மீது சரியான அழுத்தத்தைத் தொடுத்து சுர்ஜித்தின் மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ரசிகர்கள் ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு அதிகாரபீடத்திற்கு அழுத்தம் தொடுப்பதை விடுத்து நயன்தாராவிற்கு கோயில் கட்டுவதில் அதிக அக்கறை செலுத்தினார்கள்.

இந்தத் திரைப்படம் பேசிய அரசியலை சமூகத்தின் அடிமட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்த தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள், நயன்தாராவை அடுத்த முதலமைச்சராகப் பார்க்கக்கூடிய ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டின.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறம் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் சமூகத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மாநில சட்டசபைக்கான இடைத் தேர்தலிலும், லோக் சபா தேர்தலில் ஆழ்துளைக் கிணறுகள் என்ற விஷயத்திற்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.

அத்தகைய கிணறுகளை மூடுவோருக்கு மாத்திரமே எங்கள் வாக்கு என்று அழுத்தம் தொடுத்திருந்தால், திருச்சி நடுக்காட்டுப் பட்டியில் சுர்ஜித்தின் வீட்டுக்குப் பின்னால் இருந்த ஆழ்துளைக் கிணறும் மூடப்பட்டிருக்கலாம்.

இந்தத் திரைப்படம் அம்பலப்படுத்திய அரசியல் தகிடு தத்தங்களை ஊடகங்கள் சரியாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்தால், மாநிலத்தின் பொறிமுறைகளை நம்பாமல் தாமதமின்றி மத்திய அரசாங்கத்தின் பொறிமுறைகளைப் பெற்றோ, வேறெந்த நாடுகளில் இருந்து நிபுணர்களை வரவழைத்தோ சுர்ஜித்தைக் காப்பாற்றுமாறு கோரி மக்கள் அரசுக்கு அழுத்தம் தொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

அறம் திரைப்படத்தில் குழந்தை காப்பாற்றப்படும் விதம் முக்கியமானது. சட்டதிட்டங்களை விடவும் மனிதநேயம் முக்கியமானது என்பதை உணர்ந்து, தமது அதிகார எல்லைகளைத் தாண்டி சிறுவனொருவனை ஆழ்துளைக்குள் செலுத்தி பிள்ளையை மீட்டெடுத்த அதிகாரியின் துணிச்சலை அறம் சித்தரிக்கும். ஆனால், நடுக்காட்டுப் பட்டியில் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் சுர்ஜித் 30 அடி ஆழத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் துளைக்குள் சென்று சுர்ஜித்தை மேலே கொண்டு வர முடியும் என்று கூறியபோது அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

சகல சந்தர்ப்பங்களிலும் தமக்கு வலுவானதொரு திரைப்படத்தின் ஊடாக ஊடுகடத்தப்பட்ட செய்தியை சரியாக உள்வாங்கிக் கொண்டு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இன்று பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் தமிழ் பேசும் சமூகம் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்குமானால் தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது?

திரைப்படம் என்பது ஒலியும் ஒளியும் சேர்ந்த ஊடகம். சிறப்பான சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருவியாக அதனைப் பயன்படுத்தலாம். திரைமொழியில் கருத்தொன்றை சிறப்பாக சொல்லக்கூடிய வகையில் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட திரைப்படம், மனங்களை மாற்றும் ஊக்கியாகத் திகழ முடியும். அது பார்ப்பவர்களின் நடத்தைகளை மாற்றலாம். சமூக இயக்கங்களை அறிவூட்டவோ, வலுவூட்டவோ கூடிய ஆற்றல் திரைப்பட ஊடகத்திற்கு இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், திராவிட அரசியலின் பிரசார ஊடகமாகத் தொடங்கிய சினிமா கடந்த நான்கு தசாப்தகாலத்தில் மாநிலத்தை ஆட்சி செய்த கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளை உருவாக்கித் தந்த பெருமையைக் கொண்டது.

அப்துல் கலாம், டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி போன்ற ஆளுமைகளையும் கூட திரைப்படங்கள் ஊடாகவே மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு அந்த ஊடகம் வலிமையானதாகத் திகழ்ந்தது.

இந்தப் போக்கு ஆண்டாண்டு காலமாக நீடிக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு இன்று சமூக ஊடகங்களில் நிகழும் கருத்தாடல்கள் சாட்சி. இன்று டுவிட்டர் என்ற ஊடகத்தை எடுத்துக் கொண்டால் சினிமா பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன. ட்ரெண்டிங் (Trending)ஆகின்றன.

தமது வாழ்வில் தீவிர தாக்கம் செலுத்தக்கூடிய விடயத்தை விடவும் ஒரு திரைப்பட வெளியீடு பற்றிய செய்தி அதிகமாகப் பகிரப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. இந்திய பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதொரு சந்தர்ப்பதில் தமிழகத்தின் இளந்தலைமுறை வடிவேலு என்ற நடிகனை மையமாகக் கொண்ட நேசமணி நகைச்சுவையை பிரபலமாக்கியதை நினைவுகூர முடியும். இது நரேந்திர மோதியின் தேசிய ரீதியிலான வெற்றியை தமிழ் பேசும் சமூகம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த சமூக இயக்கமாக பரிணமித்ததையும் நினைவுகூர முடியும்.

இன்று ஆழ்துளைக் கிணறுகள் பற்றிப் பேசிய அறம் என்ற திரைப்படத்தைப் போன்று பல அரசியல் சமூகப் பிரச்சனைகளை ஆராயும் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளிவருகின்றன.

நுகர்வுக் கலாசாரத்தின் சிக்கல்களை விபரித்த காக்கா முட்டை, அரச இயந்திரத்தில் இலஞ்ச ஊழலைத் தாண்டி பெறக்கூடிய சேவைகளைப் பற்றிச் சொன்ன ஆண்டவன் கட்டளை, சிறைக்கூடங்களில் நிகழும் சித்திரவதைகள் என்ற தொனிப்பொருளின் ஊடாக ஒரு இராஜ்ஜியத்திற்குள் நிலவும் நிழல் (State within a state) இராஜ்ஜியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய விசாரணை போன்ற திரைப்படங்களும் தமிழ் சமூகத்தில் சரியாகக் கவனிக்கப்படாமல் கடந்து சென்றன.

நிஜ வாழ்க்கையில் தம்மால் வாழ முடியாத வாழ்க்கையை கற்பனையாக திரையுலகில் விரியச் செய்யும் வித்தையில் மயங்கியும், நாயக பிம்பங்களின் மாயைகளுக்குள் சிக்கி கட்-அவுட்டுக்களுக்கு பாலூற்றி திருப்தி அடைந்தும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்ற கலாசாரத்திற்குள் இருந்து தமிழ் சமூகம் இன்னமும் மீளாமல் இருப்பது இதற்குரிய காரணங்களில் ஒன்றாகக் கூற முடியும்.

இன்று இந்தியாவை எடுத்துக் கொண்டாலும், உலகின் ஏனைய நாடுகளை எடுத்துக் கொண்டாலும் தீவிர சமூக மாற்றத்திற்கு வித்திட்ட எத்தனையோ திரைப்படங்கள் இருக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரையில் ஆரம்ப காலத்தில் புராண இதிகாசங்களைக் காட்சிப் படுத்திய திரைப்படங்கள் பிற்காலத்தில் சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கலைக்கண்ணாடிகளாகப் பரிணமித்தன.

1939ஆம் ஆண்டிலே தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், பிரமாண இளைஞனுக்கும் இடையிலான காதலை சித்தரித்து சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய அக்சுத் கன்யா என்ற திரைப்படத்தைக் கூற முடியும். இது சமத்துவ சமூகத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்ட இயக்கத்திற்கு பெரும் வலுசேர காரணமாக இருந்தது.

சுமங்கலி என்ற தெலுங்குத் திரைப்படம் மறுமணத்தை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்தது. சுதந்திரத்திற்கு முன்னர் வெளியான தியாகபூமி என்ற திரைப்படம் தேசிய உணர்வைத் தூண்டுவதாகக் கூறி பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் தடை செய்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

உலக அளவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு திரைப்படங்களைப் பட்டியலிட முடியும். அவற்றில் நுகர்வுக் கலாசாரம் கோலோச்சும் உலகில் ஒரு பெரு வணிக நிறுவனத்திற்கு சவால் விடுத்த சுப்பர் சைஸ் மீ என்ற படம் முக்கியமானது. மெக்டொனல்ட் நிறுவனம் விற்பனை செய்த அளவில் பெரியதொரு உணவு வகை தமது உடல் எடையை அதிகரித்த விதத்தை இயக்குனர் படமாக்கியிருந்தார். இந்த விவரணத் திரைப்படம் வெளியாகி இரு வாரங்களுக்குள் குறித்த உணவின் விற்பனையை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மெக்டொனல்ட் நிறுவனம் தள்ளப்பட்டது.

இன்று அறம் உள்ளிட்ட திரைப்படங்களால் தமிழ் சமூகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போனது ஏன் என்பதை ஆராய்வது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

இது வெறுமனே திரைப்பட ரசனை சார்ந்த விடயம்மாத்திரம் அல்ல. திரையுலகம் அதீத செல்வாக்குசெலுத்தும் ஒரு சமுதாயத்தின் செல்நெறியைத் தீர்மானிக்கக்கூடிய விடயங்களுடனும் தொடர்புடையது.

இந்த ஆய்வில் பல விடயங்கள் வெளிப்படக்கூடும். அதில் கதாநாயக பிம்பங்களை ஆராதிக்கும் மனப்பான்மை பிரதானமாக இருக்கக்கூடும். தமிழ் சமூகத்தில் எம்ஜிஆர்–சிவாஜி, கமல்–ரஜனி, விஜய்–அஜித் ஆகிய நடிகர்களுக்கு வழங்கப்படும் அரசியல் முக்கியத்துவம் தமிழகத்தில் பிறந்து கூகிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி வரை முன்னேறியிருக்கும் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படுவதில்லை.

கர்நாடக சங்கீத்தின் படைப்புக்கள் மூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு, பெறுமதிவாய்ந்த மக்சேசே விருது வென்ற ரீ.எம்.கிருஷ்ணாவை பெரும்பாலான தமிழர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். ஒருவேளை, விவேக் என்ற நடிகன் இல்லாதிருந்ததால்அப்துல் கலாம் என்ற பன்முக ஆளுமையை வெறும் விஞ்ஞானியாகவோ, அரசியல்வாதியாகவோ மாத்திரமே தமிழ் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கம் அறிந்திருக்கும்.

ஆழ்துளைக் கிணறுகள் பற்றிப் பேசிய அறத்தின் அரசியலை அல்லது அரசியல் அறத்தைத் தாண்டி, நயன்தாராவை எதிர்கால முதலமைச்சராக வர்ணித்த சிந்தனைப் போக்கு தமிழ் சமூகத்தின் துரதிருஷ்டம். இதற்குக் காரணம் இந்தக் கதாநாயக பிம்ப ஆராதனைதான்.

காதல் என்ற திரைப்படத்தில் வரும் காட்சியொன்றை நினைவுகூரலாம். நடிகனாக ஆசையில் இருக்கும் ஒருவனிடம், நீ ஹீரோவாக விரும்புகிறாயா? வில்லனாக நடிக்க விரும்புகிறாயா? என்றொருவன் கேட்பான். முதலில் ஹீரோ, அடுத்து மாஸ் ஹீரோ, கடைசியாக முதலமைச்சர் என்று அவன் பதில் சொல்வான்.

இது தமிழ்பேசும் சமூகத்தின் பொதுப்புத்தி. இதில் இருந்து இளந்தலைமுறையை விலக்க நினைத்தாலும் அரசியல் இலாபம் தேட முனையும் சினிமாவின் ஆதர்சநாயகர்கள் விடுவதில்லை. சமூக நலன் என்றபோர்வையில் இளம் தலைமுறையைக் கண்மூடித்தனமாகத் தம்மை பின்தொடரச் செய்வார்கள். தமது அரசியல் இலக்கை நிறைவேற்றிக் கொள்ள இளைஞர் சக்தியை மிகவும் மோசமான முறையில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தினத்தன்று ஒருதிரைப்படம் வெளியாகி ரசிகர்கள் தியேட்டர்களில் வெறித்தனம் காட்டியதால் ஏற்பட்ட பாதிப்புக்களைசொல்ல வேண்டும். ஒரு திரையரங்கில் அரசியல் இலாபம் தேடும் ஆதர்ச நாயகர்களின் வணிகநோக்கங்கள் பற்றிய பிரக்ஞையற்ற ரசிகர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைவனாக ஆளப்போகும் தமிழனாக அவனை வரித்துக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடும் அளவிற்குத்தான் அவர்களது புரிந்துணர்வு இருக்கிறது.

தமது ஆதர்ச திரை நாயகனின் அரசியல் தமது மண்ணின் அரசியல், சமூக, கலாசாரத்திற்குப் பொருந்தாது என்பதை புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு தமிழ் பேசும் சமூகம் ரசனையால் தாழ்த்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அது உயரும்வரை ஆழ்துளைக் கிணறுகளில் சுர்ஜித்கள் மரணிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எத்தகைய சிறப்பான திரைப்படங்கள் மூலம் பேசினாலும் நமது சமூகம் விழித்துக் கொள்ள மாட்டாது என்பதே உண்மை.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை