பட மூலம், Selvaraja Rajasegar

இனரீதியான பாகுபாடு

மார்ச் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை நடாத்துவதுடன் இனரீதியான பாகுபாடு எவ்வாறு தொடர்புபடுகின்றது  என இப்போதும் சிலர் சந்தேகிப்பதனால் இது தொடர்பான ஆக்கம் ஒன்றை எழுதுமாறு என்னிடம் கேட்கப்பட்டது.

அதிகாரம் மக்களிடம் உள்ளது, நாங்கள் அரசியல் பேசுகிறோம்” (Tupac Shakur, The power is in the people and the politics we address) என்ற டுபாக் சகூரின் கூற்றை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமானது. எமது ஆட்சியாளர்கள் காட்டும் பாகுபாடுகளை நாங்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

பண அதிகார பாரபட்சம்

குறைவாக நிதியிடப்படும் வேட்பாளர்களுக்கு பிரதிகூலங்களை ஏற்படுத்துவதன் மூலம் தேர்தல்களில் பணம் தவறான ஆதிக்கத்துக்கு அல்லது அதிகாரத்துக்கு காரணமாக அமைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழு கருதுகின்றது. நாங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படும் நிதியை மட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டமூலத்தின் ஊடாக, அரசியலில் பண – அதிகார தொடர்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

பண – அதிகார அரசியலானது எமது 1931ஆம் ஆண்டின் டொனமூர் மறுசீரமைப்புக்களை விடப் பழைமை வாய்ந்ததாகும். 1879ஆம் ஆண்டில், மகாதேசாதிபதி எமது பிரதிநிதிகளை நியமித்தார், குமாரி ஜயவர்தன ( (Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, Zed Books, London, 2002, p. 219) “எல்லாக் காலத்திலும் சிறந்த இலங்கையர்” என்று டி.ஸ். சேனாநாயக்கவினால் வர்ணிக்கப்பட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களை அப்போதைய பிரித்தானிய மகாதேசாதிபதி ஏன் விரும்பினார் என்று விளக்குகின்றார்.  இராமநாதனின் குடும்பத்தினர், தண்டனையாக பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மகாதேசாதிபதிகளுக்கும் காலனித்துவச் செயலாளர்களுக்கும் தவறான முறையில் கடன் வழங்கியதன் மூலம் சட்ட சபையில் அவருக்கான ஆசனத்தை விலைக்கு வாங்கினர்!

சாதிப் பாகுபாடு

டொனமூர் மறுசீரமைப்பு இருந்த போதிலும் வன்முறை கொண்ட சாதிப் பாகுபாட்டின் ஊடாக வாக்களிப்பதற்கான உரிமை இழக்கப்படுவதும் எமது ஜனநாயகத்தை பாழடிக்கச் செய்கிறது. தனிப்பட்ட மற்றும் சமுதாய அடையாளங்களின் அடிப்படை மட்டங்களில் சாதிப் பாகுபாடானது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல்வாதிகளுக்கான சமனான தேர்தல் உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக அமைகின்றன. 1936ஆம் ஆண்டின் தேர்தல்களைப் பற்றிக் கூறும் போது நீரா விக்ரமசிங்ஹ (Sri Lanka in the Modern Age: A History, Oxford, 2014, p. 150) “தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவரின் உறவினர்களான சாதித் தலைவர்கள் “மிரட்டல்களை, அச்சுறுத்தல்களை, துஷ்பிரயோகங்களை மற்றும் தாக்குதல்களை” கையாண்டதாக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை அதிகளவில் கொண்டிருந்த கேகாலை தொகுதியின் வேட்பாளர் குற்றம் சாட்டியதாகக் கூறுகிறார். இதே குற்றச்சாட்டுக்கள் அதற்கு அயலில் உள்ள தெடிகமை தேர்தல் தொகுதியிலும் முன்வைக்கப்பட்டன”.

தற்போது பதவிக்காலம் முடிவடையவுள்ள வட மாகாண சபையின் 38 உறுப்பினர்களில் இரண்டு பேர் மாத்திரமே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அதிகாரத் திரட்சியிலிருந்து தமிழர்களை ஒழிப்பதை நோக்கி

விக்கிரமசிங்ஹ மேலும் கூறுகையில் (மேற்படி.), “1936ஆம் ஆண்டின் தேர்தல்கள் ஒட்டுமொத்தமாக நோக்குகையில் சிங்கள – பெளத்த அரசியல்வாதிகள் மீள அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வாக அமைந்தது” என்கிறார். சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் வழமையாக வாக்களித்து வந்த மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதன் பின்னரும் அவர்களுடையை சனத்தொகையைப் பயன்படுத்தினர், அதன் மூலம் அவர்கள் மத்தியிலிருந்து சிறுபான்மைச் சிங்களவர்கள் தெரிவுசெய்யப்படுவதை அனுமதித்தனர்.

1990 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மரண அச்சுறுத்தல் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் சமுதாயத்தின் வாக்குரிமையைப் பறித்தனர். அது அரசாங்கத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஏனெனில் அது 10 இற்கும் குறைவான வாக்குகள் மூலம் தகுதியற்ற கைக்கூலிகள் தெரிவு செய்யப்படுவதற்கும் அமைச்சரவையில் அமர்வதற்கும் காரணமாக அமைந்ததுடன் அதன் மூலம் அரசாங்கம், தாங்கள் தேசிய ரீதியானவர்கள் என்று கூறிக்கொள்வதற்கும் வாய்ப்பளித்தது. இந்த நகைப்புக்குரிய முடிவுகளைச் சான்றுப்படுத்துவது பாதுகாப்பானது என்று அப்போதைய தேர்தல் திணைக்களம் கருதியது. இது பற்றி வினவிய போது “எழுத்து மூலமான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை” என்று எனக்குக் கூறப்பட்டது.

இந்தச் சுரண்டல்கள் மூலம் திருப்தியடையாத அரசாங்க சாதனங்கள், தொடர்ச்சியான முறையில் தமிழர்களை ஒழிப்பதற்கு முயற்சிக்கின்றன. நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களை – போராளிகள் அல்லாத தமிழர்களைக் கொலை செய்த அரச படைவீரர்களை – விசாரணை செய்வது என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கான வாக்குறுதிகள் – சர்வதேச சமுதாயத்தினால நடாத்தப்பட முடியுமான உடனடியான யுத்தக் குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றுவதற்குப் போதுமானவையாக இருந்தன. எந்தவொரு இராணுவ வீரரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 30/1 தீர்மானத்திலிருந்து வாபஸ் பெறப் போவதாக ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுப்பதானது அது ஒரு கேளிக்கூத்து என்பதைக் காட்டுகின்றது. “திருகோணமலை 11” தொடர்பான விசாரணைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த மாதத்துக்கான அமர்வுகளில் சேர்க்கப்பட்டுள்ள மற்றுமொரு கேளிக்கூத்தாகும் – சந்தேகநபரான கடற்படத் தளபதியை கைதுசெய்ய வேண்டாம் என்று சட்ட மா அதிபரை ஜனாதிபதி கோரியதாக கொழும்பு டெலிகிராப் (2019.03.11) கூறுகின்றது.

இன்று சிங்கள அரசியல்வாதிகள் வெற்றி பெற வேண்டுமாயின், ஜனாதிபதியைப் போன்று சட்டத்தின் வழமையான போக்கில் தலையீடு செய்வது, தமிழர்களுக்கு எதிராக இனவாத நச்சுக் கருத்துக்களையும் தங்கள் கோரைப் பற்களையும் காட்ட வேண்டிய காட்டாயம் காணப்படுகின்றது. தனது தேர்தல் தொகுதியில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள லக்‌ஷ்மன் கிரியெல்ல கூட, யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று நாடாளுமனத்தில் வாக்குறுதியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜனசனசதய வழக்கைப் (SC/FR430/2005) போன்று உள்நாட்டு “நீதிமன்ற தற்றுணிபின்” போர்வையில் உச்ச நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டவற்றின் கீழ் வெளிநாட்டு நீதிபதிகளின்றிய சித்திரவதைகளுக்கு எதிரான குற்றத்தீர்ப்புக்கள் உள்ளூர் நீதிபதிகளால் இடைநிறுத்தப்படும்.

நீதிக்கும் தேர்தல் பங்கேற்புக்குமான எமது போராட்டத்தில் திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டமையினால், சனநாயகத்தின் உயிரோட்டம் குன்றியுள்ளது.

காலனித்துவம்

தமிழர்களை இல்லாதொழிப்பது தொடர்பான மற்றொரு பெரிய கதை, கெலபோகஸ்வெவ, நாமல்கம மற்றும் கருவலகஸ்வெவ குடியேற்றத்திட்டங்களுக்கு அருகிலுள்ள தமிழர்களின் விடயத்தில் நடைபெறுகின்றது. டி.எஸ். சேனாநாயக்கா அவர்களின் காலம் முதல் சிறைக் கைதிகள் உள்ளிட்ட சிங்களவர்கள், திட்டமிட்ட அடிப்படையில் வடக்கு கிழக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அடிக்கடி கூறப்படுவது போன்று தமிழர்கள் தங்களுக்கு மத்தியில் வாழும் சிங்களவர்களை எதிர்க்கவில்லை. மாறாக சிங்களவர் அவ்வாறு குடியேறுவதற்கு அரச காணிகளையும் நிதிகளையும் வழங்குவதைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். முல்லைத்தீவில், திருகோணமலையில், ஏனைய பிரபலமான சம்பவங்களில், தமிழர்கள் வளங்கள் குறைந்த முகாம்களுக்கும் குடியேற்றங்களுக்கும் தள்ளப்படும் அதேவேளை அரசாங்கம் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காக தனிப்பட்ட காணிகளையும் வழங்கியுள்ளது.

வவுனியாவின் போகஸ்வெவ குடியேற்றத்தை நோக்குவோமாயின் அது வவுனியா மற்றும் அநுராதபுரத்தை உள்ளடக்கியதாக அமைந்துள்ள 20 ஹெக்டயர் கொண்ட அடர்த்தியான காட்டில் அது அமைந்துள்ளது. அந்தக் குடியேற்றங்களில் ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள். அவர்கள் படுகொலை செய்யப்படவில்லை. மாறாக அவர்கள், எல்லாத் தமிழர்களும் விடுதலைப் புலிகளே என்ற இராணுவத்தின் நெறிதவறிய எடுகோளின் காரணமாக யுத்த காலத்தின் போது வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுற்றதன் பின்னர், இடம்பெயர்ந்தவர்களுக்கான (அதாவது பிரதானமாக தமிழர்கள்) நிதிகளைப் பயன்படுத்தி அகதிகளை மீள் குடியேற்றுதல் என்ற சாக்கில் சுமார் 3,000 சிங்களவர்கள் கொண்டு வரப்பட்டனர். முக்கியமான நீர் வளங்களைக் கட்டுப்படுத்தி, காணிகளிலுள்ள அனைத்து குளங்களும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் ஒதுக்கங்களாக மாற்றப்பட்டுள்ள ஒரு பாரிய சதித்திட்டத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழு இதில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? தேர்தல்கள் திரிபுபடுத்தப்படுகின்றன, ஜனநாயகம் மழுங்கடிக்கப்படுகின்றது

ஜனநாயக முறையில் குரல் கொடுத்து தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் தாக்கம் செலுத்தக்கூடிய உள்ளூர் சமுதாயங்களின் வாக்குகள் ஐதாக்கப்படுவது ஒரு புறமிருக்க, இந்தக் குடியேற்றவாதத்தின் ஒரு பிரதான இலக்கு, சிங்களவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிங்களவர்கள் இருக்க வேண்டும் என்பதும் அதற்காக புதிய குடியேற்றங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதுமாகும்.

இந்த மோசமான செயற்திட்டத்தின் பின்னால் எதிர்நோக்கப்படும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, அரசாங்க அதிபர்கள், தேர்தல் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பிரதான தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்படுவர்கள் என்ற வகையில், போலியான அகதிகளுக்கு முடிக்குரிய காணிகளைப் பராதீனப்படுத்தும் அதிகாரமும் அரசாங்க அதிபருக்கு உள்ளது. இரண்டாவது, வாக்காளர்களைப் பதிவுசெய்யும் தேர்தல் உத்தியோகத்தர்கள். அப்படியாயின்?

திருமதி பீ.எஸ்.எம். சால்ஸ் அவர்கள் (2018.10.01 – 2012.05.15 வவுனியா மாவட்ட செயலகத்தினால் பட்டியல்படுத்தப்பட்டுள்ளவாறு)

அப்போது வவுனியா அரசாங்க அதிபராக இருந்த திருமதி பீ.எஸ்.எம். சால்ஸ், 2010ஆம் ஆண்டின் தேர்தல்களை கடமையுணர்வுடன் கையாண்டார். அவர் கடந்த வருடத்தில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு, சிலவேளை அவர் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் அதிகாரத்திற்கு தலைசாய்க்க விரும்பாமை காரணமாக இருக்க முடியும். பொது மக்களின் கண்டனங்களைத் தொடர்ந்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டிய நிலைக்கு அவருடைய அமைச்சர் தள்ளப்பட்டார். அவருடைய உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, அவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டி ஏற்பட்டது.

திருமதி சால்ஸ் அவர்களுக்குப் பதிலாக விரைவாக ஒரு புதிய அரசாங்க அதிபர் கொண்டுவரப்பட்டார்; அவர் பொதுவான கணக்கீட்டு நடைமுறைகளைத் தவிர்த்து குறுக்கு வழிகளில் மீள் குடியேற்றக்காரர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு காணிகளையும் நிவாரணங்களையும் பகிர்ந்தளித்தார் என்று வவுனியாவிலுள்ள எனது உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். முக்கியமான பதவியான தேர்தல் ஆணையாளர் நாயகம் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது. அதற்கு தேர்தல் அனுபவம் தேவை, அது அந்த அரசாங்க அதிபருக்கு உள்ளது. ஒரு தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலாளருக்குரிய புரொடட்கோல் பதவியைக் கொண்டுள்ளார். தற்போது ஒரு அரசாங்க அதிபராக உள்ள அவர், நாங்கள் விளம்பரப்படுத்தியிருந்தால், அவர் விண்ணப்பித்திருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நியமிக்கப்பட வேண்டுமா, நீதிமன்றத்தில் சாட்சிகூறாத உத்தியோகத்தர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நியமிக்க மறுப்பது, தேர்தல் ஆணைக்குழுவைச் சட்டச் சிக்கல்களில் தள்ளிவிடும் என்று எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதனால், மிகச் சிறந்த இலங்கையரைத் தேடுவதற்காக வெளியாரிடமிருந்து அப்பதவிக்கு விண்ணப்பம் கோராமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தேர்தல் ஆணைக்குழு உள்ளது.

2010 ஆம் ஆண்டளவில் எமது வவுனியா தேர்தல் உத்தியோயகத்தர்கள் அதிகளவில் தமிழ் வாக்காளரகளைப் பிரதிபலிக்கும் வகையில் காணப்பட்டனர். ஒரு சிங்கள ரோமன் கத்தோலிக்கரான அப்போது வவுனியாவின் பாதுகாப்பு படைக் கமாண்டர், அப்போதிருந்த தேர்தல்கள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் வவுனியாவில் உள்ள எமது சிரேஷ்ட தமிழ் உத்தியோகத்தர்களை நீக்குமாறு கோரினார். அத்துடன், உதவி அரசாங்க அதிபர்கள் போன்ற அனைத்து சிங்களவர்கள் அல்லாத உத்தியோகத்தர்களும் நீக்கப்பட வேண்டும் என்றும் கோரினார். இந்த நடவடிக்கை, ஒரு தெளிவான அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது ஒரு புறமிருக்க, மக்களின் வாக்களிப்பதற்கான உரிமைகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளுக்கும் மொழி மற்றும் கலாசார ரீதியான தடைகளை ஏற்படுத்தியது. நாங்கள் அதற்கு இணங்கவில்லை.

அத்தகைய சில அரசியல் குறுக்கீடுகளின் காரணமாக சில அரசாங்க அதிபர்கள் 2015ஆம் ஆண்டில் தேர்தலின் போது எங்களைத் தோல்வியடையச் செய்தார்கள்.  ஆட்சியிலிருந்த கட்சி பிரதான தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் வாக்காளர்களின் தகவல்களைக் கோரிய போது, வடக்கு கிழக்கிலுள்ள பல அரசாங்க அதிபர்கள் அத்தகவல்களைக் கோரி எமது அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஒரு துணிச்சல்மிக்க அலுவலர் அதனை நிராகரித்ததனால் இந்த துஷ்பிரயோகம் வெளிச்சத்துக்கு வந்தது.

காலனித்துவத்திற்கான எமது நான்காவது அலை ஜனநாயகத்தைச் சீரழித்துள்ளது.

சான்று

இவை அனைத்தும் என்னால் கற்பனையாக உருவாக்கப்பட்டவை என்று நிராகரிக்கப்பட முடியும். எவ்வாறாயினும், இந்த இனவாத குடியேற்றம் செய்தவர்களின் இரண்டாவது பிரச்சினை சதித்திட்டத்தன்மை கொண்டது.   தமிழர்களை இடமாற்றுவது என்ற பாதுகாப்புப் படைகளின் தளபதியின் மூலமான அந்த ஆவண விசாரணை, நிராகரிக்கப்பட முடியாததாகும். வாக்காளர் இடாப்புக்கள் மற்றொரு ஆவண விசாரணைக்கான சான்றுகளாகும்.

வாக்காளர் இடாப்புக்கள் தமிழர்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத யுத்தத்திற்கான சான்றுகளாகும்

சிங்கள குடியிருப்பாளர்கள் உள்ளே அழைத்து வரப்பட்ட போது, தங்களது சொந்த வீடுகளில் சுதந்திரமாக மீள்குடியேறிய தமிழர்கள் அடித்துத் துரத்தப்படுவதை இராணுவம் உறுதிசெய்தது. ஆனால், தமிழர்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தை தேர்தல் ஆணைக்குழுவின் பதிவுகளில் கண்டு கொள்ள முடியும். நிர்ப்பந்திக்கப்பட்ட குடியேற்றங்களின் பின்னர், அந்த குடியேற்றவாதிகளை அவர்களின் “வீட்டு முகவரிகள்” அக்குடியேற்றங்களில் இருப்பதாக அவர்களை வாக்காளர்களாகப் பதிவதற்கு தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக எனது உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர்.

இது வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறப்பமடு கிராம உத்தியோகத்தர் பிரிவான போகஸ்வெவவின் கதையாகும். 1989ஆம் ஆண்டில் 63 வாக்காளர்களைக் கொண்ட ஒரு முக்கியத்துவமற்ற கலப்புக் கிராமமாக இருந்து 2000ஆம் ஆண்டில் முழுமையாகக் கைவிடப்பட்டது. சிங்களவர்கள் மெதுமெதுவாக முழுமையாகக் குடியேறியதுடன் திருமதி சால்ஸ் மாற்றப்பட்டதன் பின்னர் 2012ஆம் ஆண்டில் சிங்களவர்களின் எண்ணிக்கையில் பாரிய வளர்ச்சியை அவதானிக்க முடியும். பின்னர் 2017ஆம் ஆண்டில் அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு சில பகுதிகள் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதனால் 2016ஆம் ஆண்டின் பின்னரான தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை.

வருடம் கிராமம் வாக்காளர்கள்
1989/91 போகஸ்வெவ 63
1995 போகஸ்வெவ 15
2000 போகஸ்வெவ கைவிடப்பட்டது
2005 போகஸ்வெவ கைவிடப்பட்டது
2010 போகஸ்வெவ கைவிடப்பட்டது
2011 போகஸ்வெவ 202
2012

திருமதி சார்ல்ஸ் வெளியேற்றப்பட்டார்

போகஸ்வெவ 172
2013

துண்டாடப்பட்டது

போகஸ்வெவ, போகஸ்வெவ 1, வெஹரதென்னகம, நாமல்கம, நந்திமித்ரகம, செலஹினிகம, போகஸ்வெவ 2 முறையே 152, 201, 830, 425, 309,368, 694
2014

மேலும் துண்டாடப்பட்டது

நந்திமித்ரகம, போகஸ்வெவ 1, வெஹரதென்னகம, போகஸ்வெவ 2, நாமல்கம, செலஹினிகம முறையே, 481, 425, 683, 85,66,85,745
2015

மேலும் துண்டாடப்பட்டது

நந்திமித்ரகம, போகஸ்வெவ 1, வெஹரதென்னகம, போகஸ்வெவ 2, நாமல்கம, செலஹினிகம, நந்திமித்ரகம (பகுதி) முறையே 518, 532, 795, 782, 768, 800
2016

மேலும் துண்டாடப்பட்டது

வெஹரதென்னகம (பகுதி), போகஸ்வெவ 1 (பகுதி), போகஸ்வெவ 2 (பகுதி, நாமல்கம (பகுதி), செலஹினிகம (பகுதி), நாமல்கம (பகுதி), நந்திமித்ரகம (பகுதி), செலஹினிகம (பகுதி), நாமல்கம (பகுதி), போகஸ்வெவ 1 (பகுதி), போகஸ்வெவ 2 (பகுதி, வெஹரதென்னகம (பகுதி) முறையே 28, 488, 133, 173, 240, 498, 13, 524, 607, 39, 614, 673

அநுராதபுரம்-வவுனியா எல்லை அநுராதபுரத்தினுள் மறைக்கப்படும் வவுனியா தெற்கு கிராமங்கள்

அரிசி கிறிஸ்தவத்திலிருந்து சிம்மாசன பெளத்தத்தை நோக்கி.

கிறிஸ்தவர்கள் அரிசிக்காக மதம் மாறியவர்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் தேர்தல் வேட்புரிமையைப் பலவீனப்படுத்துவதன் மூலம் பல தேசியவாதிகள், மற்றொரு வழியில் பாகுபாடு காட்ட முயற்சிக்கின்றனர். எனவே இது ஒரு “சிம்மாசன பெளத்தர்கள்” யுகமாகும். அரச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் நாங்கள் பெளத்தர்களாக இருக்க வேண்டும். கண்டியின் தமிழ் நாயக்கர் அரசர்கள் இந்தக் கலையை மிகவும் சிறப்பாகச் செய்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் தமிழ் சைவர்களாகவும் வெளியில் பெளத்தத்தின் போஷகர்களாகவும் இருந்தார்கள்.

இதனையே எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக, ஜேர்.ஆர். ஜயவர்தன ஆகிய இருவரும் செய்தனர் – அங்கிலிக்கன்களாகப் பிறந்து வளர்ந்த அவர்கள் பெளத்தத்தை தழுவினார்கள், சிறிது காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றார்கள். ஒருவரின் சிறுபான்மை நம்பிக்கையை மறுப்பதற்கான எதிர்ப்பு அழுத்தத்தை ஒரு கத்தோலிக்க பக்தரான திருமதி சால்ஸ் அவர்கள் தனது முகத்தில் பொட்டும் திருநீறும் வெளிப்படுத்துகின்றன.

தனிப்பட்ட சமயம்: தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பதியில் கடவுள்களுக்கு தனது பாரத்திற்குச் சமனாக ஐம்பொன் வழங்குகிறார்.

எவ்வாறாயினும், பழைய சமயமான இந்து மதம் பலவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. ரணில் விக்கிரமசிங்க ஒரு இந்து பக்தரைப் போன்று தைக்கப்படாத வேட்டியும் தமிழர்களின் சால்வையும் அணிந்து இந்தியாவில் வழிபாட்டில் ஈடுபடும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ இந்துக் கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை.

வடக்கு கிழக்கில் இந்துக்களை எதிர்க்கும் இந்த கனவான்கள் எப்போதும் இந்தியாவுக்குச் சென்று இந்துக்களைப் போன்று வழிபாடு செய்யுமளவுக்கு ஏன் இந்து மதத்தினால் கவரப்பட்டுள்ளார்கள்? அவர்களுடைய அரசாங்கங்கள் ஏன் இந்துக்களை வேரறுப்பதற்கும், அவர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதற்கும், அவர்களுடைய கோயில்களை பெளத்த கோயில்கள் என்று பெயர் மாற்றம் செய்வதற்கும் முயற்சின்றன?

நாங்கள் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவோம். நாங்கள் அனைவரும் நாங்கள் விரும்பும் மொழியைப் பேசுவோம், எமது உண்மையான சமயத்தைப் பின்பற்றுவோம். ஜனநாயகம் வெற்றியடைய வேண்டுமாயின், சமயம், மொழி, வாழும் பிரதேசம் எதுவாக இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது திறமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வதற்கும் எங்களுக்கு அந்தச் சுதந்திரங்கள் தேவைப்படுகின்றன.

அதேவேளை எமது ஆட்சியாளர்கள் தாம் பாகுபாடுகளை இல்லாதொழிக்கப் போவதாகக் கூறும் போது அதனை இலங்கையிலுள்ள எவருமே நம்புவதில்லை. அவர்கள் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குறுதி வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் பொய்யுரைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் இதனை காணாமல் இருக்க முடியுமா? அல்லது அவர்களது அமைப்பும் எங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் ஏமாற்று வித்தை தானா? பொய் கூறியது போதும்!! இந்த விடயங்கள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களும் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களாகும். அவ்வாறில்லாவிடால் தண்டனை விடுபாட்டுரிமையுடன் எங்களைக் கொல்வதற்கும் எங்களில் சிறந்தவரை தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிப்பதைத் தடுப்பதற்கும் எமது ஆட்சியாளர்களுக்கு அதிகாரமளிக்க விரும்புகிறோம் என்பதே அதன் அர்த்தமாகும்.

எஸ். ரத்னஜீவன் எச். ஹூல்