அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை.

நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும்.

கப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் ரஜீவ் நாகநாதன், டிலான் ஜமால்டீன், பிரதீப் விஸ்வநாதன் உட்பட நான்கு மாணவர்களும் அடங்குகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.

அந்த நேரம் அவர்கள் மிகவும் இளமையாக இருந்துள்ளார்கள். ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் உயர்தரப் பரீ​ட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். சிறப்புத் தேர்ச்சி பெற்ற ரஜீவ் நாகநாதன் மருத்துவத் துறை படிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள University College of London பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்குத் தயாராக இருந்துள்ளார். நடுவீதியில் வைத்து அவரை நண்பர்கள் நால்வருடன் கடத்தியது இங்கிலாந்துக்கு மறுநாள் புறப்படவிருந்த நிலையிலாகும். கொஞ்சம் காலம் வெளிநாட்டில் இருக்கவேண்டியிருப்பதால் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து ரஜீவ் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். முடி வெட்டுவதற்காக பம்பலப்பிட்டியவில் உள்ள Sleek Salon க்கு ரஜீவ் நண்பர்களுடன் இரவு சென்றிருக்கிறார். அவரும் அவரோடு சேர்ந்து சென்ற நண்பர்களும் இதுவரை வீடுவந்து சேரவில்லை.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் மூலம் வெளிவந்த தகவல்கள் சுயநினைவுள்ள பிரஜை ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கப்பம் பெறும் நோக்கில் அப்போது (2008 செப்டெம்பர்) கடற்படைப் பிரிவொன்றினால் கடத்தப்பட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. நாட்டுக்கோ அல்லது வீட்டுக்கோ எந்த கெடுதலும் செய்திராத இந்த அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச்சென்று ‘கன்சைட்’ எனும் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று விசாரணைகளிலிருந்து வெளிவந்துள்ளது. கப்பம் பெறும் நோக்கில் செயற்பட்டுவந்த இந்தக் குழுவுக்கு நேரடியாக உதவிசெய்தவர்களுள் கடற்படையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி முப்படையையும் சேர்ந்த உயர் அதிகாரியொருவரும் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்படைக் குழுவினால் இன்னும் இளைஞர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி பின்னர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த வாரம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளுக்கு அண்மையில் பதிவு உயர்வும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் நாட்டில் – மக்கள் மத்தியில் இராணுவ வீரர் பற்றிய ஓர் உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரமான கடத்தல், காணாமலாக்கல், சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது கோட்டபாய ராஜபக்‌ஷவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். கடற்படை உட்பட முப்படையினருக்கு உத்தரவிடும் தளபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தார்.

இன்று இராணுவ வீரர்கள் மீது கைவைக்க விடமாட்டோம் என்று அச்சுறுத்தல் விடுக்கும் நாட்டின் ஜனாதிபதியாவதற்காக வாக்களிக்கக் கோரும் கோட்டபாய ராஜபக்‌ஷவோ அல்லது அப்போது ஜனாதிபதியாகவிருந்த, மீண்டும் பிரதமராவதற்காக காத்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவோ தனது உத்தரவின் கீழ் இருந்த பாதுகாப்புப் படைக் குழுவினர் மேற்கொண்டார்கள் என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் இதுவரை உணர்வுபூர்வமாக பேசியிருக்கவில்லை. ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்வதாக இவர்கள் கூறுவது பாரிய குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளை இல்லையா?

ஆழ்மனதில் பிள்ளைகளின் நினைவுகளை நெருப்பாய் சுமந்துத் திரியும் அந்தத் அம்மாக்கள், அப்பாக்கள் பற்றி இங்கு எத்தனை பேர் பேசுகிறார்கள்? நான், நீங்கள் (அம்மாக்கள், அப்பாக்கள்) போன்ற பிள்ளை பாசம் கொண்டவர்களால் மட்டுமே இந்த நரக வேதனையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்யவி​ல்லை; அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவி​ல்லை. தங்களுடைய அரவணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் கொடூரமானவர்களின் கைகளில் சிக்கி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா அல்லது எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரக வேதனையாக கடந்துவரும் பெற்றோர்களுக்காக சமூகம் என்ற அடிப்படையில் எங்களால் இவ்வாறு உணர்வற்றவர்களாக இருக்க முடியுமா? இதுவொரு இரக்கமற்ற சமூகம் இல்லையா?

10 வருடங்களாக விசாரணை, வழக்கு நீழுகின்ற போதிலும் இறுதியாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் உரிமையைப் பெறுவதால் இந்த நாட்டை பாதுகாப்பான என்று கூறமுடியுமா?

இந்த மாபெரும் குற்றம் அரங்கேறும் வரை பார்த்திருந்தது அல்லது இந்தக் குற்றத்தை தங்களுக்குத் தெரிந்தவர்கள் புரிவதால் மறைமுகமாக உதவியவர்கள் நாட்டின் தலைவர் பதவியைக் கைப்பற்ற சண்டைப்பிடிப்பது பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா?

குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் வழங்கும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா?

குற்றவாளிகளுக்கு ‘பிரித்’ (பௌத்த பிக்குகளால் பக்தர்களின் கைகளில் கட்டப்படும் நூல்) நூல் கட்டும், பூஜைகளைச் செய்யும் மதத் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா?

தான் அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்யப்போவதாக கூறும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானதா?

இப்போது கண், காதை மூடிக்கொண்டு ராஜபக்‌ஷாக்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கூறுவோர் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டுகிறார்கள். இல்லையென்றால் அவர்களுடைய எதிர்த்தரப்பு முன்பு செய்த கொலை, குற்றங்கள் தொடர்பான லிங்குகளை எமக்கு அனுப்புகிறார்கள். புலிகள், என்.ஜீ.ஓகாரர்களே அல்லது தேசத்துரோகிகளே காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்கு அப்படித்தான் நடக்கவேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள். இவர்களுக்காகப் பேசுபவர்களையும் கொல்லவேண்டும் என்று கூறுவார்கள். இதுதான் அவர்களுடைய கலாசாரம். இதைத் தவிர வேறொன்றையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

அவர்களுடைய கண் குருடாகியுள்ளது என்பதை நாம் அறிவோம். நீதி இல்லாத, வன்முறை ஆட்சிசெய்யும், கால் தூசி அளவுக்காவது பெறுமதியில்லாத மனிதாபிமானம் உள்ள நாட்டில் தன்னுடைய பிள்ளைகள் வாழ்வது சாபம் என்று புரிந்துகொள்ள இன்னும் சில காலம் எடுக்கும். அன்று, வெகுதூரம் நாங்கள் கடந்து வந்துவிட்டோம் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

கொலை செய்வது, காணாமலாக்குவது, தாக்குதல் நடத்துவது தங்கள் தரப்பைச் சேராதவரை அதுகுறித்து அக்கறைகொள்ளாத, அந்தக் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பாத மனிதர்களைக் கொண்ட சமூகம் செல்வது இருளை நோக்கியே. தங்களுடைய சகோதர மக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று ஒருமித்து குரல்கொடுக்காத, அந்தக் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய நண்பர்களைப் பாதுகாக்கும் தலைவர்களை நிராகரிக்காத சமூகம் எந்தளவு மோசமானது?

புத்தியுள்ள, அடுத்தவரின் மனதில் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் மனவேதனையை புரிந்துகொள்ளக்கூடிய மக்களுக்கு இங்கு போதுமான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன. இது அந்தத் தலைவர்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுள் ஒன்றாகும்.

காணாமலாக்குவது என்பது மனிதத்துவத்துக்கு எதிரான கடும் குற்றமாகும், சாபமாகும். பல தசாப்த காலமாக அரசாங்கம், விடுதலைப் புலிகள், கருணா பிரிவு மற்றும் இன்னும் பல குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்ட நாடு இது. எம்முடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களை ஒருபக்கம் வைத்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் அதன் கொடூரம் உங்களுக்குப் புரியும்.

அம்மாக்கள், அப்பாக்கள் என்ற அடிப்படையில் உங்கள் பிள்ளைகளுக்காக எவ்வாறான நாடொன்றை எதிர்பார்க்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்குரிய உரிமை உட்பட அவர்களுடைய ஏனைய உரிமைகளுக்காக பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைவர்களும், அனைவரையும் சமமாக நடத்தக்கூடிய சட்டமும் இல்லாத நாட்டில் எரும்புக்குக் கூட பாதுகாப்பில்லை. எமது பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யக்கூடியதும் போராட வேண்டியதும் இதுபோன்றதொரு நாட்டைக் கட்டுயெழுப்பவே.

அர்ப்பணிப்புடனும் நீதியுடனும் செயலாற்றிவரும் பாதுகாப்புத் தரப்பினர் மீது உள்ள கெளரவத்தை மறந்தல்ல இந்த விடயத்தைப் பற்றி இங்கு பேசியிருக்கிறோம். சீருடை அணிந்திருந்த காரணத்தால் அல்லது உயர் பதவிகளில் உள்ளமையால் குற்றவாளிகளுக்கு தண்டனை அற்ற சுதந்திர வாழ்க்கை வழங்கக்கூடாது என்பதாலும், இந்தக் குற்றங்கள் தொடர்பாக பொறுப்பற்ற தலைவர்கள் நாட்டை அதள பாதாளத்துள் கொண்டுசெல்வார்கள் என்பதாலுமே இது பற்றி விவாதித்திருக்கிறோம்.

நதி கம்மெல்லவீர