பட மூலம், Tamil Guardian
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாலோ அல்லது இந்த நாட்டில் உயர் கல்விக்குப் பொறுப்பான எந்த அமைப்பினாலோ விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. அவரை நீக்குவதாக அறிவிக்கும் கடிதமானது அவர் ஏன் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை விளக்கவில்லை. கல்வித் துறையில் ஒரு தலைவராக உயர் பதவியில் இருக்கும் ஒரு நபருக்கு வழங்கவேண்டிய விளக்கமளித்தல் போன்ற மரியாதை கூட இல்லாமல் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்யும் ஜனாதிபதியின் முடிவு, கல்வியாளர்களை இழிவுபடுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கும் மற்றும் மதிக்கும் இடங்களாகப் பல்கலைக்கழகங்களைப் பார்த்த இளநிலைக் கல்வியாளர்கள் மற்றும் அரச பல்கலைக்கழக அமைப்பின் பிற ஊழியர்களை இது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.
அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கோ அல்லது அவரது கண்காணிப்பில் நடந்த நிர்வாக முறைகேடுகளுக்காகவோ தான் பேராசிரியர் விக்கினேஸ்வரன் நீக்கப்பட்டார் எனத் தகுதிவாய்ந்த அதிகாரியின் நியமனம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சில கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கூறினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதற்குப் பதிலாகப் புதிதாக அமைக்கப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றமை மற்றும் 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் துயரமான முடிவினை நினைவுகூரும் நினைவு அமைவிடத்தைப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நிறுவுவதைத் தடுக்கத் தவறியமை போன்றனவே பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்திற்கான காரணம் என ஏனையோர் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்புச் சபையின் முந்தைய கூட்டத்தில் துணைவேந்தரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூட சிலர் கூறினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைப் பதவிநீக்கம் செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறையானது பல்கலைக்கழகச் சட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவானது, நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருடனான கூட்டத்தில் சுட்டிக்காட்டியது. அதற்குப் பதிலளிக்கையில், “முழுச் செயன்முறையும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது” என்று அமைச்சர் கூறினார். இலங்கையின் உயர்நீதிமன்றத்துக்குப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா அண்மையில் அளித்த எழுத்து மூலமான வாக்குமூலம், பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அதிகார துஷ்பிரயோகமோ அல்லது ஊழலோ காரணமில்லை என்பதனையும், அது ஒரு அரசியல் உள்நோக்கங் கொண்ட, இராணுவத்தின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மைவாதத்தின் எதேச்சாதிகாரத் தன்மை மிக்க முடிவு என்பதனையும் வெளிக்காட்டுகிறது. பொது மன்றங்களில் அல்லது இந்த நாட்டின் கல்வி சமூகத்தால் போதுமான அளவில் விவாதிக்கப்படாத இந்த முடிவானது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீது கடுமையான தாக்கங்களையும், கல்விச் சுதந்திரத்தின் கொள்கையை மையமாகக் கொண்டுள்ள இலங்கையில் உள்ள முழு அரச சார் பல்கலைக்கழக அமைப்பிற்கும் கடுமையான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வியினை இராணுவ மயமாக்கல்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவிற்கு உயர்கல்வி அமைச்சர் அளித்த பதிலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பித்த எழுத்துமூல வாக்குமூலமும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள கல்வி நிலையங்கள் வேரூன்றிய இராணுவமயமாக்கல் மற்றும் கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கின்றமைக்கு அதிர்ச்சியளிக்கும் சான்றுகளாகின்றன. இலங்கை இராணுவத்தின் இராணுவப் புலனாய்வு இயக்குநர் மற்றும் இலங்கையின் இராணுவத் தளபதி போன்ற இராணுவ இயந்திரத்தின் உயர் மட்டங்களிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் அதன் தலைவரும் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதுவும், அப்படியாக இராணுவத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளானவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றன என்பதுவும் இந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து தெட்டத் தெளிவாகின்றது. தான் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் தொடுத்த வழக்கில் பிரதிவாதியாக இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அப்படியான அறிக்கைகள் சிலவற்றை அவற்றில் முக்கியமான மற்றும் வகைப்படுத்தப்பட்ட (classified) தகவல்கள் இருப்பதாகக் கூறிப் பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்குக் காட்ட மறுத்துவிட்டார். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் துணைவேந்தரை அகற்றுவதில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த வகையான தொடர்பானது போராட்டங்கள், எதிர்ப்பு வெளிக்காட்டல் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான செயற்பாட்டுவெளியைப் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பதன் தேவையை இன மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி கல்விச் சமூகத்திற்கு உணர்த்துகிறது.
தமிழ்த் தேசியப் பிரகடனங்களைத் தாங்கும் பொங்கு தமிழ் நினைவுக் கல்லினை மீளமைக்கப்பட்ட பின்னர் திரைநீக்கம் செய்யப்பட்ட “தமிழமுதம்” என்ற நிகழ்வில் பங்கேற்றதற்காகவும், பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்காகவுமே பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பதனை அந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து ஒருவர் அறிந்துகொள்ளலாம். ஏனைய துணைவேந்தர்கள் பதவியிலிருந்த காலத்திலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பொங்குதமிழ் நினைவிடம் பல்கலைக்கழகத்தின் அதே இடத்தில் இருக்கின்றது. மீளமைக்கப்பட்ட அந்த நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே பேராசிரியர் விக்கினேஸ்வரன் பங்கு பற்றியிருக்கிறார். பழைய நினைவுத் தகட்டினை மீளமைக்கப்பட்ட நினைவுக்கல்லிற்கு அருகில் இப்போதும் காணலாம். பேராசிரியர் விக்கினேஸ்வரனைப் பதவிநீக்கம் செய்வதற்கான செயன்முறையானது இராணுவம் மற்றும் அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியால் தூண்டப்பட்ட ஒன்றாக இருப்பது அந்த எழுதப்பட்ட வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைப் பரப்புரை செய்வதற்கான வெளியை பேராசிரியர் விக்கினேஸ்வரன் வழங்கினார் எனப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரினால் வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குமூலத்தின் 10 ஆவது குறிப்புத் தெரிவிக்கிறது. இதே குற்றச்சாட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த போது கூட புலிகள் ஏற்பாடு செய்த நடவடிக்கைகளில் அவர் ஒரு போதும் தீவிரமாகப் பங்கேற்கவில்லை என்பதைப் பேராசிரியர் விக்கினேஸ்வரனை அறிந்தவர்கள் அறிவார்கள். வடக்கில் உள்ள பல கல்வியாளர்களைப் போலவே, அரசியல் உரிமைகளுக்கான தமிழ் சமூகத்தின் போராட்டத்தின் அனுதாபியாக அவர் இருந்து வந்துள்ளார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் தற்போது சேவையாற்றும் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் அதிகாரம் மிக்கவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி ஆகியோரும் கூட தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை உறுதிசெய்கின்ற 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறிப்பாணை ஒன்றில் கையெழுத்திட்டவர்களாவர்.
இவை தமிழர்களின் தேசம், அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தமிழர் தாயகம் என வரையறுத்தல் என்பனவாம். பேராசிரியர் விக்கினேஸ்வரனால் 2018ஆம் ஆண்டு திரைநீக்கம் செய்யப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல்லில் இருக்கும் விடயங்களை ஏலவே பேராசிரியர் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் கூட ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளனர். பேராசிரியர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக இருக்கையிலே தெற்கில் உள்ள கல்வியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். பேராசிரியர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக இருந்த காலத்தில்தான், நாட்டின் உயர்கல்வித்துறையை வலுப்படுத்தவும், அபிவிருத்திசெய்யவும் வலுவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அடுத்த ஆண்டு பேராசிரியர் விக்கினேஸ்வரன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த நிகழ்வில் கண்டிய நடனத்தினை ஆற்றுகை செய்வது தொடர்பில் தமிழ் மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் சிங்கள மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையில் மோதல் ஒன்று 2016ஆம் ஆண்டில், பேராசிரியர் விக்கினேஸ்வரன் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் நடைபெற்றது. பீடாதிபதியாகக் கடமைகளை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் விக்கினேஸ்வரன், மாணவர்களிடையே நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்க தேசிய சமாதான சபையின் ஆதரவுடன் நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக் குறித்த பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தார். இரு குழுக்களுக்கிடையேயான பதற்றங்களைத் தணிப்பதற்கும், இனவிரோதம் இல்லாமல் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடரக்கூடிய சூழலை ஊக்குவிப்பதற்கும் அவரது செயல்திறன் மிக்க தலைமை வழங்கிய பங்கு இங்கு பதிவு செய்யப்படவேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பின்னர், விக்கினேஸ்வரன் பல்கலைக்கழகத்தின் கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதும் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுமான கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். எந்தவொரு மோதலும் இல்லாமல் பல்கலைக்கழகத்தைச் சீராக நிர்வகிக்கும் நோக்கில் அவர் இதைச் செய்தார். 2009ஆம் ஆண்டில் போரின் கடைசிக் கட்டங்களில் இறந்தவர்களுக்கான ஆண்டு நினைவுநிகழ்வில் கலந்துகொண்ட முதல் துணைவேந்தராக அவர் இருக்கலாம். பேராசிரியர் விக்கினேஸ்வரன் இந்த நினைவு நிகழ்வுக்கு வருகை தந்தமையை மாணவர்கள் பலரும், பல்கலைக்கழக ஊழியர்களும் மற்றும் பரந்துபட்ட சமூகமும் பாராட்டினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் “தமிழமுதம்” நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டமையால் அந்த நிகழ்வில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் 2018ஆம் ஆண்டு கலந்துகொண்டார். எவ்வாறாயினும், அவர் துணைவேந்தராக இருந்தபோது இறந்த விடுதலைப் புலிப்போராளிகளை நினைவுகூரும் மாவீரர்நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். கருத்தியல் காரணங்களுக்காக, இந்த நிகழ்வுகள் சிலவற்றில் விக்கினேஸ்வரன் பங்கேற்பதை ஒருவர் கேள்விக்குள்ளாக்கினாலும், துணைவேந்தர் எந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் அல்லது துணைவேந்தருக்கு எவ்வகையான அரசியல் கருத்துகள் இருக்க முடியும் என்பதை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவோ அல்லது இராணுவமோ தீர்மானிக்கமுடியாது. இது ஒரு தனிப்பட்ட கல்வியாளராக மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக அவரது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அரசியல்
கடந்தகால வன்முறைகளின் அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் மற்றும் தேசிய இனப் பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், நினைவுகூருதல் என்பது மறுக்கமுடியாததும் முக்கியமானதும் மற்றும் ஆற்றுப்படுத்துவதுமான சமூக மற்றும் அரசியல் நடவடிக்கையாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், நினைவுகூரல் என்பது முரண்பாடுகள், தவிர்ப்புக்கள் மற்றும் விலக்கல்கள் போன்ற சவால்களுடனான ஒரு முரண்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. புலிகளின் மாவீரர்கள் தினம் ஆண்டு தோறும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டாலும், மற்ற தமிழ் ஆயுத இயக்கங்களின் போராளிகளுக்கான நினைவு நிகழ்வுகள் எதுவும் நடைபெறுவதில்லை. முள்ளிவாய்க்காலில் போரின் முடிவு ஆண்டு தோறும் நினைவுகூரப்படுகின்ற அதேவேளையில், புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையைக் குறிக்கும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் கல்விச் சமூகம் ஏற்பாடு செய்யவில்லை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புகழ்பெற்ற கல்வி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ராஜனி திராணகமவின் வாழ்க்கை மற்றும் செயற்பாடுகளை நினைவுகொள்ளும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய ராஜனி திராணகம நினைவு நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு 2014ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குள் இடம் மறுக்கப்பட்டது. அவரது உருவப்படம் இன்னும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெரும்பாலான இறந்த கல்வியாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொது அறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுகூரலைச் சுற்றியுள்ள இந்த விலக்குகள் மற்றும் ஒதுக்கல்களை ஒருவர் விசாரிக்க வேண்டும் என்றாலும், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களும் கல்வி சமூகமும் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வுகளைத் தடைசெய்வது சமூகத்தின் கூட்டு உளவியலைப் பாதிக்கும் என்பதோடு, இவ்வாறான விடயங்கள் தமக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நாடுவதை நோக்கி மாணவர்களைத் தள்ளிவிடும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மாணவர்கள் ஏற்பாடுசெய்த நினைவு நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
முரண்பாட்டு வலயங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியமான நிர்வாகப் பதவிகளை வகிப்பவர்கள், நினைவுகூரல் மற்றும் ஜனநாயக, அகிம்சை வழியிலான அரசியல் எதிர்ப்புடன் தொடர்புடைய நிகழ்வுகளை, அவற்றை ஒழுங்கமைக்கும் மாணவர்களை அந்நியப்படுத்தாமல் கவனமாக அணுகவேண்டும். தெற்கில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் மாணவர்கள் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செய்வது போல அங்கு அரசு கடுமையான முறையில் நடந்துகொள்வதில்லை. வடக்கு மாகாணசபை கூடக் கடந்த காலங்களில் போரின் இறுதிக் கட்டங்களில் இறந்தவர்களுக்காக நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. போராட்ட காலங்களில் இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆட்சியில் இராணுவத்தால் தாக்கப்பட்டனர். தற்போதைய சூழலில், மாணவர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தை இல்லாமல் செய்யாமைக்காகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவமானகரமான முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கல்விச் சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் இராணுவத் தலையீடு அற்ற வெளியைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குதல் என்ற இரு விடயங்களிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இயலாமையானது, ஆணைக்குழு இலங்கை அரசின் சிங்களப் பெரும்பான்மை எந்திரங்களின் கையாக இயங்குகிறது என்பதையே காட்டுகிறது. இராணுவம், அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் சில பிரிவுகளின் பேரினவாத அழுத்தங்களுக்கு இசைவதன் மூலம், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவை வடக்கில் உள்ள ஒரே பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் அந்தப் பல்கலைக்கழகம் சேவை செய்யும் சமூகங்களுக்கான தமது பொறுப்புகளில் இருந்து தவறியிருக்கின்றன.
1970களின் பிற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்தேசியவாத நடவடிக்கைகளுக்கான ஒரு இடமாக இருந்தபோதும், 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரையில் தேசியவாதம் மற்றும் தமிழ்ப் போராளிகளின் சர்வாதிகார நடவடிக்கைகள் ஆகியவற்றை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்த பல்கலைக்கழகத்திற்குள் இடம் இருந்தது. பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்கு முன்னர் பதவியிலிருந்த பலரின் பதவிக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் பல தமிழ்த் தேசியவாத அணி திரட்டல்கள் மற்றும் நிகழ்வுகள் நடந்தன. கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஒரு நினைவுச்சின்னம் பிரதான வளாகத்திற்குள் அவர்களில் ஒருவரின் பதவிக் காலத்தில்தான் கட்டப்பட்டது. அவர்கள் யாரும் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களிலிருந்து வித்தியாசமாகச் செயற்படாத விக்கினேஸ்வரன் ஏன் குறிவைக்கப்படல் வேண்டும்?
தமிழர்கள் மற்றும் பிற சமூகங்கள் மீது தமிழ்த்தேசியத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் விலக்குகள் பற்றிய சுயமதிப்பீடு மற்றும் வெளிப்படையான உரையாடல்களுக்கான வெளி போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் ஏற்படுவதாகத் தென்படுகிறது. சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி என்பனவற்றிற்கான அர்த்தத்தை வடக்கில் வாழும் வேறுபட்ட இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள் எவ்வாறு கருதுகிறார்கள் மற்றும் பிராந்தியத்தில் சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் என்பன பற்றிய உரையாடல்களுக்கான வெளி தற்போது தோன்றிவருகின்றது. இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், பெரும்பான்மை அரசிலிருந்து வரும் பிறவகையான அடக்குமுறைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கல்விச் சமூகமும் ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்கவும் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், நியாயமான, சமமான சமத்துவமான சகவாழ்வு பற்றிய விவாதங்களுக்குச் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதேச்சாதிகாரம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்.
1980களின் பிற்பகுதியில் முரண்பாடுகளின் போது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைத்து தரப்பினராலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, பல்கலைக்கழகங்கள் செயற்படுவதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரான பேராசிரியர் அர்ஜுன அளுவிகார பல்கலைக்கழகங்களின் மதிப்பினை உறுதிப்படுத்த வேண்டியிருந்த அதே நேரத்தில் யார் பயங்கரவாதி, யார் பயங்கரவாதி இல்லை என்ற பெயரிடலைத் தவிர்த்துக்கொண்டார். அன்றைய உயர்கல்வி அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இதைப் புரிந்துகொண்டார். நடந்து கொண்டிருந்த பயங்கரத்திலே ஒவ்வொரு கட்சியும் தமது சொந்தக் கதையாடல்களைக் கொண்டிருந்த அதேவேளை, அவை அந்தக் கதையாடல்களைத் தமது வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டும் இருந்தன.எந்தவொரு நிலையான விழுமியங்களையும் கொண்டிராத, இத்தகைய நெருக்கடி நிறைந்த அரசியலில், இராணுவப் புலனாய்வு அறிக்கைகளில் உள்ள உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்து உரிய செயன்முறையில்லாமல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு எப்படி மற்றவர்களைத் தண்டிக்கலாம்?
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கடந்த காலங்களில் இராணுவம் அல்லது காவல்துறையினரால் தனிநபர்கள் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளை, உண்மையற்றன அல்லது போதுமானதாக இனங்காணப்படவில்லை என்று நீதிமன்றங்கள் நிராகரித்திருந்தன. துணைவேந்தர் விக்கினேஸ்வரனுக்கு ஒரு பக்கச்சார்பற்ற தீர்ப்பாயத்தின் முன் பதிலளிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதுதான் நமது உயர்கல்வி முறையின் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தரமா? நீதி என்பது பல்கலைக்கழக அமைப்பின் அத்திவாரமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தீர்ப்பாயத்தால் (அது நிச்சயமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்ல) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், எந்தவொரு ஊழியருக்கும் தண்டனை வழங்கப் பல்கலைக்கழக சட்டம் அனுமதிக்காது. நாட்டில் இன்று சமூகங்கள் பாரிய அளவில் துருவங்களாகிப் போகின்ற நிலைமையினையும், நல்லறிவு திரும்புவதற்கான சிறிய நம்பிக்கையினையுமே நாம் காண்கிறோம். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு தற்போது செயற்பட்டு வரும் முறையானது நாடு தழுவிய பல்கலைக்கழகத்துறையின் கடுமையான நெருக்கடியைக் காட்டுகிறது.
கலாநிதி N. சிவபாலன், கலாநிதி S.அறிவழகன், கலாநிதி P. ஐங்கரன், கலாநிதி N. ராமரூபன், M. திருவரங்கன், கலாநிதி ராஜன் ஹூல்
(N.சிவபாலன், S.அறிவழகன், P.ஐங்கரன், N.ராமரூபன் மற்றும் M.திருவரங்கன் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வியாளர்கள். ராஜன் ஹூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற கல்வியாளர்)
சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் ஆங்கிலத்திலே கடந்த 15 செப்டெம்பர் 2019 அன்று வெளியாகிய இந்தக் கட்டுரையின் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு குளோபல தமிழ் நியூஸ் நெற் இணையத்தளத்திலே 16 செப்டெம்பர் 2019 அன்று வெளியாகி இருந்தது. அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ஆசிரியர்களினால் சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு இங்கே பதிவிடப்படுகிறது.