பட மூலம், New York Times

இலங்கையில் வெளிநாட்டு அகதிகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch)  தகவல்களின் பிரகாரம் இலங்கையில் சுமார் 1,600 தஞ்சம் கோருபவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பதற்கிணங்கிய விதத்தில் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் உடனடிப் பாதுகாப்பு இப்பொழுது தேவைப்படுகின்றது. இந்த அகதிகளில் ஆப்கானிஸ்தானியர்கள், ஈரானியர்கள், பாகிஸ்தானியர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அஹமதியாக்களாக இருந்து வருவதுடன், ஒரு சில கிறிஸ்தவர்களும் கூட உள்ளனர். கிறிஸ்தவ தொழிலாளர் சகோதர அமைப்பொன்றின் பகல் உணவு விருந்தில் அவர்கள் சமயல்காரர்களாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த சுவை மிக்க உணவை உட்கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களில் ஒருவர் இலங்கையில் இறையியல் தொடர்பான பட்டப்படிப்பை படித்ததுடன், அவர் இப்பொழுது அங்கிலிக்கன் திருச்சபையின் மதகுருவாக இருந்து வருகின்றார். இலங்கையில் அங்கிலிக்கன் திருச்சபையின் மதிப்பு மிக்க ஒரு சொத்தாகவும் அவர் கருதப்படுகின்றார். பெருந்தொகையான மக்களுக்கு தஞ்சம் வழங்குவது என்பது, பாதுகாப்புத் தேவைப்படும் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்கும் விடயத்தில் இலங்கையின் மிக அரிய, மதிப்பு மிக்க சாதனைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்தச் சாதனை இப்பொழுது ஓர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் The Telegraph பத்திரிகை இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பழிவாங்கல் தாக்குதல்களின் காரணமாக 1,000 முஸ்லிம் அகதிகள் தமது வீடு வாசல்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது. எமது வெட்க உணர்வை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு சில உள்ளூர் பத்திரிகைகள் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.

டெலிகிராப் பத்திரிகையின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது: “மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான கிறிஸ்தவ அகதிகளும் தவறான விதத்தில் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இந்தத் தாக்குதல்களில் சிக்கிக் கொண்டனர்.” பாகிஸ்தான் அஹமதியா முஸ்லிம்களைச் சேர்ந்த 58 வயதான தாரிக் அகமத் என்பவரை மேற்கோள் காட்டி அது செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் எனக் கூறப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டதாகவும், இலங்கையில் அவர்கள் எங்களை முஸ்லிம்கள் எனக் கருதும் காரணத்தினால் எம்மைத் தாக்குகின்றார்கள் எனவும் Associated Press  செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார்.

டெலிகிராப் பத்திரிகையின் அறிக்கை மேலும் இப்படிக் குறிப்பிடுகின்றது: “சுமார் 650 அகதிகள் நீர்கொழும்புக்கு அருகில் பஸ்யாலை என்ற நகரில் ஒரு பள்ளிவாசலில் தஞ்சம் கோரியிருப்பதாக கூறப்படுகின்றது. ஏனையவர்கள் பொலிஸ் நிலையங்களிலும், உள்ளூர் பாடசாலைகளிலும் தங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது. அதே வேளையில் 30 ஈரானியர்கள் தமது வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றார்கள்.”

தேவாலயத்தின் நடவடிக்கை

புனித வேதாகமத்தில் பல இடங்களில் கட்டளையிடப்பட்டது போல, கிறிஸ்தவ தேவாலயம் இந்தப் பிரச்சினைக்கு எதிர்வினையாற்றியது. விசுவாசமிக்க முஸ்லிம்களும் கூட செய்ய வேண்டியவையாகக் கருதப்படும் மூன்று விடயங்களை இங்கு மேற்கோள் காட்ட முடியும்:

  1. உடனடி பொருத்தப்பாடு உடையது: “உங்கள் நாட்டில் ஒரு விருந்தினர் உங்களுடன் தங்கியிருக்கும் பொழுது நீங்கள் அவருக்கு தீங்கிழைக்கக்கூடாது” (Leviticus 19:33).
  2. வெளிநாட்டு கொலைகாரர்களுக்கும் கூட தஞ்சம் வழங்குதல்: இந்த ஆறு நகரங்களும் இஸ்ரேலைச் சேர்ந்த மக்கள் தஞ்சம் புகும் இடங்களாக இருந்து வரும். அவர்களுக்கு மத்தியில் அன்னியர்களும், வழிப்போக்கர்களும் இருப்பார்கள். எந்தவொரு நோக்கமும் இல்லாமல் யாரேனும் ஆளொருவரை கொலை செய்யும் ஒரு நபரும் இங்கு தப்பிவர முடியும் (இலக்கங்கள் 35:15).
  3. உங்கள் அறுவடையில் ஒரு பாகத்தை ஏழைகளுக்கு கொடுத்தல்: நீங்கள் உங்களுடைய பழத் தோட்டத்தை முழுமையாக மொட்டையடித்து விட வேண்டாம். உங்கள் பழத்தோட்டத்தில் விழும் திராட்சைகளை நீங்கள் சேகரிக்கவும் கூடாது. அவற்றை நீங்கள் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விட்டு வைக்க வேண்டும்: நான் உங்கள் ஆண்டவரின் தலைவன் ஆவேன் (Leviticus 19:10).

அரசியல் தஞ்சத்தை வலியுறுத்தும், இப்பொழுது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இந்த விவிலிய விழுமியங்களின் பயனாளிகளாக பெருந்தொகையான இலங்கையர்கள் – குறிப்பாக தமிழர்கள் – உள்ளனர். அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென இலங்கை திருச்சபை முன்வந்துள்ளது. முஸ்லிம்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்திலான ஆயர் டிலோராஜ் கனகசபை அவர்களின் துணிச்சலான அறிக்கை இதனை எடுத்துக் காட்டுகின்றது:

“இந்தச் சோதனை மிக்க காலகட்டத்தில் “கண்ணுக்கு கண் அல்லது பல்லுக்கு பல்” என்ற அடிப்படையில் கிறிஸ்தவ சமூகம் செயற்பட முடியாது; செயல்படவும் கூடாது (….) உயிரை வழங்கும் சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் பெயரில் பாரிய கொலைகளை நிகழ்த்துவதற்கான உரிமையை ஆட்கள் தமது கைகளில் அபகரித்துக்கொண்டிருப்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும் (….) உயிர் இறைவனுக்குச் சொந்தமானதாகும்; ஒருவரின் உயிரைப் பறிப்பதற்கு இறைவனைத் தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை. “கண்ணுக்கு கண் அல்லது பல்லுக்கு பல்” என்ற அடிப்படையில் நாங்கள் செயற்பட முடியாது; செயல்படவும் கூடாது. அதற்குப் பதிலாக, எமது எஜமானரின் முன்மாதிரியை நாங்கள் பின்பற்ற வேண்டும். அதே விதத்தில் நாங்களும் எமது அழுகுரலை எழுப்ப வேண்டும். சிலுவையுடன் இணைந்து கடும் துயரத்துடனும், கனத்த இதயத்துடனும் எமது ஆண்டவர் அழுது இப்படிக் கூறினார்: “பிதாவே, அவர்களை மன்னித்து விடும்; தாங்கள் என்ன காரியம் செய்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை (….). இந்த நிலையில் நிறைவேற்றுத் தரப்பும், சட்டவாக்கத் தரப்பும் தமது சொந்த, அற்பத்தனமான நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மும்முரமாக செயற்பட்டு வந்தன. அதேபோல அவர்களுக்கு கீழ் இருந்து வரும் தரப்புக்களும் இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதனையும், இந்தப் பிரிவினையின் காரணமாக செயல் முடங்கிப் போனவர்களாக இருந்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. சுமார் நான்கு தசாப்த காலமாக இரத்த ஆறு ஓடிய இந்த தீவுத் தேசத்தில் மீண்டும் ஒரு முறை இரத்தம் ஓடுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவர்களாக இருந்து வந்தால் இது நடப்பதற்கு இடமளித்திருக்க முடியாது. இது ஒட்டுமொத்த  தேசத்திற்கும் இழைக்கப்பட்ட ஒரு துரோகமாகும்”.

தஞ்சம் கோரியிருக்கும் அகதிகளை பொலிஸாரினால் பாதுகாக்க முடியாத நிலை

தகவல்களின் பிரகாரம், ஒரு சில அகதிகள் அத்துருகிரிய தேசிய கிறிஸ்தவ பேரவையின் தேவாலயத் தலைவர்களினால் தேவாலயக் கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், அன்றைய தினம் இரவு பௌத்த பிக்குகள் ஆவேசமடைந்திருந்த கிராமவாசிகளுடன் அந்த இடத்திற்கு வந்ததாக தேவாலய வட்டாரங்கள் என்னிடம் தெரிவிக்கின்றன. அந்த நிலையில், அகதிகளை பொலிஸ் நிலையத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. அத்தகைய அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸாரின் முதன்மைக் கடமையாக இருந்து வந்த போதிலும், தம்மால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என பொலிஸார் தேவாலயத்தைச் சேர்ந்தவர்களிடம் சொன்னார்கள்.

அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என ஐனாதிபதியையும் உள்ளடக்கிய விதத்தில் அரசாங்க தரப்பினர் கூறியிருந்த போதிலும், ஒரு சில ஆவேசமடைந்த புத்த பிக்குகள் அகதிகள் மீதான தாக்குதலை முன்னின்று நடத்திய போது எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் முன்வைத்த வாதம் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு இணையானதாகவே இருந்து வந்தது. அதாவது, கொழும்பில் தமிழர்களை வைத்திருப்பது ஆபத்தானது என அப்பொழுது கூறப்பட்டது. அப்பொழுது தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா ஆதரித்துப் பேசியதாக டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது:

“தலைநகருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும், தமிழ் புலித் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களிலிருந்து நகரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இந்த நடவடிக்கை அவசியமானது எனக் கூறப்பட்டது. சாதாரண தமிழ் மக்கள் தங்கும் மலிவான விடுதிகளில் அவர்களுக்கு மத்தியில் தமிழ் தீவிரவாதிகளும் தங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.”

இந்த இடத்தில் தமிழர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக “முஸ்லிம்கள்” என்ற வார்த்தையை இட்டு நிரப்பி வாசித்துப் பார்க்கவும் – இது அதே இயல்பிலான மேலாதிக்க உணர்வுடன் கூடிய இனச் சுத்திகரிப்பு உத்தியாக இருந்து வருகின்றது. இந்தத் தடவை அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் அவ்விதம் சுத்திகரிக்கப்படுகின்றனர் – இந்த அகதிகளை, அகதிகளாக ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ஒரு கடப்பாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தெரிவித்திருந்தது. இடம்பெறப் போகும் பேரழிவு குறித்து இந்தியப் புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட மறுத்தமை, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோர் அவர்களுடைய கால கட்டங்களில் கலவரங்கள் மூண்ட பொழுது நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்தன தமிழர்களுக்கு அச்சுறுத்தல் வழங்குவதன் மூலம் இதனை மேலும் தூண்டினார்:

“உங்களுக்கு ஒரு போர் வேண்டுமானால் நாங்கள் ஒரு போரை நடத்துவோம். உங்களுக்கு சமாதானம் வேண்டுமானால் சமாதானத்தை எடுத்து வருவோம். இது நான் கூறுவதல்ல. இலங்கை வாழ் மக்கள் கூறுவதாகும்.”

அவ்விதம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்ததுடன், அந்த வழக்கு வெற்றியீட்டியதனை அடுத்து அந்தத் தீர்மானம் விளக்கிக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கின் போது எம்.ஏ. சுமந்திரன் தமிழர்களின் வெளியேற்றத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகினார். இன்று தமது மௌனம் மற்றும் அப்பாவி அகதிகள் மீதான தாக்குதல்கள் என்பவற்றுக்கு ஊடாக இலங்கை மக்கள் முஸ்லிம்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறார்கள்?

சர்வோதய இயக்கத்தின் திரு. ஏ.ரீ. ஆரியரத்ன ஒரு சில முஸ்லிம் அகதிகளை தமது கட்டடங்களில் தங்கவைப்பதற்கு முயற்சி செய்த பொழுது கிராம மக்கள் ஒரு சில மதக் குழுக்களின் தலைமையில் வந்து வெறியாட்டம் ஆடியதாக தேவாலய வட்டாரங்களிலிருந்து எனக்குத் தெரிய வருகின்றது. அவர்கள் அந்த அகதிகளை பேருந்திலிருந்து கீழே இறங்கக்கூட விடவில்லை. திரு. ஆரியரத்ன போன்ற மனிதர்களும், கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்களுமே இலங்கையர்களில் இன்னும் ஒரு சிலர் மனிதாபிமானமிக்கவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பதனை குறைந்த பட்சம் நிருபித்து வருகின்றார்கள்.

தமிழர்களின் மந்த கதியிலான பச்சாத்தாப உணர்வு

பாரிய அழிவுகள் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் என்பவற்றின் விளைவாக ஏற்கனவே துன்பங்களை அனுபவித்திருக்கும் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள்? அவர்கள் இப்பொழுது என்ன சொல்கின்றார்கள்? அரசாங்கம் விரும்பினால் இந்த அகதிகளை தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என இனவாதத்தை பரப்பும் பிக்குகள் கூறியதாக தமிழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ஒரு சில தமிழ்த் தலைவர்கள் இது குறித்து கோபமடைந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 2007ஆம் ஆண்டில் அவர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களின் பிரகாரமும், (தீட்சை பெறாத) ஒரு மெதடிஸ்த போதகர் என்ற முறையிலும் இந்த அகதிகளை வட பிரதேசத்தில் ஏற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருக்கும் அதேவேளையில், நாடாமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தனது தலைவர் திரு. ராஜவரோதயம் சம்பந்தன் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டாலும் கூட, அகதிகள் வட பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால், தான் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூறி, சார்ல்ஸ் நிர்மலநாதன் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தமிழர்கள் ஆகிய நாம் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகின்றோம்!

தேசிய கிறிஸ்வதப் பேரவை (NCC)

உண்மையான ஒரு சில கிறிஸ்தவ தலைவர்களின் அணி – தமது பெயர்களுக்கும் அப்பால் உண்மையில் தலைவர்களாக இருப்பவர்களை நான் குறிப்பிடுகின்றேன் – இந்நெருக்கடி தொடர்பாக  ஆற்றிய எதிர்வினை, ஆகக்குறைந்தது இப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும் வரையில் இந்த அகதிகளை நம்மத்தியில் மீளக் குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு திடசங்கற்பத்துடன் உதவ வேண்டும் என்பதாகவே இருந்து வந்தது. தேசிய கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த தேசிய தலைவர்களின் குழுவில் (யாழ்ப்பாண அங்கிலிக்கன் அதிமேற்றிராணியரான) அருட்தந்தை சாம் பொன்னையா ஆண்டகை அவர்களும் ஒருவராக இருந்து வந்தார். அவர் இந்த அகதிகளை கிறிஸ்தவத் தொண்டர்களின் வீடுகளில் தங்க வைப்பதற்கு முயற்சித்து வருகின்றார். சிறு குழுக்களுக்கு – யாழ்ப்பாணத்தில் சுமார் 10 குடும்பங்களுக்கு – உதவுவதன் மூலம் அவர்களுக்கு ஊடாக இந்த அகதிகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் எமது கடமையை நிறைவேற்றி வைக்க முடியும் என பொன்னையா ஆண்டகை அவர்கள் கருதுகின்றார்கள்.

இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீதான அதன் பிடியை இறுக்குகின்றது

அதே வேளையில், (மே 03ஆம் திகதி) நான் இதனை எழுதும் நிலையில் பொதுவாக உரிமைகள் ஒடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், இராணுவத்தின் 513ஆவது படையணியைச் சேர்ந்த சுமார் 300 இராணுவ வீரர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து, அங்குள்ள ஒவ்வொரு கட்டடத்தையும் சோதனையிடத் தொடங்கினார்கள். மாணவர் சங்க அலுவலகத்தில் வே.பிரபாகரனின் ஒரு புகைப்படம் மற்றும் ஈழ வரைபடம் ஒன்று என்பன கண்டுபிடிக்கப்பட்டதுடன், வேறோரு இடத்தில் (பொதுவாக இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் பொருட்கள் எனக் கருதப்படும்) ஒரு சோடி தொலைநோக்கிகள் மற்றும் சப்பாத்துக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. அதனை அடுத்து, மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது பல்கலைக்கழத்திற்குப் பிரவேசிக்கும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இவ்விதம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எம் மீதான தமது பிடியை இறுக்குவதற்கு இராணுவத்திற்கு ஒரு வாய்ப்பாக இருந்து வந்துள்ளது.

இவ்விதம் கைது செய்யப்பட்ட இரு மாணவர் சங்கத் தலைவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள். அக்கட்சியைச் சேர்ந்த பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போதிலும், அவர்கள் சார்பாக ஆஜராவதற்கு கு எவரும் முன்வரவில்லை. இது ஆயுதப் படைகள் தொடர்பாக நிலவி வரும் பொதுவான பயத்தை பிரலிபலிக்கின்றது. இறுதியில் இது தொடர்பாக தலையிட்ட சுமந்திரன், பிரபாகரனின் புகைப்படத்தை அல்லது ஈழ வரைபடத்தை வைத்திருப்பது ஒரு குற்றச்செயலாக இருந்து வரவில்லை என்ற பின்னணியில, அவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாமல் இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்து, அவ்விதம் கைவிடப்பட்ட மாணவர் சங்கத் தலைவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

சீ.வி. விக்னேஸ்வரன் களத்தில் குதிக்கிறார்

கைது செய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு எதிராக நான்கு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டம், பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச சமவாயம் மற்றும் ஏப்ரல் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் என்பனவே அச்சட்டங்களாகும். யாழ்ப்பாண மாஜிஸ்ட்ரேட் நீதவானின் கட்டளையின் பிரகாரம் அவர்கள் மே 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதி தேவைப்படும் காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது புதிய சட்டமா அதிபருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இந்த மாணவர் சங்கத் தலைவர்களின் பரிதாப நிலையை தனக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கென முன்னாள் வட மாகாண முதலமைச்சர் திரு. சீ.வி. விக்னேஸ்வரன் இப்பொழுது களத்தில் குதித்துள்ளார். அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதிருந்தமைக்காக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறை கூறியிருக்கின்றார். மேலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற வேண்டாம் என இராணுவத்திடம் கேட்டுக்கொண்டமை குறித்தும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (மே 3ஆம் திகதி) தமிழில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் இல்லாத நிலையிலும் கூட இந்த மாணவர்கள் இருவருக்கும் எதிராக ஏனைய மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்க முடியும் என அந்த அறிக்கையில் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. தாம் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது உண்மை என்றும், ஆனால், அந்த ஒழுங்குவிதிகளின் கீழ் அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட எதேச்சாதிகார சட்டங்களுக்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. மாணவர் சங்கத் தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அந்த ஒழுங்குவிதிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்திடம் கேட்டுக் கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கும் அந்த அறிக்கையில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்விதம் வேண்டுகோள் விடுத்த ஒரேயொருவர், காணாமல்போன கடற்புலிகளின் தலைவர்  மற்றும் திருகோணமலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் எழிலனின் மனைவியான முன்னாள் வட மாகாண அமைச்சர் திருமதி. அனந்தி சசிதரன் மட்டுமே என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மிக முக்கியமாக அனந்தி சசிதரன் திரு. விக்னேஸ்வரன் அவர்களின் ஒரு சகாவாக இருந்து வருவதுடன், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைப்பதற்கு முயற்சித்து வருகின்றார் என அக்கட்சியால் கருதப்படுகின்றது.

(குறிப்பு: கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின நிகழ்வு ஒன்றின் போது இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா பின்வருமாறு பேசியதாக 2019 மே 03ஆம் திகதியிட்ட டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது: “மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய தரப்புக்களால் வழங்கப்படும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.” எனினும், இந்தப் பேச்சை நேரடியாக கேட்ட நிருபர் ஒருவர் சேனாதிராஜா உண்மையில் தமிழில் கூறிய விடயம் “மேலும் அதிகளவிலான பாதுகாப்பைக் கோரவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் இருந்து வருகின்றோம். ஆனால், நாங்கள் அப்படி கோர மாட்டோம்” என்பதாகும். இந்தப் பேச்சு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றினால் திரிக்கப்பட்டுள்ளது என்றும், பேச்சின் இறுதிப் பிரிவு அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிருபர் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், டெய்லி மிரர் போன்ற பத்திரிகைகளே தவறாக வழி நடத்தப்பட்டுள்ளன. உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையில் ஏற்படும் அத்தகைய ஒரு பாரிய மாற்றத்தை ஒரு சாதாரண மேடைப் பேச்சின் மூலம் கொண்டுவரவும் முடியாது).

இராணுவ சர்வாதிகாரம் ஒன்றை நோக்கிய நகர்வு?

இப்பொழுது நாங்கள் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்? நிச்சயமாக குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற முடியும் என இந்தியாவால் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள், இராணுவம் ஒரு பாரிய வகிபங்கினை வகிப்பதற்கான ஒரு சாக்காகப் பயன்படுத்துவதற்கென குழப்ப நிலை ஒன்றை உருவாக்குவதற்கென புறக்கணிக்கப்பட்டனவா? முன்னைய அரசாங்கம் முஸ்லிம் மற்றும் பௌத்த தீவிரவாதிகளுக்கு பணம் செலுத்தி வந்தது என அரசாங்கப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கூறி வரும் விடயம் தொடர்பான விளக்கம் என்ன? அமைதியாக செயற்பட்டு வரும் ஒரு பல்கலைக்கழகத்தில் மீண்டும் குழப்பங்களை தூண்டுவதற்கு முயற்சிக்கும் விதத்தில் இராணுவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்குள் பிரவேசித்தது ஏன்?

இராணுவம் நிலை கொண்டிருக்கும் தமிழர்களின் நிலப் பரப்புக்களிலிருந்து முற்றாக வெளியேற வேண்டுமென அரசாங்கம் இராணுவத்திடம் கேட்டுக் கொண்டாலும் கூட, இராணுவம் அவ்வாறு செய்யப் போவதில்லை என அண்மையில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்திலேயே இக்கேள்விகளுக்கான பதில் பொதிந்திருக்கின்றது. அது தேசத் துரோகமாக இருந்து வருவதுடன், எமது அரசியல் யாப்பை மீறும் ஒரு செயலாகவும் உள்ளது. அதற்கு எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க முடியாதா? இது அராஜகமாகும்.

அராஜகம் என்பது ஒரு சர்வாதிகார ஆட்சியின் தொடக்கமாகும். இராணுவம் நாட்டை கைப்பற்றிக் கொள்வதற்கு வழிசமைக்கும் விதத்தில் அராஜகத்தின் விதைகள் வேண்டுமென்றே தூவப்பட்டு வருகின்றனவா?

பேராசிரியார் எஸ். ரத்னஜீவன் எச். ஹூல் எழுதி The Bombings, Refugees & Emergency Regulations: The Dangers Of A Military Dictatorship என்ற தலைப்பில் கொழும்பு ரெலிகிராப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.