பட மூலம், The Global Mail

2006 இல் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய ஆயுதகொள்வனவுடன் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களும், மக்களிடமிருந்து ஆயுதக்கொள்வனவு தொடர்பான உண்மையை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இழிவான முயற்சிகள் குறித்த தகவல்களும் தொடர்ந்தும் வெளியாவதை அடுத்து சர்ச்சைக்குரிய மிக் விவகாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது.

2006 டிசம்பரில் மிக் விவகாரத்தை முதன்முதலில் அம்பலப்படுத்திய சண்டே டைம்ஸின் பாதுகாப்புச் செய்தியாளர் இக்பால் அத்தாஸ், தான் மிக் விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட பின்னர் தனக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டதாகவும், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தகவல்களை வழங்கியவர்களைக் கண்டுபிடித்து மௌனமாக்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்றன எனவும் இக்பால் அத்தாஸ்  தெரிவித்துள்ளார்.

புலனாய்வு செய்தி தொடர்பான நிலையத்தின் ஆரம்ப நிகழ்வில் முக்கிய உரையை ஆற்றுகையில் மிக் விவகாரம் குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக தானும் தனது குடும்பத்தவர்களும் என்ன விலையைச் செலுத்தவேண்டியிருந்தது என்பதை இக்பால் அத்தாஸ் முதல் தடவையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களிற்கு முன்னர் மிகவும் உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். அந்த இரவே நான் தாய்லாந்திற்கு தப்பிச்சென்றேன் என இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். மறுநாள் காலை ஒருவர் எனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் செல்வதை எனது வாகனச்சாரதி அவதானித்தார் என இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். அவரது இடுப்பில் கைதுப்பாக்கி காணப்பட்டது எனவும் தனது வாகனச்சாரதி தெரிவித்தார் என இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கம் குறித்து ஆராய்ந்தவேளை அது லொறியொன்றின் பதிவு இலக்கம் என தெரியவந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு இரண்டு கிழமைக்கு பின்னர் மிக் விவகாரத்தை தொடர்ச்சியாக பகிரங்கப்படுத்தி வந்ததன் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொண்ட லசந்த விக்கிரமதுங்க வீதியில் வைத்து அவரது வாகனத்தை இடைமறித்த மோட்டார் சைக்கிள் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். விக்கிரமதுங்க படுகொலையிலும் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகள் குறித்த விசாரணைகளால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தான் கொல்லப்படலாம் என தனது தந்தை எதிர்பார்த்தார் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க சிஐடியினரிடம் தெரிவித்திருக்கிறார். சிஐடியினர் இதனை மவுன்லவேனியா நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துமுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த விவகாரத்தில் தனக்குத் தொடர்பில்லை, இது குறித்து எதுவும் தெரியாது எனத் தொடர்ச்சியாக மறுத்துள்ளார். பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவே இந்த படுகொலையை திட்டமிட்டு நடத்தினார் எனத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சொந்த இராணுவத் தளபதியை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் அரசியல் இலாபம் பெற விரும்பாததன் காரணமாகவே தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை குறிக்கு முகமாக எழுதிய கட்டுரையொன்றில், அஹிம்சா விக்கிரமதுங்க 2007 ஆகஸ்ட் மாதம் ஒலிபரப்பான கோட்டாபய ராஜபக்‌ஷவின் தெரன தொலைக்காட்சி பேட்டி குறித்து முதல்தடவையாக கவனத்தை ஈர்த்திருந்தார். குறித்த பேட்டியில் கோட்டாபய ராஜபக்‌ஷ மிக் விவகாரத்தில் தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் எவ்வித பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் வாகனங்களில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனத் தெரிவித்திருப்பதை அஹிம்சா சிஐடியினரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இந்தப் பேட்டி சிஐடியினரிற்கான முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என அஹிம்சா கருதுகின்றார்.

ஜனவரி ஏழாம் திகதி தெரன தொலைக்காட்சி கோட்டாபய ராஜபக்‌ஷவுடனான பேட்டியின் பிரதியை வழங்கவேண்டும் என நீதிமன்றத்திடம் சிஐடியினர் கேட்டுக்கொண்டனர். அதற்கான அனுமதியையும் பெற்றனர். பத்து நாட்களின் பின்னர் 17ஆம் திகதி தெரன தாங்கள் கோரிய பிரதியை வழங்க தவறிவிட்டது என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு கடந்தவாரமே கிடைத்தது, நாங்கள் அந்த வீடியோவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம் என தெரனவின் அதிகாரியொருவர் சண்டே ஒப்சர்வரிற்குத் தெரிவித்தார். “எங்களிற்கு கிடைத்ததும் அதனை நீதிமன்றத்திடம் கையளிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தெரன தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் தில்கா சமன்மலி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் துருவி துருவி மிக் விமானக் கொள்வனவு குறித்து கேள்வி கேட்கும் வீடியோவின் ஒரு பகுதியை சண்டே ஒப்சர்வர் பெற்றுக்கொண்டுள்ளது. மிக் விமானக்கொள்வனவின் மூலம் நான் பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளேன் என குற்றம்சாட்டும் நோக்கில் ஊடகங்கள் மிக் விவகாரத்தை கிளறுகின்றன என கோட்டாபய ராஜபக்‌ஷ அந்தப் பேட்டியில் தெரிவிக்கின்றார். குறிப்பிட்ட விமானக்கொள்வனவு மூலம் பணத்தைப் பெறுவதென்றால் நான் எனது செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், நான் அவ்வாறு செய்யவில்லை என கோட்டாபய ராஜபக்‌ஷ மறுக்கின்றார்.

மிக் விமானங்களை எந்த நாட்டிடமிருந்து கொள்வனவு செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை விமானப் படையினரே எடுத்தனர் என குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பிட்ட விமானத்தை குறிப்பிட்ட நாட்டிலிருந்து கொள்வனவு செய்யுமாறு நான் யோசனையை முன்வைத்திருந்தால் நான் பணம்பெறும் நோக்கிலேயே அவ்வாறு தெரிவித்தேன் என குறிப்பிடலாம். ஆனால், நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றார். அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது உண்மையா என்ற சந்தேகம் சண்டே ஒப்சர்வர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை விமானப் படையினரிடம் உள்ள மிக் 27 விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விமானப் படையினரும் அதன் தளபதியான டொனால்ட் பெரேராவும் ஆர்வமாகயிருந்தனர் என கோட்டாபய தெரிவிப்பது மறுக்கப்படமுடியாத விடயம். 2005 மே மாதத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்பதற்கு ஆறு மாதங்களிற்கு முன்னரே மேலதிக மிக் 27 விமானங்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று கோரும் கடிதமொன்றை டொனால்ட் பெரேரா பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பிவைத்துள்ளார். ஆனால், விமானங்களை வழங்குவதற்காக சில நாடுகள் முன்வைத்த யோசனைகள் (கேள்வி பத்திர முறையில்லாமல்) குறித்து விமானப்படை தளபதி தயக்கம் கொண்டிருந்தார். குறிப்பாக உக்ரின்மாஸ் நிறுவனம் மார்ச்சிலிருந்து விடுத்த வேண்டுகோள் குறித்து அவர் தயக்கம் கொண்டிருந்தார். கடந்த வருடம் கேள்விப்பத்திர சபை இந்த வேண்டுகோளை நிராகரித்திருந்தது.

“இதுபோன்ற யோசனைகளை ஏற்றுக்கொள்வதை விட திறந்த கேள்விப்பத்திரமொன்றை வெளியிடவேண்டும். இதுவே விமானப்படைக்கான பொருத்தமான விமானத்தை கொள்வனவு செய்வதற்கு பொருத்தமாகயிருக்கும் என நான் கருதுகிறேன்” என  விமானப் படைத் தளபதி தெரிவித்திருந்தார். ஜனவரி 2006 இல் விமானப் படைத் தளபதி புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்கவிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

“விமானப் படைக்குத் தேவையான மேலதிக நான்கு மிக் விமானங்களை சாதாரண கேள்விப் பத்திர நடைமுறையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி தாருங்கள்” என்று விமானப் படைத் தளபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் எழுத்துமூலம் கேட்டிருந்தார். எனினும், வழமையான கேள்விப்பத்திர நடைமுறைகளுக்கு பதில் விமானப் படைத் தளபதி 2006 பெப்ரவரி 6ஆம் திகதி ராஜபக்‌ஷ, அவரது உறவினரான உதயங்க வீரதுங்க மற்றும் உக்ரைனின் உக்ரின்மாஸ் நிறுவன அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பிற்காக பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அந்தச் சந்திப்பின் பின்னர் டொனால்ட் பெரேரா வழமையான கேள்விப்பத்திர நடைமுறைகளிற்கான தனது போராட்டத்தை கைவிட்டார்.

அவரின் வழமையான கேள்விப் பத்திர நடைமுறையைப் பின்பற்றியிருந்தால் 2000ஆம் ஆண்டு விமானங்கள் கொள்வனவு செய்ததைப் போன்று பல விநியோகஸ்தர்களின் கோரிக்கைகளை பரிசீலித்துப் பார்த்திருக்கக் கூடியதாக இருந்திருக்கும். மாறாக தானாக முன்வந்த நிறுவனமொன்று (உக்ரின்மாஸ்) முன்வைத்தவேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்ட அதேவேளை, தாங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே விநியோகம் இடம்பெறும் என்பதைக் காண்பிப்பதற்காக முறைப்படி வேண்டுகோளை முன்வைக்குமாறு உக்ரின்மாஸ் நிறுவனத்திடம் கேட்கும் நிலை ஏற்பட்டது.

வேறு எந்த கேள்விக் கோரல்களும் இல்லை

இது நான்கு  மிக் 27 விமானங்களை தலா 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு வாங்குவதற்கும், தற்போது பாவனையிலுள்ள நான்கு விமானங்களை தலா 860,000 முதல் 1.14 மில்லியன் டொலர்களிற்கும் பழுதுபார்ப்பதற்கான யோசனையாகும். பாதுகாப்பு அமைச்சின் ஊடாக விமானப் படையினர் குறிப்பிட்ட யோசனையை முறைப்படி பெற்றுக்கொண்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிக் 27 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான இந்தத் தனியொரு யோசனையை மதிப்பீடு செய்வதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார். வழமையான நடைமுறைகளைப் பின்பற்றி ஏனையவர்களிடமிருந்து கேள்விப்பத்திரங்களை கோராமல் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ராஜபக்‌ஷவின் வேண்டுகோளின் கீழ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் பழுதுபார்ப்பதற்காகவும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு நியமிக்கப்பட்ட போதிலும், விமானங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கையை இந்தக் குழு மதிப்பீடு செய்வதில் பிரச்சினை காணப்பட்டது.

பெப்ரவரி 21 2006 இல் இக்குழு நியமிக்கப்பட்டவேளை மிக் விமானங்களை பழுதுபார்ப்பதற்கான வேறு கேள்விப்பத்திரங்களை விமானப்படை ஏற்கனவே கோரியிருந்தது. இந்த கேள்விப்பத்திர நடைமுறைகளை கண்காணிக்கும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திர சபையில் ராஜபக்‌ஷ இடம்பெற்றிருந்ததால் அவருக்கு இது நன்கு தெரிந்திருந்தது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திர சபை 2006 ஜனவரி 20ஆம் திகதி சந்தித்திருந்தது, அந்தக் கூட்டத்தின் குறிப்புகள் இவ்வாறு தெரிவிக்கின்றன – அதுவரை கோரப்பட்ட கேள்விப்பத்திரத்திரங்களை இரத்துசெய்துவிட்டு இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்றமாக  இந்தியாவின் பழுதுபார்க்கும் M/S HAL நிறுவனத்திடமிருந்து புதிய யோசனைகளை கோருமாறு அமைச்சரவைக்கு  பரிந்துரை செய்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையை கோட்டாபய ராஜபக்‌ஷ புறக்கணித்தார். மார்ச் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கையெழுத்திற்காக பாதுகாப்பு அமைச்சு தயாரித்த அமைச்சரவை பத்திரம் வேறு முடிவுகளைக் கொண்டிருந்தது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திர சபையின் பரிந்துரைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இருந்தபோதிலும், அரசாங்கங்களுக்கு இடையில் இடம்பெறுவதாக இருந்தாலும்  புதிய யோசனைகளை கோருவது என்பதை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே செய்யவேண்டியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிக்விமானங்களை பழுதுபார்ப்பதற்காக கோரப்பட்ட நான்கு கேள்விப்த்திரங்களை இரத்துச்செய்துவிட்டு பொருத்தமான நிறுவனத்திடமிருந்து- அரசாங்க அரசாங்க அடிப்படையில் புதியயோசனைகளை கோருவதற்கான அனுமதியையும் அமைச்சரவையிடமிருந்து அந்த ஆவணம் கோரியிருந்தது.

அதேவேளை, ஏப்ரல் 6ம் திகதி அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கிய அத்தருணத்தில் ஏற்கனவே, ராஜபக்‌ஷ உக்ரின்மாஸிடமிருந்தும் உறவினர் உதயங்க வீரதுங்கவிடமிருந்தும் ‘கோரப்படாத யோசனைகளைப்’ பெற்றிருந்ததுடன் அதனை விமானப்படையினரிடமும் சமர்ப்பித்திருந்தார். மேலும், உக்ரைன் நிறுவனத்தின் யோசனையையும், இந்தியாவின் HAL ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் யோசனையையும் ஆராய்வதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவை நியமிப்பதற்கான உதவியையும் அவர் தேசிய கொள்வனவு அதிகார சபையிடமிருந்து பெற்றிருந்தார்.

மிக் விமானக்கொள்வனவு குறித்து வேறு எவரும் விருப்பத்தினை சமர்ப்பிக்காததால் 2006 ஏப்ரல் 26ஆம் திகதி தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு உக்ரின்மாஸின் யோசனையை ஏற்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமானப்படைக்குப் பரிந்துரைசெய்தது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படவிருக்கின்ற விமானங்கள் 2000ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த விமானங்களை விட பழையது மட்டுமல்லாது அதனை விட அதிக விலை கூடியது என்பது பிரச்சினையாக இருக்கவில்லை.

உக்ரைனின்  உக்ரின்மாஸ் யோசனைக்கும் இந்தியாவின் HAL யோசனைக்கும் இடையில் நிதிவிடயங்கள் தொடர்பில் காணப்படும் வேறுபாடு குறித்து மதிப்பீட்டுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உக்ரின்மாஸின் யோசனை குறித்த அறிக்கையின் ஒரு பகுதியில் கொடுப்பனவுகள் யாரிடம்  மேற்கொள்ளப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படாத அதேவேளை இந்திய நிறுவனம் கொடுப்பனவுகள் தனது நிறுவனத்திடமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

உக்ரிமாஸ் எனத் தெரிவிக்கப்படும்  நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் ஆரம்பம் முதல் நிதி உக்ரைன் அரசாங்கத்திற்கு செல்லாது பெயர் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பிற்கே செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அந்த மூன்றாம் தரப்பு யார் என்ற விபரம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தெளிவாக தவிர்க்கப்பட்டிருந்தது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தால் மிக்விமான கொள்வனவு இரு நாடுகளிற்கு இடையில் இடம்பெறவில்லை என்பதும் மாறாக மூன்றாம் தரப்பொன்றே இதன் மூலம் நன்மையடையவுள்ளது என்பதும் கவனத்தை ஈர்த்திருக்கும்.

கோட்டாபய ராஜபக்‌ஷ, தேசத்தை கட்டியெழுப்பும் விவகாரங்களிற்கான அமைச்சர்  எம்.எஸ். ஜயசிங்க,பிரதி திறைசேறி செயலாளர் எஸ்.பி. திவாரட்ண ஆகியோரை உள்ளடக்கிய கேள்விப் பத்திர சபை மே 5 2006 இல் இடம்பெற்ற தனது சந்திப்பில் மதிப்பீட்டுக் குழு அறிக்கை குறித்து ஆராய்ந்தது. ஆரம்ப யோசனையை பெற்றுக்கொண்ட ராஜபக்‌ஷவிற்கு மாத்திரம் மூன்றாம் தரப்பிற்கே பணம் செல்லப்போகின்றது என்ற விபரத்தை மதிப்பீட்டுக் குழு அறிக்கை கைவிட்டிருந்தமையை கேள்விப் பத்திர சபைக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதன் அறிக்கையும் பணம் மூன்றாம் தரப்பிற்கே செல்லப்போகின்றது என்ற விடயத்தை தவிர்த்திருந்ததுடன் இது அரசாங்கங்களிற்கு இடையிலான நடவடிக்கை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருந்தது. ராஜபக்‌ஷ கேள்விப் பத்திர சபையின் அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்திருந்ததுடன் அமைச்சரவையை அரசாங்கங்களுக்கு இடையிலான பரிவர்த்தனையின் கீழ் உக்ரின்மாஸ் யோசனைக்கு அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.

(இறுதிப் பாகத்தை எதிர்பாருங்கள்)

சண்டே ஒப்சர்வரில் வெளியாகிய More Bombs Drop on the “Mig Deal” என்ற கட்டுரையின் தமிழாக்கமே (முதல் பாகம்) இங்கு தரப்பட்டுள்ளது.