பட மூலம், Selvaraja Rajasegar

நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன விடுத்த வேண்டுகோளின் பேரில் கெஹான் குணதிலக, கலாநிதி கலன சேனாரத்ன, கலாநிதி அசங்க வெலிகல ஆகியோர் இந்தச் சட்டக் கருத்தினை தயாரித்தனர்.

26 ஒக்டோபர் 2018 இற்குப் பின்னர் இலங்கை எதிர்பாராத அரசியல் பொருளாதார அரசியலமைப்பு நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இந்த நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. அவரின் இந்த நடவடிக்கைககள் ஒவ்வொன்றும் எங்களைப் பொறுத்தவரை அரசமைப்பை மீறும் செயற்பாடுகளாகும். ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் உருவாகியுள்ள சூழ்நிலை குறித்த அரசமைப்பு கேள்விகளுக்குப் பதில் அளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கேள்விகள் அரசியல் கட்சியொன்று தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது – பிரதமர் நீக்கப்படுவது நியமிக்கப்படுவது, அரசமைப்பின் சிங்கள ஆங்கில பதிப்புகள் மத்தியிலான குறைபாடுகள் மற்றும் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான கேள்விகளுடன் தொடர்புடையவை.

1. தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதால் பிரதமர் பதவியில் வெற்றிடம் ஏற்படுமா?

தேசிய அரசாங்கத்திலிருந்து ஒரு கட்சி விலகினால் அதன் காரணமாக அரசாங்கத்தை அல்லது அமைச்சரவையைக் கலைக்கலாம் அல்லது பிரதமர் பதவி வெற்றிடமாகும் என அரசாங்கத்தின் எந்த ஏற்பாடும் தெரிவிக்கவில்லை. அரசமைப்பின் 46(4) (5) பிரிவு  தேசிய அரசாங்கம் குறித்து குறிப்பிடுகின்றது. எனினும், இவ்வாறான விளைவுகள் குறித்து அதில் குறிப்பிடவில்லை.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பாதிப்பு  ஒன்றேயொன்றுள்ளது. 30 அமைச்சர்கள், 40 பிரதியமைச்சர்களை மாத்திரம் நியமிக்கலாம் என்ற விதிமுறை செயலற்றுப்போகின்றது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றம் தீர்மானிக்கலாம், அது வழமையை விட அதிகமானதாக காணப்படலாம்.

அதேபோன்று தேசிய அரசாங்கம் செயழிலந்தால் அதனால் ஏற்படும் ஒரேயொரு சட்டவிளைவு என்னவென்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் இணை அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைக்கப்படவேண்டும்.

அமைச்சர்கள் நியமனம் மற்றும் நீக்குவது போன்ற அனைத்து விடயங்களையும் சட்டபூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்றால் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடன் அதனை மேற்கொள்ளவேண்டும்.

2. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறக்கூடியவர் என தான் கருதும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்கியுள்ளதா?

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை எந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டிருக்கின்றார் என்ற தனது அகநிலையான கருத்தை அடிப்படையாக வைத்து  பிரதமரை ஒருதலைப்பட்சமாக நீக்குவதற்கான அதிகாரத்தை அரசமைப்பு  ஜனாதிபதிக்கு வழங்கவில்லை. மரணம், இராஜினாமா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுதல் ஆகிய சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிரதமர் பதவி வெற்றிடமாகும்.

அரசமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலை மற்றும் நடைமுறைகளின் கீழ் நாடாளுமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துவிட்டதை வெளிப்படுத்தினால்  மாத்திரமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறவேண்டும்.

அரசமைப்பின் 42(4) பிரிவு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என யாரை ஜனாதிபதி கருதுகின்றாரோ அவரை நியமிக்கலாம் என தெரிவிக்கின்றது. ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதன் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சொற்றொடரின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.

குடியரசின் ஜனாதிபதியின் அதிகாரம் என்பது பொதுநலன் தொடர்பாகவும் அது தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் பயன்படுத்துவதற்காக அரசமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரமாகும். இந்த அதிகாரத்தை தனிப்பட்ட நோக்கங்களுக்காக தனது விருப்பங்களின் படி  ஜனாதிபதி பயன்படுத்த முடியாது.

ஜனநாயக அரசமைப்பினை அர்த்தப்படுத்த முயல்வதன் முதலாவது நோக்கம் ஜனநாயகம் – அரசியலமைப்புவாதம் – நல்லாட்சி பொதுநலன் ஆகிய கொள்கைகளை ஊக்குவிப்பதாகும். ஜனாதிபதியின் வசதிக்காகவோ அல்லது ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்காகவோ அரசமைப்பினை அழிப்பதற்கான இரகசிய சதிகளுக்காகவோ அல்லது பக்கச்சார்பான அரசியல் நலன்களுக்காகவோ அல்லது அரசாங்கங்களை விரைவாக மாற்றுவதற்காகவோ இது ஏற்படுத்தப்படவில்லை.

மேலும் அரசமைப்பின் 42(4) இல் ஜனாதிபதியின் கருத்து என தெரிவிக்கப்படுவது அவரது தனிப்பட்ட அகநிலை கருத்தையல்ல. மாறாக அது நாடாளுமன்றத்தின் விருப்பத்துடன் உருவாக்கப்படுகின்ற கருத்தையே குறிப்பிடுகின்றது.

மேலும், பிரதமர் பதவி வெற்றிடமாகவுள்ள சந்தர்ப்பங்கள் குறித்து மாத்திரமே அரசமைப்பின் 42(4) குறிப்பிடுகின்றது. ஆனால், ஒக்டோபர் 26ஆம் திகதி 2018இல் உருவான நிலை முற்றிலும் வித்தியாசமானது. அவ்வேளை பிரதமர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

இலங்கையின் அரசமைப்பு பிரதமரை பதவி விலக்குவதற்கானஅதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் வெளிப்படையான விதிமுறைகளை கொண்டிருக்கவில்லை.

2015 இல் 19ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் மரணம், இராஜினாமா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் சூழ்நிலையில் மாத்திரமே பிரதமர் பதவி வெற்றிடமாகும். அல்லது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை, ஒதுக்கீட்டு சட்டமூலம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றில் ஒன்றின் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதன் மூலம் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை முற்றாக இழப்பதன் காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாகலாம்.

பிரதமர் பதவி இவ்வாறான சூழ்நிலைகளிலேயே இல்லாமல் போகும் என அரசமைப்பு தெரிவித்துள்ளதன் காரணமாகவும் கடந்த காலங்களில் பிரதமரை தனது விருப்பத்தின் படி பதவி விலக்குவதற்கு ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரங்களை நீக்கியுள்ளதன் காரணமாகவும் பிரதமர் பதவி வேறு எந்த காரணத்தினாலும் வெற்றிடமாக முடியாது என்ற நிலை காணப்படுகின்றது.

மேற்குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு வகையில் பிரதமர் தனது பதவியை இழந்தால் மாத்திரமே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்கலாம்.

19ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியாக இரண்டு தடவைகளே ஒருவர் பதவி வகிக்கலாம் என்ற மாற்றம் இடம்பெற்றுள்ளதால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி திடீர் என வெற்றிடமாகும் பட்சத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க கூடிய ஒருவரையே பிரதமராக ஜனாதிபதி நியமிக்கவேண்டும்.

ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்த அதிகம் புறக்கணிக்கப்பட்ட, ஆனால், முக்கியமான விடயம் என்னவென்றால் ஜனாதிபதி பதவிக்கு இரண்டு முறை தெரிவு செய்யப்பட்ட எவரும் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை இழந்துவிட்டனர் ( 31(2) – 92(சி) என்பதால் ராஜபக்‌ஷவும் ஜனாதிபதியாவதற்கான  தகுதியை இழந்துவிட்டார் என்பதே.

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் நாடாளுமன்றம் முடிவடையாத காலப்பகுதிக்கு – ஜனாதிபதியாகத் தகுதியான ஒருவரையே தெரிவு செய்யும். இதன் காரணமாக இரண்டுமுறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறான விசேட சூழ்நிலையில் மீண்டும் பதவியேற்பதற்கு தெளிவான தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 26ஆம் திகதி புதிய பிரதமரை நியமிப்பது என எடுக்கப்பட்ட தீர்மானம் சட்ட மற்றும் அரசியல் காரணிகளை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்த விடயத்தை இங்கு பதிவு செய்துள்ளோம்.

3. அரசமைப்பின் ஆங்கில சிங்கள பதிப்புகளுக்கு மத்தியில் காணப்படும் வித்தியாசம் பிரதமரை அகற்றுவதற்கும் நீக்குவதற்குமான ஒரு தலைப்பட்சமான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றதா?

அரசமைப்பின் 48ஆவது பிரிவு குறித்து சிங்கள – ஆங்கில பதிப்புகளுக்கு மத்தியில் வித்தியாசம் காணப்படுவது உண்மையே.

ஆங்கிலத்தில் – பிரதமர் மரணமடைந்தால், இராஜினாமா செய்தால் அல்லது ஏனைய காரணங்களுக்காக பதவி வெற்றிடமானால் அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கருதப்படும், அவ்வாறான சூழ்நிலையில் பிரதமரை ஜனாதிபதி நியமிக்கலாம் என தெரிவித்துள்ளது.

சிங்கள பதிப்பிலும் அதே விடயமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மரணம், இராஜினாமா அல்லது ஏனைய காரணங்களுக்காக எனத் தெரிவிப்பதற்கு பதில் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இராஜினாமா செய்தால் அல்லது வேறு காரணங்களுக்காக என சிங்கள பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிசேனவின் ஆதரவாளர்கள் சிங்களத்தில் காணப்படும் “பதவியிலிருந்து நீக்குதல்” என்ற பதம் 19ஆவது திருத்தத்தின் பின்னரும் பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது என்பது தெளிவுபடுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முரண்பாடு வருந்தத்தக்கது. 2015 ஏப்ரலில் 19ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்த வேளை நாடாளுன்ற நடவடிக்கைகளில் காணப்பட்ட அலட்சியமே இதற்குக் காரணமாகும். எனினும், இந்த முரண்பாடு காரணமாக  பிரதமர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் இடம்பெறவில்லை.

மேலும் அரசமைப்பின் 48(1) பிரிவின் சிங்கள – ஆங்கில பதிப்புகள் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்குவது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. இந்த முரண்பாட்டை அதிகாரத்திலிருப்பவரை அகற்றுவதற்காகப் பயன்படுத்துவது அரசமைப்பின் தொடர்ச்சியாக அமையாது.

சிங்கள பதிப்பின் எந்தப் பிரிவிலும் 19ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது எனத் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து பக்கங்களிலும் குறிப்பாக பிரிவு 46இலும் ஜனாதிபதியிடமிருந்து இந்த அதிகாரம் அகற்றப்பட்டு நாடாளுமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தம் மூலம் நாடாளுமன்றம் தெளிவாக நீக்க விரும்பிய ஜனாதிபதியின் அதிகாரத்தை தக்கவைப்பதே சிங்கள பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அர்த்தம் என பொருத்தமற்ற மற்றும் நிரூபிக்க முடியாத விவாதத்தில் ஈடுபடுவதை விட சிங்கள பதிப்பில் பிரதமரை பதவி நீக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை அரசமைப்பின் 48(2) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப அர்த்தப்படுத்துவதே சாத்தியமானது. மேலும் நியாயமான தர்க்கரீதியான இணக்கமான அணுகுமுறையுமாகும்.

நியாயமான மனப்பான்மை கொண்ட விடயங்களை நன்கு அறிந்த எவரும் இந்த முரண்பாடு அக்கறையின்மையாலேயே ஏற்பட்டது என்பது ஏற்றுக்கொள்வார்கள். இந்தத் தவறு கவலைக்குரியது. எனினும், 19ஆவது திருத்தத்தின் கட்டமைப்பிற்கு எந்த மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

4. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரமுள்ளதா?

நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் முதல் நான்கரை வருடங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை. அரசமைப்பின் 70(1) பிரிவு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் முதலாவது அமர்விலிருந்து நான்கரை வருடகாலத்திற்கு குறைவான காலம் வரை நடைமுறைக்கு வராது என தெளிவாகத் தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காதவர்கள் உட்பட மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியை கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

அரசமைப்பின் 70(1) பிரிவினை, பிரிவு 33(2) இன் அடிப்படையில் அர்த்தப்படுத்தவேண்டும் என்ற வாதங்கள் காணப்படுகின்றன.

அரசமைப்பின் 33 பிரிவு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பல அதிகாரங்கள் குறித்து குறிப்பிடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது, அதன் அமர்வுகளை ஒத்திவைப்பது, கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்து அது தெரிவிக்கின்றது.

எனினும், இந்த பொதுவான அதிகாரங்களை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் பிரிவு 70(1) உடன் இணைத்து நோக்கவேண்டும்.

இன்னொரு விதத்தில் இதனை அர்த்தப்படுத்தினால் அது அரசமைப்பின் 70(1) பிரிவின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.​

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 2015 திகதி தெரிவு செய்யப்பட்டது. அதன் முதலாவது அமர்வு செப்டம்பர் முதலாம் திகதி இடம்பெற்றது. இதன் காரணமாக 2020 மார்ச் மாதமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரங்களை ஜனாதிபதி பெறுவார்.

5. நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து நவம்பர் 9ஆம் திகதி 2018 இல் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை தடைசெய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளதா?

உச்ச நீதிமன்றத்திற்கு அரசமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்த சட்டபூர்வமான  மற்றும் செயல்முறையையும் தீர்மானிப்பதற்கான அதிகார எல்லையுள்ளது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக விசேட விடுப்பு காணப்பட்டது.

எனினும், அரசமைப்பின்  19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசமைப்பின் 35(1) பிரிவு, பிரிவு 126இன் கீழ் ஜனாதிபதி செய்த எந்த நடவடிக்கை குறித்தாவது அல்லது செய்யாமல் விட்ட விடயத்திற்காக சட்டமா அதிபருக்கு எதிராக மனு தாக்கல் செய்யலாம்.

அரசமைப்பின் 126 பிரிவு அடிப்படை உரிமை மீறல் குறித்தோ அல்லது மீறப்படலாம் என்பது குறித்தோ ஒரு மாதத்திற்குள் மனுவொன்றை தாக்கல் செய்யலாம்.

நீதிமன்றம் மனுவை விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்கினால்   நீதிமன்றம் குறிப்பிட்ட மனுமீதான  தீர்ப்பை வழங்கும்.

அவ்வாறான சூழ்நிலையில் நியாயமான மற்றும் சமனான எனக் கருதும் உத்தரவுகளை பிறப்பிக்கலாம் .

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை எடுத்தவேளை அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறிவிட்டார் என பலர் மனுதாக்கல் செய்துள்ளனர்

உச்ச நீதிமன்றம் சமத்துவத்திற்கான உரிமை என்பதை தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதிலிருந்து விடுவிக்கப்படுதலிற்கான உரிமை என தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணை முடிவடையும் வரை வர்த்தமானி அறிவித்தலிற்கு இடைக்கால தடை விதிப்பதன் மூலம் இடைக்கால நிவாரணைத்தை வழங்குமாறு மனுதாரர்கள்  கேட்டுக்கொண்டனர்.

அனைத்து தரப்பினரினதும் வாதங்களை செவிமடுத்த பின்னர் நவம்பர் 13ஆம் திததி நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியதுடன் நாடாளுமன்றத்தை கலைப்பதை இடைநிறுத்தியது.

Groundviews தளத்தில் வெளியான “The Removal of the Prime Minister and the Dissolution of Parliament: A Legal Opinion” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.


“அரசியலமைப்பு சதி” சதி தொடர்பான கட்டுரைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.