பட மூலம், UK Tamil News

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது
ஒளியின் ரசாயனம்
அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை
பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை
அது பதிவு செய்யாது
சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி எழுந்த
ஒரே ஒரு அவலக் குரல்
ஆகாயத்தில் மிதந்த சாக்குருவியினுடையது

சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
அனைவரது பெயர்கள் அறிவோம்
ஊரை அறிவோம்
கனவுகள் அறிவோம்; ஏமாற்றங்கள் அறிவோம்
நெருங்கிய உணர்வின் கையறு நிலை அறிவோம்
சினந்தெழுந்தவரின் இறுதிக் கண்வீச்சை அறிவோம்

மற்றவர் அறியா மொழி அது

எனினும்
இவை உங்களுக்கு உதவாது

நீங்கள் அடையாள அட்டையைக் கேட்கிறீர்கள்
பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறீர்கள்
எழுத்துமூலமான் பதிவை வலியுறுத்துகிறீர்கள்

இனப்படுகொலைக்கோ உயிராதாரம் உண்டு
கண்ணீர் எரிந்து உணர்வெழுதும்
நுண் சாட்சியம் உண்டு
கதை கதையாய்க் கொலை கொலையாய்
உறங்காத மொழியிலும் உலராத வரலாற்றிலும் நினைவுகள் உண்டு

தரலாம்.

பெறுவதற்கு யாருமில்லை
சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்
குருதி, மழை, சேறு.

சேரன்

 

 

ஆசிரியர் குறிப்பு: 10 வருட போர் நிறைவு தொடர்பான இத்தொகுப்பில் சேரன் அவர்களின் கவிதைகள் இடையிடையே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.