இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும் விமானக் குண்டு வீச்சுக்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தினமும் ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் வெட்டைவெளிப் பிரதேசங்களுக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு இரவின் இருள் மாத்திரமே அவர்களுக்குக் கூரையாக அமைந்தது. அவர்கள் இருளை அதிகம் நேசிக்க வேண்டியவர்களானார்​கள். அது அவர்களை சுட்டெரித்த சூரியனிலிருந்து பாதுகாத்தது. தாய்மார்கள் பிள்ளைகளை மர நிழலிலும் பழுதடைந்து நகரமுடியாமல் கைவிடப்பட்ட வாகனங்களின் நிழலிலும் கிடத்தி வெயிலிலிருந்து பாதுகாத்தார்கள். யுத்தம் முனைப்படைய முனைப்படைய துன்பங்களும் அதிகரித்தன. அவர்கள் கஞ்சியை மட்டுமே பருகி உயிரைப் பிடித்துக்கொண்டார்கள். படிப்படியாக கஞ்சியின் கட்டித்தன்மை குறைந்து நீர்த்தாக உப்பில்லாக் கஞ்சியாக வழங்கப்பட்டது. கஞ்சி வழங்கும் அறிவித்தல் கிடைத்தவுடன் சிறுவர்கள் தங்களது குடும்பங்களுக்காக அதைப் பெறுவதற்குப் பாத்திரங்களுடன் ஓடுவார்கள். இவ்வாறு கஞ்சியைச் சேகரிக்கச் சென்றிருந்த பல சிறுவர்கள் விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் ஷெல் தாக்குதல்களுக்கும் அகப்பட்டார்கள்.

போரின் இறுதிப்பகுதியில் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போனார்கள். தாய்மார்களின் கைகளிலிருந்து பிள்ளைகள் விடுபட்டுப்போனார்கள். தங்களுடைய உயிரைக் காக்க இறந்த உடலங்களின் மேலாகவே அவர்கள் ஓடவேண்டியிருந்தது. இவ்வாறு மே 18 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது.

​போரில் கொல்லப்பட்ட மக்களையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூர்தல் என்பது மக்களினுடைய உரிமை. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது அரசியல் ஆதிக்கம் உடையவர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவே இருந்தது. யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களுக்கும் தமிழ் சமூகத்தின் சாதாரண மக்களுக்கும் நினைவு கூர்தலில் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு அரசியல் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்தும் பொருட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது யுத்த வடுக்களை சுமந்த மக்களையும் மற்றும் பொதுமக்களையும் 10ஆம் ஆண்டு நினைவு கூர்தலை கூட்டாக மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய சொந்த இடங்களில் நினைவு கூர்தலை ஏற்பாடும் செய்திருந்தது. நிலையான அடையாளங்களை உருவாக்கும் வகையில் “மரங்களை நட்டு எங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்வோம்” என்றும் மக்களுடைய இழப்புக்களையும் துயரங்களையும் வலிகளையும் கூட்டாக பகிர்ந்துகொள்ளும் வகையில் “உப்பில்லா கஞ்சி சமைத்து உண்போம்” எனவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, பாடசாலைகள், வைத்தியசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கின் பின் தங்கிய கிராமங்கள் பலவற்றில் 5000 தென்னங்கன்றுகள், 125 நிழல் தரு மரங்கள், பனை விதைகள் என்பன  இறந்த அன்புக்குரியவர்களின் நினைவாக நாட்டப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரான போரில் தம் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரினால் அங்கவீனமுற்றோர், யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்டவர்கள், பெற்றாரை இழந்த குழந்தைகள் அடங்கலாக  சமூகமட்ட அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள், மீன்பிடி மற்றும் விவசாய அமைப்புக்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் முனைப்புடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

விசேட நினைவு கூர்தல் மற்றும் பூசை வழிபாடுகள் என்பன தேவாலயங்களிலும் இந்து ஆலயங்களிலும் போர்ப் பாதிப்புக்குள்ளான மக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கிராமத்தவர்களும் அயலவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் போரில் தனது நான்கு பிள்ளைகளை இழந்த ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய பிரதேசத்தில் யுத்தத்தில் இறந்து போன 26 பேர் சார்பாகவும் தென்னங்கன்றை தன்னுடைய பிள்ளையாகவே கருதி நாட்டினார். அவர் நடப்பட்ட மரத்தை மரியாதை உணர்வோடு பூக்களால் பூசித்தார்.

இக் கூட்டு நினைவு கூர்தலில் பல்வேறுபட்ட தலைமுறையினரின் பங்குபற்றல் அவதானிக்கப்பட்டது. வயதான தாய்மார்கள் கஞ்சியை தமது வீடுகளில் காய்ச்சி தமது அயலவர்களுடன் அருந்தினர். இளைஞர்களோ லொறிகளிலும் லாண்மாஸ்டர்களிலும் எடுத்துச் சென்று வீதிகளிலும் பொது இடங்களிலும் பரிமாறினார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு போர் நடந்த நேரம் 9 வயதாக இருந்த ஒருவர் தன்னுடைய  அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார், “நான் கஞ்சி குடுபடுற நேரம் வரிசையில் நிண்டு போறனான். பல நேரங்களில் நான் கஞ்சி கொடுப்பவரை அண்மிக்கிற பொழுது கஞ்சி முடிஞ்சு போடும். வெறும் யொக்கோடை நான் திரும்பிப் போறனான்.” யாழ்ப்பாணத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர், “கஞ்சியை என்னாலை மறக்கவே முடியாது. கடைசி நேரம் கஞ்சி குடிச்சிட்டு வந்திருக்கேக்கை தான் என்னுடைய அக்காவும் அப்பாவும் ஷெல் விழுந்து செத்துப்போனவை” என்று கூறியிருந்தார். கஞ்சியைக் குடிக்கும் பொழுது மக்கள் தங்கள் அனுபவங்களை வீதியில் நின்ற ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் சொப்பின் பைகளில் தங்களுடைய குடும்பத்தவர்கள் அயலவர்களுக்காக எடுத்துச் சென்றார்கள்.

இத்தகைய மக்கள் சார்ந்த நினைவு கூர்தல்கள் மக்களை நினைவு கூர்தல்களில் உரிமைகொள்ளச் செய்வதற்கும் அவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கும் மக்களைப் பரவலாக இந்நிகழ்வுகளில் ஈடுபடச் செய்வதற்கும் உதவியதை அவதானிக்க முடிந்தது. பருமட்டான கணிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 25,000 மக்கள் வடக்கு கிழக்கில் மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்த நினைவு கூர்தலை மேற்கொண்டிருந்தார்கள்.

இரண்டு இடங்களில் நினைவுக் கஞ்சி என்று தெரிந்திருந்தும் வழங்கப்பட்ட கஞ்சியை இராணுவத்தினர் அருந்தியிருந்தனர். இராணுவத்தினரின் இம் மனநிலையை மக்கள் வரவேற்றிருந்தனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.