“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனும்.”

கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன் மொஹம்மட் நியாஸ் இவ்வாறு கூறுகிறார்.

கண்டி, திகனை, தெல்தெனிய பகுதிகளில் சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரம் இடம்பெற்று நேற்றுடன் ஒரு வருடமாகிறது. அந்தப் பகுதிகளில் கலவரத்தின் அடையாளங்களை இன்றும் நாம் காணலாம். அடையாளங்கள் கட்டடங்களாக மட்டுமே வெளித்தெரிகின்றது போலவே பாதிக்கப்பட்ட மக்களின் மனதின் ஆழத்தில் தேங்கியிருக்கும் வலியும் அப்படியேதான் இருக்கிறது. அவ்வாறானதொரு வலியுடன் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி நடந்த சம்பவத்தை நியாஸ் நினைவுகூருகிறார்.

நியாஸின் கடைக்கு முன்னால் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் லாபீர் ஜும்மா பள்ளிவாசல் அடிப்படைவாதிகளால் முற்றாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கும் பணி ஆரம்பமாகவிருக்கின்ற போதிலும் தங்களுடைய முன்னோர்கள் கட்டிய பள்ளிவாசலை இடிப்பது கவலையைத் தரக்கூடியது என்கிறார் நியாஸ்.

“முழுக்கடையுமே எரிஞ்சிருச்சி. ஒரு சாமான கூட எடுக்கமுடியல்ல. அதே கிழமையில சூட்டோட சூட்டா வெட்கத்துக்கும் சேர்த்து கண்டி கச்சேரியில் வைச்சு ஒரு லட்சம் தந்தாங்க. அதுக்குப் பிறகு இதுவரைக்கும் ஒன்டுமே கிடைக்கல்ல” என்று கூறுகிறார் நியாஸ்.

2018 மார்ச் 5 என்ன நடந்தது?, யார் யார் தாக்குதல் நடத்தினார்கள்?, அரசாங்கத்தின் நஷ்டஈடு, ஒரு வருடத்தின் பின்னர் தற்போதை நிலைமை பற்றி நியாஸ் என்ன கூறுகிறார் என்பதை கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

ஆசிரியர் குறிப்பு: திகனை கலவரத்துடன் தொடர்புபட்ட கட்டுரைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.