பட மூலம், Selvaraja Rajasegar
இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது. இந்த யுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறிப்பாக வடக்குக் கிழக்கிலே வாழும் சமூகங்களை மோசமாகப் பாதித்திருக்கிறது. மண் மீட்பு என்ற கோசத்துடனும், தேசிய விடுதலை என்ற வேட்கையுடன் ஆரம்பித்த போராட்டத்தின் துர்பாக்கியமான விளைவுகளிலே சிலவாக மக்கள் ஏற்கனவே தம்மிடம் இருந்த காணிகளை சிங்கள தேசியவாத அரசியலுக்கு அரணாக அமையும் இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்ததும், தமிழ் மக்களின் மத்தியிலே கருத்துக்களை வெளியிடுவது தொடர்பிலே உளவியல் ரீதியிலான ஒரு சமூக அச்சம் உருவாகியமையும், இன முரண்கள் மேலும் கூர்மையடைந்தமையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் அமைந்தன. போராட்டத்துக்கு முன்பிருந்த சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. வடக்கில் போருக்குப் பின்னர் இடம்பெற்று வரும் அரச ஆதரவுடனான வலிந்த பௌத்த மயமாக்கம் சில வகைகளில் அதனது கோரத் தன்மை மேலும் அதிகரித்தும் இருக்கிறதனையே எமக்குக் காட்டுகிறது.
தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துடன் இணைந்த வகையில் விடுதலை கோரி இயங்கிய இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட இராணுவமயமாக்கமும், அது ஏற்படுத்திய ஜனநாயக மறுப்பும், சமூகத்தின் சிந்தனைப் போக்கினைப் பொது வெளியிலே உறைந்து போகச் செய்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக போரினை நேரடியாக எதிர்கொண்ட சமூகங்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசினது மீள்கட்டுமாணப் பணிகளின் தோல்வியும், என். ஜீ. ஓக்களினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முயற்சிகளின் தொலைநோக்கற்ற, கட்டமைப்பு சார் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத பார்வையும், இன்று போரினால் பாதிப்புற்ற சமூகங்கள் நுண் நிதிக் கம்பனிகளின் பிடியில் அகப்பட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ரீதியிலே போருக்குப் பின் உருவாகும் எழுத்துக்களின் பணி என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த எழுத்துக்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வரும் செய்தி என்ன? இவற்றின் வரலாற்றுப் பங்கு எத்தகையது? கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையில் இவை எவ்வாறான ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றன?
போருக்குப் பின்னைய காலத்திலே வடக்குக் கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்கள் போரின் போது தாம் அடைந்த இழப்புக்களையும் அடக்கு முறைகளையும் பற்றித் தமது நாளாந்த வாழ்க்கையில் பன்மையான முறைகளிலே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல்கள் புலிகள் உள்ளடங்கலாக எல்லா விதமான அதிகார மையங்களினாலும் இழைக்கப்பட்ட ஜனநாயக விரோத, விடுதலை விரோதச் செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவனவாகவே அமைகின்றன. ஆனால், பொதுவெளியில் தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களிலும், நினைவுகூரல்களிலும், வரலாற்று உருவாக்கச் செயன்முறைகளிலும் சமூகத்தின் கீழ் மட்டங்களில் அவதானிக்கப்படும் நுணுக்கமான வெளிப்பாடுகளுக்கும், பன்மைத்துவக் குரல்களுக்கும் உரிய இடம் கிடைப்பதில்லை. அரசியற் கட்சிகளாக இருந்தாலும் சரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த அமைப்புக்களும் சரி, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலான மத மற்றும் சமூகத் தலைவர்களையும், பல்துறைகளிலும் பணியாற்றுவோரினையும் உள்ளடக்கிய சிவில் சமூகக் குழுக்களும் சரி, தொழிற்சங்கங்களாக இருந்தாலும் சரி, வடக்குக் கிழக்கின் தமிழ்ப் பொது வெளியில் செயற்படும் முக்கியமான தரப்புக்களிலே, ஒரு சில தனித்த குரல்களைத் தவிர, கடந்த காலம் பற்றிய உரையாடல்களைத் திறந்த மனத்துடன் உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே தொடர்ந்தும் இருக்கின்றன. ஆதிக்கத் தமிழ்த் தேசியவாத நிலைக்கு மாற்றாகவும், புலிகளின் அரசியலில் அவதானிக்கப்பட்ட பாசிசக் கூறுகளை விமர்சிப்பனவாகவும் அமையும் கலை, இலக்கியப் படைப்புக்களினைத் தடை செய்வதிலும், அவற்றுக்கு எதிராக வன்மம் மிக்க பிரசாரங்களை மேற்கொள்வதிலுமே எமது புத்திஜீவிகளிலே பெரும்பாலானோர் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டிலே இடம்பெற்ற யாழ்ப்பாணத் திரைப்பட விழாவிலே ஜூட் இரத்தினத்தின் டீமன்ஸ் இன் பரடைஸ் (Demons in Paradise) என்ற படத்தினை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சமூகப் பொதுவெளிகளைத் தமது கட்டுப்பாட்டிலே வைத்திருக்கும் புலமைசார் மற்றும் மேற்தட்டு வர்க்கத்தினரின் ஆதிக்க அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
வெவ்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் ஒத்துழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலே உருவாகிய தமிழர் மருத்துவ நிலையத்திலே தான் பணிபுரிந்த நாட்களிலே இடம்பெற்ற சம்பவங்களினதும், அந்த நாட்களிலே தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினதும் அடிப்படையில் எழுதப்பட்ட நினைவு மீட்டல் புத்தகமாக அண்மையில் வெளிவந்த நோயல் நடேசனின் எக்ஸைல் என்ற நூல் அமைகிறது. இயக்கங்களினது ஜனநாயக மறுப்பு அரசியல் காரணமாக அவற்றுடன் பொது நோக்கங்களுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், அரசியல் விடுதலையின் பொருட்டும் இணைந்து செயற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனத்தினையும், விரக்தியினையும் இந்த நூல் உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது. இது சிவில் யுத்தம் தொடர்பாகத் தமிழர் தரப்பின் மத்தியில் பெரிதும் பேசப்படாத சில பக்கங்களைப் பேசும் ஒரு நூல். செய்திப் பத்திரிகைகளிலும், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கிகளின் பத்திகளிலும் வெளிவராத சில உண்மைகளையும், நினைவுகளையும், சம்பவங்களையும் இந்தப் புத்தகத்தில் இருந்து நாம் வாசித்தறியக் கூடியதாக இருந்தது. ஆயுதப் போராட்ட காலங்களில் நாடு கடந்த நிலையில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி இந்த நூல் பல செய்திகளையும், குறிப்புக்களையும் தாங்கியதாக உள்ளது. தமிழ்த் தேசத்தினை மையமாகக் கொண்ட வன்முறைக்குத் தேசங்கடந்த ஒரு பரிமாணமும் இருக்கிறது என்பதனைச் சொல்லும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது.
தேசம் கதைகளிலே வாழ்வதாக ஹோமி பாபா என்ற பின்காலனிய சிந்தனையாளர் குறிப்பிடுவார். தேசத்தின் கதைகளினைக் குறுகிய தேசியவாதம் எப்போதுமே தூய்மைப்படுத்தித் தனக்கு அசௌகரியமானவற்றினை பிரித்து நீக்கியே பெரும்பாலும் சொல்ல முற்படுகிறது. அவ்வாறு தேசியவாதம் தன்னை வெளிப்படுத்தும் போது ஏற்படும் அறிவு சார் வன்முறை சமூகத்தின் அரசியல் பிரக்ஞையின் மீதான ஒரு வன்முறையாகவும், பன்மைத்துவம், விடுதலை மற்றும் நீதிக்கான குரல்களின் மீதான ஒரு வன்முறையாகவும் அமைகிறது. தேசத்தின் உள்ளிருக்கும் முரண்கள், அதன் மையத்துக்கும், விளிம்புக்கும் இடையில் இருக்கும் உறவுகள், தேசத்தின் எல்லைக்கோட்டின் வெளியில் இருப்போருக்கும் அதன் உள்ளிருப்போருக்கும் இடையிலான கதைகள் போன்றன வெளிக்கிளம்பும் போதே தேசியவாதத்தின், தேசத்தின் பேரில் இடம்பெறும் வன்முறைகள் வெளிவருகின்றன. இதுவே விடுதலை பற்றி நாம் மீளவும் புதிய முறையில் சிந்திக்க எம்மைத் தூண்டும். நோயல் நடேசனின் நினைவுப் பதிவுகள் தனியே அவரினது ஞாபகங்களின் தொகுப்பல்ல; அவை தேசத்தினைப் பற்றிய பதிவுகள்; எம்மத்தியிலே இருக்கும் தேசச் சிந்தனையின் போதாமைகளை வெளிக்கொண்டு வரும் விளிம்பில் இருந்து அல்லது தேசத்தின் வெளியில் இருந்து தேசத்தினை நோக்கும் வகையிலாக, எம்மைச் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள். நாம் எமது வேறுபட்ட அனுபவங்களுடன், வேறுபட்ட நினைவுகளுடன், பன்மைத்துவத்தினை சிதைக்காத முறையில் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் மக்கள் மைய அரசியல் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு எக்ஸைல் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படும் உண்மைகளும், உரையாடல்களும் முக்கியமானவை. இவை உண்மை, நீதி, நல்லிணக்கம் போன்ற செயன்முறைகள் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் மாத்திரமல்ல, கடந்த கால உள்ளக வன்முறையினால் பிளவுற்றுப் போயிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட இடம்பெற வேண்டும் என்பதனை அடிக்கோடிட்டுச் சொல்லுகின்றன.
விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றி எழுதும் நடேசன் உண்மைக்கான தேடல் என்பதனை நாம் கொலையாளிக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் தண்டனை வழங்குவதற்கான ஒரு செயன்முறையாகக் குறுக்கிவிடக் கூடாது என்பதனை வலியுறுத்துகிறார்; மாறாக இதனை பொறுப்புக் கூறலுடன் தொடர்பான செயன்முறையாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையினை அறிவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு முயற்சியாகவும் நடேசன் காண்கிறார்.
ஈ-பி-ஆர்-எல்-எஃப் உள்ளடங்கலாக வெவ்வேறு இயக்கங்களில் அவதானிக்கப்பட்ட இனவெறி உணர்வுகளை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்திலே மலையாளி ஒருவரினை ஈ-பி-ஆர்-எல்-எஃப் இயக்கத்தினர் சிங்களவர் எனக் கருதி எவ்வாறு தாக்கினர் என்பதனை நடேசன் வேதனையுடன் விபரிக்கிறார். இவ்வாறான இனவெறி இயக்கங்களில் இருந்து வெளிப்பட்ட அவற்றுக்கே உரித்தான ஒரு அகவயமான வெறி அல்ல; இந்த இனவெறிக்கான சமூகப் பொருளாதாரத் தளம் ஒன்று இருக்கின்றது என்பதனை நூல் எடுத்துக்காட்டுகிறது. வட அமெரிக்காவில் இருந்து வந்த சில புலம்பெயர் தமிழர்கள் தாம் ஒரு தொகைப் பணத்தினை வைத்திருப்பதாகவும், எந்த இயக்கம் கொழும்பிலே ஒரு குண்டுத் தாக்குதலினை மேற்கொள்வார்களோ அவர்களுக்கே அந்தப் பணத்தினைத் தாம் வழங்குவோம் என சென்னையிலே வைத்துத் தம்மைச் சந்தித்தோரிடம் அவர்கள் சொன்ன விடயத்தினையும் வாசிக்கும் போது எமது விடுதலையின் இலக்குகள் எவ்வாறு சமூகத்தினைச் சேர்ந்த பணபலம் மிக்கவர்களினால் மாற்றியமைக்கப்பட்டன என்பதனை நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. ஏனைய இனத்தவர் மத்தியிலே எமது போராட்டம் பற்றிய நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவதற்கு எமது சமூகத்திலே பலம் படைத்தவர்கள் எவ்வாறு இயக்கங்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பதனை நாம் இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேவேளையிலே புலம்பெயர் சமூகங்களினைச் சேர்ந்தவர்களிடம் அவதானிக்கப்படும் இனவாதத்துக்கு அவர்கள் முன்னர் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட முறைகளும், வன்முறைகளும் கூடக் காரணங்களாக அமைகின்றன என்பதனையும் நடேசன் மற்றொரு இடத்திலே சுட்டிக்காட்டுகிறார்.
இடதுசாரி நிலைப்பாடிலான தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் அடிக்கடி கதைத்து வேதனைப்படும் ஒரு விடயம் சிங்கள இடதுசாரிகள் எவ்வாறு பேரினவாதத்தினைத் தழுவி சிறுபான்மையினரையும், அவர்களது நீதிக்கான போராட்டங்களினையும் கைவிட்டார்கள் என்பது. இந்த நூலிலே ஒரு பகுதியிலே நூல் ஆசிரியர் நடேசனுக்கும் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர் ஒருவருக்கும் இடையில் 1980களில் அநுராதபுரத்திலே சிங்களவர் மீது புலிகள் மேற்கொண்ட இனவெறித் தாக்குதல் பற்றிய ஒரு சம்பாசணை இடம்பெறுகிறது. இந்தச் சம்பாசணையில் இருந்து நான் விளங்கிக்கொள்வது யாதெனில் 1980களிலும் அதற்குப் பின்னரும் சிங்களவர்களின் மத்தியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் பற்றிப் பேசிய ஒரு சில சிங்கள இடதுசாரிகளையும் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் சார்பிலே போராடியவர்களும் எவ்வாறு கைவிட்டோம் என்பதனை; நாம் எவ்வாறு சிங்கள் இடதுசாரிகளை எமது வன்மம் மிக்கப் பதிலடிச் செயற்பாடுகளின் மூலமாக சிங்கள சமூகத்தினை எதிர்கொள்ள முடியாது செய்தோம் என்பதனைப் பற்றியும், அவர்கள் தொடர்ந்தும் எமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டோம் என்பதனையும் போருக்குப் பிந்தைய காலத்திலே சிந்திக்க வேண்டியதன் அவசியத்தினை இந்த நூல் உணர வைக்கிறது. அநுராதபுரப் படுகொலைகள் நோயல் நடேசன் தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்திலே நம்பிக்கை இழப்பதற்கும் காரணமாக அமைந்தன.
நடேசனின் அனுபவங்கள் தென்னிந்தியா தவிர இலங்கையில் அதிலும் தென்னிலங்கையிலே அவர் வாழ்ந்த காலத்திலே அவர் எதிர்கொண்ட சிங்கள இனவாத நிகழ்ச்சிகள் பற்றியதாகவும் அமைகிறது. வடக்குக் கிழக்குக்கு வெளியிலே வாழும் தமிழர்கள் பற்றி எமது தமிழ்த் தேசியவாத அரசியல் பெரிதாகச் சிந்தித்தது கிடையாது. சர்வதேசத்திடம் எமக்கு நீதி கேட்கும் போது நாம் எமது நீதிக்கான கோரிக்கைக்களுக்கு வலுச் சேர்க்கும் கறிவேப்பிலைகளாகவே நாம் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்கள் எதிர்கொண்ட இனவாதத்தினையும் பல சமயங்களிலே பயன்படுத்தி இருக்கிறோம். வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்டு நாம் முன்வைக்கும் அரசியற் தீர்வுகளினால் வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பது பற்றித் தேசியவாதம் பேசும் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. சிங்கள -பௌத்தத் தேசியவாதிகள் தீவு முழுவதும் தமது சமூகத்துக்கே உரியது என்ற மனநிலையிலே செயற்படுகிறார்கள். தமிழ்த் தேசியவாதிகளிலே பலர் வடக்குக் கிழக்கிலே தமிழ்த் தேசத்துக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். இந்த இரண்டு தரப்புக்களுமே வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக இருப்பதற்கு உரிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவதற்குச் சார்பாகவே தமது கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைத்து வருகிறார்கள். தனது அடையாளத்தினை மாற்றினால் ஒழியத் தென்னிலங்கையிலே நடேசனுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையினைச் சிங்களத் தேசியவாதம் உருவாக்குகிறது எனில், வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசியவாதம் தென்னிலங்கையினைச் சிங்கள தேசம் எனச் சொல்லிச் சொல்லியே அந்த நிலைமை நீடிப்பதற்கு வழிசெய்கிறது என்பதனை நாம் நினைவில் நிறுத்துவது நல்லது. ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறுபான்மையாக வாழும் மக்கள் பற்றி எமக்கு இருக்கும் கரிசனையின்மை காரணமாகவே வடக்கிலே இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதனையும் இங்கு மீட்டிப் பார்ப்பது பொருத்தமானது.
ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தவிர, சிலோனினைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்துடன் சென்னையில் நடேசன் எதிர்கொண்ட அனுபவங்களினையும் சுவாரஸ்யமான முறையிலே எக்ஸைல் பதிவிடுகிறது. நடேசனின் நூலிலே தென்னிந்தியாவுக்கும், வட இலங்கைக்கும் இடையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலே இருந்த தொடர்புகள் குறித்தும், அரசுகளின் கண்காணிப்புக்களையும் மீறி மக்கள் வியாபார நிமித்தமும், தொழில் தேடியும் எவ்வாறு இரு இடங்களுக்கும் பயணம் செய்தார்கள் என்பது பற்றியும் விபரணம் மிக்க முறையிலே சொல்லப்பட்டிருக்கிறது. காசியானந்தன் பிரபாகரன் மீது வைத்திருந்த அபரிமிதமான ‘விசுவாசத்தினை’ நடேசன் நகைச்சுவை மிக்க முறையில் கூர்மையாக விமர்சிக்கிறார். ரெலோ இயக்கத்தினர் தம்மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தியாவினைக் கோரிய போதும், அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பினையும் இந்தியா வழங்காமையினைச் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் அவ்வாறான ஒரு நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிலே சிலர் புலிகளையும் மக்களையும் 2009இல் இந்தியா காப்பாற்றும் என நினைத்தமை ஒரு முரண்நகை என எழுதுகிறார். பிராந்திய வல்லரசு எமது போராட்டத்திலே ஏற்படுத்திய அழிவுகளையும், குழப்பங்களையும் விமர்சிக்க நடேசன் தவறவில்லை.
நடேசனின் அனுபவங்கள் தமிழ்ச் சூழலிலே நினைவுகூரல் செயற்பாடுகள் குறித்து மீளச் சிந்திப்பதற்கும், போரின் வடுக்களை ஒழிப்பு மறைப்பின்றிப் பேசவும் எமக்கு அறிவுறுத்தவனவாக அமைகின்றன. போருக்குப் பிந்தைய இன்றைய காலப் பகுதியிலே தமிழ் மக்கள் எவ்வாறு ஏனைய சமூகங்களுடன் இணைந்து அரசினது இனவாதத்தினையும், புறமொதுக்கும் ஏனைய தேசியவாதங்களையும் முறியடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிச் சிந்திப்பதற்குத் தூண்டும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது. தேசியவாதங்களின் புறமொதுக்கும் போக்குகளில் இருந்தும், அரசினாலும் இயக்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கற் சூழலில் இருந்தும் எம்மை விடுவித்து, நாம் வாழுகின்ற பிரதேசங்களிலும், வேலை செய்கின்ற பிரதேசங்களிலும், எமது அடையாளங்களும் நாமும் கௌரவமான முறையில் நடாத்தப்பட, நாம் எவ்வாறு போராடப் போகிறோம் என்பதனைத் தீர்மானிக்க எமக்குச் சில பாதைகளைக் காட்டக் கூடிய ஒரு நூலாகவே நான் நடேசனின் நூலினைப் பார்க்கிறேன். எமது போராட்டங்கள் எவ்வாறு எதிர்காலத்திலே இருக்க வேண்டும் என்று எந்த விதந்துரைப்பினையும் இந்த நூல் வெளிப்படையாக மேற்கொள்ளாவிடினும், இந்த நூலினை நாம் இன்றைய அரசியற் சூழலிலே எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், அதிலிருந்து நாம் எதனைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதிலேயே இந்த நூலின் வரலாற்று வகிபாகம் தங்கியிருக்கும் என நான் நினைக்கிறேன். இவ்வாறான நூல் முயற்சிகள் ஆதிக்கச் சக்திகளினால் மறைக்கப்பட்ட வரலாறுகளை சமூகத்திடம் கொண்டு சென்று சேர்ப்பதுடன், எமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய மாற்று அரசியற் சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடிய வல்லமை மிக்கனவாகவும் அமைகின்றன.
மகேந்திரன் திருவரங்கன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத் துறை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.