பட மூலம், Twitter

உக்ரின்மாஸிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான இந்த யோசனையை பயன்படுத்தி அமைச்சரவை பல வழிகளில் தவறாக வழிநடத்தப்பட்டது. அதில் இந்த வழிமுறையும் ஒன்று. உக்ரின்மாஸின் யோசனையை  அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதென  கேள்விப் பத்திர சபை தீர்மானித்து இரண்டு வாரங்களின் பின்னர், உக்ரின்மாஸின் இயக்குநர் டீஏ பெரெகுடொவ் விமானப் படைக்கு கடிதமொன்றை எழுதினார். குறிப்பிட்ட கடிதத்தில் அவர் மிக்27 விமானங்களில் பொருத்துவதற்குத் தாங்கள் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்திருந்த இயந்திரங்களை வேறொரு வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு விற்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலாக வேறு நான்கு இயந்திரங்களை வழங்குவதற்கு தயார் என பெரெகுடொவ் தெரிவித்திருந்தார். இந்த இயந்திரங்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மதிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதேவேளை,  கேள்வி பத்திர சபையினாலும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கவில்லை. அத்தோடு, வேறு வகையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சு அமைச்சரவைக்கும் தெரிவிக்கவில்லை.

2006 இல் ஒப்பந்தம் இறுதியாக கைசாத்திடப்பட்ட பின்னரே இந்த விமானக் கொள்வனவு நடவடிக்கை மூலம் உண்மையில் பயனடையப்போகின்றவர் யார் என்பது தெரியவந்தது. லண்டன் முகவரியையும் பக்ஸ் இலக்கத்தையும் கொண்டிருந்த பெலிமிசா ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனமே இதன் மூலம் நன்மையடையவிருந்தது. அந்த நிறுவனத்தின் முகவரி உட்பட ஏனைய விடயங்கள் உண்மையானவையா என்பதை பாதுகாப்பு அமைச்சு ஆராயவில்லை.

ஒப்பந்தம் கைச்சாத்தாகி  இரண்டு மாதங்கள் ஆவதற்குள் செப்டெம்பர் 2006 இல் விமானப் படையைச் சேர்ந்த வட்டாரங்கள் எனக்கு பெருமளவு ஆவணங்களை வழங்கின என இக்பால் அத்தாஸ் குறிப்பிடுகின்றார். நான்கு மிக் 27 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையே இந்த ஆவணம்  எனவும் அவர் தெரிவிக்கின்றார். நான் இது குறித்து பல மாதங்களாக ஆராய்ந்தேன், பாதுகாப்பு விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற இராஜதந்திரிகள் உட்பட பல தரப்பினருடன் ஆராய்ந்தேன் என அவர் தெரிவிக்கின்றார். அதன் பின்னரே என்ன நடக்கின்றது என்ற முழுமையான விபரத்தை அறிந்துகொள்ள முடிந்தது எனவும் இக்பால் அத்தாஸ் குறிப்பிடுகின்றார்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரைன் தனிநாடாகியது. இந்நிலையில் மிக் விமானங்கள் பல வெயிலிலும் பனியிலும் மழையிலும் பயனற்றுக் காயும் நிலையேற்பட்டது. இலங்கைக்கு இந்த விமானங்களை வழங்குவதற்கு சிங்கப்பூர் நிறுவனமொன்று உட்பட பல நிறுவனங்கள் முயன்றன. இதில் பல முறைகேடுகள் உள்ளன போல தோன்றுகின்றது என  இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.

டிசம்பர் 2006 இல் மிக் விமானக் கொள்வனவு மோசடியை முதன்முதலில் அத்தாஸ் பகிரங்கப்படுத்தினார், இது நாடுகளுக்கு இடையிலான நடவடிக்கை என்ற போர்வையில் இடம்பெற்ற வர்த்தக  செயற்பாடு என அவர் குறிப்பிட்டார். 2000ஆம் ஆண்டு விமானப் படை கொள்வனவு செய்தவற்றில் எஞ்சியிருந்த விமானங்களே 2006 இல் அதிகூடிய விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அகந்தை மனோபாவம் கொண்ட, பழிவாங்கும் நோக்கமுள்ள அதிகாரம் மிக்க நபர்கள் என் மீது பயங்கரமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சு தனது பகிரங்க அறிக்கைகளில் இக்பால் அத்தாஸை துரோகி என வெளிப்படையாகக் குறிப்பிட்டது. அவரது பாதுகாப்பு விலக்கப்பட்டதுடன் அவர் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார். எனது சங்கடமான பகிரங்கப்படுதல்கள் காரணமாக யாரோ எங்கோ ஆழமாக காயமடைந்துள்ளனர் என நான் உணர்ந்தேன் என இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டார்.

பெலிமிசா ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனம் குறித்து செய்தி வெளியிட்டதன் மூலம் 2007 ஜூலை மாதத்தில் மிக் விமானக் கொள்வனவின் நியாயபூர்வ தன்மை குறித்து சண்டே லீடர் கேள்வி எழுப்பியதுடன் லசந்த விக்கிரமதுங்கவும் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த நிறுவனத்திற்கே விமானப்படை மிக் கொள்வனவிற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. ஆனால், இவ்வாறான ஒரு நிறுவனம் இங்கிலாந்தில் இருக்கவில்லை. விமானப் படையுடனான ஒப்பந்தங்களிற்காக பெலிமிசா போலியான முகவரியையும் பக்ஸ் இலக்கத்தையும் பயன்படுத்தியுள்ளது என்று லசந்த வெளிப்படுத்தியிருந்தார்.

2007ஆம் ஆண்டு இந்த விபரம் வெளியான பின்னரே ராஜபக்‌ஷ தெரண தொலைக்காட்சியின் 360 நிகழ்ச்சிக்கு சென்றார், தில்கா சமன்மலியுடனான பேட்டியில் மிக் விமான கொள்வனவில் தனக்கு நேரடி தொடர்பில்லை எனத் தெரிவித்தார். அந்தப் பேட்டியைப் பார்த்த தந்தை இது தொடர்பில் இன்னொரு கட்டுரையை எழுதும் உற்சாகத்தில் காணப்பட்டார் என அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவிக்கின்றார்.

விமானக்கொள்வனவின் போது விலைகளில் காணப்படும் வித்தியாசத்தையும் ராஜபக்‌ஷ நியாயப்படுத்தினார். 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட விமானத்தின் ஆயுள்காலம் இரண்டு வருடங்களே என அவர் தெரிவித்தார். 2006 இல் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களின் ஆயுள்காலம் எட்டு வருடங்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக விலை அதிகரிப்பு நியாயப்படுத்தக்கூடியது என அவர் தெரிவித்தார். எனினும், சண்டே ஒப்சர்வர் இந்த ஆவணங்களை ஆராய்ந்தவேளை புள்ளி விபரங்களில் பல மர்மங்கள் இருப்பது தெரியவந்துள்ளது,.

ஆயுள்காலம்

2000ஆம் ஆண்டு செலவு குறைந்த ஆறு புதிய விமானங்களைக் கொள்வனவு செய்து விமானப் படையிடம் வழங்கியிருந்தனர். இந்த விமானங்கள் ஒன்றிலிருந்து இரண்டு வருடகால ஆயுளை கொண்டிருந்தன. இவை 750 முதல் 850 மணித்தியாலங்கள் பறக்கக்கூடியன. இதன் காரணமாக அந்த விமானங்கள் 750 மணித்தியாலங்கள் பறந்த பின்னரோ அல்லது இரண்டு வருடங்களின் பின்னரோ அவற்றை பழுதுபார்க்கவேண்டும். விமானப் படையினர் ஒரு மாதத்திற்கு 100 மணித்தியாலங்கள் மாத்திரம் பயன்படுத்த எண்ணியிருந்தனர் என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 2006இல் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களை ஆறு முதல் எட்டு வருடங்களிற்கு பயன்படுத்தலாம். அதன் பின்னரே பழுதுபார்க்கவேண்டும். ராஜபக்‌ஷவும் இதனையே தெரிவித்திருந்தார். எனினும், இந்த விமானங்களும் 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்கள் போன்று 850 மணித்தியலாங்கள் பறக்ககூடியவை. ஒவ்வொரு விமானங்களும் பறந்த மணித்தியாலங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை எட்டு வருடங்கள் பயன்படுத்தலாம்.

எட்டு வருடகாலத்திற்கு முன்னரே இந்த விமானங்களின் 850 மணித்தியால பறப்பு காலம் முடிவிற்கு வந்துவிடும் என ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சோ விமானப்படையோ சுட்டிக்காட்டவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான யுத்தம் மீள ஆரம்பமாகயிருந்த நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் சுட்டிகாட்டவில்லை.

2000 மற்றும் 2006 இல் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களின் இயந்திரங்களும் 500 முதல் 550 மணித்தியால பயன்பாட்டை மாத்திரம் கொண்டிருந்தன. ஏழு வருடங்களின் பின்னர் இயந்திரங்களைப் பழுதுபார்க்க வேண்டியிருக்கும் என 2006 இல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2000ஆம் ஆண்டில் இது இரண்டு வருடமாகக் காணப்பட்டது. ஏழு வருடங்கள் நீடிக்கவேண்டும் என்றால் விமானப் படை இந்த இயந்திரங்களை ஒரு மாதத்தில் ஆறு மணித்தியாலத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. போர் இடம்பெறும் ஒரு நாட்டுக்கு எந்த வகையிலும் இது பொருந்தாது.

2000ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கும் 2006 ஒப்பந்தத்திற்கும் இடையில் இன்னொரு வித்தியாசமும் காணப்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஆயுள்காலம் அல்லது பறக்கும் மணித்தியாலங்கள் தொடர்பில் எந்த குளறுபடிகளும் காணப்படவில்லை. இருந்தபோதிலும் 2006 மேற்கொண்ட ஒப்பந்தத்தின் 13.4 கீழ் (இணைப்பு இல 4) 13.1 மற்றும் 13.2 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, கேள்விப் பத்திர சபை மற்றும் அமைச்சரவை ஆகியன கருத்தில் கொள்ள தவறிய மற்றொரு விடயம் இது.

தெரண பேட்டிக்குப் பல மாதங்களின் பின்னர் 2007 செப்டெம்பரில் விக்கிரமதுங்க மிக் விமானக் கொள்வனவில் ராஜபக்‌ஷவுக்கு உள்ள தொடர்புகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டார். பாதுகாப்புச் செயலாளர் தனது உறவினரான உதயங்க வீரதுங்கவின் ஈடுபாட்டுடன் முதலில் இந்த விமானக் கொள்வனவு யோசனையைப் பெற்றார் என்றும் பல வழமையான கொள்வனவு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என சண்டே லீடர் தெரிவித்தது.

இந்தக் கட்டுரைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் அழுத்தங்கள் காரணமாக  மிக் விவகாரத்தை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் முன்வந்தது. எனினும், இந்தக் குழு ஒருபோதும் அமைக்கப்படவில்லை.

மாறாக இந்தக் கட்டுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கோட்டபாய ராஜபக்‌ஷ லசந்த விக்கிரமதுங்கவிற்கும் அவரது பத்திரிகைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

மவுன்ட்லவேனியா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு இடம்பெறவிருந்த நிலையிலேயே இக்பால் அத்தாஸ் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டார், பின்னர் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்பால் அத்தாஸ் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிடம் வாக்குமூலம் அளிக்கும்வரை – 2015 இந்த விவகாரம் செய்திகளில் இடம்பெறாத நிலையில் காணப்பட்டது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் (Police Financial Crime Investigation Division) விசாரணைகள் இக்பால் அத்தாஸ் மற்றும் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தெரிவித்த விடயங்கள் சரியானவை என்பதை உறுதி செய்துள்ளன. உதயங்க வீரதுங்க இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பை கொண்டுள்ளார் என எவ்.சி.டி தெரிவித்துள்ளதுடன் அவரை சந்தேகநபராக அறிவித்துள்ளது. பெலிமிசா நிறுவனத்தின் பின்னால் உள்ள சிங்கப்பூர் வர்த்தகரை கண்டுபிடித்துள்ள காவல்துறையினர் குறிப்பிட்ட போலி நிறுவனம் பிரிட்டிஸ் வேர்ஜின் தீவுகளை  தளமாகக் கொண்டது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

எவ்.சி.டியினர் உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டு உக்ரைன் அரசாங்கத்தின் ஆதாரங்களையும் பெற்றுக்கொண்டனர். உக்ரைன் அரசாங்கம் மிக் விமானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் 2006 இல் எந்தவித உடன்படிக்கையையும் செய்துகொள்வில்லை என தெரிவித்துள்ளது. இலங்கை விமானப் படையினருடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் போலியானதாகும். உக்ரைன் அரசாங்கம் சிங்கப்பூரைச் சேர்ந்த டி.எஸ்.லீ மற்றும் என்ஜி.லே.கிம் ஆகிய இருவருக்கும் மிக் விமானங்களை விற்பனை செய்துள்ளது. அவர்கள் அதனை இலங்கை விமானப் படைக்கு வழங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பிரஜைகள் ஒரு விமானத்துக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட கொஞ்சம் அதிகமாக வழங்கியதாக உக்ரைன் அரசாங்கம் எவ்.சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளது. அதாவது, விமானப் படையினர் பெலிமிசா ஹோல்டிங்கிற்கு ஒவ்வொரு விமானத்திற்கும் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு மிக் விமானத்திலும் 100 வீத இலாபம் பெற்றது யார் என்பது குறித்து எவ்.சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்வனவு நடைமுறையை ஆரம்பித்து வைத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு தலைமை வகித்த முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக ஆகியோரை எவ்.சி.ஐ.டியினர் விசாரணை செய்துள்ளனர். எனினும், இருவரையும் விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் என குறிப்பிடவில்லை. மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் தான் எவ்.சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ராஜபக்‌ஷ உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்றமும் பொலிஸார் கைதுசெய்வதைத் தடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

(முதல் பாகம்: மேலும் குண்டுகள் விழும் மிக் வியாபாரம்)

சண்டே ஒப்சர்வரில் வெளியாகிய More Bombs Drop on the “Mig Deal” என்ற கட்டுரையின் தமிழாக்கமே (இறுதிப் பாகம்) இங்கு தரப்பட்டுள்ளது.